இக்கட்டுரையின் முதல் பாகத்தை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.
மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
1. ‘மதம் மக்களுக்கு அபினி’
அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்
“பொதுவுடைமைவாதிகளுக்கு மதம் என்பது முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும். மதத்தின் மீது அவர்கள் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டிருப்பதால், பொதுவுடைமைக்கு உதவியாக இருக்கக்கூடிய மதங்களுக்கும், உதவியாய் இல்லாத மதங்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்க மறுக்கிறார்கள்”
“கிறிஸ்தவ மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பைப் புத்த மதத்தின் மீதும் காட்டுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காணும் பொறுமை அவர்களிடம் இல்லை.”
பி.ஆர். அம்பேத்கர் இத்தொடர்பில் அவர், ‘இந்த உலகில் மதம் வறுமையைச் சகித்துக்கொள்ளச் செய்கிறது’ என்கிற குற்றச்சாட்டு ‘மதம் மக்களுக்கு அபினி’ என்ற கூற்றில் அடங்கி இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார். உரிய பனுவற் சூழமைவிலிருந்து (Texual context) பிரித்தெடுக்கப்பட்டு இவ்வாறு பிரயோகிக்கப்படும் இம்மேற்கோளுக்குரிய மூலவாசகத்தை முழுமையாகக் காண்போம்.
ஆ.காரல் மார்க்ஸின் மூலவாசகம்
“மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும் அதற்கெதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதமென்பது ஒடுக்கப்பட்ட மனிதரின் பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா அற்ற சூழலில் அது ஆன்மா ஆவது போலவே மக்களுக்கு வாய்த்த அபினி.”
– காரல் மார்க்ஸ் (‘ஹெகலின்,’ உரிமைத்தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு’ நூல் முன்னுரை)
எத்துனை கவித்துவமிக்க வரிகள் இவை. எத்தகைய சூழலில் எத்தகு மனிதர்க்கு என்னவாக இருக்கின்றது என எடுத்துரைப்பது புலப்படாமல் இவ்வாறு பிரித்தெடுத்து எடுத்தாளுவது இருமுனைத் தவறுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. நாத்திக நோக்கில் மதம் ஒரு வெறிமயக்கு எனுஞ் சுட்டாக மட்டுமே சுருக்கவாதம் ஆக்கப்படுகின்றது என்றால் ஆத்திக நோக்கில் அது மதத்தின் மீதான ஆழ்வெறுப்பு எனவாங்கே குறுகத் தரிக்கப்படுகிறது. அண்ணலுமா இப்படி பிறழ உணர வேண்டும்?
“மதம் மக்களுக்கு ஓர் அபினி எனச் சொல்லப்பட்டதையே கணக்கிலெடுக்கும் பலர், முன்னதாக மார்க்சிய மூலவர்கள் விவரித்த சூழலை விளங்கிக்கொள்ள முயன்றதில்லை.தவிர அபினி மீதான வெறுப்பு மதத்தின் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற புரிதலும் வலுத்தது. உண்மையுலகை மறக்கடிக்கச் செய்கிற போதையாக மதம் இருக்கிறதெனும் பொருள்தான் அவசியமேயன்றி தேவையற்ற வெறுப்பு கெடுதியானது.” – ந. இரவீந்திரன் (‘மதமும் மார்க்சியமும் – தமிழ்ப்பண்பாட்டுப் பார்வை’)
‘மதம் மக்களுக்கு அபினி ‘ எனும் மூல வாசகம் எவ்வாறெலாம் வெவ்வேறு மார்க்சிய முன்னோடிகளால் வெவ்வேறு காலக்கட்ட, வெவ்வேறு தேசச் சூழல்களிலும் முன்னெடுக்கப்படலாயிற்றெனக் காண்போம்:
இ. இலெனின் நோக்கில்
“மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மிகக் குடிபோதையே மதம் – மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேனும் மனிதனுக்கு உகந்த வாழ்வுபெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்.”
“மதம் மக்களுக்கு அபினி என்ற காரல் மார்க்ஸின் ஆணை மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதிற்கும் அடித்தளமாகும். எல்லா நவீனகால மதங்களையும் சர்ச்சுகளையும் அனைத்து மத நிறுவனங்களையும் பூர்ஷ்வா பிற்போக்கின் கைக்கருவிகளாகச் சுரண்டலைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளி வர்க்கத்தை வெறிமயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகவே மார்க்சியம் கருதியது’.”- இலெனின் (”மதத்தைப் பற்றி மார்க்சியம்’)
மதம் ஓர் ஆதிக்க சக்தியாகவே அதன் உள்ளார்ந்த வர்க்கநலன்களுக்கு, இங்கான சூழலில் வர்ணநலன்களுக்கும் உகந்தவாறே தனது மாய்மாலங்களை வெறிமயக்காகப் பாவித்தே ஆன்மிக ஒடுக்குமுறை வடிவமாகத் தானே திகழ்கின்றது. ஒரேவழி இதற்குப் புறனடையாக மதம் நேசசக்தியாகத் திகழநேரும் சூழலில் காலதேச வர்த்தமானத்திற்கேற்ப அதனுடன் எத்தகைய உறவைப் பேணுவது என்பதுங்கூட புறனடைவிதியாகக் கூடுமே அல்லால் பொதுவிதியாக மாட்டாது. இதனைத் தென்னமெரிக்கச் சூழல், திருச்சபைகளும் விடுதலை இறையியல் கோட்பாட்டை அங்கீகரித்தாக வேண்டிய நெருக்கடி நிர்ப்பந்தம் இவற்றுக்கூடாகப் ஃபிடல் எவ்வாறு கையாண்டார் என இருவேறு தரப்புகளுக்கூடாகக் காண்போம்:
ஈ. ஃபிடல் காஸ்ட்ரோ நோக்கில் இருவேறு தரப்புகள்
“நிகரகுவா விடுதலைக்காகக் கிறிஸ்தவர்களை அரவணைத்த ஒரு மார்க்சிய அமைப்பாகச் சாண்டினிஸ்ட்டா அமைப்பு மலர்ந்தது. அத்தகைய ஒரு சூழலில் மக்களுக்கு மதம் ஒரு அபினி என்ற மார்க்சிய மூலவர்களின் பிரகடனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது”
“மதம் தன்னளவில் அபினியல்ல ஒடுக்குமுறையாளர்களால் அவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என வலியுறுத்தினார் ஃபிடல்.”
“மதம் ஒடுக்குமுறைக் கருவியாக இருந்த காலத்தில் மார்க்ஸ், லெனின் ஆகியோர் மதத்தை எதிர்த்த பிரச்சாரத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்ததைச் சரியென வலியுறுத்தியவர் ஃபிடல். க்யூபக் கட்சியிலும் முன்னர் மதநம்பிக்கையாளன் நிராகரிக்கப்பட்டதைச் சரியென்றே நம்புவதாயும் இப்போது மதம் தொடர்பாகக் க்யூபாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றுக்கருத்துகளை அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதெனக் கருத வேண்டியதில்லை எனவும் கூறியிருந்தார்.’- ந.இரவீந்திரன் (‘மதமும் மார்க்சியமும் – தமிழ்ப் பண்பாட்டுப்பார்வை’)
” ஓர் அரசியல் இயக்கம், ஒரு புரட்சிகர இயக்கம் வெறும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நிலவும் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டே தனது மதிப்பீடுகளைச் செய்யவேண்டும்.தனது உத்திகளையும் அணுகுமுறைகளையும் கொள்ளவேண்டும் என்று நம்புகின்றவன் நான். சரியான திட்டமோ உத்திகளோ இல்லாமல் ஓர் அரசியல் கருத்தாக இருந்தாலும்,அது கற்பனாவாதமாகிவிடும்.”
– ஃபிடல் காஸ்ட்ரோ (‘ஃபிடலும் மதமும்-மதம் மக்கள் புரட்சி’)
“இப்படித் தெரிவிக்கும் ஃபிடல் நேரடியாக மதத்தின் மீதான விமர்சனத்தை ஃபிரபெட்டோயிடத்தில் வைக்காமல் இல்லை. அடிமைச்சமூகம் முதல் இன்றைய சமூகம் வரையில் சுரண்டலுக்கு ஆளான மக்களுக்குச் சார்பாக, கிறிஸ்துவ மதம் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.” என்னும் அ.கா.ஈஸ்வரன் சுரண்டலைப் புரிந்து கொள்ளுவதற்கான கண்ணோட்டம் விடுதலை இறையியலில் கிடையாது, அதற்கது மார்க்சியத்திடமே வந்தடைந்தாக வேண்டுமென்பார்.
விவேகானந்தரிடம் கூட இந்து விடுதலைநெறி என்றெலாம் பிறழ மயங்குந் திரிபுகள் இரவீந்திரனிடம் ஊடாடியே கிடக்கின்றன. ‘மூலதனத்திற்கும் மதப்பிரச்சாரத்திற்கும் இடையிலான பல்வேறு இணைப்புகள்’ என்றெலாம் ஈஸ்வரனால் இனங்காண முடிந்தாற் போல் இரவீந்திரனுக்கவை பிடிபடவே இல்லை.
பேதம் எதனால் ஏற்படலாகின்றது? எதற்காக அது தக்கவைக்கப்படுகிறது? பேதத்தை ஒழித்தால் எவ்வாறு சமதர்மம், தோழமை மலரும்? பேதத்தால் பிழைப்போர் யார்? எந்தப் புள்ளியில் முதலாளியமும் மதமுங் கைகோர்க்கும்?
“நடவுசெய்த தோழர்கூலி நாலணாவை ஏற்பதும்
உடலுழைப் பிலாத செல்வர் உண்டுகொழுத் துலாவலும்
கடவுளாணை என்றுரைத்த கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்து தொழிலுளாரை ஏவுவோம்.”
– பாரதிதாசன்
“பேதம் மனஉணர்ச்சியினால் மட்டுமே ஏற்படுவதல்ல. பேதம் இலாபம் தருகிறது. எனவேதான் அதனை விட்டுவிட மனமில்லாமல், பேதத்தால் பிழைப்பவர்களுக்கு ஓநாய்க்கு இரத்த பானத்தில் சுவையிருக்கும் மட்டும் ஜீவகாருண்யத்தை அது எப்படி வரவேற்க முடியும்? பேதமும் பலகாலமாக இலாபம் தரும் சாதனமாக இருப்பதாலேயே அதற்குச் ‘சாகாவரம்’ கோருகின்றனர், அதனால் இலாபம் பெறுகின்றவர்கள். பேதத்தால் வரும் இலாபம் ஒழிக்கப்பட்டதால்தான் தோழமை இருக்கமுடிகிறது
– சி.என்.அண்ணாதுரை (‘தமிழ் ஆளுமைகள் சிந்தனைத்தடம்’)
மாக்சிம் கார்க்கியின் ‘கடவுளை நிர்மாணித்தல்’ என்ற கருத்தாக்கத்திற்கு பதிலாக 1913 நவம்பரில் லெனின் எழுதிய மடலிலிருந்து அ.கா.ஈஸ்வரன் எடுத்துக்காட்டுவது இங்கே மனங்கொள்ளத்தக்கதாம்:
“ஒரு கோடி நேரடியான பாவங்கள், அசிங்கமான சூழ்ச்சிகள், வன்முறைச் செயல்கள்,நோய்த்தொற்றுகள் மக்களால் ஓரளவு சுலபமாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே அவை மிகவும் கவர்ச்சிகரமான சித்தாந்த ஆடைஅணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளைப் பற்றிய சூட்சுமமான ஆன்மிகக் கருத்துகளைக் காட்டிலும் மிகக் குறைவான ஆபத்துகளைக் கொண்டதாகும்.” – இலெனின்.
தொடரும்..!
மூன்றாம் பாகத்தைப் படிக்க: பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)