சேகுவேரா கடிதங்கள்

எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்

சேகுவேரா நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

“வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட சேகுவேரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும்”  

என்று அக்டோபர் 18 அன்று ஹவானாவில் சே குவராவின் அஞ்சலிக்காக பிடலின் தலைமையில் கூடியிருந்த மக்களின் முன் உரையாற்றுகிற போது  பிடல் காஸ்ட்ரோ பேசினார்.

1967 அக்ரோபர் 9 அன்று நண்பகல் 1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெற்றான்.

சே குவராவை உயிருடன் வைத்து விசாரணை நடத்தினால் அவர் மேல் பரிதாபதமும், நாயகத்தன்மையும் உருவாகி விடும் என்பதால் காலை 10.00 மணிக்கு அவரை உடனடியாக கொலை செய்து விடச் சொல்லி சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 என குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சேகுவேரா, 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

சேகுவேராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலிவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.

சேகுவேரா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் அழைத்துச் செல்லப்படும் காட்சி

“முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவேரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப் போல கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்து சுடுமாறு சேகுவேரா கேட்க அதை அலட்சியப்படுத்துகிறார்.

”கோழையே சுடு! நீ சுடுவது சேகுவேராவை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!

இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் ’சே’ சொன்ன கடைசி வரிகள் இதுதான்!

அக்டோபர் 9 அன்று அதிகாலை 6.00 மணி லாஹிகுவேரா பகுதியின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்டார் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்த கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சேகுவேராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். 

சுட்டுக் கொல்லப்பட்ட சேகுவேராவின் உடல்

சேகுவேராவின் கடிதங்கள்

சே தன் வாழ்நாளில் எழுதிய கடித்தங்கள் தொகுக்கப்பட்டு ’சேகுவேரா எழுதிய கடிதங்கள்’ என்று என் சி.பி.எச் நிறுவனத்தாலும், ’சேகுவேராவின் கடிதங்கங்கள்’  என்று புலம் பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  அவர் பெற்றோருக்கு எழுதியதும், கியூபாவில் இருந்து வெளியேறியபோது பிடலுக்கு எழுதியதும் முக்கியமான கடிதங்கள். அதேபோல் அவர் மனைவிக்கும் குழந்தகளுக்கும் பெரும் காதலுடனும் அன்புடனும்  கனவுகளுடனும் எழுதியிருப்பார். 

அந்த கடிதங்களில் சில…

பெற்றோருக்கு சே எழுதிய கடிதம்

பெற்றோர்களுடன் சே

என் அன்பிற்குரியவர்களே,

கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விடைபெற்று, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருந்தி எழுதியிருந்ததை இபொழுது நினைவு கூர்கிறேன். இன்று நான் அத்தனை மோசமான ஒரு படைவீரன் அல்ல.

எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியம் ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் மாறிவிட்டது. சுதந்திரத்திற்காக போராடும் மக்களுக்கு ஒரே வழி ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையின்படி நடக்கிறேன்.

சிலர் என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். நான் சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம். தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்து கொள்ளத் தயங்காத சாகசக்காரன்.

இதுவே என்னுடைய கடைசி கடிதமாகவும் இருக்கலாம். நடக்க இருப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி நடந்துவிடும் எனில் இப்போதே என்னுடைய தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் அனைவரையும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

என்னுடைய வழியில் நடப்பது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால் பல சமயங்களில் நீங்கள் என்னை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை என்னை புரிந்து கொள்வது கடினமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள். அது போதும் எனக்கு.

எனது கால்கள் தேய்ந்து விட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி எல்லாவற்றையும் சரிசெய்யும்.

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.

– எர்னஸ்டோ

கியூபாவிலிருந்து  பொலிவியாவுக்குக் கிளம்பிய சமயத்தில் தன் மனைவிக்கு  எழுதிய கடிதம் 

அலெய்டாவும் சேவும்

1966 நவம்பர் 11

பிரியமானவளே!

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காக தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய்.

தைரியத்தை இழந்துவிடாதே. ஒருவேளை நான் இறந்து போனால் என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால் மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளை கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

– சே

ஃபிடலுக்கு எழுதிய கடிதம்

ஃபிடலும் சேவும்

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? ஒரு நாள் அவர்கள் (புரட்சிப் படையினர்) வந்து, ‘இறந்து போனால் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்?’ என்று கேட்டார்கள். பிறகு எல்லாம் புரிந்து விட்டது. ஒரு புரட்சியின் முடிவு வெற்றி அல்லது வீரமரணம் என்பதை புரிந்து கொண்டேன்.

இன்று நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால் கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. கியூப மண்ணிலே நிகழ்ந்த கியூபப் புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றி விட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால் நான் உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய கியூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பில் இருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி எனக்கு கியூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால் வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத் தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மேல் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராகப் பரிணமித்த உங்களது குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்து கொள்ளத் தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். அந்த சமயத்தில், நீங்கள் இயங்கியதைப் போல் அவ்வளவு பிரமாதமாக ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களைத் தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டுப் பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ கண் காணாத இடத்தில் என் முடிவு நெருங்குமானால், அந்த கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக் கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டுக் கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும் அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும் ஒரு கியூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு விளங்குவேன்.

எனது மனைவி மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசு இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர, வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

– சே –

மகளுக்கு எழுதிய கடிதம்

மகள் ஹில்டாவுடன் சே

அன்புள்ள ஹில்டா,

இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான் உன்னை விட்டு வெகு தொலைவில் நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமைப்படுவாய் என்பது என் நம்பிக்கை.

நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால் நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னை தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல்பேச்சைக் கேள்.

எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும்.

பெரிய மனுசியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

– அப்பா 

தன் பிள்ளைகளுக்கு எழுதிய கடிதம்

எனக்கும்
உங்களுக்கும்
இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று
நான் நினைக்கவில்லை.
உலகில் நடக்கிற
அநீதியைக் கண்டு
நீங்கள் கோபம்
கொள்வீர்கள் என்றால்
நாம் தோழர்கள் தான்.
அது தான் முக்கியம்.

எனது குழந்தைகளுக்கு சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல் வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும் இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.

குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம்.

என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.

உங்கள் தந்தை

சே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *