2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை சற்று முன்பு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஒரு முகமையான World Food Programme அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ததற்காகவும், போர் நிலவும் பகுதிகளில் பட்டினி என்பது ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை தடுத்திடும் வகையில் செயல்பட்டதற்காகவும் அந்த அமைப்பிற்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து இயங்கக் கூடிய உலகின் மிகப்பெரிய மனிதநேய நிறுவனமாக WFP இருக்கிறது. 2019-ம் ஆண்டில் 88 நாடுகளில் பசியின் கொடுமைக்கு உள்ளான 10 கோடி பேருக்கு இந்த நிறுவனம் உதவியினை அளித்திருப்பதாகவும் நோபல் பரிசு வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டு பசியை ஒழிப்பது ஐ.நாவின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நாவின் இந்த இலக்கை அடைவதற்கான முதன்மை கருவியாக WFP செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இளம் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க், நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டெர்ன் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியோர் இந்த விருதுக்கான போட்டியாளர் பட்டியலில் இருந்தனர்.
அக்டோபர் 5ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நோபல் பரிசு வழங்கும் விழாவில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மிக முக்கிய பரிசான அமைதிக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற துறைகளில் அளிக்கப்பட்ட நோபல் பரிசுகள் விவரங்களுக்கு:
- ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
- கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
- டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
- 2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு