அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் கட்சியில் ஒதுங்கி இருந்தவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி மனக்கசப்புகளைக் கடந்து அனைவரையும் ஒருங்கிணைத்து வெற்றிக்காக பாடுபடுவார்கள். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கபட்ட நாள் முதல் ஆளும் கட்சியான அதிமுக-வில் தொடர் சலசலப்புகள் உருவாகியிருக்கிறது.
தினந்தோறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர்களைக் கூட எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.
நீக்கப்படுவோரின் பட்டியல்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிவர்மன் முதல் ஆளாக நீக்கப்பட்டார். அவர் இப்போது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாத்தூர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருகிறார்.
- அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்த நீலகண்டனை நீக்கியிருக்கிறார்கள்.
- அது மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளும் நீக்கப்பட்டிருகிறார்கள்.
- எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர்ராஜன் நீக்கப்பட்டிருப்பது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- எடப்பாடி அரசைக் காப்பாற்றிய சேந்தமங்கலம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரையே கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள்.
- ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆவார். இன்று நீக்கப்பட்டிருகிறார்.
- ஏற்கனவே வேட்பாளர் தேர்விற்குப் பிறகு, சிவகங்கை மாவட்டச் செயலாளர் அமைச்சர் பாஸ்கரன் ஆதரவாளர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
- பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதாவும் கட்சியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி கட்சியை விட்டு வெளியேறும் நபர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது.
- தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து 19-ம் தேதிக்குள், கட்சித் தலைமை விளக்கம் அளிக்காவிட்டால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி கெடு விதித்திருக்கிறார்.
கடந்த ஒரு வாரத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியிருக்கிறார்கள். அதிமுகவினரை நீக்கிவிட்டு பாஜக-வினரை வைத்து கட்சி நடத்தப் போகிறார்களா என்று அதிமுக தொண்டர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.