கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பகுதிகள் 11-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் (Political Science) பாடத்திட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் 30 சதவீத பாடங்கள் குறைக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ ஆணையம் நேற்று (ஜூலை 7, 2020) அறிவித்தது. நீக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளின் பகுதிகள் சி.பி.எஸ்.இ – யினால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் தாக்குதலின் காரணமாக பள்ளிகள் திறப்பது தாமதமாவதால் இந்த பாடத்திட்ட நெறிப்படுத்தல் செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ ஆணையம் தெரிவித்திருக்கிறது.
‘உள்ளாட்சி அமைப்புகள் ஏன் தேவை?’, ‘இந்தியாவில் உள்ளாட்சி அரசுகளின் வளர்ச்சி’ ஆகிய பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 12-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து திட்டகுழு மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் குறித்த பகுதிகளும், இந்தியாவின் சமூக இயக்கங்கள் (Social and New Social Movements in India) குறித்த பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பின் அதேபோல் வரலாறு புத்தகத்தில் இருந்து ’கிராமப்புற விவசாயிகள் கிளர்ச்சி’ குறித்த பாடத்திட்டமும், ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை வரலாறு’ குறித்த பாடத்திட்டமும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

மேலும் 9-ம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து ’ஜனநாயக உரிமைகள்’ பகுதியும், 10-ம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகமும், பல்வகைத்தன்மையும் (Democracy and Diversity), பாலினம், மதம் மற்றும் சாதி (Gender, Religion and Caste), முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் (Popular Struggles and Movements), ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்கள் (Challenges to Democracy) ஆகிய முக்கியப் பகுதிகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் இந்த பாடத்திட்ட நீக்கம் நடைபெற்றுள்ளதாக CBSE ஆணையம் அறிவித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக கல்வியாளர்களின் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே இந்த பாடத்திட்ட நீக்கம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இந்திய சமூகத்தினைப் பற்றிய மிக முக்கியமான அறிவையும், அறிமுகத்தையும் கொடுக்கிற பாடத்திட்டங்கள் நீக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காரணமாக நாட்டின் மதச்சார்பின்மை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பல தரப்பினராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் தற்போது பாடத்திட்டத்திலிருந்து மதச்சார்பின்மையும், குடியுரிமையும் அழிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுதும் ஜனநாயகத்தினைப் பாதுகாக்க மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஜனநாயகம் குறித்த பாடத்திட்டமும் நீக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரசியல் சாசனத்திலிருந்து ஜனநாயகத்தை நீக்கம் செய்வதை பாஜக தனது நோக்கமாகக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனைத் தான் ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் படிப்படியாக செய்து வருகிறது. அதன் காரணமாகத் தான் ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கிற ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட பல செயல்பாட்டாளர்கள் மீது ஊபா(UAPA) எனும் கருப்பு சட்டத்தினை ஏவுகிறது.
இந்தியாவின் வரலாறு என்பது மதச்சார்பற்ற தத்துவங்களின் வரலாறு. இந்திய சமூகத்தின் மாற்றத்தில் ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களும், போராட்ட இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன. அவற்றின் வரலாற்றை மறைத்து விட்டு, இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்களின் வரலாற்றைத் தான் இந்திய சமூக இயக்கங்களின் வரலாறாக பதிவு செய்ய முயல்வதாகவே இதனைப் பார்க்க முடியும்.
மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும், மாநிலங்களின் அதிகாரத்தினை ஒரு நகராட்சி அளவிற்கு சுருக்கும் சட்டங்களை தொடர்ச்சியாக பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று தெரிந்தும் அது நிகழ்த்தப்படுகிறது. நடைமுறையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டாட்சி தத்துவம் பாடத்திட்டத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முதுகெலும்பான கூட்டாட்சி, குடியுரிமை,மதச்சார்பின்மை, ஜனநாயகம் இவற்றை நீக்கிவிட்டு அரசியல் அறிவியல் புத்தகத்தில் கற்பிப்பதற்கு வேறென்ன இருக்கிறது? வேதங்களையும், புராணங்களையும், சாதிய வர்ண முறைகளையும் இன்னும் பல தேவையற்ற பாடங்களையும் பாடச்சுமை என்று சொல்லி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீக்கத் தயாராக இருக்கிறதா?
கொரோனா ஊரடங்கு காலத்தினை பயன்படுத்தி மின்சார திருத்தச் சட்டம், ஒப்பந்த விவசாயத்திற்கான அவசரச் சட்டம் என சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைப் போல, பள்ளிப் பாடத்திலிருந்து ஜனநாயகத்தை நீக்குவதற்கு இந்த ஊரடங்கினை பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.