ஆ.ராசா மோடி எடப்பாடி

கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!

இந்த தேர்தலில் மிக சமீபத்திய பரபரப்பான விவகாரம் தமிழ்நாட்டில் முதல்வராக  இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தவர் என்பதை மையப்படுத்தி திமுகவின் ஆ.ராசா பேசியது. அந்த காணொளி ஆன்லைனில் வைரலாக, எடப்பாடி பழனிச்சாமியின் அம்மாவைப் பற்றி தவறாக ஆ.ராசா தவறாகப் பேசியதாக பரப்பப்பட்டது. தேர்தல் பிரச்சராத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி, ”சாதரணமான ஒரு நபர் முதல்வரானால் இப்படித்தான் பேசுவார்களா” என்று  அழுது, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பு  என்னவாகும் என்றெல்லாம் குரல் கம்மிப் பேசினார்.

வாக்காளர்களின் தொலைபேசி அழைப்புகள் வந்து, அதிலும் முதல்வர்  அழுதது முதல் ஆ.ராசா பேசியது வரை ஓடவிட்டு, இறுதியாக பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த மோடி தனது ஆறு ஆண்டு ஆட்சியின் சாதனைகளைப் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அவரோ ஆ.ராசா குறித்து பேசிவிட்டுச் சென்றார். 

திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய   அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. 

வாச்சாத்தி கொடூரம்

ஜெயலலிதாவின் முதல் ஆட்சியிலேயே அவர் காவல்துறை  அமைச்சராகவும் இருந்த அந்த ஆட்சியில் நிகழ்ந்த பெருங்கொடுமை   வாச்சாத்தி கூட்டு வன்கொடுமை.

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமம்  வாச்சாத்தி. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் 1992 சூன் 20-ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த் துறையினர் வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகள் இருக்கிறதா என சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக சென்றனர். 

சந்தனக் கட்டையைத் தேடுவதாக நடந்த சோதனையில் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். அவர்களை  சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த  கூட்டு பாலியல் வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28  சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். 

மார்க்சிஸ்ட்  கம்னியுஸ்ட் கட்சியின் முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார். ஆனாலும் ஜெயலலிதாவின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கூட்டு பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே முயற்சி செய்தது என்பது வரலாற்றின் பதியப்பட்ட உண்மை.

தர்மபுரி மாணவிகள் எரித்துக் கொலை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அக்கட்சித் தொண்டர்கள் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டார்கள். அதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் சென்று கொண்டிருந்த பேருந்திற்கு  தீ வைத்தனர்.

இந்த கொடுஞ்செயலில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் கொல்லப்பட்டனர். அவ்வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு   அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்டனர். 

கூடங்குளம் போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்  

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய பெண்கள் மீது   வன்முறையை ஜெயலலிதா தலைமையிலான அரசு நடத்தியது. மாற்றுத்திறனாளி பெண்ணை மிக ஆபாசமாக காவல்துறையினர் பேசினர். வயதான தாய்மார்களை அடித்து உதைத்ததெல்லாம் நடந்து பத்தாண்டுகள் கூட ஆகவில்லை.

கனிமொழி மற்றும் ஆ.ராசா குறித்து 2011-ல் ஜெயலலிதா பேசியது

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு 2011 தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்து, தேர்தல் பிரச்சாரத்தில் மிகத் தரக்குறைவாக ஜெயலலிதாவே கனிமொழியையும், ஆ.ராசாவையும் சேர்த்து அநாகரிகமாக  பேசியதை எல்லாம் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை.

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள்

திருப்பூரில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்களை ஓங்கி அடித்த காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து பாராட்டியது பெண்களைப் பாதுகாக்கும் அதிமுக அரசு.

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்

திருச்சியில் கர்ப்பிணி பெண் போக்குவரத்து காவல்துறையினரின் அத்துமீறலில் உயிரிழந்த போது, அப்பெண்ணுக்கு நீதிகேட்டுப் போராடியவர்களை கைது செய்ததுதான் பெண்கள் மீது அதிமுக அரசு காட்டிய அக்கறையாக இருந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட வன்முறை

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பண்பாட்டு உரிமைக்காக போராடியபோது பெண்கள் மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கொஞ்சம் நஞ்சம் இல்லை. இரவில் வீடுகளின் கதவுகளை உடைத்து  காவலர்கள் தங்கள் பேண்ட்டை அவிழ்த்து நின்றனர். உங்கள் வீட்டில் ஆண்கள் இல்லையா நாங்கள் வரட்டுமா  என்று கேட்டதேல்லாம் நடந்தது. வன்முறை நடத்திய காவல்துறையினர் மீது புகார் கொடுத்த பெண்களின்  வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமலேயே இருக்கிறது.

அரியலூர் நந்தினி

அரியலூர் நந்தினி இந்து முன்னணி பொறுப்பாளர்களால் பாலியல்  வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்டது அதிமுகவினருக்கு நினைவில்லையா?

நிர்மலா தேவி விவகாரம்

பின்தங்கிய வறட்சியான பகுதியில் இருந்து உயர்கல்வி படிக்க வந்த அப்பாவி மாணவிகளை ஆளுநர் அலுவகத்திற்காக மூளைச்சலவை செய்த நிர்மலா தேவி வழக்கு என்ன ஆனது? இந்த பிரச்சனைக்குப் பிறகும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கவர்னர், பெண் பத்திரிக்கையாளாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். 

நீங்க அழகா இருக்கீங்க – அமைச்சர் விஜயபாஸ்கர்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம்  முடிந்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் செய்தியாளாரிடம், ”நீங்க அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க” என்று அநாகரிகமாக பதில் கூறினார். 

மெயின்ரோட்டுக்கு வரச்சொன்ன அமைச்சர்

வேலைக்கு சிபாரிசு கேட்டுப் போன பெண்ணை மெயின்ரோட்டுக்கு வரச்சொன்ன அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் ஆடியோ இணையதளம் முழுக்க வைரலான பின்னும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பொள்ளாட்சியில் அப்பாவி பெண்களை பாலியில் சித்ரவதை செய்து அதை வணிகமாகவும் மாற்றியவர்கள், அதிமுகவில் மிக நெருக்கமானவர்கள் என்பது தெரிந்தும், ”அண்ணா அடிக்காதிங்க அண்ணா” என்று அழுத பெண்களின் குரல் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளில் விழவில்லை. இப்போது மட்டும் பெண்கள் பாதுகாப்பு என்று அழுகிறார்.

மேடையில் எடியூரப்பா

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுகிறது. தன் கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத கட்சி அது. எடியூரப்பா முதல் எத்தனையோ பாஜக முன்னணி தலைவர்கள் பொது மேடையிலேயே அத்துமீறுவது வாடிக்கையாக நடக்கிறது. 

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர்

பாரதிய ஜனதாவின் தமிழக முன்னணி தலைவரான நடிகர் எஸ்.வி.சேகர்  பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிக மோசமான முகநூல் தகவலை பகிர்ந்தபோது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கடைசிவரை அவரை கைது செய்யாமல் அவர் வீட்டுக்கு பால் பாக்கெட் அனுப்பியவர் தான் இன்று பெண்கள் நிலை குறித்து கவலைப்படுவதாகச் சொல்கிறார்.

வைரமுத்துவை வேசி மகன் என்று திட்டிய ஹெச்.ராஜா

வைரமுத்து தமிழராற்றுப்படை தொடரில் ஆண்டாள் குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டதற்காக, அவரை ’வேசி மகன்’ என்றார் இன்றைய காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா.

குஜராத் வன்முறையில் பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம்

பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளால் நிகழ்த்தப்பட்ட குஜராத்தில் வன்முறை குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த படுகொலையின் போது பெண்கள் மீது பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவு, கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். மேலும் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டனர் என்றும் கூறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களே சாட்சி சொல்லியுள்ளார்கள்.

2002-ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது, குஜராத் அரசின் ஆதரவுடன்  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட சோகமான மற்றும் கொடூரமான படுகொலை சம்பவம் என்றும், இதில் ஒரு சமூகத்தை அடிபணியச் செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் பாலியல் வல்லுறவு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியுள்ளது. 

அந்த படுகொலையின் போது பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டு உடைகள் பறிக்கப்பட்டு நிர்வாணமாக அணிவகுத்துச் செல்ல வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் காவி கும்பலால் குத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.

பாலியல் வன்முறைகளுக்குப் பிறகு, கூட்டு பாலியல் வல்லுறவு, உறுப்புகளை சிதைத்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், பெண்களின் மார்பகங்களை வெட்டுவது மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வெட்டுதல் மற்றும் பெண்களின் உடல் பாகங்களில் இந்து மத அடையாளங்களை செதுக்குதல் போன்ற சித்ரவதைகளை செய்தவர்கள் சங் பரிவார் அமைப்பினர்.

ஆசிபாவும், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையும்

காஷ்மீரில் ஆசிபா என்னும் குழந்தைக்கு நடந்த கொடூரத்தை செய்தவர்களை பாதுகாத்தது பாஜக. உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஒடுக்கப்பட்ட வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்ட போது, பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜ்வீர் பஹல்வான், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்யக் கோரி அந்த நபர்களின் சாதியைச் சேர்ந்தவர்களை தன் வீட்டிற்கு அழைத்து கூட்டம் நடத்தினார். பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால், பெற்றோர்கள் பெண்களை நல்ல பண்புடன் வளர்க்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராகவே பேசினார். 

ஒட்டுமொத்த பாஜக அரசும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக நின்றது. 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் மட்டும் 59,853 வழக்குகள், ஒட்டுமொத்த இந்திய வழக்குகளில் 14.7 சதவீத வழக்குகள் இங்கு மட்டும் பதியப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திடீரென அக்கறைப்படுவோரும், கண்ணீர் விடும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், மோடி அவர்களும் மேலே சொன்ன குற்றங்களுக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *