கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.
MSME நிறுவனங்களில் நிதிப் பற்றாக்குறையால் அவற்றின் அன்றாட நடைமுறை தடைபட்டுள்ளது. புதிய வர்த்தகங்கள் குறைந்துள்ளதால் உற்பத்திக்கான தேவையும் குறைதுவிட்டது. மிகக் குறைவான வர்த்தகமும் போக்குவரத்தும் பாதிப்பால் முடங்கிக் கிடக்கிறது. அதையும் மீறி உற்பத்தி செய்தால் வாங்குபவர்கள் உரிய தொகையைக் கொடுக்க காலதாமதமாகிறது. இதனால் வர்த்தக சுழற்சி பெருமளவு முடங்கியுள்ளது.
என்னென்ன வகையான இழப்புகள்?
தமிழ்நாட்டில் 68% MSME நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான பணப்புழக்கம் கூட இல்லாமல் முடங்கியுள்ளது. |
27% MSME நிறுவனங்கள் இன்னும் மூன்று மாதம் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்ற நிலையில் உள்ளனர். |
5% MSME நிறுவனங்கள் நான்கில் இருந்து ஆறு மாதம்வரை சமாளிக்கலாம் என்ற நிலையிலும் அதற்குப் பிறகு உற்பத்தியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகின்றனர். |
50% MSME நிறுவனங்களின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டு விட்டன. |
74% நிறுவனங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 80% வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. |
33% நிறுவனங்கள் மின் கட்டணத்தினாலும், மூலப் பொருட்களின் விலையினாலும் சமாளிப்பதற்கு கடும் சிரமத்தில் உள்ளனர். |
போக்குவரத்து, நிதிசேவைகள், தொலைதொடர்பு, கட்டுமானப் பணி, உற்பத்தி, கல்வி, உணவகம், தங்கும் விடுதி, மொத்த மற்றும் சில்லரை விற்பனை இவையனைத்தும் வருமான இழப்பை சந்தித்துள்ளது.
வேலை இழப்புகள்
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் MSME நிறுவனங்களின் வாயிலாக வேலைவாய்ப்பைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் MSME நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருமான இழப்பாலும், அவை மூடப்படுவதாலும் இந்த ஒரு கோடி பேரில் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை இழப்புகள் குறித்து IIT ஆய்வு முடிவுகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன.
18.32% நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. |
6.24% நிறுவனங்கள் 31 முதல் 50 சதவீதம் வரையிலான எண்ணிகையில் தொழிலாளர்களை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. |
13.74% நிறுவனங்கள் 11 முதல் 30 சதவீதம் வரை தொழிலாளர்களை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. |
16.82% நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களை குறைக்க உள்ளன. |
44.88% MSME நிறுவனங்கள் மட்டுமே தொழிலாளர் எண்ணிக்கை குறைப்பு நடத்தும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன. |
அதாவது மொத்தமாக பார்த்தோமானால் 55 சதவீத நிறுவனங்களுக்கு மேல் தொழிலாளர் குறைப்பினை மேற்கொள்ள உள்ளன. இது தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். |
அன்றாட வணிகம் தொழிலாளர் தட்டுப்பாட்டாலும் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதாலும் முடங்கியுள்ளது. இந்தப் போக்கு நேரடியாக சந்தையின் தேவையை (Demand) சார்ந்துள்ளது. எனவே தேவை மற்றும் நுகர்வை ஊக்கப்படுத்த வேண்டும் என்று IIT ஆய்வு தெரிவித்துள்ளது.
மொத்த இந்தியாவில் என்ன நிலை?
இந்திய ஒன்றிய அரசால் கடந்த மே 13-ம் தேதி அறிவிக்கப்பட்டதில் MSME-க்கு பெரும் சலுகைகள் கொடுத்திருப்பதாக அரசினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிதித் தொகுப்பு போதுமானது இல்லை என்பதே MSME நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக 11% ஸ்டார்ட் அப் எனப்ப்படும் சிறிய நிறுவனங்கள் அந்த நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்ட வரையறையின் எல்லைக்குள் வராததால், அந்நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது என்று இந்திய உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்
ஒட்டுமொத்த இந்தியாயாவைப் பொறுத்தவரை 35% MSME நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் 37% சுயதொழிலாளர்கள் தங்ளது வணிகத்தை நிறுத்திவிட்டனர் என்றும் இந்திய உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் 6 கோடிக்கும் அதிகமான MSME நிறுவனங்களில் 15 கோடி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதேபோல் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் சுயதொழிலை சார்ந்து வாழ்கின்றனர். பெரிய கார்ப்பரேட்டுகள் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிப்பதைப் போலவே அவர்களுக்கே இங்கு பெருமளவு சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும், வரி குறைப்பும் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பது இந்த சிறு குறு நிறுவனங்கள் தான். இவற்றைப் பாதுகாத்திட அரசு முன்வர வேண்டும்.