அமெரிக்காவில் வேலைசெய்யும் இந்தியப் பொறியாளர்கள் மத்தியில் சாதிப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக சிலிக்கான் வேலியில் (Silicon Valley) அமைந்துள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் Cisco Systems என்ற மென்பொருள் நிறுவனத்தின் மீது சூன் 30-ம் தேதி வழக்கு பதியப்பட்டுள்ளது. சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பார்க்கும் தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியாளர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்துவதும், இகழந்து பேசுவதும், பணிச்சுமைகளை அவர்கள் மீது சுமத்துவதுமான பல்வேறு சாதிய பாகுபாடுகளை கடைபிடித்துள்ளனர். இது குறித்து அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில்தான் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் சுந்தர் அய்யர் என்பவர், அலுவலகத்தில் வேலைபார்க்கும் சக பொறியாளர்களிடம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியாளரைக் குறித்து பின்வருமாறு பேசியுள்ளார். அந்த பொறியாளர் ஒரு தலித் என்றும், அவருக்கு IITயில் சேர போதுமான தகுதி இல்லை என்றும், தலித்தாக இருப்பதால் இடஒதுக்கீட்டில் கிடைத்த வாய்ப்பால் சேர்ந்துள்ளார் என்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு மனம் உடைந்த தலித் பொறியாளர் நிறுவனத்தின் மனித வளத் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து சுந்தர் அய்யர், சக பொறியாளரைப் பற்றி மற்றவர்களிடம் இழிவாகப் பேசியும், அவரது சாதியின் காரணமாக பொறுப்புகளை குறைத்து வேலையில் இருந்து தனிமைப்படுத்தியும் வந்துள்ளார். அதேபோல் அவருடைய பணி உயர்வையும் மூன்று ஆண்டுகள் தடுத்து வைத்துள்ளார்..
சுந்தர் அய்யர் பதவியில் இருந்து போனபிறகு, அதே இடத்திற்கு அவரது நண்பர் ரமணன் என்பவர் வந்தபோதும், அதே பொறியாளருக்கு பணிச்சுமையை அதிகப்படுத்தி, அதை அவர் முடிக்க முடியாக சூழ்நிலையில் மற்ற ஊழியர்கள் முன்பு தொடர்ந்து இழிவுபடுத்தியுள்ளார். பலமுறை இதுகுறித்து Cisco நிறுவனத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றபோதும், அதை அந்நிறுவனம் நேர்மையாக அணுகாமல் எந்தப் பாகுபாடும் இல்லை என்று நியாயப்படுத்திவிட்டது. ஆனால் அந்த நிறுவனத்தில் சாதிப்பிரிவினை இருப்பதாகவும், அதன் அடிப்படையில் உயர் சாதியினராக அடையாளப்படுத்தப்படுபவர்களுக்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கொடுக்கப்பட்டதாக கலிபோர்னியாவின் வேலைவாய்ப்புத் துறை பின்வருமாறு வழக்கு பதிந்துள்ளது.
“The Complainant was expected to accept a caste hierarchy within the workplace where he held the lowest status within a team of higher-caste colleagues, receiving less pay, fewer opportunities, and other inferior terms and conditions of employment because of his religion, ancestry, national origin/ethnicity, and race/color”.
சாதியப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர் 2015-ம் ஆண்டில் இருந்து அங்கு தலைமைப் பொறியாளராக வேலை செய்கிறார். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் சுந்தர் அய்யர், அவரை கீழ்சாதியை சார்ந்தவர் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு இருக்கும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.2018-ம் ஆண்டு Civil rights group Equality Labs நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 67% தலித்துகள் மிக மோசமாக நடத்தப்படுவதாக வெளிப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடுகள் மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது. இங்கிருந்து அமெரிக்கா வரை சாதியைத் தூக்கிக் கொண்டு சென்று, அங்கும் பாகுபாட்டைக் கடைபிடிக்கும் சாதிய மனப்போக்கு பல்வேறு மனித உரிமை ஆர்வலார்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மென்பொருள் படித்திருந்தாலும் சாதி எனும் இழிவைப் பெருமையாகக் கொள்கிற அந்த உயர் அதிகாரிகளின் மனப்போக்கு பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.