மஹ்மூத் தர்வீஷ்

வார்த்தைகளை ஆயுதமாகக் கூர்தீட்டிய பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ்

பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

”நான் வாழும் வரை என் சொற்களும் வாழும்.
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாகவும் ஆயுதமாகவும் என்றும் இருக்கும்”.

விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்படும் இனத்தின் தரப்பிலிருந்து வெளியாகும் ஒரு இலக்கிய வடிவமானது எத்தனை வீரியம் மிக்கது என்பதை இந்த மூன்று வரிகளில் சொன்னார் பாலஸ்தீனப் புரட்சிக் கவி மஹ்மூத் தர்வீஷ்.

பாலஸ்தீனையும், அதன் வலியையும் தனது கவிதைகளின் வழியாக உலகிற்கு காட்டிய மிக முக்கியமான கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார். அவர் 1941-ம் ஆண்டு மார்ச் 13 அன்று தற்போதைய இஸ்ரேலின் பகுதியாக உள்ள, அன்றைய பாலஸ்தீனின் பகுதியான அல்பிர்வா எனும் கிராமத்தில் பிறந்தார். ஏழு வயதிலேயே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக தர்வீஷ் இடம்பெயர்ந்து வெளியேற நேர்ந்தது. அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது.

எதிர்ப்பைப் பற்றிய கவிதை

சிறு வயதிலேயே இன அழிப்பின் மோசமான கொடூரத்தை நேரில் பார்த்தார். 1950-ம் ஆண்டிலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கினார். தர்வீஷின் கவிதைகள் கோபத்தையும், ஆவேசத்தையும், வலியையும் ஒருங்கே வெளிப்படுத்தின. அந்த கவிதைகள் மிகப்பெரும் அதிர்வுகளை உண்டாக்கத் துவங்கின. ”எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்” என்பதே அவரது தத்துவமாக இருந்தது. அப்படிப்பட்ட எதிர்ப்பினை பாலஸ்தீன புரட்சிகர கவிதைகளாக கொண்டுவந்ததால் இஸ்ரேல் அரசால் மிகப்பெரும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்.

இளமைக் காலம்

19 வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். சிறகிழந்த பறவைகள் என்ற தலைப்பில் அத்தொகுப்பு வெளியானது. பின்னர் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1970-ல் கல்லூரி படிப்பிற்காக ரஷ்யாவிற்கு சென்ற அவர், படிப்பினை முடித்த பிறகு கெய்ரோவில் குடியேறினார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில்

எழுத்துகளுக்காக சிறை தண்டனைகள் பெற்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். பின்னர் யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1988-ம் ஆண்டில் பாலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை எழுதினார். தர்வீஷ் அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். பின்னர் 1993-ம் ஆண்டு அந்த அமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அதிலிருந்து விலகினார்.

யாசர் அராபத்துடன் நடுவில் அமர்ந்திருப்பவர் தர்வீஷ்

கவிதைத் தொகுப்புகள்

ஆலிவ் இலைகள், ஒரு பாலஸ்தீனக் காதலன், கலீலியில் பறவைகள் மடிகின்றன, ஏழாவது முயற்சி, மனித மாமிசத்தின் இசை, நீ செய்ததற்கு மன்னிப்பு கேளாதே உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவை உலகின் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. தர்வீஷின் கவிதைகளை அப்படியே தமிழீழத்திற்கும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் உணர்வுப்பூர்வமாக பொருத்திப் பார்த்திட முடியும்.

விருதுகள்

தனது கவிதைகளுக்காக ஆசிய-ஆப்ரிக்க எழுத்தாளர் ஒன்றியத்தின் தாமரை விருது, சோவியத் யூனியனின் லெனின் விருது, பிரான்சின் அதி உயர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றார்.

அவரது கவிதைகள் பல தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.

1. விடுதலையின் மீதான தனது நம்பிக்கை எத்தகையது என்பதை பின்வருமாறு எழுதுகிறார்.

”மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு:
அது எமது நம்பிக்கை.
விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை.

நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத
எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை.

எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச்
சென்றுவருவது குறித்த நம்பிக்கை.

மருத்துவமனையில் கர்ப்பிணப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள்,
ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள்
என்ற நம்பிக்கை.

சிவப்பு வண்ணத்தின் அழகை
எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல,
ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை.

அன்பும் சமாதானமும் என
அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை
இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை.”

(மொழிப்பெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்)

2. எதிரிகளை தனது நிலத்தை விட்டு வெளியேறச் சொல்லும் ஒரு இனத்தின் எச்சரிக்கையை பின்வருமாறு எழுதுகிறார்.

வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உமது பெயர்களைப் பொறுக்கிக் கொண்டு
போய்விடுங்கள்
எமது நேரத்திலிருந்து உங்கள் மணித்தியாலங்களை
திரும்ப எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
எத்தனைப் படங்களைக் களவெடுக்க இயலுமோ
அத்தனையும் திருடிக்கொள்ளுங்கள்
ஏனெனில், உங்களுக்குத் தெரியும்
எமது நிலத்திலிருந்து ஒரு கல்
எவ்வாறு வானக்கூரையை அமைக்கும் என
உங்களால் சொல்ல முடியாது என உங்களுக்குத் தெரியும்

எங்கள் நிலத்தில்
எங்களுக்கு நிறையக் காரியங்கள் இருக்கிறது
எங்களுக்கு இங்கு கடந்தகாலம் இருக்கிறது
எங்களது வாழ்வின் முதல் ஒலியை
இங்கே நாங்கள் கொண்டிருக்கிறோம்
நிகழ்காலம் மற்றும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை
நாங்கள் கொண்டிருக்கிறோம்
வாழ்வையும்
அப்புறமாக வாழ்வுக்கு அப்புறமான வாழ்வையும்
நாங்கள் கொண்டிருக்கிறோம்
ஆகவே-
எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்கள் கோதுமைகளை விட்டு எங்கள் உப்பை விட்டு
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி வெளியே போய்விடுங்கள்

3. தனக்கு நேர்ந்த கொடுமையை தந்தைக்கு சொல்வதாக வலிகளை வெளிப்படுத்தும் கவிதை

தந்தையே
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இல்லை.
தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றனர்
கல் எறிகின்றனர்
தூஷிக்கின்றனர்
நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்

உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்.
தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?
என்னால் அவர்கள் எதை இழந்தனர்?

நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா?
நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும்
என்முன் முழந்தாளிட்டனவே.

(‎அடையாளம் பதிப்பகம் வெளியீடு‬)

4. அடையாள அட்டை எனும் பெயரில் எழுதப்பட்ட கவிதை

எழுது
நான் ஒரு அராபியன்
எனது அடையாள அட்டை எண் 50000
எனக்கு எட்டுக் குழந்தைகள்
அடுத்த கோடையில் ஒன்பதாவது
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
தோழர்களுடன் கல் உடைப்பவன்
எனக்கு எட்டு குழந்தைகள்
அவர்களுக்காக
ஒரு ரொட்டித் துண்டை
ஆடைகளை நோட்டுப் புத்தகத்தைப்
பாறையிலிருந்து பிய்தெடுத்தவன்
உனது கதவைத் தட்டி யாசித்து நிற்பவனல்ல
உனது வாசற்படிகளில் முழந்தாளிடுபவனும் அல்ல
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனக்கொரு பெயருண்டு: பட்டம் இல்லை
கோபத்திலும் சுழலும் இந்த மண்ணில்
பொறுமையை கடைப்பிடிப்பவன்
எனது வேர்கள் ஆழப் புதைந்துள்ளன
யுகங்களுக்கு அப்பால்
காலத்துக்கு அப்பால்
நாகரிங்கள் உதிப்பதற்கும் முன்னதாக
ஸைப்ரஸ் மரமும் ஒலிவ மரமும்
தோன்றுவதற்கு முன்னதாக
களைகள் பரவுவதற்கு முன்னதாக

எனது மூதாதையர் கலப்பையின்
மைந்தர்கள்
மேட்டுக்குடியினரல்லர்
எனது பாட்டனார் ஒரு விவசாயி
பெருமை வாய்ந்த வழ்சாவழியில்
பிறந்தவர் அல்லர்
நாணலும் குச்சிகளும் வேய்ந்த
காவல்காரனின் குடிசையே என் வீடு
தந்தை வழிச் செல்வத்தைத் சுவீகரிக்கும்
பெயரல்ல என்னுடையது

எழுது
நான் ஒரு அராபியன்
முடியின் நிறம்: கறுப்பு,
கண்கள்: மண் நிறம்,
எடுப்பான அம்சங்கள்:
கஃபியேவைழ* என் தலையில் இறுக்கிப்
பிடிக்கும்
இந்த முரட்டு கயிறு,
முகவரி:
மறக்கப்பட்டுவிட்ட ஒரு தொலைதூரக் கிராமம்
அதன் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை
கிராமத்து ஆண்கள்
வயல்களில் வேலை செய்கிறார்கள்
கல் உடைக்கிறார்கள்
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனது குடும்பத்தின் பழத்தோட்டத்தை
நானும் என் பிள்ளைகளும் உழும் நிலத்தை
நீ திருடிக்டிகொண்டாய்
எங்கள் பேரக் குழந்தைகளுக்காக
நீ விட்டுவைத்ததோ வெறும் பாறைகளே
நீ சொல்வதுபோல்
அவற்றையும் கூட
உனது அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ?

எனவே
எழுது
முதல் பக்கத்தில், முதலில்:
நான் யாரையும் வெறுப்பவன் அல்ல
யாருடைய நிலத்தின் மீதும் அத்துமீறி நடப்பவன் அல்ல
ஆனால் நான் பசியால் துடிக்கும் போது
எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியை கண்டு
அச்சம் கொள்
எனது சினத்தை கண்டு

(தமிழில்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி இதய நோயின் காரணமாக மஹ்மூத் தர்வீஷ் எனும் மாபெரும் கவிஞர் அமெரிக்காவில் மரணத்தைத் தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *