இக்கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.
1. மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
3. பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
அ. மதமாற்றம் தீர்வாகவில்லை
அம்பேத்கரின் பௌத்தம், காந்தியின் இந்துமதம், குமரப்பாவின் விவிலிய விளக்கம், விடுதலை இறையியல், செ.இரவீந்திரனின் இந்து விடுதலை இறையியல் எனவாங்கு இவையாவுமே அவரவர் கனாமயக் கற்பிதமே – வேறு வார்த்தையில் கூறுவதானால் இவை அனைத்துமே அந்தந்த மதங்களால் நிராகரிக்கப்படக் கூடியனவே.
அண்ணலும் பெரியாரும் பரிந்துரைத்த மதமாற்றம் தலித் மக்களின் சிக்கலுக்குத் தீர்வாக அமையவில்லை. ஜேசுசபை புகுந்த சிலுவை அடைக்கலமோ; பௌத்தமதம் புகுந்த போதிநிழலோ; மீனாட்சிபுரங்கள் ரெஹ்மத் நகரானதோ புதுப்புதுக் கூண்டுகளாகவே ஆகிப்போயின.
சித்தார்த்தனான பெரியார்தாசனே அப்புறம் அப்துல்லா ஆகி அலைக்கழிய நேர்ந்ததும் கண்கூடே. தனிநபர் விருப்பப்பூர்வத் தேர்வாக இருப்பதற்கு அப்பால் கூட்டமாக நிகழ்த்தப்படும் போது அதன் பின்னணியில் பொருளுதவிகள் தூண்டிலாக்கப்படுவதும் கண்கூடே.
இத்தொடர்பில் ‘பறையர் மகாசபை’ நிறுவனரும், ‘பறையன்’ இதழாசிரியாரும், அயோத்திதாசப் பண்டிதரின் மைத்துனருமான இரட்டைமலை சீனீவாசனும்; ‘புத்துயிர்’ இதழாசிரியரும், ‘ஒடுக்கப்பட்ட வகுப்பூழிய. ராணுவ அமைப்பாளரும் எஸ்.பி.அய். பாலகுரு சிவம் முதலானோரும் அண்ணலின் மதமாற்றக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிதிராவிடர் எந்த மதத்தில் சேர்வதும் அர்த்தமற்றதென முன்வைத்த வாதங்களைத் தொகுத்து அளிக்கும் பதிவைக் காண்போம்:
“1. ஆதிதிராவிடர்கள் இந்துமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். மநுதர்மம் நான்கு வகையினரையும், இதில் சேராத ‘அவர்ணர்கள்’ என்பதால் அவர்களே ஆதிதிராவிடர்கள் என்பது தெளிவாகிறது.
2.இந்துமதத்தில் இருப்பது போலவே ஆதிதிராவிடர்கள் மத்தியிலும் தீண்டத்தகாமையும் சாதிய வேறுபாடும் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கெனத் தனியான கோயில்கள், மதவாதிகள், தூதுவர்கள், நீதிபதிகள்,நாவிதர்கள், துணி துவைப்பவர்கள், திருமணச் சடங்குகளும் உண்டு.
3. இந்துமதத்தில் இல்லாத பழக்கமான விதவைத் திருமணமும் விவாகரத்து ஆனவர்களின் திருமணமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
4.ஆதி திராவிடர்களுக்குள்ளும் திருமண உறவுகள் ஒரு சில இனங்களுக்குள்தான் நடைபெறுகிறது.
5.இந்துக்களைப்போல் சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்களைத் துதிப்பதைவிட முனீஷ்வரன், காட்டேரி போன்ற கிராமக்கடவுள்களே, அவர்களின் தெய்வங்களாக இருக்கின்றன.
6.அப்படியே மதம் மாறினாலும் நபர்களின் கணக்கைப் பார்ப்பார்களே ஒழிய சம அந்தஸ்து தரமாட்டார்கள். அதாவது கல்விச்சுதந்தரம் கிடைக்க வழியில்லை.
7.ஏழு கோடி மக்களைக் கொண்டுள்ள ஆதிதிராவிடர் இனம் எந்த மதத்தில் இணைந்தாலும் அது பெரும்பான்மை பெற்று அதன்மூலம் மதகுருமார்களுக்கு செல்வாக்கை உயர்த்தவும், பணம் சேகரிக்கவும் மட்டுமே பயன்படும்.
8.வேறு எந்தமதத்தில் சேர்ந்தாலும் அங்கேயும் இப்பாகுபாடுகளும் திருமணங்களில் கொடுக்கல் வாங்கலில் பாகுபாடுகளும் உள்ளன.”
– செ.காமராசன் (‘கணையாழி’ அக்.1987)
ஆ. கீழை மார்க்சிய நோக்கில் எஸ்.என்.நாகராசனின் மேலதித் தரப்புகள்
“காண்ட்டின் அகஉலகத்தை மார்க்ஸ் பார்க்கவில்லை. பேகன் மேலை உலகின் விளைவு. இவ்வம்சமே மார்க்சிய அழுத்தம் பெற்றது. புரிதலின், அன்பின் தேவையை மார்க்ஸ் அறியவில்லை. மார்க்ஸிடம் காணப்படும் குறை இது. இக்குறையைக் களைந்தவர் மாவோ.”
” நட்புமுரண்பாடு பற்றிய புரிதலைச் சீனாவின் பழைய மரபில் இருந்து மாவோ பெற்றார். நட்புமுரண்பாடு பற்றிய புரிதல் மார்க்சிடம் இல்லை. லெனினிடம் இது கோட்பாட்டுவடிவம் பெறவில்லை. மாவோதான் இதற்குக் கோட்பாட்டு வடிவம் தந்தார். நட்புமுரண்பாடு என்பதை மையப்படுத்தும் போது கிடைப்பது கீழைமார்க்சியம்”.
” மார்க்ஸ் தன் மூலநூல்களில் கம்யூனிஸ்ட்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகள் குறித்து விரிவாக எழுதவில்லை. இந்தக்குறையைப் பெருமளவு நீக்கியவர் மாவோதான்.”
“லெனின் புரட்சிகரமான செயலின் பரிமாணங்களையும் அதைச் செய்ய வேண்டியவர்களுக்கு இருக்க வேண்டிய அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளையும் குறித்து எழுதவில்லை. அவற்றைக்குறித்து அவர் தன் இறுதிக்காலத்தில்தான் சிந்தித்தார்.”
“விடுதலை என்பது நீண்டகால இயக்கப்போக்கு, நடைமுறையில் விளைவுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. சரியான நெறியைக் கடைப்பிடிப்பதில்தான் இருந்தது. லெனின் இந்த உண்மையை இறுதிக்காலத்தில்தான் பார்த்தார். ஸ்டாலின்,டிராட்ஸ்கி முதலியவர்கள் இதைப்பார்க்கவில்லை. மாவோதான் இந்த உண்மையைத் தெளிவாகக் கண்டார்.”
“மாவோ மக்கட்போர் பற்றிய தன் கோட்பாட்டை விவாதிக்குமாறு நெறியும் குறியும் பற்றிய சிக்கல்களை தெளிவாக ஆராய்கிறார். எழுத்து நடை,கல்வி, உற்பத்தி முதலிய மட்டங்களிலும் இந்தச்சிக்கலை ஆராய்கிறார். கட்சித்தலைமை, வாழ்க்கைமுறை, அறிதல் முறை, கருத்துருவாக்கம் முதலிய தளங்களிலும் இந்தச்சிக்கல் ஆராயப்படுகிறது.”
“மாவோவின் இயங்கியல், மார்க்ஸ், லெனின் ஆகியவர்களின் இயங்கியலைக் காட்டிலும் படிமுறை வளர்ச்சி பெற்றது. மாவோவின் மெய்காண்முறையும் சுதந்திரம் பற்றிய கருத்தும் ஆழ்ந்த பரிமாணம் கொண்டவை”
– எஸ்.என்.நாகராசன் (‘கீழை மார்க்சியம்….’- ‘அகம் புறம்’:3 ஜூலை-2016)
அம்பேத்கர் மார்க்சியத்தின் குறைபாடுகளாகவும் போதாமைகளாகவும் சுட்டிக்காட்டுவன மாவோவின் கீழைமார்க்சியத்தில் எவ்வாறெல்லாங் களையப்பட்டுள்ளன என்பது முரணியக்கப் படிநிலைகளில் எஸ்.என்.நாகராசன் கீழைமார்க்சியம் ஆகத் தகவமைக்கும் கூறுகள் வாயிலாகக் காணக்கிடக்கின்றன. ஜோசப் நீதாமின் ‘அறிவியலும் சீன நாகரிகமும்’ நூலை முன்வைத்து இயற்கையோடு ஒழுகிச்சென்று இயற்கையை வெல்வது கீழைநாட்டு இயங்கியலென; தாவோயிசம், தாந்திரிகம் ஆகியன கீழைநாட்டு வளர்ச்சிக்கு ஆதாரம் ஆனவை என நாகராசன் எடுத்துரைக்கின்றார். சீனச்சூழலை மார்க்ஸ்> ஏங்கல்ஸ்> லெனின்> மாவோ எனவாங்கு மார்க்சிய முரணியக்கப் பரிமாணத்தில் அவரவர் வகிபாகத்தினை விதந்தோதி அவர் எடுத்துரைப்பது அவருடைய சிறப்பியல்பாகும்
சீனச்சுசூழலை முன்வைத்து மதம் பற்றிய மாவோயிச அணுகுமுறைகள் எவ்வாறு அமைந்தியன்றன என்பது குறித்துக் காண்போம்: “மக்கள் புரட்சிக்குத் தலைமை தாங்கவேண்டிய அணி தனியே பாட்டாளிவர்க்கத்தின் நலனை மட்டும் பார்க்க முடியாது. மதம் பற்றிய கோட்பாடு அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் ஒருவகையானது; பாட்டாளிவர்க்கச் சிந்தனைத் தலைமையில் விவசாயி வர்க்கம் புரட்சியின் மையச்சக்தியாக உள்ள மூன்றாமுலகப் போர்க்களத்தில் அந்த விவசாயி வர்க்கத்தினதும், ஏனைய நட்புச்சக்திகளான வர்க்கங்களினதும் மதம் பற்றிய பார்வை வேறுபட்டதாக உள்ளது.”
– ந.இரவீந்திரன் (‘மதமும் மார்க்சியமும்: தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை’)
ஆகவே காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்பவும், மண்ணுக்குத் தக்க மார்க்சியத்தை முன்னெடுக்கும் முகமாகவும்; செயலுத்தி, போருத்தி முறைமைகளை அரசியல் வியூகங்களாக வகுத்தாக வேண்டியுள்ளது.
“இன்று நவீனகால ஏகாதிபத்தியம், புதுக்காலனியம் அதன் பின்னணியில் செயல்படுவதோ நவீனகால பாசிசம்தான். அதன்குரல் புஷ்ஷின் குரல். இன்று இந்த உலக ஏகாதிபத்தியத்தை வென்று உலகமக்களை விடுவிக்க வேண்டுமானால் போர்முறை முன்னணிப்படை இரண்டையும் மாற்றியாக வேண்டும். இதுவே கீழைமார்க்சியம் என்னும் மெய்யியல். மாவோ(மார்க்ஸ்) மற்றும் குமரப்பா (காந்தியம்) இருவகை அடிப்படைகளும் இணைந்த ஒன்று இது. இதுவே புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் மெய்யியல்.”
– எஸ்.என். நாகராசன்(‘தமிழ்நேயம்:36’)
தொடரும்..!
விரைவில் பாகம் 5 வெளிவரும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)