மார்க்ஸ்

மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

1. மதமுங் கடவுளும் பிறந்த கதைகள்

அ. பிரதிபிம்பப் பிறப்பாய்

‘தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி’ என்றே பாடிச்செல்வார் மாணிக்கவாசகரும். அத்தகு சித்தம் எவ்வாறு உண்டாயிற்று? எவ்வாறு கடவுள் படைக்கப்பட்டார்? எவ்வாறு சமயங்கள் எழலாயின. கடவுளர்களையும் மதவுணர்வையும் வாழ்விக்க வல்லன யாவை? இத்தொடர்பிலான மார்க்சிய, சமூகவியலார் பார்வைகளை ஒத்துறழ்ந்து நோக்குவோம்:

இத்தொடர்பில் மதமுங் கடவுளும் பிறக்க நேர்ந்த கதைகள் முதலாகக் காணத் தலைப்படுவோம். ஜக்கி மார்க்ஸ்-க்கு பொருளாதாரம் தெரியும். மனிதர்களைப் பற்றித் தெரியாதென்கிறார். இதுவுமோர் தலைகீழ்ப்புரிதலான நகைமுரணே. இத்தகு குறுக்குச்சால் புதிதுமன்று.

“மனிதனே மதத்தை உண்டாக்குகிறான். மதம் மனிதனை உருவாக்குவதில்லை. இதை வேறு வார்த்தைகளில் கூறினால் தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத்தானே மறுபடி இழந்துவிட்டவனின், தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும்”

“மனிதன் என்பவன் மனிதனின் உலகம், நாடு, சமூகம் அனைத்தும்தான். இந்த அரசும், சமூகமும் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளான். ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே.”
– கார்ல் மார்க்ஸ் (‘மதத்தைப் பற்றி மார்க்ஸ்’ முன்னுரை – அ.கா.ஈஸ்வரன்)

“கடவுளை மனிதன் படைத்துவிட்டு, அது தன்னைப் படைத்ததாக வணங்குகிறான். இது பிரதிபிம்பம். மதம் என்பது புறவுலகின் பிரதிபிம்பம் என்றார் மார்க்ஸ். பிரதிபிம்பம் என்றால் தலைகீழாகத் தெரிவது. அதனால்தான், தான் படைத்த கடவுள் தன்னைப் படைத்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன்.”
– தியாகு (‘தமிழ் அணு’)

வேள்விக்குண்டத்தில் நம்மால் எழுப்பப்படும் பூதத்திற்கு நாமே ஆட்படுகிற மாதிரித்தான் ‘தத்துவ வழிபாடும்’ நேர்கின்றதென்பாரே புதுமைப்பித்தனும் தம் ‘கைவண்டிச் சரக்கு’க் கட்டுரையில். மதம் என்றால் கொள்கை. சமயம் என்றால் அதற்கான நிறுவனம். நமக்குப் பிடித்ததான கொள்கையே நாளாவட்டத்தில் நம்மைப் பிடித்தாட்டத் தலைப்பட்டாலதுவே தத்துவ வழிபாடாகின்றது. நமக்குப் பிடித்தமான மதமே நாளாவட்டாத்தில் நம்மைப் பிடித்தாட்ட நேர்கையில் நமக்கும் ‘மதம்பிடித்து,’ விடுகின்றது. பிடிப்பே பீடிப்பாகிப் பிடித்தாட்டலாகி விடுகின்றது. இத்தகு பிம்பப் பராவல்களே இவை யாவும்.

“எனக்கோர் ஈச்வரன் அவசியமாய் வேணம் – பின்னே
ஞான் தன்னே படய்க்கவும் வேணம்” 
– குஞ்ஞுண்ணி மாஸ்டர்

ஆ. அச்சத்தில் பிறந்ததே கடவுள்

“மரணபயத்தில் எழுந்த நம்பிக்கையே சமயம். ஆற்றுமணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுள்களை – ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுள்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா?  நான் மடிந்து விடுகின்றதா? இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு, அவர்கள் மடிந்து விடுகிறார்களா? காலவெள்ளத்துக்கு அருகே விளையாடும்  மணல்வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லிவேர்கள்.”
– புதுமைப்பித்தன் (‘புதுமைப்பித்தன் கட்டுரைகள்’)

“அச்சமே கடவுளை உருவாக்குகிறது. அச்சமில்லை, எனவே கடவுளும் இல்லை.” – ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பிள்ளைகளுக்குப் பூச்சாண்டி காட்டி அச்சுறுத்துமாப் போலே தான் கடவுள் அச்சம் ஊட்டிஊட்டி நம்மிடையே புகட்டப்பட்டுள்ளது. ‘கடவுள் அச்சமுள்ள மக்கள் (God fearing peoples) என்றேதான் சுட்டுகின்றது ‘இந்துக்குரல்'( ‘The Hindu Voice’) எனுங் காவிக்கையேடும். இத்தகு அச்சவுணர்வின் பெறுபேறான வழிபாட்டுணர்வு மையமே நம்மை சமயத்தை நோக்கிக் கொண்டு செலுத்தக்கூடியதாகின்றது.

2. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகம்

மனிதமனம் நிர்க்கதியாகி அலைபாய நேர்கையில், ஏதேனும் ஒரு கொளுகொம்பைப்  பற்றிப்படரச் சுற்றித் துழாவுகின்றது. அவ்வாறு துழாவுகையில் ஒருபக்கம்,”என்னைக் கவலைகள் தின்னத்தகாதென உன்னைச் சரண்புகுந்தேன்.” எனப் பாரதியைப் போல் பரிபூர்ண சரணாகதி அடைந்து விடுகின்றது..

மறு பக்கத்தில் நாத்திகத்தின் வெறுமையோ இத்தகு சூழலில், “கைகூப்பித் தொழுவதற்கு ஒன்றுமே இல்லையே, நித்திய சூன்யமாய் இருக்கின்றதே ” எனப் புதுமைப்பித்தனைப் போலக் கையறு நிலையில் தவித்திட நேர்கின்றது.

இந்தப் புள்ளியில்தான் தவிர்க்கொணா இன்றியமையாத் தேவையாய் நீடித்திருக்கக் கூடியதாகின்றது சமயத்தன்மை. 

இத்தொடர்பிலான சமூகவியலாளர் தரப்புகளைக் காண்போம்:

“மனிதவாழ்வின்  இருப்பியல் தேவைககள் மதஉணர்வை வாழவைப்பவை. அதிலும் ஏழ்மையும் இல்லாமையும்  மிஞ்சிநிற்கிற. சமூக மட்டங்களால் தெய்வநம்பிக்கை வாழ்க்கைக்கான நியாயப்பாடாகி வருகின்றது. அந்த அளவில் அது தேவைப்படுகின்றது. சமூக வைப்புமுறைக்கும் மத இன்றியமையா உணர்விற்கும் தொடர்புண்டு என்பதைச் சமூகவியலார் வலியுறுத்துவர்.”
– கார்த்திகேசு சிவத்தம்பி (‘சமூக விஞ்ஞானம்’ திச. 2006)

இன்னொரு தளத்தில் நிறுவனச்சமயஞ்சார் கடவுள் வழிபாட்டை அதிகாரத்தலையீட்டின் மூடநம்பிக்கை என்னும் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் சிறுதெய்வ வழிபாட்டை அதிகாரத் தலையீடற்ற நம்பிக்கை, அது உ ற்பத்திமுறையோடு தொடர்புடையது என விதந்தோதி ஏற்பதும் இத்துடன் மனங்கொள்ளத்தக்கதேயாம்.

“ஒன்று அதிகாரச் சார்பானது, இன்னொன்று மக்களால் பரவலாகப் பின்பற்றப்படும் ஜனரஞ்சகமானது.”

“இரண்டு போக்குகளுமே கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டவையாகும். ஆனால் அதிகாரச்சார்பான சமயம், இயக்க மறுப்பியல் சிந்தனையோட்டம் உடையதாக இருக்கும். ஜனரஞ்சகமான சமயப்பிரிவு இயக்கவியலின் வளர்ச்சியுறாத கருத்துகளைச் சமயவிஷயத்தில் கொண்டிருக்கும்.”
– ஜார்ஜ் தாம்சன் (‘சமயம் பற்றி ஒரு கட்டுரை’)

கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவர்க்கும் ஆசானும் ஆய்வுநெறியாளருமான ஜார்ஜ் தாம்சன் இதனைத் தெள்ளத் தெளிவாக்கி விடுகின்றார்.

இத்தொடர்பில் இராமாலிங்கரோ உருவ வழிபாடவும் இல்லாமல், அருவ வழிபாடாகவும் இல்லாமல்  அருவுருவ வழிபாடாகவே அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டைச் சமயங்கடந்த நிலையில் ஓர் அரிய மாற்றுமரபாக முன்னெடுத்தார்.

“வள்ளலார் அருளியது மாற்றுநிலை. எதிர்ப்பு எதிர்ப்பினை வளர்க்கும்; மாற்று ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் சிந்தனையை ஊக்கும் ; உயர்வை அளிக்கும். உள்ளதை அழிக்காமல் அதன்மீது கட்டப்பட்ட பெருநெறி ஜோதி வழிபாட்டு நெறி.” 
– இராம. இருசுப்பிள்ளை(‘வள்ளலார் வாழ்வும் வாக்கும்’)

“விடயநிலைகளை வெவ்வேறு திரைகளால் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவநிலைகளை தனித்தனித் திரையால் அத்திறம் மமறக்கும் அருட்பெருஞ்ஜோதி
திரைமறைப்பெல்லாந் தீர்ந்தாங்கே அரைசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி” (‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’)

‘திரைமறைப் பெல்லாந்  தீர்ந்தாங் கங்கே அரைசுறக் காட்டும்’ என்பது கருமை செம்மை வெண்மை முதலாம் எழுதிரைகளையும் கடந்து; அப்புறத்தின் அப்புறமான, அப்பாலுக்கும் அப்பாலான – தத்துவம் யாவுங் கடந்த தத்துவாதீதமாம் வெட்டவெளியில் சங்கமிப்பதின் குறியீட்டுமொழியே அருட்பெருஞ்ஜோதி அகவல். இத்தகு குறியீட்டு வடிவமே சத்தியஞானசபை.

“சோதிவடிவில்  இறைவனை வணங்குதல் என்பது சைவமரபுதான்” – அ.மார்க்ஸ் (‘புதியகாற்று’ – மார்ச். 2004). இதுவும் தலைகீழ்ப்புரிதலே.

மாறாக அதற்கப்பாலாக வைணவம், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம் முதலான சமயங்களிலும், சீனச் சிண்டோயிசத்திலும் கூட ஒளி வழிபாடு ஊடாடிக்கிடப்பதனை எடுத்துரைப்பார் இருசுப்பிள்ளை.

“இரும்புச் செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ 
நெல்லு மலருந்த தூஉய்க்கை தொழுது 
மல்லல் லாவண மாலை யயர”
– நெடுநல்வாடை

“பண்டைத் தமிழர்களின் ஒளியியல் சமயமரபை மீட்டுருவாக்கம் செய்து பாலிலே சருக்கரை கரைவது போல், இறைவனிடம் உயிர் கலந்துவிடும் எனும் சைவசித்தாந்த முக்தி நெறியிலிருந்து மாறுபட்டு, இறையருள் பெற்றால் உயிர் ஐந்தொழிலும் செய்யும் என்னும் தமிழியல்சார் நெறியினைச் சைவசமயிகளின் எதிர்ப்பை மீறி உய்வித்து மாண்புகள் மிக்க தமிழியற் சமயமாக வள்ளலாரால் எழுந்த சுத்த சன்மார்க்கம் தமிழ் அறிவுப்புலத்தாரின் சிக்கல்களுக்கு ஆட்படாமல் சால வளர்த்தெடுக்கப் பெற்றிருந்தால் இன்று சீக்கியர்களைப் போலத் தமிழர்களும் தன்னுணர்வு மிக்க தங்களுக்கான ஒரு சமய வரைவியலைக் கட்டமைத்திருப்பார்கள்.”

– ஜெ. அரங்கராஜன் (‘புதிய ஆராய்ச்சி’ : 3 -நவ.2009)

தொடரும்..!

பாகம் 2-ஐப் படிக்க: பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 3-ஐப் படிக்க: பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *