வேதியியல் நோபல் பரிசு

டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

2020-ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி துவங்கி 12-ம் தேதி 2020-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பினை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் செய்து வருகிறது.

1901-ம் ஆண்டிலிருந்து உலகின் பல துறைகளில் மனிதாபிமான ரீதியிலான மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளிலும், இவை தவிர்த்து அமைதிக்கான நோபல் பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு இதுவரை மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேதியியல் துறைக்கான அறிவிப்பு வந்துள்ளது. 

டி.என்.ஏ மரபணுவில் மாற்றம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்கி மேம்படுத்தியதற்காக இம்மானுவெல் சேர்பென்டையர் மற்றும் ஜெனிஃபர் டாட்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

CRISPR/Cas9 மரபணு கத்தரி எனும் புதிய ஜீன் தொழில்நுட்பத்தினை இவர்கள் இருவரும் கண்டறிந்திருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் வரை டி.என்.ஏ மாற்றத்தினை செய்ய இயலும். புற்றுநோய் சிகிச்சைகளில் இந்த தொழில்நுட்பம் மிக முக்கியமான மாற்றத்தினை கொண்டுவந்திருப்பதாக நோபர் பரிசு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடிப்படை அறிவியலில் மாற்றத்தைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், புதிய வகையான பயிர்களை உருவாக்குவதிலும், புதிய வகையிலான மருத்துவ சிகிச்சை முறைகளை உருவாக்குவதிலும் இது பேருதவியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *