UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?

உலகம் முழுதும் கொரோனாவை சமாளிக்க முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. சிறைச்சாலைகளைக் கூட கொரோனா தொற்று விட்டுவைக்காததால், பல நாடுகளில் கைதிகளுக்கு விடுமுறை அளித்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு பக்கம் மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது, மறுபக்கம் இந்திய அரசானது செயல்பாட்டாளர்களின் மீது UAPA எனும் அடக்குமுறை சட்டத்தினை போட்டு கைது செய்து வருகிறது.

            ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீதும், மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் மீரன் ஹைதர், சஃபூரா சார்கர் ஆகியோர் மீதும் ஊபா சட்டம் காவல்துறையினால் போடப்பட்டிருக்கிறது. டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற வன்முறைகளுக்கு காரணமாக இவர்களின் பேச்சு அமைந்ததாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதே போல் காஷ்மீரைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் மஸ்ரத் ஸாரா மீது அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களுக்காக வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டி ஊபா வழக்கு போடப்பட்டுள்ளது.

மஸ்ரத் ஸாரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்வதற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்

இதே போல் 2018ம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் வழக்கை காரணம் காட்டி அம்பேத்கரின் உறவினரும், ஆய்வாளருமான ஆனந்த் டெல்டும்டே மீதும், ஊடகவியலாளர் கெளதம் நவ்லாகா மீதும் ஊபா வழக்கு போடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான ஊபா சட்டம்

ஊபா சட்டம் என்பது ஒரு நபரை அவரது தனிமனித சுதந்திரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளை பறித்து நீண்ட காலம் அவரை விசாரணையின்றி சிறைவைக்க உதவும் சட்டமாகும். பொடா மற்றும் தடா சட்டங்களுக்கு மாற்றாக வலுப்படுத்தப்பட்ட ஊபா எனும் இச்சட்டம் நீண்ட காலமாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்றும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் இத்தகைய அடக்குமுறை சட்டம் இருக்கக் கூடாது என்றும் சட்ட நிபுணர்களும் பேசிவருகிறார்கள்.

கொரோனாவுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் செயல்பாட்டாளர்கள் மீது போடப்படும் இந்த அடக்குமுறை வழக்கானது நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது. பல்வேறு தளங்களிலும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு பதிவு செய்து வருகிறார்கள்.

உமர் காலித் பேசியது என்ன?

பிப்ரவரி 17, 2020 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உமர் காலித் ஆற்றிய உரையின் மீது தான் வழக்கு பதியப்பட்டுள்ளது.

உமர் காலித் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு உமர் காலித்தின் வன்முறைப் பேச்சு தான் காரணம் என்று பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பரப்பியுள்ளனர். இதையே பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் பேசினர். பிப்ரவரி 24ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகை தரும் போது, மக்கள் வீதிக்கு வர வேண்டும் என உமர் காலித் வன்முறையைத் தூண்டியதாக 40 வினாடிகள் மட்டுமே ஒடக் கூடிய வெட்டப்பட்ட காணொளியை சமூக வலைதளங்களில் ஓட விட்டனர்.

பாஜக ஐ.டி செல் பொறுப்பாளர் அமித் மாளவியாவின் ட்வீட்

உமர் காலித் பேசிய பேச்சுக்களை முழுமையாக பார்க்கும் போது,

”டொனால்ட் ட்ரம்ப் 24ம் தேதி இந்தியாவிற்கு வரும் போது, இந்திய பிரதமரும், அரசாங்கமும் நாட்டை பிளவு படுத்த முயல்கிறது என்பதை நாம் சொல்வோம். மகாத்மா காந்தியின் முக்கியத்துவத்தை அவர்கள் அழிக்கிறார்கள். அதற்கு எதிராகத் தான் இந்திய மக்கள் போராடி வருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த நினைத்தால், இந்திய மக்கள் இணைப்பதற்கு தயாராக இருக்கிறோம்”

இதைத் தான் அவர் பேசியிருக்கிறார். ஆனால் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பிய காணொளியின் அடிப்படையிலேயே எந்த விசாரணையும் இன்றி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உமர் காலித் உறுப்பினராக உள்ள Unite Against Hate என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் அகிம்சை வழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைத் தான் பேசியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். உமர் காலித்தின் உரையின் பின்வரும் பகுதி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”வன்முறைக்கு வன்முறையை கொண்டு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். வெறுப்புக்கு வெறுப்பையே எதிர்வினையாக அளிக்க மாட்டோம். அவர்கள் வெறுப்பைப் பரப்பினால் நாங்கள் அன்பினைக் கொண்டு எதிர்வினை செய்வோம். அவர்கள் எங்களை லத்தியைக் கொண்டு தாக்கினால், நாங்கள் மூவர்ணக் கொடியை பிடித்து நிற்போம். அவர்களை துப்பாக்கியால் சுட்டால், நாங்கள் அரசியல் சாசனத்தை ஏந்தி வருவோம். அவர்கள் எங்களை சிறைப்படுத்தினால் நாங்கள் ”ஸாரே ஜஹான்சே அச்சா” எனும் விடுதலைப் பாடலைப் பாடிக் கொண்டே சிறைக்கு செல்வோம்”

மோடி அரசு கொரோனாவை ஒழிக்க முயல்கிறதா, தங்கள் அரசியலை விமர்சிக்கும் மனித உரிமை செயல்பாட்டாளர்களை ஒழிக்க முயல்கிறதா என்ற விமர்சனக் குரல் பரவலாக எழ ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *