2020-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 12-ம் தேதி வரை இந்த அறிவிப்புகள் நடைபெற உள்ளது. 1901-ம் ஆண்டிலிருந்து உலகின் பல துறைகளில் மனிதாபிமான ரீதியிலான மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளிலும், இவை தவிர்த்து அமைதிக்கான நோபல் பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஹெபாடிட்டிஸ் சி வைரசினை கண்டறிந்ததற்காக மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Black Hole எனப்படும் கருந்துளை உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளைக் கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் இயற்பியல் துறைக்கான 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பென்ரோஸ் சில தனித்துவமான கணித முறைகளைப் பயன்படுத்தி கருந்துளைகள் என்பவை ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் அடிப்படையிலான நேரடி விளைவுகளாக உள்ளன என்பதை 1965-ம் ஆண்டு நிரூபித்தார்.
கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் இருவரும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி வெளிமண்டல வாயுக்கள் மற்றும் தூசிக்களை கடந்து பால்வழி அண்டத்தினை பார்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கினர். அதற்கான புதிய கருவிகளையும் உருவாக்கினர்.
இந்த கண்டுபிடிப்புகள் இன்னும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றை நோக்கிய புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்று ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது.