பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையிலும், கூட்டணி கணக்குகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டும் பார்த்து வருகிறோம். 

இக்கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3

14. ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக அதன் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமும், பாஜக சார்பாக ஆர்.எஸ்.எஸ்-சின் மூத்த உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான குப்புராமு போட்டியிடுகிறார். 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 73,078 வாக்குகளும்,  திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ் கனி 88,543 வாக்குகளும் பெற்றிருந்தார். அமமுக வேட்பாளர் வ.து.ஆனந்த் 17,995 வாக்குகளைப் பெற்றிருந்தார். 

பாரதிய ஜனதாவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் நேரடியாக போட்டியிட்ட போது மிக மோசமான வெறுப்புப் பிரச்சாரத்தை பாஜக செய்தபோதும் முஸ்லிம் லீக் கிட்டத்தட்ட 15,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இத்தொகுதியில் நேரடியாக திமுகவே களம் இறங்குகிறது. மேலும் இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட திமுகவின் மாவட்ட செயலாளரே போட்டியிடுவதும், பாரதிய ஜனதாவிற்கு பெரும் பின்னடைவை எற்படுத்தும். 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  தற்போது அதிமுகவில் முழுமையாக ஒதுங்கியிருக்கிறார். அவரை ஏப்படியாவது வேலை செய்ய வைக்க வேண்டும் என்று  மத்திய அமைச்சர் அவர் வீட்டுக்கே சென்று சமதானப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ராமநாதபுரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இந்த தேர்தலில் அதிமுக அணிக்கு எந்த வேலையும் செய்யவில்லை. மேலும் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பினால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பிற சமூகங்களின் உரிமை பறிபோய் இருப்பதாக இங்கு இருக்கும் சமூகங்களிடம் அதிமுக அரசு மீது எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

அதிமுக கூட்டணி இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 15,029 வாக்குகள் தான் வாங்கி இருக்கிறது. 2016 தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இந்தமுறை திமுக-வின் மாவட்ட செயலாளர் நேரடியாக போட்டியிடுவதால் பாரதிய ஜனதா வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள்.

15. விருதுநகர்

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் சார்பாக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனும், பாஜக சார்பாக ஜி.பாண்டுரங்கனும் போட்டியிடுகிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இங்கு போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 64,519 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அழகர்சாமி 42,189 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

திமுக வேட்பாளர் சீனிவாசன் ஏற்கனவே 1996-ம் ஆண்டு இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2001-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். அடுத்த இரண்டு தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி சென்று விட, மீண்டும் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

30 ஆண்டுகளாக இந்த தொகுதியின் அரசியல் தெரிந்தவர். மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர். பாரதிய ஜனதாவில் கடந்த தேர்தலில் பங்கெடுத்தவர்கள்  கூட தற்போது போட்டி போடவில்லை. அதிமுகவின் வாக்கு வங்கியை நம்பியே களம் இறங்குகிறது பாஜக. 

அதிமுக-வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய அழுத்தத்தில் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்திற்கு மொத்த அதிமுக-வையும் கொண்டு சென்று வேலை செய்ய முயற்சிக்கிறார். சாத்தூர் தொகுதியில் அமமுக விற்கு சென்று விட்ட ராஜவர்மன் கட்சியினரிடம் ஏற்படுத்தியுள்ள குழப்பமும் கணிசமாக இருக்கிறது. சாத்தூரில் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருப்பதால் விருதுநகருக்கு ரத்தத்தின் ரத்தங்கள் பாஜகவோடு வேலை செய்ய சுணக்கம் காட்டவே செய்கிறார்கள். எனவே மூன்றாவது முறையாக ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் சட்டமன்றம் செல்லவே வாய்ப்பு அதிகம்.

16. திருநெல்வேலி

பாரதிய ஜனதா கட்சி வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் சில  தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று. இங்கு திமுக சார்பாக முன்னாள் மேயர் ஏ.எல்.எஸ் மகனும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக  அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.  

ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். மேலும் இந்த தொகுதி முழுவதும் அறியபட்டவரும் கூட. இங்கு தேர்தல் வேலை பார்த்த அனுபவமும் உடையவர். எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தை  தண்ணீரைப் போல் செலவழிக்கும் ஆற்றல் பெற்றவர். நயினார் செலவழிக்கும் பணம்   பாரதிய ஜனதாவிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வரும் என்று காவிக்கட்சி நம்புகிறது.

முதல் முறையாக முன்னாள் சபாநாயகர் ஏ.எல்.சுப்ரமணியனை நயினார் நாகேந்திரன் வென்றபோது வெறும் 722 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதன் பின் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, அதிமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தேமுதிக இணைந்திருந்த மெகா கூட்டணியில் வெற்றி பெற்றார். 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஏ.எல்.எஸ்.லெட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவையனைத்தும் அதிமுகவில் இருந்தபோது, அக்கட்சியின் வாக்கு வங்கியில் நடந்தவை. பாஜக என்று வருகிறபோது தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் வாக்கு முழுவதுமாக கிடைக்காது. மேலும் இந்த தொகுதியை மையப்படுத்தி வேலை செய்து வந்த மாநகர மாவட்டச் செயளாலர் தச்சை கணேசராஜா நாங்குனேரி தொகுதியை வாங்கிக்கொண்டு அங்கு சென்றுவிட்டார். 

இந்த போட்டியிட விரும்பியிருந்த அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், ”அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவருக்கு சீட் கொடுத்தால், கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் பாஜக-விற்கு சென்று பதவியை வாங்கிக் கொள்ளலாம் என்று ஆகிவிடும்” என்று கட்சியினர் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிட விரும்பிய மானூர் ஒன்றிய சேர்மன் கல்லூர் வேலாயுதமும் நயினாருக்கு ஒத்துழைக்கவில்லை.

முன்னாள் மேயரும் ராஜ்யசபா உறுப்பினருமான விஜிலா சத்யானந்த்  இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு  சைலண்ட் ஆகிவிட்டார். நயினார் பெரிதும் நம்பியிருந்த முக்குலத்தோர் வாக்குகளை பங்குபோட அமமுக தயாராக உள்ளது. 

கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிறிய சாதிய அமைப்புகள் அதிமுக கூட்டணியை நிராகரிக்கக் கோரியுள்ளது. நயினாருக்கு ஒரே ஆறுதல் அமமுக வேட்பாளர் பால் கண்ணன் மனு தள்ளுபடி செய்யபட்டதுதான். ஆனாலும் மாற்று வேட்பாளர் களத்தில் இருக்கிறார்.

இரண்டு தலைமுறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணிக்கும்  திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணனுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருப்பதோடு, அவர் சார்ந்த சமூக வாக்குகளும் கூட்டணி பலமும் கை கொடுக்கும். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 84,792 வாக்குகளும், அதிமுக கூட்டணி 61,677 வாக்குகளுமே பெற்றிருந்தனர். அதிமுக நேரடியாக போட்டியிட்டு அதன் முக்கியத் தலைவர் மனோஜ் பாண்டியன் போட்டியிட்டபோதே 23,115 வாக்குகள் பின்தங்கியது அதிமுக அணி. அதிமுக-வின் எந்த ஒத்துழைப்பும் நயினாருக்கு தற்போது இல்லை.   இத்தனையையும் மீறி நயினாரின் பண பலம் வெற்றி பெறுமா என்பதை மே 2 அன்றுதான் தெரியும் .

17. குளச்சல்

குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்  பிரின்சும், பாஜக சார்பாக கடந்த மூன்று முறை போட்டியிட்ட ரமேஷ் களம் இறங்குகிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமலேயே பாஜக தனித்து நின்று இரண்டாம் இடம் பிடித்த தொகுதி இது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வை விட 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேவேளையில் தனித்து நின்ற அதிமுக 39,228 வாக்குகள் பெற்றிருந்தது. இவை இணையும் போது பாஜக கூட்டணி பெரும் பலம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை. 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 60,072 வாக்குகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 1,06,850 வாக்குகளும் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட காங்கிரஸ் இங்கு 46,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. 

தொகுதியில் அதிகம் உள்ள மீனவர்கள் ஓகி புயலின் போது மத்திய, மாநில அர்சுகள் கைவிட்டது, கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கிய மீன்பிடித் தொழிலாளர்களை  மீட்க மத்திய,மாநில அரசுகள் உதவாதது, மக்களிடம் பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. இது பாஜக-விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதால் அங்கு மீண்டும் பிரின்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

தொடரும்..!

அடுத்த பாகத்தினைப் படிக்க:

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *