பொதியவெற்பன்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

1.’காடோடி’ நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

(வெளியீடு : ‘காடோடி’ ; விலை ரூ.80; கைப்பேசி : 80727 30977)

நூலின் முகப்பு அட்டை

 அ.வேதாந்தத்தின் இந்தியச் சாதியமைப்பின் ரகசியம்

“பரிமேழலகர் உரையில் கொள்ளத் தக்கன பல உள. எனில் அதன் நிறம் தமிழன்று.” – கா. சு. பிள்ளை.

தமிழின் நிறந்தான் யாது? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே அது. பூதமைந்தினும் பேதம் பாராட்டி நிற்கும் வேதவிழுக்குலத்தின் நூலதிகாரத்தைக் கட்டவிழ்க்கின்றது இந்நூல்.

பொருளுலகின் செயல்பாடு கருத்துலகால் களவாடப்பட்டதென ஹெகலின் தத்துவம் பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டதைச் சுட்டி வேதாந்தத்தின் இந்தியச் சாதியமைப்பின் ரகசியத்தை எடுத்துரைப்பார் ந.முத்துமோகன் :

“இந்தியத் தத்துவத்தில் பொருளின் செயல்பாடு களவாடப்படவில்லை. செயல்பாடு எனும் பண்பு(குணம்) பொருளுலத்திற்குச் சொந்தமானது என்றுகூறி பிரம்மம் அதனைப் பொருளுலகிற்கே விட்டுவிட்டது; புனித அந்தஸ்து என்ற ஒன்றை மட்டும் பிரம்மம் தன்னோடு தக்கவைத்துக் கொண்டது. இதுதான் வேதாந்தத்தின் இந்தியச் சாதிஅமைபப்பின் ரகசியம்” “புனிதம்/ தீட்டு என்ற கலாச்சார எதிர்வுகள் கட்டமைக்கப்படுகின்றன. உலகின் மீது புனித அதிகாரம் அறிவிக்கப்படுகிறது” – ந.முத்துமோகன்(‘மார்க்சியக் கட்டுரைகள்)

இத்தகு புனிதம் × தீட்டு எனும் இருமை எதிர்வு புவி அமைப்பு, பூத அமைப்பு, கருப்பு × வெள்ளை, காலம் வெளி; திசைகளில், உணவில், பறவைகளில், தாவரங்களில், உயிரினங்களில் ஊடாடிக்கிடப்பதனை அகராதிப் பொருள் கடந்து அவற்றிற்கு – உரிய சூழமைவில், சூழலியற் பொருண்மையோடு எடுத்துரைக்கின்றார் நக்கீரன்.

பிராமணர் எனும் பதப்பிரயோகத்தை அறவே தவிர்த்து பார்ப்பனர் எனவே பாவிக்கின்றார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னாது இருபிறப்பு மனநிலையானது பேதம் பாராட்டுவதனால். பார்ப்பு அனர் எனப் பதம் பிரித்தே பறவைக்குஞ்சன்ன வெளிர்வண்ணத்தவர் எனவாங்கு சூழலியற் பொருண்மை விளக்கம் அளிக்கின்றார்.

பனை இயல் தாவரம், தென்னை அயல் இயல் தாவரம்,பார்த்தீனியமோ ‘முற்றுகைத்தாவரம்’ என விதந்தோதுகின்றார். பார்த்தீனியத்தினும் அதிக ஆபத்தானது பார்ப்பனியம் என விளக்குகின்றார்.

ஆ. தத்தம் ‘தகைமைக்கேற்ற தனியிடங்கள் மேவி’….

கோயில் எனும் புனிதவெளிக்கு, மூலவெளியாகத் திகழ்ந்த அக்கிரகாரமே பொதுவெளியில் தீண்டாமையைத் தீர்மானிக்கும் மேலாதிக்க வெளியாகவும் விளங்கியதைச் சித்திரிக்கின்றார்.

‘ஓங்கிய நாற்குலத்து ஒவ்வாப் புணர்வில் 
தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆனசாதி
தாங்குழுமிப் பிறந்தகுல பேதம் எல்லாம் 
தந்தகைமைக் கேற்றதனி இடங்கள் மேவி’ 

எனச் சேக்கிழார் பாடிநிற்பதை முன்வைத்து ஆகமங்களும் நியமங்களும் கூறும் வாழிடத்தீவுகளைப் பெரியபுராணம் இலக்கியப் பூர்வமாக மொழிதல் செய்து கீதையின் மனுவின் குரலை எதிரொலித்ததனை கூறுபடுத்தும் நுண்ணரசியலாக முன்வைப்பார் தி.சு.நடராசன் (‘தமிழின் அடையாளம்’)

குமரி மாவட்ட பறக்கைச் சிற்றூரில் கிடைத்த கல்வெட்டில், “இதுகங் அகத்து கீள்சா திக்குவரப் படாது (இதைத் தாண்டிக் கீழ் சாதியினர் வரக்கூடாது) என்று பொறிக்கப்பட்டுள்ளது.” என மேட்டிமைச்சாதியரின் கீழ்ச் சாதியர் நடமாட்ட எல்லை வரையறையைக் கல்வெட்டுச் சான்றாதாரத்தால் காட்டுவார் ஆ.சிவசுப்பிரமணியன் (‘பறை – 2015’)

கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதி பார்ப்பனர்க்கும், அதற்கடுத்த ரதவீதி வேளாளர்க்கும், அதற்கடுத்த பகுதிகள் சந்துகள் கோயிலோடு தொடர்புடைய சேவைச்சாதிகளுக்கும் வதிவிடமாக; ஊருக்கு வெளியே சேரியாகத் தாழ்த்தப்பட்டோருக்காக அமைந்திருந்ததென தமிழகத்தில் பெருங்கோவிலை மையமாகக் கொண்ட நகரவெளியிலும் சாதிய ஒதுக்கீடு இருந்தவாற்றைத் தொ.பரமசிவனை மேற்கோள் காட்டி எடுத்துரைக்கின்றார்.

இ.காலம் – வெளி – தீண்டாமை

விக்டர் டர்னரின் ‘இயல்பு’, ‘மீவியல்பு’ எனும் எதிர்- அமைப்பியக் கோட்பாட்டுக்கூடாகவும்; சுந்தர் சருக்கையின் ‘காலம் மற்றும் வெளிக்கு அப்பால் தீண்டப்படாதோர் தள்ளப்பட்டனர்’ எனும் கருத்தாக்கத்துக்கு ஊடாகவும் காலம் – வெளி – தீண்டாமை பற்றி எடுத்துரைக்கின்றார்.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சென்னை பொதுச்சாலைகளில் நடமாடத் தாழ்த்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்து தாழ்த்தப்பட்டோர்  நடமாடட உரிமை பெற்றதைத் தம் இணையரின் கல்லறைக் கல்வெட்டில் பொறித்து வைத்ததைப் பதிவு செய்கின்றார்.

கேரளாவின் வைக்கத்தில் ‘ஏ, பி’ எனச் சாலைகள் வகைப்படுத்தப்பட்டு; கோயிலை ஒட்டிய பி வகைச்சாலை வழியே இந்து ஈழவரைமட்டும் நடமாடத் தடை விதித்ததை எதிர்த்து அவர்கள் நடமாட்ட உரிமையை நிலைநாட்ட நடந்ததே வைக்கம் போராட்டம் எனப் பதிகின்றார்.

வெளிசார்ந்த அனுபவங்களுக்கு ஊடாகவே பூலே, அம்பேத்கர், பெரியார் மூவரும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை உணர்ந்தனர் எனும் கோபால் குரு அதனைத் தொடர்ந்தே அவர்கள் அரசியலைவிட சமூகச் சிந்தனைகளுக்கு முதலிடம் கொடுக்கலாயினர் எனத் தொடர்கின்றார். அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் எது பொதுவெளியாக இருந்ததோ அது காந்தியார்க்கு மட்டும் புனித வெளியாக இருந்ததையும் சுட்டிக்காட்டத் தவறிடவில்லை. காந்தியார் இந்துமத எல்லைக்குள் நின்றே அணுகுவார். அதனால் வைக்கம் போராட்டதில் மகாத்மாவும் துணை மகாத்மாவும் ஆடிநின்ற நாடகங்கள் குறித்து ஏலவே நான் ஜெயமோகனின் ‘விகடம் தடம்’ செவ்விக்கான என் ‘மணல்வீட்டு’ எதிர்வினையில் முன்வைத்துள்ளேன். (மேலதிப்புரிதல்களுக்கு ‘இந்துத்துவப் பாசிசத்தின் இலக்கியமுகம்: ஜெயமோகனின் கலாச்சாரப் பாசிசம்’ தொகைநூலிற் காண்க)’

சூழலும் சாதியும்’ நூலுக்கான கடவுப்பொருண்மை குறித்தான காலம் -வெளி – தீண்டாமை குறித்தே மேலதிகமாக முன்வைக்க நேர்ந்தது.

“அரசு அதிகாரமும்; பிராமணியம், வைதிகம், மனு -கீதை என்ற நிலைப்பாடுகளும் இணைந்து – மண், உழைப்பு, உற்பத்தி, வியர்வை, உடம்பு இவற்றை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தின. உட்படுத்தி இந்த மனிதர்களிடையே தொலைவு (distance), வித்தியாசம்)( differenece), தீண்டல்(pollution) முதலியவற்றை வாழ்க்கை தளத்திலும், சிந்தனைத் தளத்திலும் உருவாக்கி அதனை ஒரு ‘புனிதமான’ சித்தாந்தமாக ஆக்கின.

அதன் போது – அதன் விளைவாக இந்திய/ தமிழக மனிதன் தனது சுய அடையாளம் தெரியாமல் சாதியடையாளத்துக்குள் விழ வேண்டியவனாகத் துரத்தப்படுகிறான்.” – தி.சு.நடராசன் (‘மேலது’)

இன்னும் நீர்த்தீட்டு, காற்றுத்தீட்டு, உணாத்தீட்டு குறித்தெல்லாம் இத்தகு புரிதல்களுடன் கண்டுணர்க.

“இருபிறப்பு மனநிலை குளிர்மண்டலத்து ஆரியர்களின் இறக்குமதி நோய். அந்த நோய்க்கு வெப்பமண்டல மூளைகள் அடிமையானது கெடுவாய்ப்பே.” 

இந்தச் சூழலியல் பார்வையில் பெரியார் பேசியுள்ள ஒரு கருத்தை இங்கு பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் – ‘பாம்புகளில் கூட வெப்பமண்டல பாம்புக்குத்தான் நஞ்சு அதிகம். பூக்களில் கூட வெப்பமண்டலத்துப் பூவுக்குத்தான் மணம் அதிகம். இயற்கையிலேயே குளிர்மண்டலத்து மனிதர்களைவிட, வெப்பமண்டலத்து மனிதர்களான நாம் அறிவாளிகள். அவர்கள் அறிவைப் பயன்படுத்தினார்கள். நாமும் நம் அறிவைப் பயன்படுத்தினால் அவர்களைவிட முன்னேறலாம்'” – நக்கீரன்

இரண்டாவது நூல் அடுத்த பாகத்தில்…

வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *