ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இதில் பாஜகவானது, தான் ஆளுங்கட்சியாக இருக்கிற இரண்டு மாநிலங்களிலும், அதனது எதிர்க்கட்சிகள் ஆளுகிற தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திலும் தேர்தலை சந்திக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக அணியில் அதிமுக, பாமக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
திமுக தலைமையிலான அணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும் அக்கூட்டணி முன்பு எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலும் தேர்தலில் களம் காண்கின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் போட்டியை தேசிய ஜனநாயக கூட்டணி ( NDA) vs தமிழ்நாடு மற்றும் டெல்லி vs தமிழ்நாடு என்றே அழைக்கின்றார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் ‘பாஜக எதிர்ப்பு’ என்கிற முழக்கம் முன் வைக்கப்பட்டு, தேர்தல் களம் அமைக்கப்படுகிறது.
நேரடியாக பிஜேபி தலைமையிலான அதிமுகவை ஆதரிக்க முடியாதவர்களும், தங்களை நடுநிலைவாதிகள் என காட்டிக்கொள்ளும் திராவிட சித்தாந்த எதிர்ப்பாளர்களும் ‘பாஜக உள்ள வந்துரும் ப்ரோ’ என்று பூச்சாண்டி காட்டுகிறீர்களா..? என்பதாக மதசார்பாற்ற கூட்டணியை விமர்சனம் செய்கிறார்கள்.
உண்மையில் இந்த விமர்சனத்தில் அர்த்தமிருக்கிறதா..?
பாசிச எதிர்ப்பு என்பது தீவிரமான அரசியல். அதை நீர்த்துப்போக செய்கிற வகையிலும், அதன் தீவிர தன்மையை மழுங்கடிக்கும் விதமாகவும் ‘பாஜக உள்ள வந்துரும் ப்ரோ’ என்று பகடி செய்வதன் மூலமாக, ஆர் எஸ் எஸ்- பாஜகவின் இந்துத்துவப் பரவலை நடுநிலைவாதிகள் என சொல்லிக்கொண்டு இயல்பாக்க முயலுகிறார்கள்.
பாசிசம் என்பது பன்மைத்துவத்தை மறுக்கும் ஒற்றை ஆதிக்க சிந்தனை முறை. இதனை பல வழிகளிலும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கூட்டு நிறைவேற்றி வருகிறது.
இந்தியா போன்ற பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அவைகளின் அரசியலமைப்பு அலகுகளாக இருக்கிற மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, கூட்டாட்சிக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கீழ் அதிகாரம் குவிக்கப்படுகிறது.
மேலும் ‘பாராளுமன்ற தொகுதி மறுவரை(Delimitation)’ போன்ற வழிமுறைகள் மூலம் பலகட்சி தேர்தல் ஜனநாயகத்தை அழித்து ஒற்றைக்கட்சி ஆட்சியை நிறுவுவதன் வழியாகவும், சமூக- ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் சுயாதீன அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு/ அமலாக்கத்துறை துறை போன்ற விசாரனை அமைப்புகளை ஆக்கிரமித்து தன் வசப்படுத்துவதன் வழியாகவும் ‘ஒற்றை சர்வாதிகார ஆட்சியை’ நோக்கி இந்தியாவை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.
சிறு, குறு முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் போக்கை மறுத்து, ஒரிரு கார்பரேட் முதலாளிகளினுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தும் அரசாக தங்களை வரித்துகொள்கிறார்கள்.
இத்தகைய எல்லா வகைகளிலுமான பாசிச ‘ஒற்றை’ ஆட்சிக்கான வெகுமக்கள் அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில், இஸ்லாமியர்களை எதிர்நிலையில் வைத்து ‘நாம் Vs அவர்கள்’ என்கிற வெறுப்பு சிந்தனையை வளர்த்தெடுக்கிறார்கள். ஆட்சி நிர்வாகத்தில் பாசிசத்தினை நிலைநிறுத்த மக்கள் பிரிவினுக்குள் ‘பெரும்பான்மை எதிர் சிறும்பான்மை’ என்ற வெறுப்பு சிந்தனையை கட்டவிழ்த்துவிகிறார்கள்.
பாசிச நிகழ்ச்சி நிரலிலிருந்து பாஜகவால் கட்டவிழ்த்துவிடப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்து அறிந்திருந்தால் ‘பாஜக உள்ள வந்துடும் ப்ரோ என்று பூச்சாண்டி காட்டாதீர்கள்’ என பேசமாட்டார்கள்.
பாஜக உள்ள வந்திடும் ப்ரோ என்பது வெறும் பூச்சாண்டியா ..? பார்ப்போம் :
ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்பு ஆய்வு மையத்தின் (Centre for the Study of Organized Hate- CSOH) ஒரு திட்டமான இந்திய வெறுப்பு ஆய்வகம் The India Hate Lab (IHL) தனது 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக 2025-ல் நடந்த வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பேச்சுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 2026 ஜனவரி மாதம் வெளிவந்தது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2025ல் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 1318 வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் பேச்சுகள் நடந்தேறியுள்ளது. சராசரியாக, நாளொன்றுக்கு நான்கு வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 13%அதிகம். 2023-ஆம் ஆண்டை விட 97% அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் (266), மகாராஷ்டிரா (193), மத்தியப் பிரதேசம் (172), உத்தரகாண்ட் (155) மற்றும் டெல்லி (76) ஆகிய பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வெறுப்புப் பேச்சு பிரச்சாரங்கள் பதிவாகியுள்ளது.

2023 -2025 வரை பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் பதிவாகியுள்ள வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் பேச்சுகளின் எண்ணிக்கை :
1164 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் (88%) பா.ஜ.க நேரடியாக அல்லது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகத்தின் கீழ் உள்ள டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் நிகழ்ந்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 931 சம்பவங்களிலிருந்து 25% அதிகமாகும். அதேபோல் பா.ஜ.க ஆட்சித் தொடர்பில் இல்லாத மாநிலங்களில் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் பிரச்சாரங்கள் குறைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக வலுவாக உள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் :
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை :
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இந்தியா முழுவதும் குறிப்பாக பிஜேபி ஆளக்கூடிய மாநிலங்களில்,கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவங்கள் பற்றிய செய்தியினை ப்ரண்ட் லைன் இணையதளம் வெளியிட்டுள்ளது..
United christian forum (UCF) தகவலின்படி, 2014-இல் 139 ஆக இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாண்டு கால பிஜேபி ஆட்சியில் 2024 -ல் 834 ஆக பதிவாகியுள்ளது. அதுவே பிஜேபி-யின் மூன்றாவது ஆட்சி அமைந்த ஒரே ஆண்டில் 2025 -ல் நவம்பர் வரை மொத்தம் 706 சம்பவங்களை ஆவணப்படுத்தி உள்ளது.
இதில் உத்தரப்பிரதேசம்( 184 )மற்றும் சத்தீஸ்கர்( 157 ) மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை பதிவான 579 சம்பவங்களில், 39 சம்பவங்களை மட்டுமே காவல்துறை வழக்குகளாக பதிவு செய்துள்ளது.
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையான கிறிஸ்மஸ் வாரத்திலும் பல இடையூறுகளை சங்பரிவார் கும்பல் செய்துள்ளது. அவர்களின் மத விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவதை தடுக்கும் விதமாக பிஜேபி வலுவாக உள்ள பகுதிகளில் சங்பரிவார் கும்பல் வன்முறைகளை கட்டவிழ்த்து உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பரேலியில், பிஷப் கான்ராட் பள்ளியில் (Bishop Conrad School) உள்ள தேவாலயத்திற்கு வெளியே பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி எச் பி) உறுப்பினர்கள், காவல்துறையினர் கண்முன்னே ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டனர்.
அதே போல் அசாமின் நல்பாரியில், பனிகானில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளிக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் நுழைந்து, “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஜெய் ஹிந்து ராஷ்ட்ர” என்று கோஷமிட்ட பின்னர், கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கு தீ வைத்துள்ளனர். வி.எச்.பி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் தேகா, “இங்கு கிறிஸ்தவ பண்டிகைகளை நாங்கள் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார் .
சத்தீஸ்கரில் கான்கேர் மாவட்டத்தின் படே தியோடா கிராமத்தில் ஒரு கிறிஸ்தவரின் வீடு எரிக்கப்பட்டு, தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள், மரக் குச்சிகளுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் சேதப்படுத்தியதுடன், சாண்டா கிளாஸ் சிலையையும் உடைத்திருக்கிறது .
ஒடிசாவில், சாண்டா கிளாஸ் தொப்பிகளை விற்கும் தெருவோர வியாபாரிகளை சங் பரிவார் கும்பல் துன்புறுத்தும் காணொளிகள் வைரலாகப் பரவின. அந்த காணொளியில் அவர்கள், “இது இந்து ராஷ்டிரம். நீங்கள் இங்கே கிறிஸ்தவப் பொருட்களை விற்க முடியாது. ஜெகந்நாதரின் பொருட்களை விற்கவும்” என்று கூறி தாக்கினார்கள். அத்தொப்பிகளை வயிற்றுப் பிழைப்புக்காக விற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தினர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
மேலும் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், பாஜக நகரத் துணைத் தலைவர் அஞ்சு பார்கவா ஒரு பார்வையற்ற பெண்ணின் முகத்தைப் பிடித்து, கையை முறுக்கி, “அடுத்த பிறவியிலும் நீ பார்வையற்றவளாகவே இருப்பாய்” என்று மிரட்டும் காணொளியும் வைரலாக பரவியது . இந்தச் சம்பவம் டிசம்பர் 20 அன்று ஹவாபாக் மகளிர் கல்லூரிக்குப் பின்னால் உள்ள ஒரு தேவாலயத்தில் நிகழ்ந்திருக்கிறது .
அதேபோல் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா,உத்தரகாண்டின் ஹரித்வார், டெல்லியின் லஜ்பத் நகர், கேரளாவின் பாலக்காடு, ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சிவாரா கிராமம் மற்றும் ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டம் என நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக பிஜேபி வலுவாக உள்ள பகுதிகளில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு எதிராக கிருஸ்துமஸ் நாளையொட்டிய ஒரே வார காலத்திற்குள்ளாகவே இத்தகைய வன்முறைகள் நடந்தேறியிருக்கிறது .
ஆனால் நமது ஊரில் கிறித்துமஸ் என்பது பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் நட்சத்திரத்தை தொங்க விடுவதும், பலகாரங்கள், கேக் பரிமாறி கொள்வதும், கிறிஸ்தவர்களோடு இணைத்து வேளாங்கண்ணிக்கு செல்வதும் மிக இயல்பானவொன்று. மகிழ்ச்சியின் வடிவமாக காட்டப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது. ஆனால் பிஜேபி என்கிற மதவாத கட்சியோ அல்லது அதன் கூட்டணியோ ஆட்சிக்கு வந்தால் கிருஸ்துமஸ் நட்சத்திரங்களை விற்கும் கடைகள் கூட அடித்து நொறுக்கப்படலாம். நமது தெருக்களில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தாக்கப்படலாம் .
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை :
கட்டுப்பாடு (நிதானம் ), சுய சிந்தனை மற்றும் பக்திக்குரிய மாதமாக இருக்க வேண்டிய புனித ரமலான் மாதம், பல மாநிலங்களில் கைதுகள், தாக்குதல்கள், கொலைகள் மற்றும் பகிரங்கமான வெறுப்புப் பேச்சுக்கள் என அமைதியின்மை மற்றும் அச்சத்தல்களால் சூழப்பட்ட மாதமாக இருந்தது.
தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் பல நிகழ்வுகளால் இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது என்கின்றனர் இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்காக பணியாற்றி வரும் மனித உரிமை ஆர்வலர்கள்.
ரமலான் மாதத்தில் வடகிழக்கு டெல்லியில், இஸ்லாமியர் என்பதற்காகவே 15 வயது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் மகனைக் காப்பாற்ற சென்ற தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது .
புனேவில், மார்ச் 13 -ம் தேதி நோன்பு திறந்த குழுவினர் மீது தடிகள் மற்றும் கம்பிகளை கொண்டு கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது .
உத்திர பிரதேசம் லக்னோவில் வளாகத் தொழுகைக்கூடம் மூடப்பட்ட பிறகு திறந்தவெளியில் தொழுத மாணவர்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, பெரும் பிணைத் தொகையை செலுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள் .
பிப்ரவரி 26 அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சகர் மற்றும் இப்தார் நேரங்களில் தங்களுக்கு உணவு மறுக்கப்பட்டதாக காஷ்மீர் மாணவர்கள் குற்றம் சாட்டினர், அவர்களை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திட்டி, வெளியேற்ற மிரட்டுவது போன்று ஒரு காணொளியில் பதிவாகியிருந்தது .

காசியாபாத்தில் வாள்களை விநியோகித்த மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட இந்து ரக்ஷா தள் உறுப்பினர்கள் .
உத்தரகாண்டில் பிப்ரவரி 25 அன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு முஸ்லிம் நபரை , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட வற்புறுத்தி தாக்குகின்ற காணொளியொன்றும் பதிவாகியிருந்தது.
பீகாரில் மதுபானி மாவட்டத்தில், மார்ச் முதல் வாரத்தில் ரோஷன் காதுன் என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது .
மார்ச் 2-ம் தேதி ராஜஸ்தானின் பிவாடி அருகே 28 வயதான ஆமிர்கான் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் .இப்படி தொடர்ச்சியாக இவ்வருட ரமலான் மாதத்தில் பிஜேபி ஆளும் மற்றும் பிஜேபி கூட்டணி அரசு ஆளும் மாநிலங்களில் இசுலாமியர்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது .
உத்திர பிரதேசம் லக்னோவில் மார்ச் 2 ஆம் தேதி இப்தார் விருந்துக்குப் பிறகு நண்பரைச் சந்திக்கச் சென்ற 12 வயது உனைஸ் கான் என்ற சிறுவன் மிக அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையின் முக்கியக் குற்றவாளி சிறுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்படிஎன்றால் இந்த கொலையை செய்தது ஒரு சிறுவன். இந்த சம்பவம் சில கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது
- கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் எந்த வகையில் அசச்சுறுத்தலாக இருந்திருப்பான் ..? இஸ்லாமியர் என்ற காரணத்தால் மட்டுமே அச்சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். அப்படியென்றால் இந்திய ஜனநாயக நாட்டில் இஸ்லாமியரென்றால் கொலை செய்து விடுவார்களா ..?
- கொலையின் முக்கிய குற்றவாளி சிறுவன்… இந்த சிறு வயதில் இஸ்லாமிய வெறுப்பை அவனுக்குள் விதைத்தது யார்? இந்த வெறுப்புணர்விற்கு யார் பொறுப்பேற்பது?
இப்படியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்திருப்பதும், குறிப்பாக சிறுவர்களிடமும் கூட வன்முறை சிந்தனையை விதைப்பதுமான போக்குகளை தனித்தனி குற்றச் சம்பவங்களாக மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இயங்குகின்ற பெரிய அமைப்பு ரீதியான செயல்பாட்டின் தொடரியக்கமாகவே பார்க்கப்பட வேண்டிருக்கிறது .
சில சம்பவங்கள் மட்டுமே இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது .ரமலான் மாதத்தில் மட்டுமில்லாமல், ராமநவமி பண்டிகை ஓன்று கூடுகையும் ஒரு பதற்றமான சூழலை இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மத விழா கூடுகைகள் இந்துத்துவ அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள், வன்முறைகளை, தூண்டிவிடக்கூடிய நிகழ்வாக மட்டுமே சமீப காலங்களில் நடத்துவிக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் நடந்த 28 மதக்கலவரங்களில் ஏறக்குறைய 40% மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும், 37% கிழக்கு மாநிலங்களிலும், 25% வடக்கு மாநிலங்களிலும் பதிவாகியுள்ளன. தென்னிந்தியாவில் கலவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. 28 கலவரங்களில் ஒன்பது மத ஊர்வலங்கள் அல்லது பண்டிகைகளின் தூண்டப்பட்டு நடந்தேறியவை. மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் நடந்த ராம நவமி ஊர்வலங்கள், மத்தியப் பிரதேசத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலம், அசாமில் நடந்த ஈத் கொண்டாட்டங்கள் மற்றும் குஜராத்தில் நடந்த கர்பா நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போது ஏற்பட்ட மோதல்ளே இதற்கு உதாரணம் என Centre for Study of Society and Secularism (CSSS ) கூறியுள்ளது.

ரமலான் மாதத்தில் வன்முறை அச்சுறுத்தல் காரணமாக உத்தம் நகரில் இருந்து வெளியேறிய குடும்பத்தினர்
2014-ல் மோடியின் பாஜக அரசு முதன்முதலில் பதவியேற்றதிலிருந்து, அதன் பாகுபாடு நிறைந்த கொள்கைகளும், பாஜக தலைவர்களின் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளும் இந்து தேசியவாத வன்முறையைத் தூண்டிவிடுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் பிரதமரான நரேந்திர மோடி, வெளிப்படையாகவே இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்களுக்கு எதிராக அடிக்கடி வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இப்படியான வெறுப்பு பரப்புரைகளையும் அதன் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு தேவையான வேலைகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக பல வழிகளில் செய்து பார்த்தது. மண்டைக்காடு கோவில் திருவிழா, ஜனவரி 2022-ல் தஞ்சாவூர் (திருக்காட்டுப்பள்ளி) தனியார் கிருத்துவப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூர் மாணவியின் தற்கொலையை மதமாற்ற முயற்சி என்று வதந்தி பரப்பியது, திருப்பரங்குன்றம் விவகாரம் என தொடரும் வெறுப்பு பரப்புரையை மக்கள் ஆதரவுடன், உறுதியான நிலைப்பாடு கொண்டு தடுத்திருக்கிறது திமுக அரசு.
பாஜக உள்ளே வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் திமுகவை, திமுக அரசை பாதுகாப்பதற்கான வழி என நம்புகிறவர்கள் ‘பாஜக உள்ள வந்துடும் ப்ரோ’ என்பதை ‘பூச்சாண்டி காட்டுவதாக’ பரப்புரை செய்கிறார்கள். அவர்களை நோக்கி கேட்பதெல்லாம், கடந்த ஐந்தாண்டுகாலத்தில் திமுக அரசு மற்றும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு தமிழ்நாட்டில் பாஜகவினுடைய வெறுப்புப் பிரச்சாரங்களை முறியடித்திருக்கிறார்களா இல்லையா? திருப்பரங்குன்ற விவகாரம் ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை நிகழ்ச்சி நிரல் என்பதையறிந்தும், தங்களது ஆட்சிக் காலத்தின் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைக்கு எதிராக அதிமுக, கூட்டணிக் கட்சியான பாஜகவின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஆட்பட்டதா இல்லையா?
பதில் சொல்லுங்கள். பதில் உணர்ந்தவர்களுக்கு பாசிசம் என்பது ‘பாசிச பாஜக உள்ள வந்துடும் ப்ரோ’ என்கிற பூச்சாண்டி காட்டுவதாகவோ, பாயசமாகவோ தெரியாது.
– எரிசினக் கொற்றவை
