இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்

உலகெங்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சங்கள் மனித இனத்தையே ஆட்டிப் படைக்கிறது. மருத்துவ உலகம் நோய்க் கூறுகளை கண்டறிவதிலும் அதில் ஏற்படும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதிலும் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. 

முக்கால் பங்கு நோயாளிகளின் இதயத்தில் கொரோனா வைரஸ்

அந்தவகையில் இந்தவாரம்  ‘மார்டன் பேத்தாலஜி’ (Modern Pathology) என்னும் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வு மிக முக்கிய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய ஆய்வில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்து இறந்த முக்கால் பங்கு நோயாளிகளின் இதயத்தில் கொரோனா வைரஸ் எனப்படும் SARS-CoV-2 என்ற நுண்கிருமி மறைந்திருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர். 

இந்த நோயாளிகளின் மரணத்தின் இறுதி தருணங்களில் அவர்களின் இதயத் துடிப்பில் வழக்கத்திற்கு மாறான ஏற்றத்தாழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. இந்த ஆய்வு தற்போது கொரோனா நோயானது எப்படி இதயத்தை தாக்குகிறது என்பதைப் பற்றியும், அதற்கு தேவையான சிகிச்சைகள் பற்றியும் ஒரு முதல்கட்ட பார்வையைத் தந்திருக்கிறது.

இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள்

கொரோனா பாதித்து இறந்த நோயாளிகளுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கு ஆய்வாளர்கள் ஏராளமான ஆதாரங்களை சேகரித்திருக்கிறார்கள். உதாரணமாக அவர்களின் இரத்தத்தில் அளவிற்கு அதிகப்படியான ‘ட்ரோபோனின்’ (Troponin) என்ற இதயத்தசை புரோட்டீன் மூலக்கூறுகளை கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அதிகப்படியான இதயத்தசை புரோட்டினானது இதயம் சேதமடைந்ததால் மட்டுமே இரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. 

மேலும் சில நோயாளிகளுக்கு இதயத்தை சுற்றியுள்ள உறையில் எரிச்சலையும், வீக்கதையும் பதிவு செய்திருக்கிறார்கள். முதல்கட்ட ஆய்வில் இத்தகைய விடயங்களைக் கண்டறிந்தாலும் இத்தகைய பாதிப்பு கொரோனா நுண்கிருமி நேரடியாக இதயத்தை பாதிப்பதால் வருகிறதா? அல்லது உடலின் அதிகப்படியான நோயெதிர்ப்பு ஆற்றலினால் வருகிறதா? என்பதைப் பற்றிய தெளிவான முடிவினைக் கண்டறியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா இதய பாதிப்பு
சிறிய, அடர் ஊதா புள்ளிகள் கொரோனா பாதித்து  இறந்த நோயாளியின் இதயத்தில் காணப்படும்  அழற்சி செல்களைக் காட்டுகின்றன

இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளும், இப்போதைய ஆய்வும்

இதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகளில் கொரோனா வைரஸ் இருதயத்திற்குள் ஊடுருவ முடியுமா என்பது பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் நேரடியாக செய்யப்படவில்லை. இதைப்பற்றி குறிப்பிடும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் இருதய நோயியல் நிபுணர் ‘ஜேம்ஸ் ஸ்டோன்’ (James Stone, a cardiovascular pathologist at Massachusetts General Hospital) இப்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்படும் பி.சி.ஆர் சோதனையில் (Real-time Polymerase Chain Reaction – RT-PCR) கொரோனா வைரஸ் உடலினுள் நுழைந்திருப்பதை எளிதாகக் கண்டறிய முடியும். ஆனால் இருதய சிசுக்களை பாரபின் போன்ற வேதிப்பொருள்களை கொண்டு பதப்படுத்திய பின்தான் சோதனையைத் தொடர இயலும். இந்த வேதி  முறையினால் இருதய திசுக்களில் கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறிவது கடினமாகிறது என்கிறார். இதனால் Situ Hybridization and NanoString Transcriptomic Profiling என்ற மற்றொரு சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனை இருதய திசுக்களில் கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது.

41 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு

கொரோனா வைரஸ் பாதித்த 41 நோயாளிகளை சோதித்ததில் அவர்களில் 30 நோயாளிகள் இதய அறைகளின் சிறு நடுக்கங்களாலும் (Atrial Fibrillations) முறையற்ற அல்லது அதிகப்படியான இதய துடிப்புகளாலும் அவதிப்பட்டதைக் கண்டறிந்தனர். இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் நேரடியாக இதயத்தை தாக்குகிறதா என்பதைப் பற்றிய குழப்பங்களும் இருந்தன. ஏனெனில் பாதிக்கப்பட்ட இதய உயிரணுக்களில் பெரும்பாலானவை நோயெதிர்ப்பு செல்கள், அவை கொரோனா நுண்கிருமி இதயத்திற்கு நுழைவதற்கு முன்பே உடலில் வேறு பாகங்களிலிருந்து  இதயத்திற்கு வந்தடைந்திருக்ககூடிய சாத்தியங்களும் இருந்தன.

உதவியாய் இருந்த ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன்

எப்படியிருந்தாலும் இந்த ஆய்வு ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் (steroid Dexamethasone) போன்ற மருந்துகளை எடுத்துக்கொண்ட சில நோயாளிகளுக்கு அவை ஏன் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது என்பதை விளக்க உதவியிருக்கிறது. கடுமையான கொரோனா நோயிலிருந்து மனித இறப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட  மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த மருந்து வீக்கத்தைக் குறைக்கிறது. இது இதயத்தில் கொரோனா வைரஸ் கொண்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று ஸ்டோன் கூறுகிறார். குறிப்பிடத்தக்க வகையில் டெக்ஸாமெதாசோனுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 50% சதவிகிதம் பேருக்கு மட்டுமே அவர்களின் இதயங்களில் கொரோனா வைரஸ் காணப்பட்டது. இந்த விகிதமானது டெக்ஸாமெதாசோனுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத கொரோனா வைரஸ் நோயாளிகளில் 90% சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான துவக்கம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற மாயோ கிளினிக்கின் இருதய நோயியல் நிபுணர் ஜோசப் மலெஸ்வெஸ்கி (Joseph Maleszewski, a cardiovascular pathologist at the Mayo Clinic) இந்த புதிய ஆய்வைப் பற்றி குறிப்பிடும்போது இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் நமது மருத்துவத்தை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கும் நல்ல அழைப்பு என்று கூறுகிறார். விஞ்ஞானிகள் மேலும் அதிக இருதய திசுக்களை ஆய்வு செய்ய வேண்டுமென்று அவர் வாதிடுகிறார். கொரோனா வைரஸ் எவ்வாறு உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்பது மட்டுமல்ல, அது உயிர் பிழைத்தவர்களின் இதயங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவும் இந்தவகை ஆய்வுகள் உதவக்கூடும். கொரோனா பாதிப்பு இதயத்தில் வடு திசுக்களை உருவாக்கக்கூடும் இது நோயாளிகளுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தி  உடல்நலனில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். 

தொடரும் மருத்துவ ஆய்வுகளில்தான் கொரோனா நுண்கிருமியானது நோயாளிகளுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். இத்தகைய ஆய்வுகள் மருத்துவ உலகில் பல்வேறு முன்னேற்றங்களை தெரிவிக்கின்றன. கொரோனா நுண்கிருமியை எதிர்கொள்ளத் தேவையான அத்தியாவசிய சிகிச்சை வழிமுறைகளை இத்தகைய அறிவியல் ஆய்வுகளே வழங்குகிறது. மனிதஇனம் இன்னும் செல்லவேண்டிய தூரத்தில் இந்த ஆய்வுகள் ஒரு விடிவெள்ளியாக வழிகாட்டக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *