ஐ.நாவின் உறுப்பு அமைப்பான UN Sustainable Development Solutions Network உலகத்தில் எங்கெங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்ற ஆய்வினை மேற்கொண்டு ஒரு அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
149 நாடுகளுக்கான ஆய்வில் இந்தியா 139-வது இடத்தையே பிடித்திருக்கிறது. அதிகமான மக்கள் மகிழ்ச்சியின்றி கவலையில் வசிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் தனது குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய நாடாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது பின்லாந்து.
இந்தியாவின் அண்டை நாடுகள்
ஆப்கானிஸ்தானைத் தவிர இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் மகிழ்ச்சிக்கான தரவரிசையில் இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் உள்ளன. இந்த தரவரிசையில் பாகிஸ்தான் 105-வது இடத்திலும், சீனா 84-வது இடத்திலும், வங்கதேசம் 101வது இடத்திலும் இருக்கின்றன.
10 நாடுகளே இந்தியாவை விட பின்தங்கியுள்ளன
மொத்த தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிற்கு கீழே இருக்கும் இதர 9 நாடுகள்: புருண்டி, யேமன், தான்சானியா, ஹைத்தி, மாலாவி, லெசோத்தோ, போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே.
மூன்று அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு
மூன்று விடயங்களின் அடிப்படையில் மக்களிடையே கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.
- வாழ்க்கை மதிப்பீடுகள்
- பாசிட்டிவ் எமோஷன்ஸ்
- நெகட்டிவ் எமோஷன்ஸ்
முதல் அளவீடான வாழ்க்கை மதிப்பீடுகள் என்பதில் 0 முதல் 10 வரை உங்கள் வாழ்க்கையை மதிப்பிட வேண்டும் என கேட்கப்பட்டது. அதில் 0 என்பது மோசமான வாழ்க்கை என்றும், 10 என்பது சிறந்த வாழ்க்கை என்றும் கருத்தில் கொள்ளப்பட்டது. இந்த 0 முதல் 10 வரையிலான படிக்கட்டுகளில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
பாசிட்டிவ் எமோசன்ஸ் எனும் அளவீட்டைப் பொறுத்தவரையில், மகிழ்ச்சி (Happiness), சிரிப்பு(Laugh), இன்பம் (Enjoyment) இந்த மூன்றையும் கடந்த இரு நாட்களில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
நெகட்டிவ் எமோசன்ஸ் எனும் அளவீட்டைப் பொறுத்தவரையில், கவலை (Worry), சோகம் (Sadness) மற்றும் கோபம் (Anger) இந்த மூன்றையும் நீங்கள் அனுபவித்தீர்களா என்று கேட்கப்பட்டது.
ஆய்வுக்கான இதர தரவுகள்
இவை தவிர்த்து தனிநபர் வருமானம், ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, வாழ்க்கையை தேர்வு செய்வதற்கான சுதந்திரம், ஊழல் குறித்தான கருத்து உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டிருக்கிறது.