மார்க்ஸ்

பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.

1. மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

2. பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

3. பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

4. பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

இனியான மாற்றரசியல்..

அ.எங்கிருந்து தொடங்குவது?

ஆதிவேர்களைப் பின்னோக்கிச் சென்றே தேடும் நெடும்பயணம் எவ்வெவ்வாறெலாம் மேற்கொள்ளப்படலாயின எனும் பார்வைகளை அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் மூன்றிற்கு ஊடாகவும் இனிக் காண்போம்:

“தொன்மத்தை நாடிச்சென்று புத்தரின் அரசியல் கருத்துக்களிலிருந்து என் வேர்களைத் தேடினேன். எனக்கு முன்மாதிரிகளாக அம்பேத்கரையும், புலேவையும் மட்டும் நான் வைத்திருக்கவில்லை. மார்க்சும் முன்மாதிரியாக இருந்தார். ஏனெனில் கம்யூனிசத் தத்துவங்களை முன்வைத்து அவர் இலக்கிய விதிகளை வகுப்பதற்கு முன்னால், அவருடைய பி.எச்.டி. ஆய்வின் தலைப்பே ‘The struggle between Epicurance and Democratus’ என்பது தான். அதனால் அவரைப் போலவே பின்னோக்கிச் சென்று பவுத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான போராட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.”
– காஞ்சா அய்லய்யா (‘இந்து ஆன்மிகமே பாசிசம்தான்’)

ஜோசப் நீதாமின் ‘அறிவியலும் சீன நாகரிகமும்’ எனும் நூலை முன்வைத்து இயற்கையோடு ஒழுகிச் சென்று இயற்கையை வெல்வது கீழைநாட்டு இயங்கியலென்னும் எஸ்.என்.நாகராசன் தாவோயிசம், தாந்திரிகம் ஆகியன கீழைநாட்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமானவை எனத் தொடர்வார். பெரியாரின் பார்வையின் குறுவித்துக்களைச் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று சித்தர் மரபிலிருந்தும்; ஏன் ஈராயிரம் ஆண்டு பின்னோக்கிச் சென்றே வள்ளுவத்திற்கூடாகவும் இனங்காண்பார்:

“சமயங்கள், அவற்றிற்கு இடையிலான இணக்கங்கள் குறித்த பெரியாரியப் பார்வை 20-ஆம் நூற்றாண்டுச் சரக்கன்று. அதன் குறுவித்துக்களைச் சில நூற்றாண்டுகள் பின்சென்றுகூட நம்மால் காணமுடியும். 13-ஆம் நூற்றாண்டில் பிறந்த சித்தமரபானது வேதம்,வேதமொழி, சாதி அமைப்பு, பார்ப்பனர், கோயில் ஆகிய கருத்தியல் நிறுவனங்களையும் மறுத்தது. ஆனால் கடவுளை மறுக்கவில்லை.” – தொ. பரமசிவன் (‘ தெய்வம் என்பதோர்’)

“வள்ளுவர் விதைத்த இவ்விதை (பார்ப்பன மேலாண்மையை, வருணப் பாகுபாட்டை, மேலுலகம் கருதி வழங்கும் தானத்தை மறுக்கின்ற குறள்கள்) கபிலரகவலாக, பதினெண் சித்தர் பாட்டுமரபாக, வள்ளலாராக வளர்ந்து பெரியயாரியலாகச் செழித்துள்ளது.”- க.நெடுஞ்செழியன் (‘தமிழர் இயங்கியல்:’தொல்காப்பியமும் சாரக சம்கிதையும்’)

ஆ. தற்புனித வன்முறை தவிர்த்த புதுச்சேர்க்கைகள்..

எந்தவொரு மெய்யியலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று. அதேவேளையில்’எல்லாப்பொருளும் இதன்கண் உள’ எனும்படியோ; எல்லாக் காலத்துக்கும் எங்கெங்கும் பொருந்தக்கூடியதென்றோ; சிக்கல் யாவும் தீர்த்திடவல்ல ‘மந்தித்தோப்பு மணிக்கட்டி சாமிகள் சர்வரோக சஞ்சீவித்தைல சர்வநிவாரணி’யாக இருக்கவும் இயலாது.

“ஏதோ ஒரு கோட்பாடு எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்ற முரட்டுவாதம் செய்து கருத்தியல் அதிகாரத்தை நிறுவுவதை விட்டுவிட்டு எல்லா மனிதநேயக் கருத்துகளில் இருந்தும், அணுகுமுறைகளில் இருந்தும் நமக்கான கூறுகளைக் கண்டெடுத்து இணைத்து ஆக்கப்பூர்வமான அரசியல் அறங்களை, மக்கள்மயமான செயல்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்”
– பிரேம்: ரமேஷ் (‘பேச்சு,மறுபேச்சு…’)

“துருவமாக்கல், விலக்கி வைத்தல், எதிர்நிலைப்படுத்தல் என்பவை மூலம் முழுமுற்றாக எந்த ஓர் ஆக்கமுறைத் தத்துவ, கருத்துருவ அமைப்பையும் மறுதலிப்பதில் இனிப் பயனில்லை. அது தற்புனித வன்முறையையே தோற்றுவிக்கும்”
– பிரேம் (‘அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்’)

இத்தொடர்பில் மாற்றரசியல் தேவைகளான புதியவகைச் சேர்க்கைகளை உருவாக்கவேண்டும் என்பதுவரை ஏற்புடையதே. அதற்கும் அப்பால் கருத்து முரண்களல்ல, முரண்பாடுகளே கருத்துகளுக்கான தோற்றுவாய் என்பதும்; எதிரும் புதிருமான வெவ்வேறு துருவப்பாடுகளையுங்கூட விசித்திர வெல்டிங் செய்து இணைத்திட இயலாது என்பதனையும் வலியுறுத்த விழைகின்றேன்.

காந்திய தர்மகர்த்தா சோசலிசத்தையும், மார்க்சிய சமதர்மத்தையும் எவ்வாறு புதுச்சேர்க்கை ஆக்கிட இயலும்? மாறாகக் குமரப்பாவின் நிலைபேற்றுப் பொருளாதாரத்தையும், மாவோயிசத்தின் சிற்றூர்சார் பரவல் சமதர்மத்தையும் புதுச்சேர்க்கை ஆக்கக்கூடும். முன்னதன் சாத்தியப்பாடின்மைக்குக் காந்தியாரும், பின்னதன் சாத்தியப்பாட்டிற்குக் குமரப்பாவுமே காரணபூதர்கள்.

காந்தியத்தின் வர்ணதர்மச் சார்பு, தர்மகர்த்தா சோசலிசம் இவற்றிற்கு அறவே இடங்கொடாமை; காந்தியத்தின் நடைமுறைச் சாத்தியமற்ற அநியாயத்துக்கு நல்லவையான கற்பனாவாத அம்சங்களைக் களைந்து விடுதல்; ஆக்கநலக் கூறுகளை வளர்த்தெடுத்துச் செழுமைப்படுத்தல்; காந்தியார் வலியுறுத்திய வாழ்வறத்தைத் தத்தமக்கே உரித்தான முறையில் தத்தம் வாழ்முறையாக்குதல்: காந்தியத்தைப் புதுப்பித்துக் கோட்பாட்டாக்கம் செய்தல் எனும் இயல்புகளால் குமரப்பாவியமுமம் கோராவியமும் தம்முள் சங்கமிக்கின்றன. இதனையே நான் பின்னைகாந்தியம் என இனங்கண்டு அடையாளப்படுத்தியுள்ளேன். (‘புதுப்புனல்’நவ.2012 – ஜன.2013)

இ. பூவையே தெரிவு செய், முள்ளையே தவிர்!

“பிற்போக்கான முடிவுக்கு வரும் தத்துவங்களுக்கு உள்ளும் புரட்சிகரமான ஆய்வுமுறை இருக்க முடியும் என்று (ஏங்கல்ஸ்) தெளிவுபடுத்தினார். ஹெகலின் படைப்புகளில் இயங்கியலை ஏற்றவர்கள் புரட்சிகரமான இயக்கத்தை உருவாக்கக் காரணம் ஆயினர். மாறாக முடிவை ஏற்றவர்கள் அரசியல் பிற்போக்காளராக ஆயினர்.” – எஸ்.என்.நாகராசன் (‘கீழை மார்க்ஸியம்,,,…’)

அந்தராத்மாவின் கட்டளை என்ற பெயரால் தம் முந்தைய வாக்களிப்புகளைக் காந்தியார் கைநெகிழ்த்ததை நற்செயலைக் கடவுளாணையின் பெயராலும், தீங்கினைக் கடவுள்சாபத்தின்
பெயராலும் சுட்டமுயலும் மதநம்பிக்கையாளர் பொதுப்புத்தியாக நியாயப்படுத்த முனையும் பாவண்ணன் (‘கணையாழி’ அக்.2012), காந்தியளவிற்கு உயர்வான நேசமிக்க தலைவர் நம்மிடையே இல்லை எனுமாறு ‘சேணங்கட்டிய குதிரைப் பார்வை’யால் தேங்கி விடுகின்றார்.

மாறாக, விளதிமிர் ஹொராஸால் ‘பகுத்தறிவு முத்து’ என இனங்காணப்பட்ட ‘அதிக உழைப்பு + மூலதனச் சிக்கன உற்பத்தி என்னுங் காந்திய எண்ணக்கருவை உள்வாங்கிச் செரித்து, வளர்த்தெடுத்துச் செழுமைப்படுத்திய ஜே.சி.குமரப்பா அதனைப் புதுப்பித்தே E + M = W (மனிதஆற்றல் வேலை வாய்ப்பு + கருவிகள் தளவாடங்கள், முதலீட்டு வளங்கள் = செல்வம்) எனும் புதிய கோட்பாட்டாக்கத்தையே வடிவமைத்தார்.

‘உழவாரப்பணி’யாக இந்து மதத்தையும், அதற்கப்பாலாக ஆர்எஸ்எஸ்-சையும் தூய்மைப்படுத்த முனைந்த காந்தியார் அதற்கான உச்சபட்ச விலையாகக் கொடுத்திட நேர்ந்ததே உயிர்க்காவு. இத்தகு அம்சத்தையே ‘மோடிக்கொரு வாய்ப்பு’ எனும் பெயரில் மதவாதக் கூட்டணி அதற்கப்பால் வைகோ, விஜயகாந்த், ரஜினிகாந்த் என மாற்றி மாற்றிச் சீரழிந்த ‘அல்லக்கையரசியல் அனாதை’யாகச் சந்தர்ப்பவாதத்தால் சீரழிந்தே செல்லாமற் போனார் ‘புல்லுருவி ஓட்டுண்ணி ‘மணியன்!

மாறாக ‘உணவே மருந்தெ’னும் இயற்கை உணவு,’ ஒன்றன் கழிவே பிறிதின் உண’வெனும் இயற்கை வேளாண்மை எனும் காந்திய எண்ணக்கருக்களை உள்வாங்கிச் செரித்துச் செழுமைப்படுத்திய நடைமுறைப்படுத்திய பாமயன், நம்மாழ்வார் போலும் உயிர்ம அறிவாண்மையர் (ஆர்கானிக் இண்டலக்சுவல்ஸ்) வழித்தடத்தில் பல்கிப் பெருகிவரும் பல்வேறு அமைப்புகளின் பலாபலன்களான வளங்கொழிக்கும் அமோகமகசூல்!

நீய்ட்ஷேவியத்தின் ஏற்றத்தாழ்வே இயற்கைநியதியென நியாயப்படுத்துந்தரப்பை ஏற்றோர் எதேச்சாதிகாரக் கருத்துருவாக்க இயந்திரங்களாக – ஒட்டுமொத்த மனிதகுல எதிரிகளான பாசிஸ்டுகளின் ஊதுகுழல்களாகவே எஞ்சிநின்றனர்.

மாறாக ‘அதிகார வேட்கை'(Will to Power) எனும் எண்ணக்கருவை ஏற்ற மிசேல் ஃபூக்கோவோ அதனை மனித சாராம்சப்படுத்தும் ஒற்றைப்பெருஞ் சொல்லாடலாக அல்லாமல், அறிவின் உற்பத்திக்கும் அதிகாரச் செயற்பாட்டிற்கும் இடையிலான அணுக்கத் தொடர்பைக் கண்டுபிடித்ததோடு ; அதிகாரத்தின் குணங்களையும் அதிகார உற்பத்தியின் பொறியமைவுக் கம்மியத்தையும் அகழ்ந்தே காட்டும் தம் ‘அறிவிற்கான மனோபலம்’
(The will to knoledge) மூலம் அதிகார நுண்ணரசியல் அலகுகளை அருமையாக எடுத்துரைத்தார். பூவையோ முள்ளையோ மட்டும் கைக்கொண்டோர் கண்டடைந்த பலாபலன்கள் இவைதாம்.

தொடரும்..!

விரைவில் பாகம் 6 வெளிவரும்.

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *