பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையிலும், கூட்டணி கணக்குகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டும் பார்த்து வருகிறோம். 

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2

11. காரைக்குடி

காரைக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின்  வேட்பாளராக ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாங்குடி என்பவரும், அமமுக-வின் மாவட்டச் செயலாளர்  தேர்போகி பாண்டியும் போட்டியிடுகிறார்கள். இங்கு மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் 1,00,249 வாக்குகளும், அதிமுக  கூட்டணியில் போடியிட்ட ஹெச்.ராஜா 33,400 வாக்குகளும், அமமுக   சார்பில்  போட்டியிட்ட  தேர்போகி பாண்டி 27,123 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதிமுக, தேமுதிக, பாமகவை உள்ளடக்கி மெகா கூட்டணி என்று அழைத்துக் கொண்ட வலுவான கூட்டணியில் நின்றபோதும் கூட, பாஜகவின் ஹெச்.ராஜா, கட்சி பதிவு கூட செய்யப்படாமல் கடைசி நேரத்தில் பரிசுப்பெட்டி  சின்னம் பெற்று சுயேட்சை வரிசையில் இருந்த தேர்போகி பாண்டியை விட   6,227 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றார். தற்போது அக்கூட்டணியில் இருந்த தேமுதிக அமமுக-வுடன் இருக்கிறது.    

2016 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட முத்துலெட்சுமி பெற்ற வாக்குகள் வெறும் 4,969 தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் கண்ணங்குடி  ஊராட்சி ஒன்றியத் தலைவாரக அதிமுகவைச் சேர்ந்த சரவணன் மெய்யபன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதில் இருந்து அந்த தொகுதியில் அமமுக வாக்கு சதவீதம் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கு நேரடி போட்டியே காங்கிரசிற்கும், அமமுக-விற்கும் தான் என்றே அப்பகுதி வாக்காளர்கள் கூறுகிறார்கள். எனவே ஹெச்.ராஜா கரை சேர்வதற்கு வாய்ப்பு மிக மிகச் சொற்பம் என்றே தெரிகிறது. 

12. மதுரை வடக்கு 

கடைசி நேரத்தில் திமுகவில் இருந்து கட்சி மாறி வந்த மருத்துவர் சரவணனை இத்தொகுதியில் பாஜக நிறுத்தியிருக்கிறது. திமுக சார்பாக மாவட்டச் செயலாளர் தளபதியும் நிறுத்தப்பட்டிருக்கிறார். 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 70,866 வாக்குகளை மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பெற்றிருக்கிறார். அதிமுக சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மகன் ராஜ் சத்தியன் 41,958 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

ஆளுங்கட்சியாக இருக்கிறபோதே, திமுக நேரடியாக போட்டியிடாத போதும் கூட நாடாளுமன்றத் தொகுதியில் தன் மகனுக்கு விழுந்த அடியைப் பார்த்த இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இந்தமுறை திருப்பரங்குன்றத்திற்கு போட்டியிடச் சென்று விட்டார். 

2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் நின்ற இந்திய ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 1,339 தான். அந்த தேர்தலில் இங்கு நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் 3,479 என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தேர்தலில் பாஜகவின் சார்பில் மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோரில் யாருக்காவது இத்தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பாஜகவினர், திடீரென்று திமுகவிலிருந்து திமுக-வில் இருந்து கட்சி மாறிவந்த சரவணனுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பும்  சரவணனுக்கு இல்லாமல் இருக்கிறது. 

அதிமுக-வின் வாக்குகளை மட்டுமே நம்பி சரவணன் நிற்கிறார். அதிமுகவினரும் ராஜன் செல்லப்பாவிற்கும், செல்லூர் ராஜுவிற்கும் வேலை செய்ய போய்விட்டதால் சரவணனின் நிலை இத்தொகுதியில் பரிதாபம் தான்.

13. திருவையாறு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் திமுக சார்பாக தற்போதைய  சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரும், பாரதிய ஜனதா கட்சி சார்பாக  பூண்டி எஸ்.வெங்கடேசனும் போட்டியிடுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குள் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 1,11,232 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக   கூட்டணியில் நின்ற த.மா.க வேட்பாளர் நடராஜன் 43,373 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் முருகேசன் 18,146 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.  

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக வெற்றிபெற்ற துரை.சந்திரசேகர்  1,00,043 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் சுப்ரமணியம் 85,700 வாக்குகள் பெற்றிருக்கிறார். அதேவேளையில் பாஜக கூட்டணியில் நின்ற இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் 1,072 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் நோட்டா வாங்கிய வாக்குகள் 1,987 ஆகும். 

2016 சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில், ஜெயலலிதாவிற்கு பின்பான காலத்தில் திமுகவின் வாக்கு வங்கி கூடியும், அதிமுக கூட்டணியின் வாக்குவங்கி பாதியாகக் குறைந்துமே காணப்படுகிறது. மேலும் இத்தேர்தலில் அமமுக கூடுதலாக வாக்குகளை பிரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு நெல் கொள்முதலை முறையாக அதிமுக நடத்தாத போது நேரடியாக கொள்முதல் நிலையங்களுக்கு வந்து துரை.சந்திரசேகர் போராடியது விவசாயிகள் அதிகம் உள்ள தொகுதியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் திமுக-வே வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த பாகங்களைப் படிக்க:

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *