”எதிர்கால இந்தியா மின் வளர்ச்சியைச் சார்ந்தது. மின்சாரம் என்பது எல்லா தொழிலுக்கும் தாய்த் தொழில் போன்றது. ஆகவே இது தனியாரிடம் இருக்கக்கூடாது. 70 விழுக்காடு கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நாடு இந்தியா. எனவே கிராமங்களுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்தை விநியோகிக்கும் பொறுப்பை மத்திய-மாநில அரசுகள் ஏற்க வேண்டும்”
– அம்பேத்கர் (மின்சாரச் சட்டம் 1948ஐ அறிமுகப்படுத்தி ஆற்றிய உரையிலிருந்து..)
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றைத் தடுக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில் இந்தியாவை ஆளும் மோடி அரசு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்ட மசோதாக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 17ந் தேதியன்று இந்திய (மின்) ஆற்றல் துறை அமைச்சகத்தால் மின்சார சட்ட (திருத்த) மசோதா-2020 வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, இம்மசோதா தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், செயலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பினருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த இந்திய மக்களும், அரசியல் எதிர்க் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் மிக முக்கியமாக அரசு இயந்திரங்களும் கொரோனா தொற்றுப் பேரிடரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கும் பொழுது, மக்களின் மிக அத்தியாவசிய தேவையான மின்சாரத்தின் இனிவரும் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப் போகிற மிக முக்கியமான மசோதா ஒன்றினை மோடி அரசு அவசரம், அவசரமாக திணிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? கொரொனா அவசர காலத்தில் மோடி அரசினால் நுழைக்கப்படும் மின்சார சட்டத் திருத்த மசோதா ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட ஒன்றாகும். மக்கள் மற்றும் மாநில கூட்டாட்சி முறைக்கு விரோதமான அம்சங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் மின்சார சட்டத் திருத்த மசோதாவினை, பெரும் இடரில் சிக்கியிருக்கும் இக்காலச் சூழலில், தனியார் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான தொழில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்திருப்பது பல்வேறு மட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பேத்கர் கொண்டுவந்த அனைவருக்கும் மின்சாரம் சட்டம்
1948ல் மாமேதை அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய மின்சார (வழங்கல்) சட்டமானது, வனிக மற்றும் தொழில் முதலாளிகளுக்கு கூடுதல் மின் கட்டணத்தை நிர்னயித்து அந்த கூடுதல் கட்டணத் தொகையை இடையீட்டு மானியமாக (Cross subsidy) பயன்படுத்தி சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டனத்தில் மின்சார சேவை செய்யும், ’வலியவர்களிடம் பெற்று எளியவர்களிடம் சேர்க்கும்’ சமூகப் பொருளாதார நீதியை அம்பேத்கர் மின்சார சட்ட விதியாக உருவாக்கியிருந்தார். அதைப் போன்று மக்களினுடைய சமூக வளர்ச்சி தேவைக்கு மிக அத்தியாவசியமான மின்சாரம் அரசின் நிறுவனங்களால் சேவை நோக்கில் விநியோகிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சோசலிச இந்தியாவின் (அப்படி சொல்லப்பட்ட) சேவைப் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கான சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசின் மின்னுற்பத்தி நிலையங்கள், மின் வாரியங்கள் படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த மக்களின் தேவையை நிறைவு செய்ய போராடிக் கொண்டிருந்த வேளையில், 1991ல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்திடமிருந்து இந்தியா பெற்ற கடன்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் விளைவாக இந்திய அரசினால் தனியார்மய பொருளாதார கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்படத் துவங்கியது.
2003 மின்சார திருத்த சட்டம்
மின்சாரத் துறையில் தனியார்மயத்தை மையப்படுத்தி 2003ம் ஆண்டு அன்றைய வாஜ்பேயி தலைமையிலான பாஜக அரசு மின்சார (திருத்தச்) சட்டம் 2003ஐ நிறைவேற்றியது. மின்சாரம் தொடர்பான அரசின் சேவை பொருளாதார கொள்கை, வியாபார நோக்கிலான வணிகப் பொருளாதார கொள்கையாக மாற்றியமைக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மின்னுற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது. அதன் பிறகு அரசின் மின்னுற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மாநில மின்சார வாரியங்களுக்கான அரசின் ஒத்துழைப்பு படிப்படியாக குறைந்தது. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த அரசுக்குச் சொந்தமான மின்சார நிறுவனங்களின் செயற்பாட்டு குறைப்பாட்டினை காரனம் காட்டி தனியார் மின்சார நிறுவனங்களை அவை சார்ந்து இயங்க நிர்பந்திக்கப்பட்டன. புதிய மின்னூற்பத்தி நிலையங்கள் அமைக்க அரசின் நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்ட அதேவேளையில் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு தளர்த்தப்பட்டு அவை மிக எளிதாக மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கத் வாய்ப்பு அமைத்து தரப்பட்டது. அரசு, மக்களுக்கான மின்சாரத் தேவையை நிறைவு செய்வதென்பது தனியார் மின்னுற்பத்தி நிலையங்களன்றி சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மின்சார உற்பத்தி
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்ட அரசு நிறுவனங்களான மின் வாரியங்கள் கொள்முதல் செய்ய முடியாமல் போனாலும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலைத் தொகை, மின்வாரியங்களின் மின் விநியோக கட்டமைப்புகளை கொண்டே மின்வாரியத்திற்கு எதிராக சந்தை போட்டியில் ஈடுபட தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்ட திறந்த பயன்பாட்டு முறை (Open Access), பெருகும் மின் தேவையை சாதகமாக்கிக் கொண்டு மின் வாரியங்களிடம் கூடுதல் விற்பனை விலைக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்கள் என 2003ம் ஆண்டு மின்சார சட்டத்திருத்தம் மின்னுற்பத்தியில் அரசின் மின் நிறுவனங்களை பலவீனப்படுத்தி, தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களின் ஏகபோகத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.
மின்சார சட்டத் திருத்தம் 2020
பெரும்பான்மை மாநிலங்களில் மின்னுற்பத்தியையும், ஒரு சில மாநிலங்களில் மின் விநியோகத்தையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்ட தனியார் மின் நிறுவனங்கள் ஒட்டு மொத்த இந்திய மின் சந்தையை கைப்பற்ற உருவாக்கப்பட்டிருப்பதே மின்சார சட்டத்திருத்த மசோதா 2020!
மின்சார சட்டத்திருத்த மசோதா 2020-ஐ தரவிறக்கம் செய்து படிக்க : https://powermin.nic.in/sites/default/files/webform/notices/Draft_Electricity_Amendment_Bill_2020_for_comments.pdf
மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 கொண்டிருக்கும் கூட்டாட்சிக்கு எதிரான, மின்சாரத்தை ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக மாற்றக் கூடிய அம்சங்கள் சில,
- பயனீட்டாளர்களுக்கான மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுதல்,
- நடைமுறையிலுள்ள, வலியவர்களிடம் பெற்று எளியவர்களுக்கு கொடுக்கும் இடையீட்டு மின் மானியமில்லாத அதிக மின் கட்டனம் நிர்னயித்தல். அல்லது,
- நடப்பில் இருக்கின்ற விவசாயத்திற்கான இலவச மின்சாரம், 100 யூனிட்டிற்கான மின்சார மானியம் போன்ற மானியங்கள் என்பதனை மாநில அரசின் மீதான நிதிச்சுமையாக சுமத்துதல்
- மாநில அரசின் நிறுவனங்களான மின் வாரியங்களை கடன் சுமையில் தள்ளி அழிக்கக் கூடிய வகையில், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவான மின்சார ஒப்பந்த நிர்பந்திப்பு அதிகாரியை (Electricity Contract Enforcement Authority) நியமித்தல்
- பொதுப்பட்டியலின் கீழுள்ள மின்சாரம் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்தல்
- பெரும்பாலும் தனியார் நிறுவன முதலீட்டை கொண்டிருக்கும் மரபுசாரா எரிசக்தி ஆற்றல் மின்னுற்பத்தியை ஊக்கப்படுத்தி அதன் மூலம், பெரும்பாலும் மரபுசார் எரிசக்தி ஆற்றல் மின்னுற்பத்தி நிலையங்களாகவுள்ள அரசு மின்னுற்பத்தி நிலையங்களை ஒழித்தல்
போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
பறிபோகும் மாநில அதிகாரம்
குறிப்பாக இக்கொரோனா தொற்று காலத்தில் போதிய நிதியில்லாமல் தன் நிதி ஆதார வளங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டதால், தமிழ்நாடு அரசின் கையறு நிலையைப் பார்க்கிறோம். ஏற்கனவே உரிமையுடைய நிதி மறுக்கப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் மேலும் நிதிச் சுமையால் நலிவடையும். அல்லது தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப் போகும் கூடுதல் கட்டண கொள்ளைக்கு, மக்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மொத்த வருமானத்தையும் செலவு செய்ய நேரிடும் தனியார் முதலாளிகளுக்கான ஏடிஎம்-களாக மாற்றக்கூடும்.
வேறெந்த காலங்களை விடவும் கொரொனா தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்தில் தான் பொதுத்துறை நிறுவனங்களின் அவசியத்தையும், அத்தியாவசியத்தையும் உணர்ந்திருக்கிறோம். உணவு, பொது சுகாதாரம், கல்வி போன்ற மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாது சமூக வளர்ச்சிக்கான மின்சாரம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவறையும், சமூக நல நோக்குடன் பொதுத்துறை நிறுவனங்களாக நிலவ வேண்டியதன் நியாயத்தை கொரோனா எடுத்துக் காட்டியிருக்கிறது. உலகெங்கிலும், ஒருங்கிணைந்த கொரோனா தொற்றுப் பேரிடருக்கெதிரான போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்திய நாட்டினுடைய அரசுகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. கொரோனா தொற்று வழங்கியிருக்கின்ற படிப்பினையின் அரசியல் முழக்கமாக ”மக்கள் நல அரசுக் கொள்கைகள்” உலகெங்கிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் அதே காலக்கட்டத்தில் மோடியின் அரசு மின்சாரத்தை முழுவதுமாக தனியார்மயப்படுத்தும் போக்கு அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குறியதாக ஆக்கியுள்ளது. கொரொனா தொற்று நமக்கு சில படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கிறது. படிப்பினைகள் கற்றுத் தெளிவதற்கே!