சூயஸ்

சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?

உலகின் மிக முக்கியமான செயற்கை கடல்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ என்ற ராட்சத கப்பல் மாட்டிக் கொண்டு, கால்வாயை அடைத்துக் கொண்டு நின்றது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உலகத்தையே பரபரப்பாக்கியது. 

ஆசியாவிலிருந்தும், கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிற்கு செல்வதற்கு இக்கால்வாய் இல்லையென்றால் மொத்த ஆப்ரிக்காவையும் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி சுற்றிச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். இப்படிப்பட்ட முக்கியமான கால்வாயை இக்கப்பல் அடைத்து விட்டதால் 369 கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்பாதை தடைபட்டதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் எண்ணெய் விலை உயர்வதும் நடந்தது.

திடீரென்று வீசிய பலத்த காற்றினால் கடந்த வாரம் செவ்வாய்கிழமை கப்பல் கட்டுப்பாடிழந்து திரும்பி பக்கவாட்டில் கால்வாயில் சிக்கிக் கொண்டிருந்தது. ஒரு வார காலமாக கப்பலை திருப்பும் பணி கடுமையாக இரவு பகலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது திருப்பப்பட்டு பாதை திறக்கும் நிலை வந்திருக்கிறது.

கப்பலின் பின்பாதியில் பக்கவாட்டில் இழுவைப் படகுகளை வைத்து தள்ள முயற்சிப்பதைப் பார்க்கலாம்.

கப்பல் சிக்கிய விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ள படிக்கவும்: சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!

எவர் கிவன் கப்பலை எப்படி விடுவித்தார்கள்?

  • எகிப்தின் சூயஸ் கால்வாய் நிறுவனமும், ஸ்மித் சால்வேஜ் என்கிற டச்சு நிறுவனமும் சேர்ந்து இழுவை படகுகளைப் (Tug Boats) பயன்படுத்தி 2,0,000 டன் எடையுள்ள இக்கப்பலை திருப்பும் பணியில் ஈடுபட்டன. 
  • கப்பலின் முகப்பகுதி பக்கவாட்டில் சிக்கியிருந்ததால், அப்பகுதியில் உள்ள மணலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்துவதற்காக இயந்திரங்களை வைத்து எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. 
  • ஒரு மணிநேரத்திற்கு 2000 Cubic Metre அளவுக்கு மணலை வெளியேற்றக் கூடிய சக்திவாய்ந்த இயந்திரங்கள் (Dredgers) பயன்படுத்தப்பட்டன. ஐந்து நாட்களுக்கும் மேலாக மில்லியன் கணக்கிலான டன்கள் எடை கொண்ட மண் வெளியேற்றப்பட்டு கப்பலை அசைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ட்ரெட்ஜர்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள மணலையும், படிமங்களையும் நீக்குவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். 

    இதில் பயன்படுத்தப்பட்ட Mashhour எனும் ட்ரெட்ஜர் உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த ட்ரெட்ஜர் ஆகும். சூயஸ் கால்வாயை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணிகளில் கடந்த காலங்களில் இந்த ட்ரெட்ஜர் பயன்படுத்தப்பட்டது.
ட்ரெட்ஜர்கள் மணலை வெளியே எடுக்கும் முறை
  • கப்பலை மீட்கும் பணியானது இரவு நேரத்தில் தான் வேகமடைந்தது. இரவு நேரத்தில் கடலின் அலைகள் வேகமாக இருந்ததால், அது கால்வாயில் தண்ணீர் அளவையும், உயரத்தையும் அதிகப்படுத்தியதால் கப்பலை மிதக்கச் செய்யும் பணி ஓரளவுக்கு விரைந்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 

    குறிப்பாக பெளர்ணமி அலைகள் இப்பணியை விரைவுபடுத்த உதவியதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஞாயிற்றுக் கிழமை கப்பலின் எடையைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். எவர்கிவன் கப்பல் 20,000க்கும் அதிகமான கண்டெய்னர்களை சுமந்து கொண்டிருந்தது. 
கிரேன்கள் மூலம் கண்டெய்னர்களை இறக்கும் முயற்சி
  • கப்பலைச் சுற்றி கரையிலிருந்த மண் பகுதி அகற்றப்பட்டவுடன், அடியிலிருந்து கழிவுகள் மற்றும் குப்பைகளை, அதிக அழுத்தத்தில் தண்ணிரை வேகமாக செலுத்தி அகற்றுவதென முடிவெடுத்தனர். 
  • கப்பலை இழுப்பதற்கு Tug Boats என்று சொல்லப்படும் சக்தி வாய்ந்த இழுவை படகுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த இழுவை படகுகள் துறைமுகங்களில் கப்பல்களை பார்க் செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை கப்பலைத் தள்ளவும், திருப்பவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் tow lines என்று சொல்லப்படும் கனமான சங்கிலிகள் அல்லது கயிறுகள் மூலம் கப்பல்களை இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

    இப்படிப்பட்ட 14 இழுவை படகுகள் எவர் கிவன் கப்பலை திருப்புவதற்கு பயன்படுத்தப்பட்டன.
கப்பலை தள்ளுவதற்கும், இழுப்பதற்கும், திருப்புவதற்கும் இழுவைப் படகுகளை (Tug Boats) பயன்படுத்தும் முறை
  • சுற்றியுள்ள மணல் பரப்பை நீக்கிவிட்டு கப்பலை இழுவைப் படகுகளை வைத்து திருப்பும் போது, ஒருவித மகிழ்ச்சி அனைவரிடமும் இருந்தாலும், ஒரு 10 நிமிட நேரம் அனைவரும் உட்சகட்ட பதட்டத்தில் இருந்தனர். ஏனென்றால் கப்பலை இழுவை படகுகள் இழுத்து திருப்பும்போது, இயல்பாக வேகமாக நகர ஆரம்பிக்கும். அப்போது கப்பல் மறுபுறத்தில் சிக்கிக் கொள்வதற்கு முன்னர் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நிலைமை முன்பிருந்ததை விட மோசமாகி விடும். ஆனால் எவ்வித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக கப்பல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது.

ஒருவழியாக கப்பல் மீட்கப்பட்டு பாதை சரிசெய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே வரிசையில் இருக்கும் கப்பல்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்கு இரண்டரை நாட்கள் வரை ஆகலாம் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது. 

படத்தை உற்றுநோக்கினால் தண்ணீரில் புள்ளிகளைப் போல் தெரிபவைதான் கடலில் காத்திருக்கும் கப்பல்கள்

1967-க்குப் பிறகு இப்போதுதான்

1967-ம் ஆண்டு எகிப்திற்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற போரின் காரணமாக 8 வருட காலத்திற்கு சூயஸ் கால்வாய் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இப்போதுதான் அதிக நேரத்திற்கு மூடி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த கப்பல் சிக்கியதற்கான காரணம், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதெல்லாம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *