நோபல் பரிசு

ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்ற ஹெபாடிட்டிஸ் சி எனும் வைரசை அடையாளம் கண்டறியும் வழியைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வே ஆல்டர், சார்லஸ் ரைஸ், பிரிட்டன் மைக்கேல் ஹாட்டன் ஆகிய மூவரும் ஹெபாடிட்டிஸ் சி வைரசை ஒழிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

நோபல் பரிசின் வரலாறு

ஸ்வீடனைச் சேர்ந்த மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ‘ஆல்பிரெட் நோபல்’ தான் முதன்முதலாக மிக அபாயகரமான வெடிபொருளான ‘டைனமைட்’ வேதிக் கலவையை 1867-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதுவே உலகம் கண்டுகொண்ட முதல் அழிவு ஆயுத கண்டுபிடிப்பு.

1888-ம் ஆண்டு அவரின் சகோதரர் உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். அப்போது ஒரு செய்தித்தாள் உண்மையறியாமல், இறந்தது ‘ஆல்பிரெட் நோபல்’ என்று தவறுதலாக செய்தி வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பாக “மரண வியாபாரி மரணமடைந்துவிட்டார்” என்றும் , ”மக்களை மிக அதிகளவிலும், விரைவாகவும் கொல்வதற்கான ஆயுதவழியைக் கண்டறிந்ததால் மிகப்பெரும் செல்வந்தராக  மாறிய ‘ஆல்பிரெட் நோபல்’  இறந்துவிட்டார்”  எனவும் குறிப்பிட்டது. 

இதனால் மனம்வருத்திய ‘ஆல்பிரெட் நோபல்’ தன்மேல் விழுந்த பழிச்சொல்லை இனி வரவிருக்கும் வரலாற்றிலிருந்து  தவிர்க்கும் விதமாக தன் பெயரிலான ‘நோபல்’ பரிசை வடிவமைத்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி  ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவே இன்று உலகின் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்குகிறது.

1901-ம் ஆண்டிலிருந்து உலகின் பல துறைகளில் மனிதாபிமான ரீதியிலான மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளிலும், இவை தவிர்த்து அமைதிக்கான நோபல் பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஹெபாடிட்டிஸ் சி

அதில் இந்த ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தொற்று நோய்களை ஒழிப்பதில் முக்கியமான விடமாக அந்த நோயினை உருவாக்கும் காரணியைக் கண்டுபிடிப்பது என்பது இருக்கிறது. ஹெபாடிட்டிஸ் பி வைரசினை கண்டறிந்ததற்காக 1976-ம் ஆண்டு ப்ளூம்பெர்க் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

அதன்பிறகு ஹெபாடிட்டிஸ் ஏ மற்றும் பி அல்லாத இன்னொரு வகை வைரஸ் கண்டறிய முடியாத தன்மையில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதனுடைய மரபணு வரிசையைக் கண்டறிவதற்கான சோதனையில் இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மூவரும் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இது ஃப்ளாவிவைரஸ் எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸ் என்று கண்டறியப்பட்டு ஹெபாடிட்டிஸ் சி என்று பெயரிடப்பட்டது. 

வரலாற்றில் முதன்முறையாக இந்த வைரசின் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறை உருவாகி இருப்பதாக நோபல் பரிசு வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *