மார்க்ஸ் மற்றும் புத்தர்

பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.

1. மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

2. பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

அ. அண்ணலின் தரப்புகள்

இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் குறித்துத் தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதினார். தம்முடைய ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வில் மார்க்சிய சமதர்மத்தின் மூலக்கூறுகளாகப் பத்தம்சங்களை வரையறுக்கும் அண்ணல் அம்பேத்கர் அவற்றில் வரலாற்றின் மூலம் செல்லாதன; எதிர்ப்பாளர்களால் தவறானவை என நிரூபிக்கப்பட்டவை; பொதுவான முறையில் பொய்த்துப் போனவை; தர்க்கவாதம், அனுபவம் இவற்றால் தகர்க்கப்பட்டவை எல்லாம் போக நீறுபூத்த நெருப்பாய் எஞ்சி நிற்பனவாக நான்கம்சங்ளை விதந்தோதி அளவிற் சிறியவேனும் அவை முகாமையானவை என அறுதியிடுகின்றார்:

1. தத்துவஞானத்தின் பணி உலகை மறுமுறை சீரமைத்துக்காட்டுவதே.

2. ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே நலன்களில் முரண்பாடு உள்ளது.

3. உடைமைகள் தனிநபர்களுக்குச் சொந்தமாயிருந்தால் ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், மற்றொரு வர்க்கத்துக்கு அது சுரண்டப்படுவதன் மூலம் துன்பமும் ஏற்படுகின்றன.

4. சமூகத்தின் நன்மைக்காகத் தனியார் உடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

“புத்தர்,சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொதுவுடைமையை நிறுவினார்.” “அந்தப் பொதுவுடைமை சிறிய அளவில் இருந்திருக்கலாம். ஆனால் அது சர்வாதிகாரம் இல்லாத பொதுவுடைமை என்பது பெரிய அதிசயம். லெனின் இதைச் செய்யத் தவறிவிட்டார்.” பி.ஆர். அம்பேத்கர் ‘குறளி’ :1- சூன், 2012)

ஆ. எதிரீடு

ஓரமைப்புக்குள் பொதுவுடைமையை நிறுவுவதனையும், ஒரு நாட்டில் ஒட்டுமொத்தமாக நிறுவுவதனையும் ஒப்பிடுவது சரியா? வேண்டுமானால் பிக்குசங்கத்தில் புத்தர் பொதுவுடைமையை நிறுவியதனை குமரப்பா காந்திய ஆசிரமத்திலும், கோரா நாத்திக மையத்திலும் கூட்டு வாழ்க்கையை நிறுவியதனுடன் ஒப்பிடலாமே அல்லாமல்; ரசியாவில் அரசு மாற்றமாகப் பொதுவுடைமைப் புரட்சியை  நிகழ்த்தியதனுடன் எவ்வாறு ஒப்பிட இயலும்?

இற்றைப்படுத்திக் காண்கையில் இன்றைய சூழலில் சனாதனத்துக்கு இரையான பௌத்தப்பிரிவுகள் இந்தியாவிலும்; சிங்களப் பேரினவாத-பாசிசமான பௌத்தப்பிரிவுகள் இலங்கையிலுமாக எஞ்சி நிற்பது தானே யதார்த்த இருப்பு?

இத்தொடர்பில் சீனச் சூழலில் நேர்ந்தவற்றையும் ஒப்பிட்டே காண்போமே :

“சீனாவில் பெரும்பான்மை மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர். சீனப்புரட்சி அடிப்படையில் விவசாயப் புரட்சியாக இருந்தது. அப்போது பௌத்தம் விவசாயிகளை ஒடுக்கும் நிலப்பிரபுக்களின் பக்கம் நின்றது. பல விடங்களில்  கிளர்ந்தெழுந்த மக்கள் தன்னுணர்வெழுச்சியாகப் பௌத்தக் கோயில்களைத் தாக்கி அழித்திருக்கிறார்கள். ஹூனான் விவசாயிகள் எழுச்சி அதற்குச் சிறந்த உதாரணம். மாஓசேதுங் ஹூனான் விவசாயிகள் எழுச்சியை ஆய்ந்து எழுதியுள்ளார். ஆயினும் மதவிரோதப் பிரச்சாரத்தைக் கட்சி முன்னெடுக்கவில்லை. சமூகமாற்றத்துக்கான  போராட்டக்கருவி மார்க்சியம் என்கிற வகையில், அது இன்னொரு மதமல்ல என்பதனால், மக்களின் மதத்தின் மீதான வெறுப்பை வாய்ப்பாக்கிக் கொள்ளச் சீனக்கம்யூனிஸ்ட்கட்சி முனையவில்லை. மக்கள் தாமாகத் தாக்கியதை ஏற்றுக்கொண்ட போதிலும் ஏனைய இடங்களில் அதனை உற்சாகப்படுத்த முனையவில்லை.”
– ந.இரவீந்திரன் (‘மதமும் மார்க்சியமும்’- தமிழ்ப்பண்பாட்டுப் பார்வை)

இலெனின் தோற்ற இடத்தில் புத்தர் வென்றார் என்ற அண்ணலின் தர்க்கத்தை அவ்வாறே நீட்டித்து சீனச் சூழமைவில் புத்தர் தோற்ற இடத்தில் மாவோ வென்றார் எனலாமா? ஈழச் சூழமைவில் மகாவம்ச முள்ளிவாய்க்கால் மயானபூமியில் புத்தரும்,அசோகரும், மார்க்ஸூம், மாவோவும் ஒருசேரத் தோற்க ஹிட்லர் வம்சமே புன்னகைத்ததெனலாமா?

இ. தேவிபிரசாத்திடம் கிடைத்த விடை

அண்ணலின் சில வினாக்களுக்கான விடைகள் நமக்கு தேவிபிரசாத் நூலுக்கூடாகப் படிகத்தெளிவுப் பாங்கினவாக (Crystal clear clariity)க் கிடைத்து விடுகின்றன.

“புத்தரை இன்று நாம் கொள்ளும் அர்த்தத்தில் ஒரு புரட்சிக்காரர் ஆக்குவது பிழையாகும். அவருடைய சமுதாயம் பற்றிய அறிவில் இருக்கும் நிஜமான புரட்சிகர விஷயத்தைப் பார்க்காமல் இருப்பதும் பிழைதான்.” என இருமுனைத்தவறுகளையும் எடுத்துக்காட்டுகின்றார். 

“புத்தர் சொத்துரிமையை நீக்க வேண்டும் என்று கேட்பது சமுதாயத்தின் தனியான சில பிரிவுகளில் மட்டுமே தவிர சமுதாயத்திலிருந்தே அதை நீக்க வேண்டும் என்பதன்று. அது வரலாற்று முறையில் அந்தக்காலத்துப் பக்குவத்துக்கு நடக்காத ஒன்று”.

”சமுதாயத்தீமைகள் உண்டாவதை அவர் செல்வம், தனிச்சொத்துடைமை காரணமாக என்று தேடிக் கண்டுவிடுகிறார் ; ஆனால் அவை மறைந்தொழிவதை, பெருமை படைத்த ஒரு ஞானியின் வாழ்வின் நன்னெறிகளும் மீண்டும் புதிய தோற்றமும் வளர்ச்சியும் அடைவதாலேயே மறைந்தொழியும் என்று மட்டுந்தான் அவரால் எண்ண முடிந்தது.”

“எவன் மறுபிறவிக்கான பந்தபாசமான விலங்குகளை உடைத்துக்கொண்டு வெளிப்படுத்துகின்றானோ,  எவன் ஞானத்தால் மாசற்றவனாய் முற்றிலும் தூய்மை பெறுவானோ அவன், அவனுடைய தர்மத்தாலும் ஒழுக்கத்தாலும் பிஷுக்களுக்கான முதல்வனாகக் கருதப்படுவான்.”
– புத்தர்

“புத்தர் கண்ட சாதிமுறை மறைவு இப்படி வடிவற்றதும் கவைக்குதவாததாகவும் தான் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அதுதான் சாத்தியமுங் கூட. தர்க்கரீதியான பார்வையைச் சமுதாயத்தைப் புரிந்துகொள்வதற்கும் வித்தரித்ததன் தலைவிதிதான் இது.”
– தேவிபிரசாத் சட்டோபாத்யாய (‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’)

இவற்றை தேவிபிரசாத் ‘பிரதீத்யஸமுத்பாதம்’ எனும் பிரபஞ்சக் காரணக் காரியத் தொடர்ச்சி விளக்கமாகவும்; ‘அக்கண்ண சூத்தாந்தம்’ எனும் பௌத்த நூலிலிருந்து புத்தருடைய சமுதாய இயல் நோக்கத்தை  எடுத்துரைப்பதாகவும் – அப்போதைய சமுதாய வர்க்கங்கள் அரசு குறித்த பார்வைகள் எவ்வாறு உருவாயின என விளக்குமுகமாகவும் எழுதிச் செல்கின்றார்.

அம்பேத்கர் நோக்கில் பொதுவுடைமைத் தத்துவம்

“நூர் கார்லலைல், அரசியல் பொருளாதாரத்தைப் பன்றிகளின் தத்துவம் என்று கூறினார். கார்லைல் கூறியது தவறுதான். ஏனென்றால் மனிதனுக்குப் பொருளியல் வசதிகள் வேண்டும். ஆனால் பொதுவுடைமைத் தத்துவமும்  அதேபோலத் தவறானதே. மனிதர்களும் பன்றிகள்தாம் என்பது போல அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது’
– பி.ஆர். அம்பேத்கர்

நூர் கார்லைல்கள் பார்வையில் அரசியல் பொருளாதாரம் பன்றிகளின் தத்துவமாகலாம். ஜார்ஷ் ஆர்வெல்கள் பார்வையில் பொதுவுடைமை இயக்கம் ‘விலங்குப் பண்ணை’யும் ஆகலாம். மார்க்சிய லெனினியப் பார்வையிலோ பாராளுமன்றம் பன்றித்தொழுவமே ஆகும்.

ஆனால் அண்ணலின் பார்வையிலும் கூடவா அரசியல் பொருளாதார நோக்கமும் மனிதர்களும் பன்றிகள் தாமென அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே காட்சியளித்திட வேண்டும்? இது எம்மனோர் செரிமானத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளுறுத்திக் கிடக்கும் அண்ணலின் இமாலயத் தவறே! என்பதை இங்கே பதிந்தே ஆகவேண்டும். இதுவும் ஒரு தலைகீழ்ப் புரிதல்தானே? 

மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

அ. எஸ்.என்.நாகராசன் பார்வையில்

“மார்க்சியம் பொருளுக்கான போராட்டத்தை முன்வைக்கும் முழக்கமல்ல. மாறாகப் பொருளின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவே அதனை வலியுறுத்துகின்றது.”

 உடைமைப்பற்றின் பெறுபேறுகளே மாயை யாவும் (‘All the illutions are due to object fondage) என்பதே முதலாளித்துவம் விளைத்த மயக்கத்தின் லீலைகளைப் பேசும் மார்க்சியத்தின் மூலவாசகமாகும்

“பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப் பொருளைக் காண மாட்டான். அதுவே எல்லாவகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம். இதுதான் வளர்த்த பெரும் மயக்கம்”

“மனிதன் தனது உயிரைக்கூட மாய்த்துக்கொள்ள முடியும். ஆனால் அகந்தையை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதனையும் மார்க்ஸ் தெளிவாக விளக்கி இதனையே ‘பொருளுக்கு அடிமையாதல்’ –  ‘ஆப்ஜெக்ட் பாண்டெஜ்- என்று குறிப்பிடுகிறார்.”

“இதன் வடிவங்கள் பல தனிச்சொத்து, சுயநலம், குறுகிய தேசியவாதம், குழு மனப்பான்மை, சாதிவெறி போன்ற அனைத்துமே பொருளுக்கு அடிமையாதலின் பல்வேறு வகை வெளிப்பாடுகளே.”; எஸ்.என்.நாகராசன் (‘கீழை மார்க்சியம்….’)

பொருளின் ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் தத்துவத்தைப் பொருளுக்கானதாக முன்வைப்பதும் தலைகீழ்ப்புரிதல் தானே. மட்டுமல்லாமல் மனிதர்களைக் கொழுக்க வைப்பதாக இருக்கிறதென முதலாளியத்தின் திசைநோக்கி நீள வேண்டிய அண்ணலின் சுட்டுவிரல், மாறாகப் பொதுவுடைமையை நோக்கி நீள்வதும் தலைகீழ்ப்புரிதல் தானே?

ஆ. அம்பேத்கரின் பிறழுணர் கணிப்பு:

“மார்க்ஸியக் கோட்பாடு 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அது மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாகக் காரல் மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பில் பல பகுதிகள் நொறுங்கிப் போய்விட்டன. அவரது சோசலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸிய விதம் முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.”
– பி.ஆர். அம்பேத்கர் (‘குறளி’ :1. சூன் – 2012) 

இ. மாற்றுத்தரப்புகள்

வீழ்ச்சி என்பதெல்லாம் நடைமுறைப்படுத்தியவர்களின் கோளாறுகளின் விளைபயனே அல்லாமல் மூலஆசான்கள் அதற்குப் பொறுப்பாக மாட்டார்கள். 

“மார்க்சியம் என்பது ஒரே விதமானது இல்லை, பன்மைத்தன்மை உள்ளது. ஒன்று – மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்,மாவோ என்று சேகுவேராவுடன் செல்வது. இன்னொன்று – மார்க்ஸ், எங்கெல்ஸ், பிளக்கானோவ், லெனின், கிராம்ஸி, அடர்னோ, அல்தூசர், பூக்கோ, லியாடார்ட் என்று செல்வது. முன்னது அரசியல் சார்ந்து அதிகாரம் நோக்கியது. பின்னது சிந்தனையின் ஊடாக மனித விடுதலையை நோக்கியது. அரசியல் நோக்கிலான மார்க்சியத்திற்கு வெற்றி  தோல்விகளும் ஏற்ற இறக்கங்களும் உண்டு; ஆனால் தத்துவ நோக்கிலான சிந்தனை எக்காலத்திலும் வளர்முகமாகத்தான் உள்ளது.

தற்பொழுது வீழ்த்தப்பட்டு விட்டதாகக் கருதப்படுவது அரசியல் அதிகாரம் தானே ஒழிய மார்க்சியச் சிந்தனை என்றும் வீழ்த்தப்பட முடியாதது.” – பொ. வேல்சாமி (” கவிதா சரண்’)

“சாதிவகைச் சமுதாயம்  என்பது வர்க்க அமைப்புச் சமுதாயம்தான்: அது தனது இறுதி முடிவை வரலாற்று வகையில் அடைந்தே தீரவேண்டிய கதியை அடையும்; வர்க்கங்களே இல்லாத சமுதாயத்திற்கு அது மறைவதே அந்த முடிவான கதி: இன்று கோடிக்கணக்கில் தொழிலாளிகளான ஆண்களும் பெண்களும் அதை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்”
– தேவிபிரசாத் சட்டோபாத்யாய (‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’

தொடரும்..!

விரைவில் பாகம் 4 வெளிவரும்.

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

One Reply to “பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்”

  1. மனிதர்களும் பன்றிகள்தாம் என்பது போல அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது’
    – பி.ஆர். அம்பேத்கர்

    புத்தரா காரல் மார்க்ஸா என்கிற புத்தகத்திலிருந்தே அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் காட்டப் படுவதாக யூகிக்கிறேன். புத்தகத்தின் பக், வரிகள் மேற்கோளிட்டுக் காட்டுவது எம்மைப் போன்றோர்களுக்குப் புரிதலை உண்டாக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *