ஏ.ஜி.கே புத்தகம்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

2. மு.சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

(‘பன்மை’ வெளியீடு, விலை : ₹ 290; கைப்பேசி: 98424 02010 – 98428 02010)

நூலின் முகப்பு அட்டை

கீழைத்தஞ்சை மண்ணின் வீரஞ்செறிந்த விவசாயத் தொழிலாளர் வீறெழுச்சியின், வெண்மணிப்போராட்டங்களின் களப்பணியாளரும் தளகர்த்தருமான, ஒருதனி வியத்தகு நிகழ்வின் பெயர்தான் தோழர் ஏஜிகே எனும் அந்தணப்பேட்டைகோபாலசாமி கஸ்தூரிரெங்கன். தன்னேரிலாச் சமராளியாய்த் தம் வாணாள்  செகுத்த மகத்தான மக்கள் தலைவர் குறித்த அரிய ஆவணத் தொகுப்பு நூலே ‘ஏ.ஜி.கே எனும் போராளி’.

மதிப்பீடுகள், அஞ்சலிக்குறிப்புகள், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’- தன்வரலாற்று நூல் மீதான விமர்சனங்கள், தோழமை பகிர்வுகள், உறவுப்பகிர்வுகள், பின்னிணைப்புகள் என வகைப்படுத்தப்பட்ட. தொகுப்பு நூலாகும்.

1.களமாடிய தளகேந்திரங்கள்

திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழர் தன்மானப் பேரவை எனவாங்கு திராவிட, மார்க்சிய, தமிழ்த்தேசிய இயக்கங்கள் அவர் சமராடிய தளகேந்திரங்களாகும்.

சிறைப்பறவையான அவர் வெளியே மட்டுமல்லாமல் சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம், சிறைக்காவலர் நலன் வளர்ச்சிச் சங்கம் என சிறைக்கு உள்ளேயும் அமைப்புகளைக் கட்டி எழுப்பியவர். சிறைக்கைதிகள் மத்தியிலேயே ‘உரிமைக்குரல்’, ‘செவ்வொளி’ என இதழ்களைக் கொண்டு செலுத்தியவர்.

 நாகை வட்டார சிபிஎம் கட்சி இளைஞர்கள் சங்கத்தைக் கொண்டே ‘Nagai Red Guard’ எனும் பெயரில் ஏஜிகே ‘செந்தொண்டர் படை’யும் இயக்கினார்.

ஏ.ஜி.கே அவர்கள்

2.போராடி நின்ற இயக்கத் தலைமைகளாலேயே புறக்கணிக்கப்பட்டவர்

“மாவோவின் சீனராணுவமாதிரியில் ஏற்படுத்தப்பட்டதும்; கட்சிக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் அவர்களே ஒழுங்குபடுத்தியதையும் பாதுகாப்புக்கு வரும் போலீஸார் மட்டுமன்றி ; ஏஜிகேயின் சமகால சிபிஎம் தலைவர்கள் சிலரே வெறுப்பாகப் பார்த்ததும் நடந்தது. பெரிய தலைவர்கள் சிலரே இதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றதும்,கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த பின்னும் ஏஜிகே பெரியாரை விடவில்லை என்றதும்;  அதுபோல கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி திகவில் சில காலம் இயங்கிய போது கி.வீரமணியால் ஏஜிகே கம்யூனிஸ்ட்டாகப் பார்க்கப்பட்டதும்  ஏஜிகேயின் இந்திய சமூகம் குறித்த தெளிவான பார்வையைப் பலப்படுத்தும்.” – தய்.கந்தசாமி 

ஆக இவ்வாறு எந்தெந்த கோட்பாடுகளின் களப்பணியாளர் ஆகவும், தளகர்த்தராகவும் அவர்தம் வாணாள் முழுதும் இயங்கிவந்தாரோ, அந்தந்த இயக்கங்களின் தலைவர்கள் நோக்கில் அவரியக்கிய அமைப்புகள் எவ்வெவ்வாறு காட்சியளித்தன எனக் காண்போம்: பெரியார் பார்வையில், ‘திராவிட விவசாயத்தொழிலாளர் சங்கப்பணியாய் நாகைப்பகுதியில் நடப்பதற்கும் திராவிடர் கழகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை’ எனப் பொதுக்கூட்டத்திலேயே அறிவிக்கும் அளவிற்கு ஆயிற்று. பி.ராமமூர்த்தி பார்வையிலோ’ நாகைத்தாலுக்காக் கமிட்டி செக்ட்டேரியன் பாவையிலான ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட் கமிட்டியாகவே எதிர்கொள்ளப்பட்டது.

இத்தொடர்பில் இங்கேநாம் கவனமாக மனங்கொண்டாக வேண்டிய ஒரு முகாமையான அம்சம் யாதெனில் பெரியாரியத்தின் ஆணிவேரான சுயமரியாதைப் போராட்டத்தையும்; மார்க்சிய இயக்கத்தின் செல்நெறியான வர்க்கப் போராட்டத்தையும் ஒருசேரக் கட்டியெழுப்பித் தாமியங்கிய பகுதியைச் செந்தளமாக்கிய மகத்தான மக்கள்திரள் போராட்டங்களின் ஒரு தனிப்பிதாமகன் நம் ஏஜிகே எனும் மெய்ம்மையைத் தான். இதனால்தான் வர்க்கப் போராட்ட முகாமையைக் கணக்கில் கொள்ளாப் பெரியாராலும்; வர்ணப் போராட்டத்தை மறுதலித்துத் ‘திராவிடமாயை’ தீட்டிய பி.ஆராலும் ஏஜிகே புறக்கணிக்கப்பட்டார்.

“கூலிப்போராட்டத்தோடு இணைந்த சுயமரியாதை மீட்புப் போராட்டமே ஆண்டைகளை அதிகம் எரிச்சல் ஊட்டியது. அதேபோல ஏஜிகேவின் சமரசமற்ற போராட்டமுறை சக தலைவர்கள் சிலருக்குப் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. அதுவே அந்தணப்பேட்டை முக்கொலை வழக்கின் போது ஏஜிகே அதிதீவிர செயல்களில் ஈடுபட்டதாகவும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடும் அவரது குணமே அதை வெளிப்படுத்துகிறது எனவும் விமார்சித்து, அவரை வெளியேற்றவும் வாய்ப்பாகிவிட்டது.” – தய்.கந்தசாமி

1962 வாக்கிலவர் திகவை விட்டு வெளியேற்றப்பட்டார். “உளவியல் தாக்குதல்களையே போராட்ட உத்தியாகக் கொண்டிருந்த ஏஜிகேவை வெளியேற்ற அவர் போராட்ட உத்திகளே பெரியாருக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் சிபிஎம் கட்சியையும், போக்கையும் விமர்சிக்கும் ஏஜிகே பெரியார்  குறித்து எந்தவித முணுமுணுப்பும் செய்யாதது வியப்பே.” – தய்.கந்தசாமி.

அது சரிதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கதில் வியப்பேதுமிலை. ஏனெனில் ஏஜிகே ஒரு மகத்தான பின்னைப் பெரியாரியரே ( Post –

Periyarist). ஏஜிகேயும் சரி, வே.ஆனைமுத்தும் சரி இருவருமே பின்னைப்பெரியாரியரே. செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம் என்பார் ஏஜிகே. இத்தொடர்பில் இதற்குமேல் பேச இங்கே இடமில்லை.

3. மக்கள்திரள் போராட்டங்களின் வியூகவித்தகர்.

‘பல்வேறு புதிய போராட்ட வடிவங்களைச் செழுமைப்படுத்தியவர்’ எனப் பாவெல் சூரியனும்; ” போராட்டக் கலையின் ஈடில்லா வித்தகர்’ எனத் தியாகுவும் குறிப்பிடுவது ஆகச்சரியான கணிப்புகளே.

“மற்றவர்கள் ‘கட்சி என்ன சொல்லும்’ என்று எதிர்பார்த்த வேளையில், கட்சி ‘இந்தக் கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னவர் அவர். மற்ற தலைவர்களுக்கு இது புதியது. புதியதில் பழகப்பயப்பட்டார்கள் அவர்கள்.அதனால்தான் எல்லோர்க்கும் மேலாகத் தொழிலாளர்களின்  விடிவெள்ளியாகத் திகழ்ந்தார் ஏஜிகே. ” – பாவெல் சூரியன்

அத்துமீறலும், அடங்கமறுத்தலும், போராட்டங்களுமே ஏஜிகேயின் வாழ்க்கை நியதி. அறவே தன்முனைப்பற்ற மக்கள் தலைவரே அவர்.

4.எளிவந்த செவ்வியும், அடங்க மறுக்கும் தறுகண்மையும்

“பழைய இடதுசாரித் தலைவர்களுக்கு ஒரு குணாம்சம் உண்டு.தங்களை ஒருபோதும் முன்னிறுத்திக் கொள்வதில்லை. ஏஜிகே  தன்னைப் பற்றி இந்த நூலில் (‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’) அப்படித்தான் பேசுகிறார். தன்னைக் குறித்து எழுதும் போது ‘ நாம் அங்கு போயிருந்தோம். நாம் அங்கு பேசினோம்’ என்றே கூறுகிறார்.” – சாம்ராஜ்

அவரது அடங்கமறுக்கும் தறுகண்மைக்கும், சமரசமற்ற நேர்மைக்கும் இரண்டு சான்றுகள்;

அ). அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவப்பருவத்திலேயே அன்றைய துணைவேந்தரான சர்.சி.பி. ராமசாமி அய்யரை விழா மண்டபத்தில் வேந்தரும் சனாதிபதியுமான ராஜேந்திர பிரசாத் முன்னிலையிலேயே செருப்பாலடித்து, பல்கலையில் இருந்தே வெளியேற்றப்பட்டவர்.

ஆ). திமுக தொழிற்சங்கத்தலைவரான தம் அண்ணன் ஏ.ஜி.வெங்கட கிருஷ்ணனைக் காண வந்த முதல்வர் கலைஞரைத் தம் வீட்டை விட்டே துரத்தி அவருடனான வாணாட்பகையைச் சம்பாதித்தவர்.

5. இயக்க ரீதியாகக் கற்றுக்கொள்ள எவ்வளவோ…..

இயக்கச்சிக்கல் மட்டுமேயல்ல, இயக்கங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் ; சிறையில் கைதிகள் பிரச்சினை மட்டுமல்ல காவலர் பிரச்சினைகள்; குடும்ப விவகாரங்கள் எல்லாவற்றையும் கையாண்டு அவர் தீர்த்து வைத்தார்.

மார்க்சியர்களும்,  பெரியாரியர்களும், அம்பேத்கரியர்களும், இனவாதங் கடந்த காத்திரமான தமிழ்த்தேசியர்களும் இயக்கரீதியாகக் கற்றுக்கொள்ள எத்தனையோ ஊடாடிக்கிடக்கின்றன ஏஜிகே என்னும் மகத்தான  மக்கள் தலைவரிடம்.மட்டுமல்லாமல் காவிப்பாசிசத்தை  நிர்மூலப்படுத்துமுகமாகக் கருமையும் செம்மையும் நீலமும் தம்முள் கைகோத்தே இயங்கித் தீரவேண்டிய இற்றைச்சூழலில் பெறலருங் கலங்கரைவிளக்கமே ஏஜிகேயின் நெடும்பயணம்.

6.இத்தகு வினாக்களுக்கான விடைகள்…இந்நூலில்….

1.போராட்டம் என்றால் என்ன? எப்படி அவை முன்னெடுக்கப்பட வேண்டும்?

2.ஒரு மக்கள் தலைவர்க்கான அருகதை, இலக்கணங்கள் யாவை?

3.இயக்கத்துக்கான உறுப்பினரை எவ்வாறு தேர்வது? 

4.இயக்கத்தை வெளியிலும் சிறையிலும் எவ்வாறெலாம் கட்டமைப்பது? தலைமறைவு இயக்கக் கூரியரை எவ்வாறு தேர்வது?

5..யார் சரியான பெரியாரியர்? எப்படி அவர் இயங்கவேண்டும்?

6.எல்லைச்சாமிகளின் ஜென்ம ரகசியம் யாது?

7.பண்ணையார்கள், அவர்களைச் சார்ந்தோர்- குணாம்சங்கள், செயல்பாடுகள் எத்தகையன?

8.வெண்மணி  நினைவேந்தல் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும்?

9.மகளிரை இயக்க ஆற்றுப்படுத்தலின் இன்றியமையாமை

10. மக்களின் தனிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகாணும் நெருக்கம்.

11.  காவல்துறையினர் மத்தியிலும் நம்பகத்தன்மை பெற்று அவர்களைக் கையாண்டது எவ்வாறு?

7. கால் நூற்றாண்டு சிறைப்பறவை

சற்றொப்பக் கால்நூற்றாண்டுக்காலம் சிறையடைப்பிலிருந்தவர் தம் வாணாள் தண்டனையைக் கழித்தே மீண்டார். மணிவிழாவை எட்டும் அகவையிலேயே பருவமாறிய பயிர்ச்செலவாய் மணவிழாக்கண்டார். நாகை நீதிமன்றங்களில் ஏஜிகே மீது வழக்குகள் வாராநாளே இராது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வழக்குகள் பதியப்படும். அவர்மீதான வழக்குககளைக் கையாள்வதற்கு என்றே தனிப்பணியாளர் அமர்த்தப் பெற்றனர் என்பார் இளங்கோவன். (‘ஏ.ஜி.கஸ்தூரி ரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்)

“குறிப்புகள்,கட்டுரை, புத்தகம் எழுதுவது தவிர சிறைப்பட்டோருக்கான மேல்முறையீடுகள், கருணைமனுக்கள், விண்ணப்பங்கள் எல்லாமே அவர்தான் எழுதிக்கொடுப்பார்.”

“அவர் எழுதும் மேல்முறையீடுகளை வாங்கிப் படிப்பேன். அவரது ஆங்கில நடை, ஏரணத்தோடு கூடிய வாதமுறை, சட்ட நுட்பங்களின் எடுத்தாள்கை எல்லாமே எனக்கு வியப்பாகத்தான் இருந்தன. பிற்காலத்தில் இந்தப் பணிகள் என் கைகக்கு வந்தபோது அவரிடமிருந்து கற்றவையும் பெற்றவையும் எனக்குத் துணைநின்றன.”.

“கருணைவிண்ணப்பம் என்பது உயிர்ப்பிச்சை கேட்பதோ மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதோ அல்ல ; அதுவும் உரிமையின் பாற்பட்ட ஓருவகை மேல்முறையீடு தான் என்பதே கருணைச்சட்ட நீதியியல் சாரம். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கருணைச்சட்ட நீதியியலுக்குத் தூக்குக்கொட்டடியில் இருந்த ஏஜிகேதான் முன்னோடி. எந்த நீதிபதியும் அல்லர் – எனக்குத் தெரிந்தவரை.”

“பிற்காலத்தில் பல தூக்குத்தண்டணை – கைதிகளுக்கு மேல்முறையீடும் கருணைமனுவும் எழுதும் வேலை என்னிடம் வந்தபோது ஏஜிகே வழியில் அதைச் செய்தேன்.”

“கருணைச்சட்ட நீதியியலுக்குத் தோழர் ஏஜிகேயும் அவரின் மாணவனாக அடியேனும் சிறையில் இருந்து செய்த பங்களிப்பு மனிதவுரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று. – தியாகு

8.மூவர் பணி

“அடித்தள/ விளிம்புநிலை ஆய்வுகள் பரவலான பிறகும் கூட மக்கள் சார்ந்த வரலாறுகள் இன்னும் பதிவாகாதது பெருங்குறை”

“மணலி கந்தசாமி, பி.எஸ்.சீனிவாசராவ் போன்ற அடித்தட்டு மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் இங்கு எந்தஅளவிற்கு அறிமுகம் ஆகியுள்ளனர்? கட்சி அல்லது இயக்கம் சார்ந்த வட்டத்தை விட்டு வெளியே எவ்வளவு தூரம் இவர்களுக்கான இடமுள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.”

“வெறும் மலர் என்றளவில் இல்லாமல் விமர்சனத் தொகுப்பாக ஏஜிகே பற்றிய முழுச்சித்திரத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தேன்.”

“திராவிட, மார்க்சிய, தலித்திய, தமிழ்த்தேச இயக்கங்கள் சில தவறான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. இவற்றில் பல்வேறு பிளவுகளும் உண்டு. அவற்றை மீளாய்வு செய்து படிப்பினைகளையும் ஏற்று, வருங்காலத்தைச் செழுமைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகளே இன்றைய தேவை. ஏஜிகேயின் வாழ்வும் பணிகளும் நமக்குச்சில படிப்பினைகளைத் தரக்கூடும். அவற்றிலிருந்து நம்  எதிர்காலப் பணிகள், இயக்கக்கட்டுமானம், போராட்ட உத்திகள், வழிமுறைகள் போன்றவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்துவதும் அடுத்தகட்ட நகர்வைச் சாத்தியப்படுத்துவதும் முதன்மையானதாகும்.”- மு.சிவகுருநாதன். 

இவை யாவும் தொகுப்பாசியரின் முன்னுரைக் கூற்றுகளே. இவைதாம் இந்நூலின் பண்பும் பயனுமாகும். இந்நூலில் இவ்வாறே எதிரும் புதிருமான கட்டுரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈடேற்ற அறைகூவலான இப்பணியை இவர் அரும்பாடுபட்டு நிறைசெலுத்தி உள்ளார். உள்ளூர்த் தலைவராகக் குறுக்கப்பட்ட ,உலகளாவிய செந்தளக்கட்டுமான இயக்க மகத்தான மக்கள் தலைவரின் முழுச்சித்திரம் வியத்தகு பிரம்மாண்டமானதே:

“இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே அமைப்பின் சட்டதிட்டங்கள், செயல்பாடுகளை அழகாகப் புகுத்தும் தனித்திறமை, அறிவார்ந்த போர்க்குணம்,திட்டமிடும் ஆற்றல், செயல்படுத்தும் லாகவம் இத்தனையும் செய்யக்கூடிய ஓரமைப்பை உருவாக்கிய அமைப்பாளனின் பெயர்தான் ஏஜிகே. செவ்வியக்கம் என்றால் ஏஜிகே என்பேன்.” 

“ஏஜிகேவின் முழுப்பரிமாணமும் ஒரு வியக்கத்தக்க பிரம்மாண்டம். ” – மு.இளங்கோவன்.

இத்தகு வியத்தகு நிகழ்வின் முதற் கோட்டோவியத்தைப் பசு.கவுதமனும்,மு.இளங்கோவனும் ஏஜிகேயின் தன்வரலாற்றுத் தற்படங்கள் மூலம் தொடக்குவித்தனர். அதனைத் தொட்டடுத்துத் தொடர்ந்தே ஏஜிகே பல்வேறு இயக்கத்தோழர்கள் மத்தியிலும் எவ்வாறெல்லாம் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பதற்கான சான்றாதாரமே இந்த வானவில் கூட்டணித் தொகைநூல். இவற்றின் தொடர்ச்சியாய் பசு.கவுதமன் உருவாக்கிக் கொண்டிருக்கும்’ பச்சைத் தீ வெண்மணிப்பதிவுகள்’ மேன்மேலும் புதுவெளிச்சம் பாய்ச்சும். இம்மூவருக்கும் தத்தம்  பங்களிப்பால் அவர்தம் ஆவணப்படுத்தும் வரலாற்றுக் கடமையை ஈடேற்றியமைக்கான இடத்தை அடித்தள விளிம்பு வரலாறு எழுதிச்செல்லும்.

“நானும் என்னை ஒத்தவர்களும் 3 அம்சங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றும் அதில் மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை என்றும் முடிவு கொண்டிருந்தோம். மக்களுக்குப்பின் செல்வதில்லை. நமக்குப் பின்னால் மக்களை வரச்செய்வது; நமது தனித்துவத்தை அவர்கள் புரிந்துகொள்வதுடன், அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றின் தீர்வுக்கான, நமது அர்ப்பணிப்பை, பங்களிப்பைக் கண்கூடாக உணரச்செய்து அவர்களது நம்பிக்கையைப் பெறுவது ஆகிய மூன்றும் தான் அவைகள்.” – ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்

இயக்கத்தலைமைகள் ஏஜிகேயை இருட்டடிக்கலாம். அதற்குப் பக்கவாத்தியங்களாக இயக்கம்விட்ட பிழைகளை மறைத்து மெய்த்தொண்டர் வேடக் கபடதாரிகள் வரலாற்றைத் திரித்துரைக்கலாம்.

“அமைப்பில்  உண்மையானவர்களுக்கு ஆபத்தே திரிபுவாதிகளாலும் கபடவேடதாரிகளாலும்தான் ஏற்படும். அதிகப்படியான ‘கட்சியின் உண்மைத் தொண்டன்’ வேடத்தைக் கபடவேடதாரிகள் தான் திறம்படச் செய்வார்கள்”

“போராட்டம்னா என்ன? சூழலைப் புரிந்துகொண்டு, அதில் நம்மைப் பொருத்திக்கொண்டு மாற்ற உழைப்பதுதான் போராட்டம். சிறையிலென்றாலும், சமூகத்திலானாலும் இதுததான் யதார்த்தம், உண்மை. “- ஏஜிகே

இயக்கங்களில் உள்ள சனநாயக சக்திகள் ஏஜிகே வலியுறறுத்தும் ‘விமர்சனம் –  சுயவிமர்சனம் என்னும் சரியான தடங்காட்டி’ வினையினையே உயர்த்திப்பிடிப்பர். கருமையும் செம்மையும் சங்கமித்த செவ்வியச் சங்குமுகமாகவே வரலாற்றில் ஒருதனியாய் வீற்றிருக்கும் வியத்தகு நிகழ்வான தோழர் ஏஜிகே என்னும் இருட்டடிக்க ஒண்ணா சோதிப்பிழம்பிலிருந்தே சுடர்கொளுவி மேற்செல்வோமாக!

மூன்றாவது நூல் அடுத்த பாகத்தில்

நூல் 1 -ஐ பின்வரும் இணைப்பில் படிக்கலாம்: ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *