4. ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்
(வெளியீடு: ‘உயிர் எழுத்து’, முதற்பதிப்பு :நவ. 2020, பக். : 200, விலை: ₹ 200/, கைப்பேசி: 99427 64229)
மூவர் பார்வையில் இந்நாவல்
இந்நாவலாசிரியர், ஒரு சிறந்த நாவலாசிரியரான முன்னுரையாளர், ஒரு தேர்ந்த (ஆனைத்தீ) வேணவா வாசகரின் (voracious) முகநூல் மதிப்பரை மூவர் பார்வைகளில், இந்நூல் என்னுதலிற்றோ எனவாங்கு முன்வைக்கின்றேன். முன்னுரையைப் படிக்க விரும்பா வாசகர் இதனைத் தவிர்த்திடுக.
“விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் இப்படி மனத்திரைக்கு அப்பாலேயே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. என் மனத்திரைக்குப் பின்னால் காலத்தால் அழியாமல் இருந்துகொண்டு என்னை நிம்மதி இழக்கச்செய்கிற சில சம்பவங்களைக் காட்சிப்படுத்த நினைத்ததன் விளைவே, லிங்கம் நாவல்” – ஜெயந்தி கார்த்திக்
“கண்டியூரில் பழைய துணிகளை வீடுவீடாகச் சென்று சேகரித்துவந்து கிழட்டுத் தையல் மெஷினில் தைத்துக் கொடுத்துக் கூலிபெற்று சீவிக்கிற தையற்காரர் லிங்கத்தின் ஐந்தாறு ஆண்டுக்கால வாழ்க்கைப் போராட்டங்களே இந்த நாவல்.” “அன்றாடம் கூலிவேலைக்குப் போய்ப் பிழைக்கும் குடிமக்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பேசும் நாவல் இது.” – நாஞ்சில் நாடன் (நூல் முன்னுரை)
“இது லிங்கம் என்கிற சாலையோரத் தையற்காரர் குடும்பத்தின் கதை.”
“வறுமையில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் குழதைகளுக்குப் பொறுப்புணர்ச்சி எப்படியோ தொற்றிக் கொள்கிறது”
“இது கலையில் தொடங்கிக் கலையில் முடியும் கதை, எனில் கலையின் கதை அல்ல.வேணிக்கு வாய்த்த ஒரு சந்தோஷத்திற்குக் கலைக்குக் கொடுப்பினையின்றிப் போய்விடுகிறது. பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரைப்போல் எதுவந்து தடுத்தாலும் நீர் குழியில் விழுவதைத் தவிர்க்க முடியாது என்பது போல் சிலரின் வாழ்க்கை. அந்த வாழ்க்கைச் சித்திரத்தைத் தனது நாவலாகக் கொணர்ந்திருக்கிறார். “- சரவணன் மாணிக்கவாசகம் (முகநூலில் மதிப்புரை)
இதெல்லாம் சரி ஒங்க பார்வையை ஏன் இங்கு வைக்கவில்லை என்றால் அதனை இப்பதிவின் இறுதியில் காண்க என்பதே விடை. சரவணன் நாஞ்சில் முன்னுரையின் மீதான மூன்று மதிப்பீட்டுப் புள்ளிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் இரண்டை மட்டும் காண்போம்:
“முன்னுரை எழுதுபவர்கள் கதையைப் படிக்கவில்லை என்ற பழி தன்மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காகக் கதைச்சுருக்கத்தை எழுதிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.”
“ஆங்கில நாவல்களுக்கு விமர்சனம் எழுதுவோர் கதையின் முக்கியமான (திருப்பு முனை போன்ற) பகுதியைச் சொல்லநேர்ந்தால் ‘Spoiler aleart ahead’ என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள். நம்மவர்களுக்குத் தான் படித்ததைச் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்திற்கு முன் எதுவும் நிற்க முடியாது.” – சரவணன் மாணிக்கவாசகம்.
மாணிக்கவாசகத்தின் வாசகத்தை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு முன்கதைச் சுருக்கமாக அல்லாமல் செலுலாய்டு மொழியில் கூறுமாப்போல் ‘ஒன் லைன்’ கதைக் குறிப்புகளாக மேற்கோளிட்டு விட்டு; என் பார்வையையும், அவரின் மூன்றாம் மதிப்பீட்டுப்புள்ளி குறித்த என் தரப்பையும் இறுதியில் தருகிறேன்.
நாவல் உருவான கதை
“இந் நாவலை எழுதிய பிறகு பிரசுர வாய்ப்புகள் தேடிப் பல வருடங்களாக அலைந்து செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் கானல்நீர் போலானது.” – ஜெயந்தி கார்த்திக்
இத்தகு சூழ்நிலையில்தான் கரிகாலன் ஆற்றுப்படுத்தலில் ‘உயிர் எழுத்து’ இதழாசிரியாரும் பதிப்பாளருமான சுதீர் செந்திலை ஜெயந்தி சந்தித்தார். சுதீர் நாவலை முன்னுரைக்காக நாஞ்சில் நாடனுக்கும்; வட்டாரவழக்கு – செவ்விதின் ஆக்கத்துக்காகச் சி.எம்.முத்து, கீரனூர் ஜாகீர் ராஜா இருவர்க்கும்; மெய்ப்பாக்கத்துக்காக எனக்கும் அனுப்பிவைத்தார். இத்தகு எத்தனங்கள் ஒரு பதிப்பாளர் எனும் முறையில் அவர் மேலெடுத்துப் போட்டுக்கொண்டு நிறைசெலுத்தும் அக்கறை இவை போற்றத்தக்கனவே. புதிதாக, பரவலாக அறியப்படாத படைப்பாளர்களை இனங்கண்டு தம் இதழில் வெளியிட்டும், இதழ் முகப்பில் ஒளிப்படம் வெளியிட்டும் சிறப்பித்த பணி குறிப்பிடத்தக்கதாம்.
இத்தொடர்பில் இதேமூச்சில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய பதிப்பாளர் இன்னும் இருவர் ‘தமிழினி’ வசந்த குமாரும், ‘மருதா’ பாலகுமார சாமியும் ஆவர். பல்லாண்டுகளாகப் பிரசுரவாய்ப்பு தேடி அலைந்த தன் ஆற்றாமையை முன்வைக்கும் பதிப்புச்சூழலில் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகையில் பெறலருங் கொடுப்பினையாய் வாய்த்த இத்தகு பதிப்பாளர் பங்களிப்பையும் அதே மூச்சில் அடையாளங்காட்டுவது தானே முறையாக அமைதல் கூடும்!
புனைவின் மொழியும் கதையாடலும்
தொழில் முறையாக ‘உயிர் எழுத்து’ இதழுக்கும் பதிப்பக நூல்களுக்கும் மெய்ப்பாக்கம் செய்தளித்தவன் என்ற முறையிலும்; தஞ்சை மாவட்ட வட்டார மொழியை அதன் பாங்கில் செம்மைப்படுத்துமுகமாகவுமே நாவல் மூலப்படியைப் பதிப்பாளர் எனக்கு அனுப்பினார். வட்டார வழக்குப்பயில்வு எனக்கு உண்டாயினும் வட்டாரக்கிளை – கண்டியூர் வழக்கெலாம் நானறியேன், என்பதால் பிழைதிருத்தம் மட்டுமே நான் மேற்கொண்டேன்.
“கன்னியாகுமரி எனும் சிறிய மாவட்டத்திலுள்ளேயே நாஞ்சில் மொழி, காரைக்காட்டு மொழி, பரதவப் பெருங்குடி மொழி, கல்குளம் விளவங்கோட்டு மொழி என உட்பிரிவுகளும் நுணுக்கங்களும் சிறப்புக்களும் உண்டு. தி. ஜானகி ராமன், தஞ்சைப்ரகாஷ், சி.எம்.முத்து, பாவை சந்திரன் போன்றவர்களின் நாவல் வாசித்தவர்கள் அதன் பேதங்கள் உணர்வார்கள்.” – நாஞ்சில் நாடன்
இவற்றோடு நா.விச்வநாதன்; கீழைத்தஞ்சையின் கடைமடைப்பாசன நிலவெளியின் சோலை சுந்தரபெருமாள், இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் அத்திவெட்டிக் கள்ளர் மொழி எனக்கிளை மொழி இனவரைவியல் கூறுகளையும் ஆராய்ந்தவன் எனும் முறையில் நாஞ்சில் குறிப்பிடுமாறு அப்பேதங்களை நானும் அறிவேன். இந்த வரிசையில் கண்டியூர் மொழி வாசிப்பு இந்நாவல் மூலமே வாசிக்க வாய்த்தது.
என்னைப்பொறுத்த வரையில் பிழைதிருத்துகையில் முதலில் ‘எழுத்தெண்ணி’ த் திருத்தும் சொன்மைத் திருத்தம், அப்புறமே பொருண்மைத் திருத்தம். இதில் புனைவைத் திருத்துவதில் உள்ள ஒரு சவால் என்னவென்றால் ஒரு அரிய புனைவை மெய்ப்பாக்கம் புரியத் தலைப்படுகையில் அது அப்படி நம்மைச் செய்யவிடாமல் அதன் ஆற்றொழுக்கில் அடித்துக்கொண்டே போய்விடும். சட்டெனத் திடுக்கிட்டே மீளவும் விட்ட இடத்தைப் பிடிக்கணும். இது ஆசிரியருக்கு முதல் நூல்தானே என விட்டேற்றியாய்த்தான் நானும் ஆரம்பித்தேன். இப்படியே திருத்தம், வாசிப்பு எனும் அல்லாட்டத்தூடேயே அலைக்கழியவைத்ததே லிங்கம்.
பிறந்தவுடனே தொப்பூழ்க்கொடியைத் தூக்கிப்போட்டுக் கொண்டே நடைபயின்ற புதுமைப்பித்தனின் அவதாரம் போல் ஆகிவந்த கண்டியூர் மொழிநடையின் தங்குதடையற்ற நடையோட்டமும் இயல்பான கதையாடலும் லிங்கப் புனைவாக்கத்தின் தனிச்சிறப்பே.
“கண்டியூர் வட்டார மொழி கதை முழுதும் இதமாக வருடிக் கொடுக்கிறது.” “முதல் நாவல் என்று சொல்ல முடியாத பக்குவப்பட்ட மொழிநடையும் கதைசொல்லலும் இந்த நாவலின் நிம்மதி.”- சரவணன் மாணிக்கவாசகம்
” நாவல் ஒர் இயல்பான மக்கள்மொழி மூலம் சொல்லப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே போன்ற நகரங்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் மாந்தரின் மொழி, வாழ்க்கைச்சூழல், எண்ண அலைக்கழிப்புகளுக்கு அந்நியமான சம்பவங்கள் இங்கே விவரிக்கப் பெறுகின்றன. பாசாங்கற்ற நடப்பு மொழி நாவலின் எந்தச்சம்பவமும் செயற்கையாக நாவலுக்கென்று உருவாக்கப்பட்டதாக நமக்குக் காட்சி தரவில்லை.”
“கதை நடக்கும் காலம் குறித்த தெளிவு வாசகருக்கு உணர்த்தப்பட்டிருக்கலாம். சூழல் பற்றி, இயற்கை பற்றிச் சில விவரிப்புகள் இடம்பெற்றிருக்கலாம். எதிர்காலப் படைப்புகளில் இவை கவனத்தில் கொள்ளப்படலாம்.”
– நாஞ்சில் நாடன்.
“புதிய எழுத்தாளரான என்னுடைய நாவலை வாசித்துவிட்டு முன்னுரை எழுதிக் கொடுத்ததோடு நாவலில் இருக்கும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி என்னை ஊக்கப்படுத்தினார். அவர் வழிகாட்டுதலின் பேரில் நாவல் நடைபெறும் காலகட்டத்தை வாசகர்கள் உணர்ந்து கொள்வதற்காக – சிறிய மாறுதலைச் செய்திருக்கிறேன்.” – ஜெயந்தி கார்த்திக்
“நவீன நாவல்களுக்குக் காலம் கிடையாது. கதை நடுவில் அதே போல் சூழல் இயற்கை பற்றி விவரித்துக் கதையைத் தனியாகப் பாடையில் கட்டி அனுப்பும் காலமும் மலையேறிவிட்டது. வாசகர் மனத்திரையில் கதையே விஸ்தரிக்க வாய்ப்பளிக்கும் படைப்புகளே நவீன இலக்கியம்..” – சரவணன் மாணிக்கவாசகம்.
இத்தொடர்பில் புதியஎழுத்தாளரான ஜெயந்திக்கு நாஞ்சில் வட்டாரவழக்கு நாவலெனும் வகைப்பாட்டில் அவரது அடுத்த படைப்பில் மேற்கொள்ளுமாறு வழங்கிய ஆலோசனைகளை ஏற்றுத் தம் இந்நாவலிலேயே ஜெயந்தி சில மாற்றங்களையும் செய்கின்றார்.
சரவணன் குறிப்பிடும் கதையைப் பாடையில் கட்டி அனுப்பும் எனும் மதிப்பீடு நிலவரைவியல் சித்திரிப்பு வட்டார ஆவணத்தரவுகள் இவற்றுடன் முறையாகப் புதினப்படுத்தப்படாமல் ஆவணத்தொகுப்பாகவே எஞ்சி நிற்பனவற்றிற்கே பொருந்தும்.
காட்டாக சோ.தர்மன் தம் சொந்தத் தாய்மாமனான முன்னோடிப் படைப்பாளி பூமணியின் படைப்புகளை இலக்கியத்தரமான நாவல்களல்ல நாட்டார் வரலாற்று ஆவணங்களே என்பார்.தர்மன் கூறும் அளவுகோல் சரியானதே. ஆனாலது பூமணி படைப்புகளுக்குப் பொருந்துமா என்பது தனியே விவாதித்தற்கு உரியதே.
இத்தொடர்பில் நாஞ்சில் கதைகளைக் கட்டுரைத்தன்மையுடன் எழுதுவது குறித்துக் கீரனூர் ஜாகிர் ராஜா வினாத்தொடுக்கையில் தம் கோம்பை, சங்கிலிபூதம்,கான் சாகிப் கதைகளை மிகச்சிறந்த கதைகள் எனக் குறிப்பிட்டு, “இந்தக் கதைகள் கட்டுரைத் தன்மையை உள்ளடக்கியவை. அப்படியான தகவல்களை இந்தக்கதைகளில் சொல்லவில்லையானால் வேறு எங்குமே சொல்ல முடியாது. What way my prosique writing is disdurbing you? என்று கேட்கிறேன்.” எனக் கேட்பார் நாஞ்சில் (‘புத்தகம் பேசுது’ – அக்.2011)
என்னைப் பொறுத்தவரையிவ் இவ்விரு எதிரெதிர் தரப்புகளுக்கும் ஒரே பதிலே மேற்படித்தகவல்கள், நிலவரைவியல் கூறுகள் அப்படைப்பின் நெசவிழையில் ஊடும் பாவுமாகத் தறியோடி உயிர்ப்புடன் எவ்வாறெலாம் புதினப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தே அது தகவமையும். எது நவீன இலக்கியம் எப் பேசிநிற்க இங்கே இடமில்லை. இப்படைப்பு வேர்மூல இலக்கியமே!
SPOILER ALERT AHEAD (எச்சரிக்கை வாசகம்)
புனைவின் உச்சக்கட்டத்தை எடுத்த உடனே வாசித்துவிடக் கூடாதெனக் கருதும் வாசகர்கள் மட்டும் இதனைத் தவிர்த்திடுக. அவர்கள் நூலை வாசித்த பின்னரே இதனை வாசித்துக் கொள்க.(சரிதானே மாணிக்கவாசகம்!)
இரு வேறு வாசிப்புகள்:
1. தையலர் (லிங்கம் மாஸ்டர்) கதை
இது வீடுவீடாகக் கிழிசல்துணி கேட்டு வாங்கித் தைத்தே பிழைக்கும் அத்தொழிலிலும் அறம் பேணியதால் பயனாளியான மக்களால் ‘மாஸ்டர்’ என அழைக்கப்பட்ட ஒரு கிழட்டு மெஷின் தையலர்(டெய்லர்) லிங்கத்தின் விளிம்புநிலைக் குடும்ப வேர்மூலக்கதை
2. தையலர் (வேணி, கலை) கதை
2.1. வேணி: வறுமைப் பாலையூடே செம்பாகச் சம்போகத்தின் செவ்வி தலைப்பட்டே சிலிர்சிலிர்த்த லிங்கபைரவி
2.2. கலை : ஒரு சக்தியற்ற நபுஞ்சக லிங்கத்துக்கு நயவஞ்சகரால் வாக்கப்பட நேர்ந்தவளே கலை. தன்னுள் அத்துமீற எத்தனிக்கும் கொழுந்தனைக் காறிஉமிழ்ந்து, உயிர்த்தலத்திலேயே உதைத்து, “பொட்டப்பயலுக்கு வாக்கப்பட்டா ஊர்மேய்வேன்னு பாத்தியாடா” எனக் கொதித்து,” தூத்தெறி இந்தாடா ஒங்கண்ணன் கட்ன தாலி” ன்னு கொழுந்தன் முகத்தில் அறுத்தெறிந்தே வெளியேறிய வீராங்கனை.
குடும்ப நிறுவனத்தில் ஆண்களின் பொறுப்பின்மை: பெண்பிள்ளைகளின் பொறுப்புணர்வு , அது அவர்களுக்கு இயல்பாக வாய்க்கும் விதம் இவற்றூடேயான அல்லாட்டங்கள் யாவும் இழையோடிக்கிடக்கின்றன.
“தன் மகள்கள் ஒருவர் பின் ஒருவராக வயதுக்கு வந்தபின்னும் அடுத்தடுத்து லிங்கத்துக்கு ஈடுகொடுத்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள். இது தான்பெற்ற பிள்ளைகளுக்கும் பிடிக்கவில்லை எனத்தெரிந்தும் அதைக் கண்டும் காணாமல் இருந்தாள். தாம்பத்தியத்தில் அவளுக்கும் லிங்கத்துக்கும் நல்ல பொருத்தமாக அமைந்துவிட்டது. மற்றபடி ஏழை பாழைகளுக்கு இதையும் விட்டால் மகிழ்ச்சிதான் ஏது?”
இத்தகைய வாழ்மானப் பாலையில் ஊடே ஊடே வாய்க்கின்ற பைஞ்சுனைச் சுகிப்பின் பேறுகளால் அவர்கள் எதிர்கொள்ள நேரும் பலாபலன்களை எல்லாம் விலாவாரியாகச் சித்திரிக்கின்றது நாவல். இது எப்படி எல்லாம் எவரெவரால் எல்லாம் என பன்னிப்பன்னியே பேசிச்செல்கின்றது. பெற்ற மக்களிடையிலேயே மகனால் வசையாகவும், மகளால் பெற்றதாயைப் போலும் அரவணைப்பாகவும் எதிர்கொள்ளப்படலாகின்றது. கடன்கொடுத்தோராலும் மருத்துவர்களாலும் அந்தரங்கத் தலையீடான வசையாகவும்; அக்கம் பக்கப் பெண்டிரால் சூதான வலியுறுத்தல் ஆலோசனையாகவும் வழங்கப்படலாகின்றது.
“எட்டுப்பிள்ளைகள் பெற்ற பிறகும் நான்காண்டுகள் எப்படி எங்கே வாழ்ந்தான் என்ற எந்தத்தடயமும் இல்லாமல், கைக்காசும் இல்லாமல் ஊர் திரும்பிய லிங்கம் மனைவியுடன் இரவில் கூடும் போது நாவலாசிரியரின் படைப்புத்திறன் வெளிப்படுகிறது. இயற்கையான வாசனைகளுடன் நிகழும் உவப்பு.” – நாஞ்சில் நாடன்
“நான்கு வருடப்பசி இரண்டு உடல்களும் ஏதோ யுத்தத்திற்குத் தயராவது போல இருந்தன.”
“லிங்கம் அவளின் சுகந்த வாசனையோடு சுரதத்தையும் பருகினார். தன்னைக்கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்ற வேணியின் உடல் வில்லென வளைந்து முறுக்கியது”
“இருவர் உடலிலும் வியர்வை பெருகி அதன் நாற்றம் அந்த இடத்தையே சுகந்தமாக்கியது.”
“லிங்கம் வேணியைப் பொய்யாய்க் கடித்தார் என்றால் வேணி லிங்கத்தை நிஜமாகவே கடித்தாள்.லிங்கம் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கையில் வேணி லிங்கத்தை இன்னும் இறுகப் பற்றி ‘மாமா ….மாமா’ என்று முணங்கினாள்.”
“பாப்பா பாப்பா’ என வேணியின் காதுகளில் கிசுகிசுப்பாக அழைத்தவர் அவள் உடலில் அம்பெனப் பாய்ந்தார். சிறிது நேரத்தில் இரண்டு உடல்களும் களைத்துத் துவண்டன.”
குறத்தியர் மாடத்தைச் சுத்திரிக்க (அல்குல் மயிர் நீக்கத் துப்புரவு) வருவர் எனும் தகவல் இதுவரையில் நான் வாசித்த தமிழ்ப்புனைகதை எதிலும் இடம் பெற்றதில்லை.
“profanity என்ற வட்டத்தைத் தாண்டி வரிசையாகப் பெண்கள் கதை எழுத வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.”
– சரவணன் மாணிக்கவாசகம்.
உண்மைதான் ‘பேசாப் பொருளை எல்லாம் பேசத்துணிந்த’ அவர்கள் யாவரையும் மனமாரப் போற்றுவோம்.
யாரோ ஒருவர் புதுமைப்பித்தனிடம் கேட்டாராம் சம்போகத்தில் யாருக்கு வாய்க்கும் இன்பம் அதிகம். ஆணுக்கா?பெண்ணுக்கா? அதற்கு பித்தன் பதில் என்ன தெரியுமா?
“நீரு கோழிறெக்கையால காதக் கொடஞ்சிருக்கீரா வே? இது கி.ராஜநாராயண நாய்னாவிடம் கேட்ட கதை!
ஆக இப்புனைவின் கதாநாயகன் பெயரல்ல, ‘லிங்கக் குறியீடே’ இதன் பெயரீடாகும்.
சந்தோஷ் நாராயணனின் சிற்றெழில் முகப்போவியம் மிக அருமை.
ஜெயந்தி கார்த்திக்குக்குத் தமிழ்ப் புனைகதை உலகில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
ஐந்தாவது நூல் அடுத்த பாகத்தில்…
முதல் மூன்று பரிந்துரைகளை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க
கதையில் மக்களுக்குத் தேவையான பலே சமாச்சாரங்கள் இருக்கும்போல, ஓகோன்னான். சிபாரிசு பண்றவா ‘ல்லாம் சாதாரணமா? இல்லே இலக்கியம்’னா சும்மாவா…வாழ்க தமிழ் இலக்கிய முன்னேர்கள்.. கதையைப் படிக்காமல் இப்படி நொட்னம் சொல்வது அழகல்ல…தான்…பரிந்துரையில் உள்ளதைப் படித்ததும் இப்படித்தான் தோன்றியது. காமாந்தகர தமிழ் எழுத்தாளராக சிலரால் சொல்லப்பட்ட தஞ்சைப் பிரகாஷ் இந்த மாதிரியொரு கூடலை எழுதாமல் போய்விட்டார்…என்றே தோணுகிறது