casteism

சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா

சாதி சார்ந்து எந்த பாதிப்புக்கும் ஆளாகாதவரோ அல்லது சாதியை முற்றும் ஒழித்த பரிபூரண சமூகத்தில் வாழ்கின்றவரோ யாரேனும் உண்டா?… அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சாதியினால் துன்பத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. ஆனால், அதன் சலுகைகளை (Privilage) அனுபவித்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஏதும் அறியாதவர்களைச் சொற்பங்களில் அடைத்துவிடலாம். சமூகம் அவரவருக்கு அளித்திருக்கும் சாதிய பாத்திரத்தைத் தொந்தரவின்றி ஏற்க வேண்டும். அதுவே, சுமூகமான வாழ்வு என நினைப்பார்கள். அதில் ஏதும் இடையீடு நேரும்போது சலனமடைகிறார்கள். இவர்களிடமிருந்து நாம் எதிர்நோக்கும் கேள்வி – ‘சாதியை இன்னும் பேசத்தான் வேண்டுமா?..’

தலித் சினிமா மீதான ஒவ்வாமை

உதாரணம், கடந்த தசாப்தத்திற்கு பிறகு தோன்றிய தலித் சினிமா மீதான விமர்சனங்கள். சாதியைச் சொற்பமாக வெகுஜன தளத்தில் கேள்வி எழுப்பிய அத்தகைய சினிமாக்கள் ‘பொது ஒழுங்கை’ சிதைப்பதாகக் குறை கூறப்படுகிறது. இதே தமிழ் சினிமாவில் சாதியைப் போற்றியும், அதுசார்ந்த சலுகை வாழ்வியலைப் புனிதப்படுத்தியும் வந்த சினிமாக்கள் எவ்வித கேள்விக்கும் ஆளாகவில்லை. இன்றும் முன்னணி தொலைக்காட்சிகளில் முதன்மை நேரங்களில் அவை இடம்பெறுகின்றன. அனைவருக்கும் ஏற்ற பொழுதுபோக்காக உள்ளது. ஏனெனில், அவை இயல்பிலேயே பாகுபாட்டோடு இருக்கும் சமூகத்தை ஒத்திருக்கிறது. இந்நிலையில், பெரும்பரப்புள்ள ஓர் சமூகத்தை வகைப்படுத்தச் சாதிதான் அளவீடா? என்பதற்கான பதில் – இந்தியர்களின் மரபார்ந்த இயற்பண்பாகச் சாதியே இருக்கிறது. 

சாதி எனும் கூர்மையான வாள் ‘பொதுத்தன்மை’ என்ற உறைக்குள் தன்னை அடக்கி வைத்துக்கொள்கிறது. இது நாம் தலைப்பிடும் ‘இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல்’ என்ற பாதுகாப்பான வரியைப் போன்றது. மோதலின் தன்மையைப் பேசி பாதிக்கப்பட்டவர்களைத் தாண்டி யாரும் பதற்றப்படுத்துவது பெயரளவிலான சமூக ஒழுங்குக்கு கேடானது. சாதியைப் போலவே சாதிய வன்முறைகளும் மூடுண்டே காக்கப்படுகிறது. ஓர் சாலை விபத்தோ இயற்கை பேரிடரோ ஏற்படுத்தும் அதிர்ச்சியை ஒருபோதும் சாதிய ஒடுக்குமுறை ஏற்படுத்திவிடுவதில்லை. சமீபகாலத்தில் நடந்த வேங்கை வயல், மேல்பாதி சம்பவங்களும் இதையே கற்பிக்கின்றன. 

அனைவரையும் உள்ளடக்கும் சினிமாவிற்கே வருவோம். மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தின் பொதுமக்கள் பார்வையில் குறிப்பான ஓர் விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரிய நட்சத்திரங்களின் தோற்றம் பலரையும் கவர்ந்தது. அதேநேரத்தில், ‘சாதி பேசிருக்காங்க’, ‘இந்த படத்துல சாதி இருக்கு’, ‘சாதியைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்’, ‘இது பிரச்சனையை ஏற்படுத்துற மாதிரி இருக்கு’ போன்ற மனக்குறைகள் இருந்தது. மேலாக, தன்னை நாத்திகராக வெளிப்படுத்தும் ‘ப்ளூ சட்டை மாறனின்’ விமர்சனம். அதில், ‘இந்தப் படம் இரு பிரிவினரிடையே வன்முறையையே ஏற்படுத்துகிறது. சாதி ஒழிப்பிற்குப் பெரியாரின் நாத்திக பிரச்சாரமே தீர்வு’ என்றார். இதை, மேல்பாதியில் பூட்டைப்போட்டுத்  தீர்வைக் கண்ட தமிழக அரசோடு ஒப்பிடலாம்.

மாமன்னன் படம் கொண்டிருந்த எதிர்-அழகியல் பொது மனநிலைக்குப் பரிச்சயமாக இல்லை. அப்பட திரையாக்கப் போதாமையைத் தவிர்த்து மனதில் நின்ற இரண்டு காட்சிகள் முக்கியமானவை. அதிர்ச்சியான உருக்கத்தை ஏற்படுத்திய கிணற்றில் விளையாடும் சிறுவர்களின் கொலை. மற்றொன்று, சமமாக உட்காருவது மறுக்கப்படுவதில் உள்ள சாதி அதிகாரம். முதலாவது, தலித் போராட்ட மரபில் குடிகொண்ட துன்பகர விளைவையும், இரண்டாவது எந்தவொரு மனிதருக்கும் வேண்டிய அடிப்படை சுயமரியாதையும் பேசியிருக்கிறது. இவை இரண்டிலும் கதை சொல்லிப் பாதிக்கப்பட்டவர். அவர் கொண்ட துயரும், அடையும் அறச்சீற்றமும் நம்மைத் தனிப்பட்ட முறையில் சலனப்படுத்தவில்லை. மாறாக, ‘வன்முறையை ஏற்படுத்தும் படம்’ என்ற ஒற்றை வார்த்தையில் மதிப்பிழக்க வைக்கிறது. சாதித் துயரின் கழிவிரக்கம் கூட சாதிய சமூகத்திற்கு அர்த்தமற்றதாகுகிறது.

2

இளவயதினரிடையே புரையோடும் சாதிய உணர்வு

இன்று இளவயதினரிடையே புரையோடும் சாதிய உணர்வானது முக்கிய அச்சுறுத்தலாக முன் நிற்கிறது. குறிப்பாக, அறம் போதிக்கும், பலதரப்பட்ட நிலையினர் ஒன்றிணையும் கல்விக் கூடங்களில் ஏற்படும் வன்முறைகள் கலக்கமடையச் செய்கின்றன. புத்தாயிரத்திற்குப் பின்பு மெல்ல முலைவிட்ட சாதிக் கயிறு, சாதி வளையம் பழக்கம் இன்று கல்வி நிலையங்களின் ஒழுங்கையே சிதைத்துள்ளது. எந்த பள்ளிக்கூடங்கள் சீருடையின் மூலம் காட்சி ஏற்றத் தாழ்வைக் களைந்தனவோ, இன்று அவை இந்த சுய அடையாள கூர்தீட்டலைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. 

2015ம் ஆண்டு பரதன் எனும் சமூக ஆர்வலர் இந்த தீவிர நிலையைக் குறிப்பிட்டு தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகாரொன்று அளிக்கிறார். உடனே, பள்ளிகளில் நடக்கும் சாதிய பழக்கங்களைக் கண்காணிக்கத் தமிழக அரசுக்கு ஆணையம் முறையிட்டது. தென் தமிழகத்தில் அச்சுறுத்தலாக இருக்கும் சாதிக் கயிறு நடைமுறையை ஐஏஎஸ் அதிகாரிகள் உட்படப் பலரும் கவனப்படுத்தத் தொடங்கினர். விளைவாக, பள்ளிகளில் சாதிக் கயிறு கட்டுவதைத் தடை செய்து 2019ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மீறும் பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பாஜகவின் எச். ராஜா ‘இந்துக்களுக்கு எதிராக’ (Anti-Hindu) அரசு செயல்படுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்பினார். ‘எனது அனுமதி இல்லாமலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று முழுவதுமாக சரணடைந்தார் அதிமுக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ‘தேவையான புகார்கள் எழுந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற அறிவிப்போடு பின்வாங்கியது அதிமுக அரசு[1]. இன்று, ‘பள்ளி விண்ணப்பங்களில் சாதி குறிப்பிடும் அவசியமில்லை’ என்று கூறும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே ஆங்காங்கே வண்ண வண்ண கயிறுகளோடு காட்சி தருகிறார். 

சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கொள்கை உறவு கொண்ட திராவிட கட்சி பாரம்பரியத்தில் பாடப்புத்தகங்களில் சாதிக்கு எதிரான கறாரான போக்கு ஏனோ இருந்ததில்லை. புராண இதிகாசம், வழமையான இந்திய வரலாறு, இந்தியச் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றிற்குக் கொடுக்கும் இடத்தோடு ஒப்பிட சமூக நீதி மரபுகள் இடம்பெறுவது அரிது. இன்றும் பல பிற்பட்ட கிராமிய சூழலில் மாணவர்களைச் சாதியோடு வகைப்படுத்தும் ‘இயல்பான’ சூழலே நிலவுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில் தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டம் ஒன்றில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குச் சைக்கிள் வழங்கும்போது, எஸ்சி, எம்பிசி, பிசி  என்று ஒவ்வொரு சைக்கிளிலும் எழுதி வைத்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் என்று வெவ்வேறு துறைகள் மூலம் அவை வழங்கப்பட்டதால் பொதுவில் எழுதி அறிவிக்க நேர்ந்தது’ என்று பொறுப்பற்ற பதிலை அளித்தது பள்ளி நிர்வாகம். இதனால், மாணவர்கள் உளவியல் ரீதியாக எவ்வித நெருக்கடிக்கு ஆளாவார்கள், சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அக்கறையோ புரிதலோ அவர்களுக்கு இல்லை. மேலும் பல இடங்களில் அரசும் கூட சமூகப் புரிதலை (Social conscious) உறுதிப்படுத்தத் தவறுகிறது.

பட்டியலினப் பெண் தங்கள் பிள்ளைகளுக்குச் சமைக்கக் கூடாது என்று பெற்றோர்கள் புகாரளிப்பது தொடர்ச்சியாகிறது. இது ஒன்றே சாதிய கூர்தீட்டலில் பெற்றோர்களின் பங்கை வெளிப்படுத்துகிறது. சாதிய ஓர்மையை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்துள்ள சாதி சங்கங்கள் மற்றும் இந்துத்துவ அரசியல் எழுச்சியின் வெளிப்பாடாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நிலையிலேயே, மாணவர்களை நேரடியாக எதிர்கொள்ளும் ஆசிரியர்களை மதிப்பிட வேண்டியுள்ளது. சாதியவாத ஆசிரியர்கள் பலர் கயிறை இயல்பாக ஆதரிக்கிறார்கள். ஆனால், திரளான (Mass) மாணவர்களைக் கொண்ட பள்ளிகள், தங்கள் நிர்வாக தேவைக்காக இடையூறு இல்லாத பொது ஒழுங்கையே விரும்புகின்றன. 

முடி வைத்திருத்தல், பிற ஸ்டைலான ஒப்பனைகளுக்கு எதிராகத் தீவிரமாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாறிவரும் கால சூழல், தனிமனித உரிமையில் கவனம் கொள்ளாது அக்கறையோடு மாணவர்களைத் தண்டிக்கிறார்கள். இதனை மாணவர்களின் பெற்றோரும் ஒருவிதத்தில் விரும்பவே செய்வர். ஆனால், கயிறு பழக்கத்தை அச்சத்தோடே ஆசிரியர்கள் அணுகுகிறார்கள். காரணம், ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், பெற்றோர் மற்றும் சாதிய திரட்டல் போன்ற புறக்காரணிகளின் எதிர்வினைக்கு ஆளாவார்கள். உதிரிகளான ஆசிரியர்களின் கையாளாகத்தனத்திற்கும் பாதிக்கப்படும் மாணவர்களே விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்குநேரி கொடுந்தாக்குதல் வரை அவர்களின் கல்வி இடை நிற்றலையே சூழல் கோருகிறது.

3

காலத்திற்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் சாதி

சாதி ஒவ்வொரு காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்து வந்துள்ளது. அடிப்படை ஏற்றத்தாழ்வும் பிற சமூகங்கள் மீதான பகைமையும், பொருளியல் ஒடுக்குமுறையும் அதன் மாறாத அடித்தளம். மாறிவரும் சமூக-பொருளாதார நிலையிலும் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் சாதியின் பலவிதமான பண்புகளைக் கவனப்படுத்துவது அவசியம். அதற்கு முன் ஒவ்வொரு முறையும் அதற்கான வெளியை அமைத்துக் கொடுக்கும் காலத்தை அளவிட வேண்டியுள்ளது. அது, ஒருவிதத்தில் இன்றைய நவீனத்துவத்தின் போதாமை குறித்த சுய விமர்சனமாகவும் அமையலாம். 

நவீனத்துவம் மரபார்ந்த அடையாளங்களை மறுத்தது. ஆனால், இந்திய நவீனத்துவவாதிகளே (குறிப்பாக கடல் கடந்து லண்டனில் ஆங்கில கல்வி கற்றவர்கள்) மரபின் புதிய முகவர்களானார்கள். இந்தியத் தேசியவாத எழுச்சியும், உடன் எழுந்த பழம்பெருமை லட்சிய மீட்பும் காலனியத்தின் கொடையால் விளைந்தவை. காலனியத்திற்கு பிந்தைய தொழிற் வளர்ச்சி இந்தியாவில் சாதியை மைய பிரச்சனையாகக் காணவில்லை. புதிய சமூக-பொருளாதார உறவுகளில் அது இயல்பாக மறைந்துவிடும் என்று கனவு கண்டனர். சாதியை விமர்சன ரீதியாக அணுகிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் விளைந்த ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடும், ‘இந்தியாவின் மௌன புரட்சி’ என்று வர்ணிக்கப்படும் 90களில் அமலாகிய பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுமே குறிப்பிட்ட முன்னேற்றத்தைக் கண்டன. 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கொண்ட பிரதிநிதித்துவம் ஒருபுறம் என்றால், தாராளமயத்தின் தனிமனித சிந்தனைகள் மற்றொருபுறம் வரலாற்று உறவுகளிலும் சமூக அடையாளங்களிலும் தாக்குதலைத் தொடுத்தன. பழமையான பெயர்கள், கிராமிய வழக்காறுகள், பண்பாட்டு உறவுகள் போன்றவற்றிலிருந்து தம்மை விடுப்பதை புதிய தலைமுறையினர் விரும்பினர். இது சாதியை மறுக்கவில்லை என்றாலும் பெயரளவில் விலக்கி வைத்தது[2].

தொழிற்நுட்பத்தில் புதிய பாய்ச்சலைக் கண்ட இன்று இந்த மாற்றம் தலைகீழாகியுள்ளது. தனிநபர் சிந்தனையை வளர்த்த தாராளமயம், தனிமனித சிந்தனைக்கு சமூக முகவரியை வழங்கும் நவதாராளவாதமாக உருவெடுத்துள்ளது. சந்தையின் கட்டற்ற சுழற்சி தொழிலாளர்களை ‘இருத்தலியல் நெருக்கடியில்’ (Existential Crisis) வைத்துள்ளது. இந்நிலையில், தம் சுயம் குறித்த தேடலும், இழந்த அடையாள மீட்பும் அவர்களுக்கு புறவுலக மீட்சியாகத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களை உள்ளடக்கிய இணையமும், டிஜிட்டல் உறவுகளும் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. 

4

சாதி வெளிச்சம் கொள்ளும் டிஜிட்டல் வெளி

2020ம் ஆண்டு புதிய அமெரிக்க அதிபரான ஜோ பைடன், அப்பொழுது தீவிரமாக இருந்த கொரானா தொற்றைக் கட்டுப்படுத்த ஓர் மீட்புக் குழுவை (Task force) ஏற்படுத்துகிறார். அதில், இந்திய வம்சாவளி மருத்துவரான செலின் கவுண்டர் என்ற பெண்மணி தேர்வாகிறார். ஒரு இந்திய-தமிழர் அமெரிக்க அதிபரின் முதன்மை குழுவில் இடம்பெறுகிறார் என்று மகிழ்ந்தோம். அதேநேரத்தில், தமிழ்நாட்டின் சமூகநீதி பாரம்பரியத்திற்கு எதிராகச் சாதிப் பெயரை பின்னொட்டாகக் கொண்டதற்கு விமர்சிக்கப்பட்டார். அதற்குப் பதிலளித்த செலின், ‘எனது பெயரே எனது பெயர். அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் பகுதி. அது வலிமிகுந்ததாக இருந்தபோதும் நான் பெயரை மாற்றியதில்லை, திருமணமான பிறகும் மாற்றவில்லை’ என்றார். 

ஒரு பின்காலனிய நாட்டிலிருந்து வந்து உலகின் முன்னணி வல்லரசில் படித்து அரசின் முக்கிய பொறுப்பை அடைந்ததை அவர் சாதனையாகப் பார்க்கவில்லை. மாறாக, தனது சாதிய சுமையைப் பிற்போக்கு நிலை எனக் கூறாது, தனது வரலாற்றின் லட்சிய நிலையாக வகுக்குகிறார். அமெரிக்கா போன்ற சமூகச் சூழலில் ஒருவரின் பார்வையே இவ்வாறு இருக்கும்போது, இந்தியாவில் எழும் புதிய சாதிய அடையாள மீட்புகளை ஆபத்தாகவே காண முடிகிறது. 

உலகமயத்தின் ஆரம்பக்காலத்தில் பழமையான வட்டார பெயர்களை அவமானமாகப் பார்த்த தலைமுறையினர் இருந்தனர். இன்று பழமையான பெயர் என்பது சாதி சேர்த்தும் இடம்பெறுவது இயல்பாகிறது. ‘பழமைக்குத் திரும்புதல்’ என்ற மரபு மீட்பு பல இடங்களில் பிற்போக்கு கலாச்சார வழிபாட்டிற்கு இணங்குகிறது. இங்கு ஒவ்வொருவரும் செலின் போன்று தர்க்க ரீதியாக அதை விளக்குகிறார்கள். இதன் நீட்சியாக, பெயரில் சாதியை ஒழித்த தமிழ்நாட்டிலேயே சாதியை வெளிப்படையாக அறிவித்து, அது ஒரு வாழ்வியலாகக் கூறி ‘திருமண வரன்’ (Matrimony) விளம்பரங்கள் மெயின்ஸ்ட்ரீம் ஆகின்றன.

பள்ளி சிறுவர்களின் சாதிய கூர்தீட்டல் தொடங்கி தகவல் தொழிற்நுட்பவாதிகள் வரையிலான சாதிய தாக்கத்திற்கு முதன்மை காரணியாக சமூக வலைத்தளங்கள் உள்ளது. குடும்பம், உறவுகள், ஊர் என்று விரியும் வாட்ஸ் அப் குரூப்கள் சாதியில் நிறைவடைகின்றன. இதில் பகிரப்படும் மந்தையான (Boomer) கருத்துகள், கற்பனையான பெருமிதம், போலி வரலாறு மற்றும் அறிவியல் இளம் தலைமுறையை வழிநடத்துகின்றன. குறிப்பாக, பிராந்திய அளவில் தொடங்கி தேசிய அளவிலான தகவல்கள், அறிவிப்புகளின் தன்மை (Narration) வன்முறையான சார்புத் தன்மையைக் கொண்டுள்ளன. இதன் விரிவுபடுத்தப்பட்ட வெளியாக பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகத் தளங்கள் உள்ளன. பரந்துபட்ட நபர்களை ஒன்றிணைப்பதை விட, ஒற்றை சிந்தனை கொண்ட (Monolithic) குழுக்களை ஒரு குடையில் அடைக்கின்றன. நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெறுப்பு பிரச்சார களத்தில் உரையாடல் நிகழ்கின்றன. 

சமூக வலைத்தளத்திற்கே உரிய சுய வெளிப்பாடு ஓர் சிக்கலாக எழுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரின் கருத்து எதுவாயினும் அதற்கு ஏற்பையும் அதை ஆதரிக்கும் கும்பல் மனப்பான்மையையும் அது உருவாக்குகிறது. உள்ளடக்கமற்று சுயத்தை வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்று நினைக்கும் சிறுவர்கள், சாதி வசனங்களை ‘டிக்டாக்’ செய்வதன் மூலம் தன்னிறைவு அடைகிறார்கள். மற்றொருபுறம், முகவரியற்ற உதிரி சாதியவாதிகள் எளிதில் வெளிச்சம் பெற்றுக் கொள்கிறார்கள். 

தனிநபர் வலைத்தளங்களின் ஒழுங்கற்ற தன்மை அதற்கே உரியது எனலாம். அதேநேரத்தில், கட்டமைப்பு ரீதியான டிஜிட்டல் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்றால் ஏமாற்றமே மிஞ்சும். மைய நிலை ஊடகம் மூடி மறைத்து வந்த பல தகவல்களை டிஜிட்டல் ஊடகங்கள் பேசியிருக்கின்றன. ஆனால், அது ஒருகட்டத்திற்கு மேல் சாதி சங்க பிரமுகர்களுக்கு ஊடக வெளி (Digital Space) அமைத்துக் கொடுக்கும் அளவிற்குத் தீவிர நிலைக்குச் சென்றன. ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரச்சனை, வரலாறு அல்லது உரிமைகள் குறித்துப் பேச வரலாற்று ஆய்வாளர்களோ, சமூக ஆர்வளர்களோ அல்லது அதே சாதியைச் சேர்ந்த கல்வியாளர்களோ (Academic) கூட அழைக்கப்படுவதில்லை. மாறாக, சாதி சங்கங்கள், தனிநபர் சர்ச்சைவாதிகளே தோன்றுகிறார்கள். சொல்லி வைத்தாற்போல் அனைவரும் பட்டியல் வெளியேற்றம், ஆண்ட பரம்பரை கௌரவம், இதிகாச மீட்பு, இட ஒதுக்கீடு வெறுப்பு என்ற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். இது பொதுவான பார்வையாளர்களுக்கும் அல்லது பேசுபவரின் சாதியைச் சேர்ந்த விளிம்புநிலை இளைஞர்களுக்கும் எதைக் கடத்தும் என்று உணரலாம். 

5

முதலாளித்துவமும் நகரமயமும்

நவீனம் மற்றும் தொழிற்நுட்பத்தால் சாதியை ஒழிக்க முடியவில்லை. அது மற்றொரு விதத்தில் உடன்பட்டு சாதியை இயக்கி வருகிறது. இந்த சமகால உறுதிப்பாட்டோடு சாதியை எடை போட வேண்டியிருக்கிறது. ஏனெனில், சாதி ஒழிப்புக்கான சமூகநீதி அரசியலை விட, சாதியை ஏற்கும் அல்லது அதைப் பிரச்சனையாகக் கருதாத பழமைவாதங்கள் புதுப்புது வியாக்கியானங்களைப் பேசுகின்றன. இட ஒதுக்கீடும் சாதி சான்றிதழும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வழமையானது. அது இன்று, பட்டியல் வெளியேற்றம் மற்றும் பிற வகைப்பாடு ஒழிப்பில் தீவிரம் கொண்டுள்ளது. காலனியவாதிகளே சாதியை உருவாக்கினார்கள் என்று இந்துத்துவர்களின் பரப்புரையை, பிராந்தியத்தில் திராவிடம் தான் சாதியை ஊக்குவித்தது என்று நகலெடுக்கிறார்கள் குடிபெருமைவாதிகள். 

அரசியல் மற்றும் அரசியல்வாதிகளால்தான் சாதிய வன்முறைகள் நடக்கின்றன. அரசியல்வாதிகள் இல்லையென்றால் நாங்கள் அண்ணன்-தம்பியாக வாழ்வோம் என்ற தவறான புரிதலை (false propaganda) சமீபத்திய திரைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. இப்படங்கள், நிலவுடைமை பெருமிதத்தை மீட்க வேண்டுகின்றன. மேலும், சாதியை மூட்டிவிடுவதாக இவர்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகள் திராவிட கட்சிகள் பின்னணி கொண்டவர்களாகவே உள்ளார்கள். தமிழகத்திலும் சாதிய திரட்டலைச் செயல்படுத்தும் இந்துத்துவவாதிகளை ஏனோ காண முடியவில்லை. 

சாதி எதிர்ப்பு பற்றிய திறந்த உரையாடலில் நகரமயமாதலும் முதலாளித்துவமும் சாதியை ஒழித்துவிடும் என்ற பொதுக் கருத்து உள்ளது. நகரங்களின் மூடுண்ட சமூகங்கள் (Gated community) யாருக்கானது, நகரத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்படும் மக்கள் யார் என்ற கேள்வியில் தொடங்குகிறது நகரமயமாக்கள் குறித்த விமர்சனம். தொழிலாளர் சந்தையில் (Labour Market)  சாதியை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்தி எந்தளவிற்கு அவர்களைச் சுரண்டுகிறது [3] என்பதிலிருந்து நீளுகிறது முதலாளித்துவத்தின் பண்பு. சமூகத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் தன்னை இருத்தி வைத்திருக்கிறது சாதி. பின்வரும் உரையாடல்களுக்கும் களமாடல்களுக்கு முன் நிற்கும் கேள்வி இது, 

சமகாலத்தில் சாதியை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ளப் போகிறோம்? 

Notes

1. Johanna Deeksha, Caste threads are spawning deadly conflicts in Tamil Nadu schools, Scroll, May 25, 2022

2. Kancha Ilaiah, Cultural Globalisation, Outlook, 03 Feb 2022 

3. David Mosse, Caste and development: Contemporary perspectives on a structure of discrimination and advantage, ScienceDirect 

– மு. அப்துல்லா (ஊடகவியலாளர்)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *