நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த தொகுதிகளின் நிலவரங்களை அலசலாம். 20 தொகுதிகளில் தாமரை மலருமா என்ற ஒரு அலசல்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் புதிய தமிழகம் வெளியேறியிருப்பதும், திமுக கூட்டணியில் இருந்த பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி வெளியேறியிருப்பதும் தான் இடைப்பட்ட காலத்தில் நடந்த சிறு மாற்றம்.
இதில் பச்சமுத்துவிற்கும், புதிய தமிழகத்திற்கும் தமிழகம் தழுவிய வாக்கு வங்கி இல்லை என்பதும், தேமுதிக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3000 முதல் 10,000 வாக்குகள் வரை வாங்கும் சக்தி கொண்ட கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. துறைமுகம்
சென்னை மாநகரில் இரண்டு தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் துறைமுகம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
துறைமுகம் தொகுதியில் பாஜக-வின் மாநில இளைஞர் அணி செயலாளரான வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பி.கே.சேகர்பாபு போட்டியிடுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
2019 தேர்தலில் இந்த தொகுதியை உள்ளடக்கிய மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பெற்ற வாக்கு 22,848 மட்டுமே. ஆனால் திமுக வேட்பாளர் 53,740 வாக்குகள் பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளர் பெற்ற வாக்கில் பாதியளவு கூட அதிமுக-பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பெறவில்லை.
மேலும் பி.கே.சேகர் பாபு கடந்த 20 ஆண்டுகளாக வடசென்னை முழுவதும் நன்கு அறியப்பட்டவர். அதேவேளையில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் வினோஜ் பன்னீர் செல்வம், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 110 வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டு 933 வாக்குகள் மட்டுமே வாங்கி வைப்புத் தொகையை இழந்தவர்.
அதிமுக வாக்குகளையும், மத்தியில் ஆளும் கட்சி என்கிற அதிகாரத்தையும், தேர்தலில் மார்வாடிகள் வாக்குகளையும் நம்பி நிற்கிறார். ஆனால் கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளை கணக்கில் கொண்டால் சேகர் பாபுதான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.
2. ஆயிரம் விளக்கு
சென்னையில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் மற்றொரு தொகுதி ஆயிரம் விளக்கு. இந்த தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் போட்டியிடுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக 75,027 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 27,254 வாக்குகளும் பெற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் திமுக வேட்பாளர். சினிமா நடிகை குஷ்பு மட்டுமல்ல, யாராக இருந்தாலும் இந்த பெரும் இடைவெளியை நிரப்புவது கடினம்.
மேலும் மருத்துவர் எழிலன் சமூக நீதி தளங்களில் பணியாற்றியவர் என்பவர் திமுக அல்லாத, தேர்தல் களத்திற்கு வெளியில் இருப்பவர்களும், நடுநிலையாளர்களும் கூட இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். எனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
3. திருக்கோவிலூர்
விருப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும், பாஜக சார்பில் கலிவரதனும் போட்டியிடுகிறார்கள். திருக்கோவிலூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 92,248 வாக்குகளைப் பெற்றது. அதிமுக 65,402 வாக்குகளைப் பெற்றது. இங்கு பாமக மற்றும் அதிமுக-வை நம்பியே சொந்த பலம் எதுவுமில்லாமல் பாஜக களமிறங்கி உள்ளது.
4. திட்டக்குடி (தனி)
கடலுர் மாவட்டம் திட்டக்குடி (தனி) தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 85,373 வாக்குகளும், அதிமுக 49,257 வாக்குகளும் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் வாங்கிய வாக்குகள் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாகத் தான் இருக்கிறது. இந்த தொகுதியிலும் தாமரை மலர்வதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை.
5. விளவங்கோடு
பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருப்பதாக சொல்லப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று இரண்டாவது இடம் வந்த பாஜக, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளில் பாதியைத் தான் பெற முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் விளவங்கோட்டில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 52,289 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் 1,06,044 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.
6. நாகர்கோவில்
பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில், திமுக கூட்டணி பெற்ற வாக்குகளுக்கு அருகாமையில் பாஜக வந்திருப்பது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மட்டும்தான். நாகர்கோவில் தொகுதியில் பாஜக 74,500 வாக்குகளும், காங்கிரஸ் 84,924 வாக்குகளும் பெற்றுள்ளன. அந்த தொகுதியிலும் கூட காங்கிரஸ் பத்தாயிரம் வாக்குகள் முன்னணியில் தான் இருக்கிறது. அங்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் திமுக சார்பில் களம் இறங்குகிறார்.
7. அரவக்குறிச்சி
பாஜகவின் மிகப்பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை போட்டியிடும் அரவக்குறிச்சில் பாஜக-வின் நிலைமை இன்னும் மோசம். அந்த சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரை 37,518 வாக்குகளை மட்டுமே வாங்கியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 1,12,627 வாக்குளை வாங்கியிருக்கிறார். 75,109 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வெற்றியைத் தொட முடியாத தூரத்தில் இருகிறது என்பதை அறிய முடியும்.
மீதமுள்ள தொகுதிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்…தொடரும்..
அடுத்த பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3