பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையிலும், கூட்டணி கணக்குகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டும் பார்த்து வருகிறோம். 

இக்கட்டுரையின் முதல் நான்கு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4

18. மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன்  போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சி.கே.சரஸ்வதி போட்டியிடுகிறார். 

திமுக சார்பாக போட்டியிடும் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1977-ம் ஆண்டு இதே தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றிபெற்று நெசவு, கைத்தறி, கதர் துறை அமைச்சராகவும்,1989-ம் ஆண்டு ஈரோடு தொகுதியில் திமுக சார்பாக  வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். 1996-ம் ஆண்டு இதே மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து திமுக சார்பாக வெற்றி பெற்றவர். 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு  தொகுதியில் இருந்து நாடளுமன்றத்திற்கு சென்றவர். 2004 முதல் 2009 வரை  சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர். 

பாஜக வேட்பளாரோ அந்த கட்சியில் சேர்ந்தே 8 ஆண்டுகள் தான் ஆகிறது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த காலங்களில் தான் தொகுதிக்கு செய்ததை சொல்லியே பிரச்சாரம் செய்கிறார். அது மக்களிடமும் எடுபடுகிறது. கடந்த  2016 சட்டமன்றத் தேர்தலில் இது அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்றாலும்,  அதிமுக வேட்பாளர் சுப்ரமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சச்சிதானந்தத்தை விட 2,222 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றார். பாஜகவுக்கு இங்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை. 2016-ம் ஆண்டு இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் வெறும் 4,052 வாக்குகளை மட்டுமே பெற்றார். 

2019 நாடளுமன்றத் தேர்தல் வாக்கு விகிதத்தைப் பார்க்கும்போது திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட மதிமுகவின் கணேசமூர்த்தி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 97,948 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் மணிமாறன் 55,541 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு அதிமுக-விற்கு சாதகமாக அரசியல் மாற்றங்கள் எதுவும்  பெரிதாக நிகழ்ந்து விடவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக  வெளியேறி இருப்பது கூட பாஜக விற்கு இழப்பு தான். இப்போதைய களநிலவரப்படி நான்காவது முறையாக சுப்புலட்சுமி ஜெகதீசன் சட்டமன்றம் செல்லவே வாய்ப்பு அதிகம்.

19. தளி 

தளி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரனும், பாஜக சார்பாக நாகேஷ்குமாரும்  போட்டியிடுகிறார்கள். ராமச்சந்திரன் ஏற்கனவே இங்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக  போட்டியிட்டு 68,183 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தவர். முதல் இடம் பிடித்த திமுகவும் இப்போது இவர்களது கூட்டணியில் இருக்கிறது. திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரகாஷ் 74,429   வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த இரண்டு வாக்குகளும் ஒன்று சேரும்போது ராமச்சந்திரன் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம். 

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக நின்று பெற்ற வாக்குகள்: அதிமுக – 31415;  பாஜக – 2908; பாமக – 5253 மட்டுமே. 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி போட்டியிட்டபோது திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட செல்லகுமார் 86,903 வாக்குகளும், அதிமுகவின் கே.பி.முனுசாமி 77,358 வாக்குகளும் பெற்றிருந்தனர். எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணியே முன்னணியில் நிற்கிறது. 

2001 தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற காரணத்தால்   பாஜக இந்த தொகுதியை வாங்கியுள்ளது. ஆனால் இந்த முறை வெல்வது கடினமே.

20. தாராபுரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். 

கடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் காளிமுத்து வெற்றி பெற்ற தொகுதி இது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகவே  இருந்தாலும் இந்த முறை பாஜகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டதால் முருகன் அல்லது வி.பி.துரைசாமி போட்டியிடுவர்; அவர்களை வீழ்த்த வேண்டும் என்றே திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவராக  ஊடக வெளிச்சம் உள்ள நபர் என்பது முருகனுக்கு பலமாக இருக்கிறது. அதுவே அவரது சர்ச்சையான பேச்சுகளினால் பலவீனமாகவும் அமைதுள்ளது.

தமிழகத்தில் பாஜக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்று தாராபுரம். இங்கு கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று பாஜக 7,753 வாக்குகளைப் பெற்றது. பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளோடு ஒப்பிடும்பொழுது இது ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் தான். ஆனால் திமுகவை வீழ்த்த இந்த வாக்குகள் போதாது. 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் காளிமுத்து வாங்கிய வாக்குகள் 83,538 ஆகும். அதிமுக சார்பாக போட்டியிட்டு இரண்டாவது இடம் வந்த பொன்னுசாமி 73,521 வாக்குகளை வாங்கியிருந்தார். பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. மக்கள் நலக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட நாகை திருவள்ளுவன் 7,029 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் இந்த முறை  திமுக கூட்டணியை ஆதரிப்பது திமுக-விற்கு கூடுதல் பலம். 

எல்.முருகன் பாஜகவின் மாநிலத் தலைவர் என்பதாலும், வி.பி.துரைசாமி போன்றவர்கள் வேலை செய்வதாலும் முருகன் கூடுதல் வாக்குகளைப் பெற வாய்பிருக்கிறது. பாரதிய ஜனதாவின் டெல்லி தலைவர்கள் வந்து பிரச்சாம் செய்ய இருப்பதாக பாஜக-வினர் கூறுகிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் தங்கள் தொகுதிக்குள் செல்வாக்கு செலுத்தும் நபர்களாக இருக்கும் அதிமுக அமைச்சர்களே மோடி உள்ளிட்ட டெல்லி தலைமைகள் பிரச்சாரத்திற்கு வந்தால் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும் என்று அஞ்சிகிற நிலைதான்  இருக்கிறது. முருகன் நம்பியிருக்கும் அதிமுக வாக்குகளும் முழுமையாக முருகனுக்கு வந்து சேர வாய்ப்பு குறைவுதான். 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுகவின் கணேசமூர்த்தி தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 98,366 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மணிமாறன் 64,562 வாக்குகளையே பெற்றார். தாராபுரம் தொகுதியில் கணிசமாக 30-40 ஆயிரம் வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது. அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் முருகனுக்கான பாசிட்டிவ்கள் தொகுதியில் இருந்தாலும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராக கயல்விழி செல்வராஜ் வருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மே 2-ம் தேதிதான் உறுதியாகத் தெரியவரும்.

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *