83 வயது நிரம்பிய மனித உரிமை செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency -NIA) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று கைது செய்துள்ளது. ஜெசூட் அருட்தந்தையான ஸ்டான் சுவாமி அவர்கள் 2018-ம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரணைக்கு சென்று வந்தவர்.
ஜெசூட் நடத்தும் ’பாகைச்சா’ சமூக நல மையத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டதாக உடன் பணியாற்றும் ஒருவர் Scroll.in இணையத்திற்கு தெரிவித்துள்ளார். புலனாய்வு அதிகாரிகள் மூர்க்கமாகவும், ஆணவத்தோடும் நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டான் சுவாமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவரை ராஞ்சி அலுவலகத்தில் உள்ள மூத்த புலனாய்வு அதிகாரிகள் சந்திக்க விரும்புவதாக தெரிவித்து அழைத்து சென்றனர். ஆனால் உண்மையில் அவர் எங்கே அழைத்து செல்லப்பட்டார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஸ்டான் சுவாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், புலனாய்வு முகவர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களாக கிட்டத்தட்ட 15 மணிநேரம் தன்னிடம் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அப்போது விசாரணை அதிகாரிகள் தனது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாக சில தகவல்களைக் காட்டி, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறியதாக குறிப்பிட்டார். கணினியிலிருந்து காட்டப்பட்ட சித்தரிக்கப்பட்ட ஆவணங்கள் தனக்கு சொந்தமானவை இல்லை என்றும், திருட்டுத்தனமாக புகுத்தப்பட்டவை என்றும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
“என்.ஐ.ஏ விசாரணையின் உந்துதலுக்கு பீமா கொரேகான் வழக்கு காரணமில்லை. இந்த விசாரணையின் நோக்கம் தனக்கு தீவிரவாத இடதுசாரி சக்திகளுடன் தொடர்பு இருப்பதாக காட்டுவதும், பின்னர் என்னுடன் தொடர்புபடுத்தி நான் தங்கியுள்ள ’பகைச்சா’ சமூக நல மையத்தையும் சேர்த்து மாவோயிஸ்ட்களுடன் தொடர்புபடுத்துவதான்” என்று சுவாமி தெரிவித்தார்.
”அதன் பிறகு ஆறு வார கால அமைதிக்குப் பின், மும்பையில் உள்ள என்ஐஏ-அலுவலகத்தில் ஆஜராக அழைக்கப்பட்டேன். என்னிடம் 15 மணி நேர விசாரணை நடத்தப்பட்டதற்குப் பின்னரும் மேலும் விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? கொரோனோ தொற்று பரவி வரும் சூழலில் மும்பைக்கு பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு எனது வயதின் மூப்பு மற்றும் உடல்நிலை தயாராக இல்லை. லாக் டவுன் காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பொதுவில் ஆஜராகவேண்டிய அவசியம் இல்லை என ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, விசாரணை அதிகாரிகள் என்னிடம் மேலும் விசாரிக்க விரும்பினால் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக மேற்கொள்ளலாம்” என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமி கைது செய்யப்பட்ட பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட சுவாமியின் வீடியோவினை அவரது சக பணியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
முதலில் ஆகஸ்ட் 28, 2018-ம் தேதி சுவாமியின் இல்லத்தை NIA முதன்முறையாக சோதனையிட்டது. பின்னர் ஜூன் 12, 2019 அன்று புனே நகரில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட புலனாய்வுக் குழு, சுவாமியின் இல்லத்தில் எல்கர் பரிஷத் நிகழ்வு தொடர்பாக இரண்டாவது முறையாக சோதனை நடத்தியது.
பட்டியலின மற்றும் ஆதிவாசி சமூக மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்த சமூகங்களிடையே மேற்கொண்டு வருவதாலும், சிறைவாசிகளின் உரிமைகள் குறித்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் காரணத்தினாலும் தான் குறிவைக்கப்படுவதாக சுவாமி தெரிவித்திருந்தார்.