அமெரிக்கா-சீனா

இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

இந்த வார உலகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சர்வதேச அளவில் நடக்கும் வெளியுறவுக் கொள்கைகள் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். – Madras Review

1. ரோஹிங்கிய அகதிகளை மீளப்பெற வங்கதேசத்திற்கு மியான்மர் கடிதம்

வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கியர்களை மியான்மாருக்கு மீளப் பெறுவது தொடர்பாக வங்கதேச அரசிற்கு மியான்மார் அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மியான்மாருக்கும், வங்கதேசத்திற்கும் இடையே ரோஹிங்கியர்களை மியான்மாரில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மியான்மாரில் நிலவிய ரோஹிங்கியர்களுக்கு எதிரான அரசியல் அசாதாரண சூழல் காரணமாக 1978- 1992 வரை மியான்மாரிலிருந்து வங்கதேசத்தில் குடியேறிய, மியான்மாரிலிருந்து வங்கதேசத்திற்கு கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியர்களை படிப்படியாக மியான்மாரில் மீளக் குடியமர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் சில நாட்களுக்கு முன்பு மியான்மர்-சீனா-வங்கதேசத்திற்கு இடையே நடந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வங்கதேசத்திலுள்ள 8.4 லட்சம் ரோஹிங்கியர்களை மீளப் பெறுவதற்கான கடிதத்தினை மியான்மார், வங்கதேசத்திற்கு எழுதியுள்ளது.

2. மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா

அமெரிக்காவின் அரசுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்ட டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசில் இடம்பெற்ற 28 அரசு அதிகாரிகளை ‘தடை செய்யப்பட்டவர்களாக’ சீனா அறிவித்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் சீனக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழையவோ, அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் தொழில் தொடங்கவோ/தொடரவோ முடியாது. இத்தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு வகித்த ராபர்ட் ஒ பிரையன் மற்றும் ஐ.நா தூதர் கெல்லி கிராஃப்ட் ஆகியோரும் அடங்குவர். அமெரிக்க – சீன மோதலின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. ஈரான் துறைமுகத்திற்கு கனரக கிரேன்களை அனுப்பிய இந்தியா

கனரக கிரேன்களை ஈரானின் சபாஹர் துறைமுகத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது. கனமான சரக்கு பெட்டகங்களை ஏற்ற இறக்கப் பயன்படும் இக்கிரேன்கள் சபாஹர் துறைமுகத்தின் சாஹிப் பெஹேஸ்தி முனையத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இக்குறிப்பிட்ட முனையம் இந்தியாவால் இயக்கப்படக் கூடியதாகும். நிறுவி, பயன்படுத்தி, ஒப்படைத்தல் அடிப்படையில் இந்தியா இத்துறைமுக முனையத்தை ஈரானில் இயக்கி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவின் India Ports Global நிறுவனத்திற்கும், ஈரானின் Aria Banader Iranian Port and Marine Services நிறுவனத்திற்கும் இடையே சபாஹர் துறைமுகத்தின் குறிப்பிட்ட முனையத்தை நிறுவி, இயக்குதல் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளின் காரணமாக ஈரானின் வணிகக் கட்டமைப்பு பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது. இந்நிலையில் தான் ஈரானுக்கும், இந்தியாவிற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய, மேற்காசிய வர்த்தகத்தை மையப்படுத்தி இத்துறைமுக நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் ஈரான், இந்தியா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே சபாஹர் துறைமுகத்தை வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி/ இறக்குமதி தொடர்பாக பயன்படுத்துவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கொரு முறை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள இம்முத்தரப்பின் அடுத்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தானும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் அணு ஆயுத உற்பத்தி உள்ளிட்ட ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவின் இந்நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

4. இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே கடற்படை பாதுகாப்பு கூட்டம்

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கடற்படை பாதுகாப்பு தொடர்பான முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இனையவழி நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் தரப்பில் அதன் வெளியுறவு நடவடிக்கை இயக்குனர் ஜோன்னேக் பல்பூர்ட்டும் (Joanneke Balfoort), இந்திய தரப்பில் இணை இயக்குனர் சந்தீப் ஆர்யாவும் கலந்துகொண்டனர். கடற்படை தொடர்பில் கூட்டுறவை மேற்கொள்வது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது.

5. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா இணைந்து கூட்டு கடற்பயிற்சி

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் கூட்டு கடற்/ வான்படை பயிற்சி குவாம் தீவினில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா ஒருங்கிணைப்பிலான இக்கூட்டுப் பயிற்சிக்கு ‘ஆபரேஷன் டிராகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பசுபிக் கடற்பிராந்தியத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கூட்டுப் பயிற்சி, நீர்மூழ்கி போர்க் கப்பல்களை எதிர்த்து அழிப்பதற்கான பயிற்சியாக அமைந்துள்ளது. இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தை மையப்படுத்தி அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாற்தரப்பு கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணி நாடுகள் கடந்த நவம்பர் மாதம் மலபார் கடற்பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இவற்றுடன் முதல்முறையாக பசுபிக் நாடுகளில் ஒன்றான கனடாவும் இணைந்துள்ளது.

6. இந்தியா – பிரான்ஸ் – ஜப்பான் முத்தரப்பு கூட்டு ஒப்பந்தம்

இந்தோ – பசுபிக் பிராந்திய நலன் தொடர்பாக பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்புக் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்க்ளா தெரிவித்துள்ளார். Observer Research Foundation என்ற தனியார் சிந்தனை மையம் நடத்திய கருத்தரங்கில் பேசிய அவர், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் திறந்த- அமைதி நடவடிக்கைக்கான முயற்சிகளில் ஒன்றாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இக்கருத்தரங்கு அமர்வில் ஜப்பான் சார்பாக பங்கேற்று கலந்துகொண்டு பேசிய சட்டோஷி சுசிகி, “வலிமையான கடற்படையமைப்பைக் கொண்டுள்ள பசுபிக் கடற்பிராந்திய நாடான ஜப்பானும், இந்தியப் பெருங்கடற் பிராந்திய நாடான இந்தியாவும், இந்தோ – பசுபிக் கடற்பிராந்தியத்தின் திறந்த- அமைதிக்கான கூட்டுக் குறிக்கோளைக் கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.

7. 5ஜி தொழில்நுட்ப சேவையிலிருந்து சீன நிறுவனங்களை வெளியேற்றிய சுவீடன்

சுவீடன் தனது நாட்டின் 5ஜி தொழில்நுட்ப சேவை வணிகத்திலிருந்து ஹூவாய் மற்றும் ZTE ஆகிய சீனா நிறுவனங்களை விலக்கியுள்ளது. சமீபத்தில் 5ஜி தொழில்நுட்ப கட்டமைப்பிற்காக சுவீடன் நாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் நடத்திய ஏலத்தில் இக்குறிப்பிட்ட சீன நிறுவனங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வணிகத்துறை இதற்கான விளைவுகளை சுவீடன் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் அமைக்கப்படும் 5ஜி தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு சீன நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்பாக உள்ளது. அமெரிக்க-சீன வணிகப் போட்டியில் தகவல்- தொழில்நுட்பத் துறை மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, சீன நிறுவனங்களின் ‘5ஜி வணிகத்திற்கு’ எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

8. அணு ஆயுதங்களை தடை செய்யும் ஐ.நாவின் ஒப்பந்தம்

அணு ஆயுதங்களை தடை செய்யப்பட்ட ஆயுதமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 22-ம் தேதி அணு ஆயுதங்களை தடை செய்கிற ஒப்பந்தத்தை ஐநா நடைமுறைப்படுத்தியது. ஐநா-வின் இந்த ஒப்பந்தத்தை 51 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.
இந்த ஒப்பந்ததின் மூலம் இனி சர்வதேச சட்டங்களின் படி அணு ஆயுதங்கள் சட்டத்திற்கு புறம்பானவைகளாகும்; அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வது, பரிசோதிப்பது, இருப்பு வைப்பது இந்த சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *