ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
ஏ.வி.பி ஆசைத்தம்பி 1924 செப்டம்பர் 24-ம் நாள் விருதுநகரில் பழனியப்பன் – நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1930-ம் ஆண்டில் விருதுநகரில் உள்ள சத்திரிய வித்தியா சாலையில் தனது தொடக்கக் கல்வியை தொடங்கியவர், அதன் பின் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் நடுநிலைப் பள்ளியில் படித்தார். 1940-ம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பை விருதுநகர் நாடார் நகர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இளமைக்காலம்
ஆசைத்தம்பியின் தந்தை பழனியப்பன் நீதிக்கட்சியில் ஈடுபாடுடையவர். அதனால் ஆசைத்தம்பியும் மாணவப் பருவத்திலேயே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். நீதிக் கட்சியின் கருத்துகளைப் பரப்புவதற்காக விருதுநகரில் இளைஞர் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
அந்த கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு பொதுவுடமை இயக்கத்தின் தலைவர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட பலரை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார். 1942 ஆகத்து 9-ம் நாள் முதன்முறையாக பெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்தினார்.
அறிஞர் அண்ணா தலைமையில் 1942-ம் ஆண்டு நடைபெற்ற திராவிட தொண்டர் படை மாநாட்டில் பங்கேற்றார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று சில மாதங்கள் வணிகத்தில் ஈடுபட்டார். மீண்டும் விருதுநகருக்குத் திரும்பி தனது அரசியல் பணியைத் தொடர்ந்தார்.
திராவிடர் இயக்கத்தில்
விருதுநகரில் 1944 சூன் 4-ம் தேதி நடைபெற்ற திராவிட மாணவர்கள் மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். 1946-ம் ஆண்டு மே மாதம் குடந்தையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
1944-ம் ஆண்டு ஆகத்து திங்கள் சேலத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. ஆசைத்தம்பியும் திராவிடர் கழகத்தில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். திராவிடர் கழகத்தின் விருதுநகர் நகரக் கழகச் செயலாளர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், மாநிலக் கழக செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தென்தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்ற பெரும் பணியாற்றினார்.
திராவிட நாட்டின் படத்தை திறந்து வைத்தார்
தூத்துக்குடியில் 1948-ம் ஆண்டு மே திங்கள் 8, 9 தேதிகளில் திராவிடர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் திராவிட நாட்டின் படத்தைத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினார் ஆசைத்தம்பி.
1948-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23, 24-ம் நாட்களில் ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் 19-வது மாநாடு சிறப்பு மாநாடாகக் கூடியது. 1938-ல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மரணமடைந்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் படத்தை ஆசைத்தம்பி திறந்து வைத்து உரையாற்றினார்.
முதல் கட்டுரை: பாகிஸ்தான் ஏன் பிரிய வேண்டும்?
விருதுநகரில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த இயக்க இதழ்களுக்கு அறிக்கையாக அனுப்பத் தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த 1943-ம் ஆண்டில், ’பாகிஸ்தான் ஏன் பிரிய வேண்டும்?’ என்னும் கட்டுரையை எழுதினார். அக்கட்டுரை சி. பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் இதழில் வெளிவந்தது. அதுவே இவருடைய முதல் கட்டுரை ஆகும்.
குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற திராவிட இயக்க இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளிவந்தன. அக்கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து 1944-ம் ஆண்டில் ’திராவிடர்கள்’ என்னும் நூலை விருதுநகர் இளைஞர் கழகம் வெளியிட்டது. இதுவே இவருடைய முதல் நூல் ஆகும்.
திருகுறள் மாநாடு
1949-ம் ஆண்டில் விருதுநகரில் பாரதிதாசன் தலைமையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதில் பெரியார், அண்ணா, சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக ஆசைத்தம்பி பணியாற்றினார்.
திமுக தொடக்கம்
சென்னை இராயபுரத்தில் உள்ள இராபின்சன் பூங்காவில் 1949 செப்டம்பர் 17-ம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது, ஆசைத்தம்பியும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். அக்கழகத்தில் பொதுக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார். அக்கழகத்தின் உறுப்பினராக இருந்த காலத்தில் பின்வரும் பொறுப்புகளை நிறைவேற்றினார்:
1950-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23, 24-ம் நாட்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாட்டை ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாட்டிற்கு ஆசைத்தம்பி தலைமை தலைமை தாங்கினார்.
சிறையில் மொட்டையடிக்கப்பட்டது
காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து 1949-ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் ’ஐயோ வேகுதே நெஞ்சம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். 1950-ம் ஆண்டில் அக்கட்டுரையை 12 பக்க நூலாக டி.வி.கலியபெருமாள் என்பவர் தன்னுடைய எரிமலை பதிப்பகத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து காந்தியார் சாந்தி அடைய… வெளியிட்டார். அந்நூலை அன்றைய தமிழ்நாடு அரசாங்கம் தடைசெய்தது. அந்நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பி, அதனை வெளியிட்டதற்காக டி. வி. கலியபெருமாள், து. வி. நாராயணன் ஆகியோர் கைது செய்ப்பட்டனர். அவர்களுக்கு முசிறி கிளை நீதிமன்றம் ஆறு மாதகால கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்தது. அப்போது மேல்முறையீடு செய்து பிணைக்கு காத்திருந்தபோது ஆசைத்தம்பிக்கும், அவரோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தது சிறை நிர்வாகம். அறிஞர் அண்ணா தன்னுடைய 30.7.1950 நாளிட்ட திராவிட நாடு இதழில் ஆசைத்தம்பியும் பிறரும் மொட்டைத் தலையோடு இருக்கும் படத்தை வெளியிட்டு அகிம்சா ஆட்சியின் அழகினைப் பார் என்னும் கட்டுரையை எழுதினார்.
திமுகவில் வகித்த பொறுப்புகள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உள்ளாட்சி, தமிழக சட்டப் பேரவை, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட ஆசைத்தம்பி, மக்கள் பிரதிநிதியாகவும் செயல்பட்டார்.
1946ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை விருதுநகர் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1957இல் ஆயிரம் விளக்குத் தொகுதியில் இருந்தும், 1967 இல் எழும்பூர்த் தொகுதியில் இருந்தும் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969-ம் ஆண்டிலிருந்து 1976-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தானி, வாடகையுந்து ஓட்டுநர் தொழிற்சங்கம், சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டுறவுச் சங்கம் வரையறுக்கப்பட்டது. அவற்றின் தலைவராகப் பதவி வகித்தார்.
இதழியல் பணி
திராவிட இயக்கத்தின் இதழ்கள் பலவற்றில் எழுதிவந்த ஆசைத்தம்பி, 1948-ம் ஆண்டில் ’தனி அரசு’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கினார். அதில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். சில ஆண்டுகளில் அவ்விதழை மாதமிருமுறை இதழாக மாற்றினார். பின்னர் 1958-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டுவரை நாளிதழாக வெளியிட்டார். மேலும் திராவிட சினிமா என்னும் இதழையும் நடத்தினார்.
இந்தி பேசும் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் உள்துறை என்றார்
”இந்தியாவின் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் உள்துறை இலாகா, இந்தியாவில் பல மதங்கள் இருந்தும் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க முயல்வதாக கோவிந்தன் நாயர் குற்றம் சாட்டினார். ஆனால், மத்திய அரசின் உள்துறை இலாகா வெறும் இந்து ராஜ்யத்தை மட்டுமல்ல – இந்தி மொழி பேசும் இந்துக்களின் ராஜ்ஜியத்தை உருவாக்க முயலுகிறது என்று தி.மு.க. சார்பில் குற்றஞ்சாட்டுகிறேன்” என்று பேசினார்.
எழுதிய நூல்கள்
காந்தியார் சாந்தியடைய, தனியரசு ஏன், திராவிட இயக்கம் ஏன், மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் புத்தகங்கள், அன்பழகன் அரசு கசப்பும் இனிப்பும், காதலும் கண்ணீரும் உள்ளிட்ட புனைவுகள் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்கள்
1968-ம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற உறுபினர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். 1968-ம் ஆண்டிலும், 1974-ம் ஆண்டிலும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
1972-ம் ஆண்டில் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றார். 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் நாள் திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தன் மனைவி பரமேசுவரியோடு அந்தமான் தீவுகளுக்குச் சென்றார். அங்கு தலையில் இருந்த குருதிக்குழாய் வெடித்து போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் 1979-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7-ம் நாள் அந்தமான் தீவிலேயே மரணமடைந்தார். வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஆசைத்தம்பி நினைவு நாள் இன்று.