மனித குலத்தின் ஆதி நிலங்களுள் ஒன்றென சொல்லப்படும் தமிழ் நிலமானது, உயிர்களின் அடிப்படை உணர்வான அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே தோன்றி நிலைப்பெற்றுள்ளது.
“கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடும்
காதலோடும் முன்தோன்றிய
மூத்தக் குடியாய்” தோன்றி
அன்பின் வழியது மட்டுமே உயிர்நிலை என்று வாழ்ந்ததற்கான சான்றுகள், தமிழ் மொழியின் தொல் இலக்கியமான சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.
இவ்வுலகில் இயற்கையின் சுழற்சிக்கும் உயிர்களின் உயிர்ப்புக்கும் அடிப்படைக் காரணியாக அமைவது இக்காதலே. இத்தகைய காதல் வயப்பட்ட உருவத்தால் அகவையாலும் அறிவாலும் ஒத்த தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழும்போது தாங்கள் துய்த்த இன்பம் இத்தகையது என பிறருக்கு கூற முடியாததே அகவாழ்வாகும்.
பிறரிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத காதல் வாழ்வில் இன்பம் மட்டுமே நிறைந்திருப்பதில்லை. இன்பம் மட்டுமே இருந்தால் அது காதலும் அன்று, அவர்கள் ஏதோ ஒரு அன்பை மேலோட்டமாக உணர்கிறார்கள் என்றே அர்த்தம்.
உண்மையில் காதல் என்பது ஆழமான அற்புதமானதொரு வலி. அதே நேரத்தில் காதலில் இருக்கும் ஒருவர் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் காதல் இருக்கும். மண் முதல் ஆகாயம் வரை கண்ணில்படும் அத்துணையையும் காதலிப்பார்கள். புல் முதல் மரம் வரை அத்துணையிடமும் பேசுவார்கள்.
தலைவியின் காதல்
வலியோடு கூடிய இந்த அற்புத உணர்வை நற்றிணை பாடல் வரிகளில் நாம் காணலாம்.
காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். ஒரு கட்டத்தில் தன் வாழ்வைப் பற்றிய நம்பிக்கையையும் இழந்து விடுகிறாள். காதலனைக் காணாமலேயே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று அஞ்சுகிறாள். இந்த நிலையில் தலைவனைப் பிரிந்த தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கிறாள்.
‘ தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்து விட்டால் பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ! என்று தான் அஞ்சுகிறேன்’ என்கிறாள்.
இந்த இதயம் கனிந்த இன்பச் சுவையினைத்தான்,
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே “
என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.
தலைவனின் காதல்
தலைவியின் காதலைப் போன்றே, இல்லறக் கடமையை ஏற்று பொருள்தேடி பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் காதலையும், அவன் தலைவி மேல் கொண்டுள்ள பேரன்பையும் நற்றிணை முல்லை நிலப்பாடல் ஒன்றில்,
தலைவன் இல்லறக்கடமையேற்று தலைவியை விட்டுப்பிரிந்து சென்றான். கடமையை முடித்து வெற்றியோடு தேரில் வீடு திரும்புகின்றான். திரும்பும் வழி, காடும் காடு சார்ந்த முல்லை நிலமாகும். அந்த நிலத்தில் வரும்பொழுது லேசாக மழை பெய்திருக்கிறது. காட்டுக்கோழி ஒன்று விடியற்காலையில் தன் அலகால் கொத்திய இரையை எடுத்து தன் துணையான பெட்டைக்குக் கொடுக்கும் இனிய காட்சியை மலர்ந்த கண்களால் இமைக்காமல் பார்க்கிறான்.
இந்த இனிய காட்சி அவன் உள்ளத்தைத் தொட்டு ஈரமாக்கியது. உடனே அவன் தேர்ப்பாகனைப் பார்த்து, ‘தேர்ப்பாகனே! நம்மோடு வரும் வீரர்கள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். இதோ! இந்த கண்கவரும் காட்டுக் கோழியின் காட்சியைப் பார். இனி சிறிதும் தாமதிக்கக் கூடாது. விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும். எனவே விரைவாக குதிரையைச் செலுத்துவாயாக’ என்கிறான்.
இந்த இதயம் தொட்ட இனிய காட்சியை இளநாகனார் என்னும் புலவர்,
“விரைப்பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசை இ
வேண்டு அமர் நடையர் மென்மெலவருக
தீண்டா வைமுள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உதுக்காண்
உறுக்குறு நறுநெய் பால்விதிர்ந்தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக்
காமறு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல்நெடும்புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி
நாள் இரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே !”
என்று வினைமுடித்து மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லுவதாகப் பாடியுள்ளார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் காதல் உணர்வை கொண்டாடிய தமிழ்ச் சமூகம்
21-ம் நூற்றாண்டிலும் பெண்ணுரிமைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். காதலிக்கும் தன் பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளையையும் அவளின் காதலனையும் ஆணவப்படுகொலை செய்யும் நவநாகரீக இக்காலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழ்சமூகம் பெண்களையும் அவர்களின் காதல் உணர்வையும் கொண்டாடி பாடியுள்ளது.
“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர்பவளே ” (குறு- 49)
என மறுமையிலும் தன்னுடைய தலைவனையே கணவனாகப் பெற விரும்புகின்றாள் ஒரு தலைவி.
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான பெண்ணின் காதலை கபிலர் அழகாக எடுத்துரைக்கின்றார்.
“வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே..”
வேர்ப் பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே…!!
சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல,காதல் வயப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது. இவளின் இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ!
என பெண்ணின் காதல் உணர்வுகளை ஒரு ஆண் கவிஞன் மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார்.
சங்க இலக்கியம் பாடிய 473 புலவர்களில் 441 புலவர்கள் ஆண்கள். அகப்பாடல்களை அதிகமாகக் கொண்ட இவ்விலக்கியத்தில் கண்டிப்பாக அதிகமான காதல் பாடல்களை ஆண்களே பாடியிருப்பார்கள். இவ்வாறாக பெண்களின் காதல் உணர்விற்கு மதிப்பளித்து, அவ்வுணர்வைக் கொண்டாடிப் பாடும் சமூக சூழலே தமிழ் நிலத்தில் இருந்திருக்கிறது.
பொருள்முதல்வாத சமூகமே காதலைப் போற்றிட முடியும்
பருவ வயதில் இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றத்தைப் போலவே காதலென்பது உள்ளத்தில் ஏற்படும் மாற்றம். இந்த மாற்ற நிகழ்வு இயற்கையாக இயல்பாக நடக்கக் கூடியது. காதலுணர்வு எதிர்பாலினத்தாரின் மீது எந்த எதிர்பார்ப்பும் இன்றி; தகுதி நிலைப்பாடு பார்க்காமல் பிறந்த குடி, குலம், கோத்திரம் பார்க்காமல் ஏற்படக்கூடிய ஒன்று என்பதை, இயற்கைதான் அனைத்திற்கும் அடிப்படை என்கிற தத்துவத்தை உணர்ந்த சமூக மனிதர்களால் மட்டுமே ஏற்றுக்கொண்டு கொண்டாட இயலும்.
கற்பனையில் கதைச்சொல்லி; எழுதாத மந்திரத்தை வேதமாகக் கொண்டு, கருத்தை விருப்பத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப மாற்றி மாற்றி பேசுபவர்களுக்கு மனித உணர்வை மதிக்கத் தெரியாது. அச்சந்தர்ப்பவாதிகள் தங்களின் காரியம் பொருட்டு எத்துணை அறமற்ற செயலையும் செய்யக்கூடியவர்கள் என்பதற்கு வரலாற்று காலம் முதல் இன்றுவரை நம்மிடம் பல தரவுகள் உண்டு .
பொருட்களே அனைத்திற்கும் அடிப்படை என்று பேசிய சமூகத்தால் மட்டுமே இப்படியோரு காதல் பாடலை இயற்ற முடியும்.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” .
”உன்னையும் என்னையும் பிரிக்கின்ற சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் இல்லையடி. உன்னைப் பெற்ற தாய் யார் என்று எனக்குத் தெரியாது. தந்தை யார் என்று தெரியாது. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் என்ன உறவு முறை என்று தெரியாது. ஆனால் செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீரானது அந்த நிலத்தின் தன்மையை ஏற்றுக் கொள்கிறது. பின்னர் யாராலும் அதைப் பிரிக்க இயலாது; அது போல் நமக்கும் பிரிவு என்றுமில்லை. அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது”
என்று குறுந்தொகையில் புலவர் செம்புலப் பெயல் நீரார் பாடியிருப்பார்.
எந்த இனம் காதலைக் கொண்டாடுகிறதோ,அதுவே மனிதம் பேணும் இனமாக இருக்கும். காதல் என்பது செயல் அன்று. ஏன் உணர்வும் அன்று. காதல் என்பது நாகரிகம். அந்த வகையில் தமிழ் சமூகம் நனிநாகரிகச் சமூகமாகும்!
ஓவியம்: நன்றி – ஓவியர் மருது