இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைகளிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் தலைநகருக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், லத்தியால் அடித்தும், போராட்டக்காரர்களைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி செய்தபோதும் அது பலனளிக்கவில்லை.
விவசாயியை தாக்கிய காவலர்கள்
ஒரு விவசாயி தனது டிராக்டரை ஓட்டும்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு விபத்து என்றும் அவரது டிராக்டர் கவிழ்ந்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் சுடப்பட்ட பின்னர்தான் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக மற்ற விவசாயிகள் கூறுகின்றனர்.அவரது உடல் தற்போது ஐ.டி.ஓ மேம்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ளது. அரசு விவசாயியின் கொலையை விபத்தாக மாற்றி பொய்யான அறிக்கை சமர்ப்பிக்கும் என்று குற்றம் சாட்டி அவரது உடலை எடுத்துச் செல்ல விவசாயிகள் அனுமதிக்கவில்லை.
விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்ல திக்ரி மற்றும் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள காவலர்கள் தடுப்புகளை அகற்றினர். “நாங்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம், இந்த குடியரசு தின அணிவகுப்புக்குப் பிறகு நாங்கள் மீண்டும் எல்லைக்கு வருவோம் என்று காவல்துறையை நோக்கி முழக்கமிட்டுக் கொண்டே தடுப்புக்களைத் தாண்டிச் சென்றனர்.
”டிராக்டரை ஓட்டுவதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை எங்கள்மீது வீசுகின்றனர். நாங்கள் அவர்களுக்கு எதிராக இல்லை என்று காவல்துறைக்கு சொல்ல விரும்புகிறோம். அமைதியை பாதுகாக்க அவர்களுக்கு நாங்கள் உதவுவோம். காவல்துறையில் இருப்பது மோடியின் மகன்கள் அல்ல – அவர்கள் எங்கள் மகன்கள்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறினார்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்திய காவலர்கள்
செங்கோட்டையை அடைந்த டிராக்டர் பேரணி
டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிய பின்னர்தான் இந்த டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியுள்ளனர். இருந்தும் காவல்துறை அவர்களை தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் லத்தியால் அடித்தும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் அவர்களை காயப்படுத்தியுள்ளனர். இருந்தபோதும் எதிர்ப்புகளை பொருடபடுத்தாமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக நின்று டெல்லியை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் செங்கோட்டை வளாகத்தை அடைந்து தங்களது கொடியை செங்கோட்டையில் ஏற்றி வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.