பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையிலும், கூட்டணி கணக்குகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டும் பார்த்து வருகிறோம். 

இக்கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க:
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1

8. திருவண்ணாமலை

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், பாஜக சர்பாக அந்த கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவு செயலாளர் தணிகைவேலுவும் போட்டியிடுகிறார்கள். 

திமுக வேட்பாளர் எ.வ.வேலு 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1996 முதல்  2016 வரை   நடந்த ஐந்து தேர்தல்களிலும் இங்கு திமுக தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக சார்பாக போட்டியிடும் தணிகைவேல் சினிமா தயாரிப்பாளர் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனியாக நின்ற போது வாங்கிய வாக்குகள் வெறும் 1,935 மட்டுமே. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் பாமக 7,916 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அதிமுக 66,136 வாக்குகள் பெற்றிருந்தது. அதேவேளையில் வெற்றி பெற்ற திமுக 1,16,484 வாக்குகளைப் பெற்றிருந்தது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 1,27,927 வாக்குகளும், அதிமுக 51,634  வாக்குகளும் பெற்றிருக்கின்றன. 1971-ல் இருந்து  அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதியை பாஜகவிடம் தள்ளிவிட்டுள்ளது என்பதே உண்மை.

9. உதகமண்டலம்

காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஆர்.கணேஷ் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக மு.போஜராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். உதகை தொகுதிக்கு பாஜக சார்பில் கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் உட்பட 5 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கும், அதிமுக-விற்கும் இடையே போட்டி பலமாக இருந்தது. காங்கிரஸ்   67,747 வாக்குகளும், அதிமுக 57,329 வாக்குகளும் பெற்றன. பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டு 5,818 வாக்குகளைப் பெற்றது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணந்திருக்கிறது. அதிமுகவின் வாக்குகள் பாஜகவிற்கு பலம் சேர்க்கும். 

அதேவேளையில் 2019-ம் ஆண்டு நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உதகமண்டலம் சட்டமன்றப் பகுதியில் திமுக-வின் அ.ராசா  83,682 வாக்குகளும், அதிமுக வேட்பாளார் தியாகராஜன் 38,236 வாக்குகளும் பெற்றிருக்கிறார். ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வாங்கிய வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் போட்டி வலுவாகவும்,    நாடாளுமன்றத் தேர்தல் விவரங்களை வைத்து பார்த்தால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10. கோவை தெற்கு

கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரசின் மயுரா ஜெயகுமார், மக்கள் நீதி மய்யத்தின் நடிகர் கமல்ஹாசன் என்று மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜகவின் சார்பாக வானதி சீனிவாசன் மீக நீண்ட காலமாக இந்த தொகுதியைக் குறிவைத்து வேலை செய்து வருகிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் அர்ஜூனன் நின்று வெற்றி பெற்ற தொகுதி இது. அதிமுக இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் அம்மன் அர்ஜூனன் 59,788 வாக்குகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மயூரா ஜெயகுமார் 42,369 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதே வேளையில் தனித்து நின்று வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜகவின் வாக்குகளும்  இணைவது வானதி சீனிவாசனுக்கு பலமாக மாறுகிறது. வானதி பாஜகவின் முக்கிய தலைவர் என்பதால் பாஜகவினர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்து வருகிறார்கள். 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் நடராஜன் 64,453 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு 46,368 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். கமல்ஹாசன் கட்சியில் போட்டியிட்ட மகேந்திரன் 23,838 வாக்குகளைப் பெற்றிருகிறார். 

இந்தமுறை நேரடியாகவே கமல்ஹாசன் இறங்கியிருப்பதால், அவர் பிரிக்கும் வாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கமல்ஹாசன் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு பாதகமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இந்த தொகுதியை பாஜக-விற்கு ஒதுக்கியதால் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், பாஜக-விற்கு ஒத்துழைப்பு கொடுக்காததும், பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க ஏராளமான நடுநிலையான சமுக செயற்பாட்டாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதும் மட்டுமே காங்கிரசிற்கான வாய்ப்பாக உள்ளன. இந்த தொகுதியின் முடிவு என்னவாக அமையும் என்பது மே 2-ம் தேதி மட்டுமே தெரிய வரும். ஏதேனும் மேஜிக் நடைபெறும் பட்சத்தில் கமல்ஹாசன் கூட கரையேறலாம். வெற்றி வாய்ப்பு கணிக்க முடியாத தொகுதிகளில் இது ஒன்றாக இருக்கிறது. 

தொடரும்..!

அடுத்த பாகங்களைப் படிக்க:

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *