லாய்ட் ஜப்பானில்

தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்

அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசிய வருகை இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் லலாய்ட் ஆஸ்டின் ஆகியோர் அரசுமுறை பயனமாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அடுத்ததாக இந்தியா மற்றும் சீனாவுடன்

ஜப்பான், தென்கொரியா பயணத்தை அடுத்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவுடனும், அரசுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அலாஸ்காவிற்குச் சென்று சீனத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

சீனா மீது எதிர்தாக்குதல் நடத்தவும் தயார் – ஜப்பானில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர்

திங்கட்கிழமை ஜப்பானை வந்தடைந்த அமெரிக்க அரசுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டொஷிமிட்ஷி மிட்டேகி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நொபுவ் கிஷி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்க நிலையையும், அதனை எதிர்கொள்வது பற்றியும் இரு தரப்பும்  விவாதித்தது. 

ஜப்பான் நிதி அமைச்சருடன் அமெரிக்க அரசுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன்

இச்சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் பிளிங்கன், “நாங்கள் தேவைப்படும் பொழுது, சீனா தனது நலனுக்கானவற்றை செய்வதற்காக வலுச்சண்டைக்கு வரும்பொழுது அல்லது அச்சுறுத்தும் பொழுது, நாங்கள் எதிர்த் தாக்குதல் நடத்துவோம் (We will push back when necessary when China uses coercion or aggression to try to get its way)” என கூறினார். 

ஜப்பான் – அமெரிக்க செயலர்களின் கூட்டறிக்கை

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் (இடது பக்கம்)

பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தென் சீனக் கடலில், தைவான் நீரினையில் தனது நட்பு நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல் போக்கை சீனா கடைப்பிடிப்பதாகக் கூறிய அமெரிக்கத் தரப்பு, அதனை எதிர்ப்போம் எனக் கூறியது. 

அதேபோல் வட கொரியாவானது முற்று முழுதாக தனது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென வற்புறுத்தியது. 

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லாய்ட் ஆஸ்டின்
தென்கொரியாவில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லாய்ட் ஆஸ்டின்

ஜோ பைடன் பதவியேற்ற பிறகான முதல் பயணம்

ஆஸ்டின் மற்றும் பிளிங்கனின் ஜப்பான் மற்றும் தென் கொரிய பயணம் என்பது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்குப் பிறகு,  அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜோ பைடன் ஒருங்கிணைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்ற ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய நாற்தரப்புக் கூட்டணியின்’ கூட்டம் நடைப்பெற்றது குறிப்பிடதக்கது. அக்கூட்டமும், ஜோ  பைடன் பதவியேற்ற பிறகு பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களுடான முதல் கூட்டமாகும். 

இதன் மூலம் ஜோ பைடன் அரசின் வெளியுறவுக் கொள்கை அரசியல் ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய அரசியலுக்கு’ கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியலாம். 

சீனா தனது ராணுவ வலிமையை நவீனமாக்கியுள்ளது – அமெரிக்க பாதுகாப்பு செயலர்

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் செய்தியாளர்களை சந்தித்த போது, “கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவானது மத்திய- கிழக்கு நாடுகளில் கவனத்தை செலுத்தி வந்த நிலையில், சீனாவானது தனது ராணுவ வலிமையை நவீனமாக்கியுள்ளது” என்றும், “எனவே எங்களது (அமெரிக்க பாதுகாப்புத் துறையினது)

நோக்கம் என்பது எங்களை அல்லது எங்களது நட்பு நாடுகளை அச்சுறுத்த நினைக்கும் சீனாவுடனான அல்லது வேறு நாடுகளுடனான போட்டியில் நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதாகும்” எனக் கூறினார்; மேலும் அவர்,” நாங்கள் எந்தவொரு வம்படி சண்டைக்காரரையும் தடுப்பதற்கான திட்டங்களை, அதற்கான தேவைகளை வளர்த்துள்ளோம்” என்றார்.

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டியது ஏன்?

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளரின் இந்த வார்த்தைகள் அமெரிக்காவினது வெளியுறவுக் கொள்கை அரசியலின் எதிர்கால போக்கு என்னவாக இருக்குமென்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவினுடைய கடந்த இரண்டு தசாப்த கால மத்திய- கிழக்கு வெளியுறவுக் கொள்கை ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் நாடுகளில் எத்தகைய பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவோம். 

இந்நிலையில் சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.

தற்போது இப்பிராந்தியம் மேலும் அமெரிக்காவின் பிராந்திய அரசியல் கவனத்திற்கு உள்ளாக்கப்படும் பொழுது, குறிப்பாக அது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவை மையப்படுத்தியதாக இருக்கும் பொழுது, தமிழினம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *