பெரியார் வைக்கம்

ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

தமிழகத்தில் ஆலைய நுழைவுப் போராட்டம் குறித்த விவாதத்தைத் துவங்குகிற அனைவரும் வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார் என்றே துவங்குவார்கள்.

யார் அந்த வைத்தியநாத ஐயர் என்று தேடினால்தான் இவரை எல்லோரும் வலிந்து வரலாற்றில் நாயகனாக மாற்றுவதன் காரணம் புரியும்.

யார் அந்த வைத்தியநாத ஐயர்?

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில், பார்ப்பன சாதியைச் சேர்ந்த சிறுவர்களோடு மற்ற சாதிச் சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் என காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து விலகியவர் தான் வைத்தியநாத ஐயர் என்பது மறைக்கப்பட்ட வரலாறு.

இந்த சனாதனவாதி எப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார் என்ற சந்தேகம் வந்தால்தான் ஆலைய நுழைவு போராட்டத்தின் உண்மையான நாயகர்கள் தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் என்பது தெரியவரும்.

தந்தை பெரியார்தான் 1922-ம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர். அப்பொழுது அதை எதிர்த்தவர்தான் வைத்தியநாதன்.   

காந்தியும், ராஜாஜியும் நிராகரித்த வைக்கத்திற்கு பெரியார் சென்றார்

வைக்கம் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவனும், காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் தலைமை தாங்கினர்.

1924 மார்ச் 30 அன்று தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். 

தான் கட்டாயம் வந்தே தீர வேண்டுமா என்று இருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பெரியார் கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அந்தஸ்திலேயே சென்றமையால் தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ராஜாஜியைப் பார்க்கச் சொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.

604 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் தொடர் பிரச்சாரம்

தடைசெய்யப்பட்ட சாலைகளின் தடுக்கப்பட்ட இடங்களில் தினமும் குறைந்தது மூன்று பேர் சத்தியாகிரகம் செய்வர். 604 நாள் போராட்டம் நிகழ்ந்தது. பல நாள் பெரியார் தலைமை தாங்கினார். வைதீகர்கள் அடியாட்களின் மூலமாக தாக்குதலை போராடுபவர்கள் மீது ஏவிவிட்டனர். சத்தியாகிரகிகளின் கண்ணில் சுண்ணாம்பைப் பூசிய சம்பவங்கள் கூட  நிகழ்ந்தன. 

மக்கள் ஆதரவைத் திரட்ட வைக்கத்தைச் சுற்றிலும் கிராமங்களிலும் சேர்த்தலை, வர்க்கலை, கோட்டயம் போன்ற நகரங்களிலெல்லாம் ஓயாமல் பிரச்சாரம் செய்தார் பெரியார். தெற்கே திருவனந்தபுரம், நாகர்கோவில் வரை அவரது பிரச்சாரப் பயணம் நீண்டது. மக்களிடமும் வியாபாரிகளிடமும் நிதி வசூலித்தார். போராட்டத்திற்கு வலு கூட்டினார். வைக்கம் சென்ற 13 ஏப்ரல் 1924 தொடங்கி 29 நவம்பர் 1925 வரையிலான காலத்தில் பெரியார் போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னகர்த்தினார்.

வைக்கத்தில் பற்ற வைத்த நெருப்பு சுசீந்திரத்தில் வெடித்தது

வைக்கம் போராட்டத்தின் வெற்றி சுசீந்திரத்தில் கோவில் நுழைவுப் போராட்டமாக 1925-ம் ஆண்டு வெடித்தது. “வைக்கம் சத்தியாகிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகி விடவில்லை. அதற்குள்ளாக மற்றோரிடத்தில் சமத்துவத்தை நிலைநாட்டத் தோன்றியுள்ள சத்தியாகிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கே யாகும்” என்று தந்தை பெரியார் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆதரித்ததோடு, வைக்கம் போராட்டத்திற்கு தமிழ்நாடு துணை நின்றது போல இதற்கும் துணையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.

ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டுவர வைத்த சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926-ல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் போராட்டம் துவக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் அத்தோடு நிற்கவில்லை. கோயிலுக்குள்ளும் நுழைய 50,222 பேரிடம் கையெழுத்து / கைநாட்டு வாங்கி, அதை திவான் சி.பி.ராமசாமி அய்யரிடம் கொடுத்தார் எம்.ஈ.நாயுடு. தொடர்ச்சியான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத திருவிதாங்கூர் அரசு பணிந்தது. அதன் விளைவுதான் ஆலயப் பிரவேச சட்டம்(1936). 

1933-ல் கோயில் நுழைவை எதிர்த்த அதே திவான் சி.பி.ராமசாமி அய்யர்தான், 1936-ல் ஆலயப் பிரவேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அனைத்து கோயில்களிலும் அனைவரும் நுழையலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது சுயமரியாதை இயக்கம்.

திருவண்ணாமலை கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற கண்ணப்பர்

முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். இவர் 07.02.1927-ல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்துப் பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது.

திருச்சி தாயுமானவர் மலைக்கு அழைத்துச் சென்ற ஜே.என்.இராமநாதன்

சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே.என்.இராமநாதன் 1927-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கி.ஆ.பெ.விசுவநாதம்

சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சாதித் தோழர்களும் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை அறிந்த பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் கோவில் நுழைவு வாயிலையும் கருவறையையும் பூட்டி விட்டனர். ஆனாலும் கோவிலின் பக்கவாட்டுக் கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் வெற்றிகரமாக நுழைந்தனர்.

திருச்சி மலைக்கோட்டை மற்றும் திருவானைக்காவல்

திருச்சி மலைக்கோட்டையிலும், திருவானைக்காவலிலும் கோவில் நுழைவுப் போராட்டம் 1928-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தோழர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள்ளே வைத்து பூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத்தினர்

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 1929 மார்ச் 12-ம் தேதி தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர, தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை பெரியாரின்  தளபதி குத்தூசிகுருசாமி முன்னின்று நடத்திக் காட்டினார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சை மேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு திருநீறு பூசச் செய்து தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டோடு ஈரோட்டின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்.

குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்ப்பனர்கள் செய்தியை ஊருக்குள் பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டி தோழர்களை கோவிலுக்கு உள்ளேயே வைத்து வெளிக்கதவை இழுத்துப் பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை சென்றார். ”ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம்பெறும்” என்று குடியரசில் எழுதினார்கள்.

கோயில் நுழைவு உரிமைக்காக சுப்பராயன் முன்வைத்த சட்டவரைவு

31.1.1933 அன்று டாக்டர் சுப்பராயன், சென்னை சட்டமன்றத்தில் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போது சுப்பராயன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. “சுப்பராயன் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம்மசோதாவை கட்டாயம் ஆதரிக்க வேண்டும்” என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் எழுதினார். 

இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் ரெட்டமலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும், நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் இது சட்டமாக்கப்படவில்லை.

இத்தனை பெரும் போராட்டத்தை ஆலய நுழைவிற்காக நிகழ்த்தியது தந்தை பெரியாரும் அவரது திராவிடர் இயக்கமும். அதன் காரணமாக மக்களிடம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால், வேறு வழியின்றி தேர்தல் காரணங்களுக்காக வைத்தியநாத ஐயர் போட்ட நாடகத்தை வரலாறாக சாதனையாக மாற்றகிறார்கள்.

அனைவரும் ஆலைய நுழைவு என்பது திராவிட இயக்கம் வென்ற களங்களில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *