பொதியவெற்பன் பிரமிள் தொகுப்பு

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்

3. ‘பேட்டிகளும் உரையாடல்களும்’ – ‘பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : செவ்வி நேர்வு – கால சுப்ரமணியம்

(பதிப்பு : கால சுப்ரமணியம்,’லயம்’ – அறக்கட்டளை வெளியீடு, பக். :416, விலை :ரூ 400, 94426 80619.)

நூலின் முகப்பு அட்டை

1.பீடிகை

ஜான்ஸனுக்குப் பாஸ்வெல் என்பார்கள். எனினும் பிரமிளுக்குக் கால சுப்ரமணியம் எனுமாப்போல மற்று எவரையேனும் எடுத்துக்காட்ட இயலாதென்பேன். ‘மீறல்’ இதழ், பிரமிள் படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு, அவருடனான தொடர் செவ்வி உரையாடல்கள், அவருக்குப் பக்கபலமான உறுதுணை,அவர் காலத்துக்குப் பின்னும் அவர் நூல்களைத் தொகுத்து முறைப்படுத்தி உரிய குறிப்புரையுடன் வெளியிடுதல் எனவாங்கு வரிப்புணர்வுடன் வாணாட் செகுத்த அளப்பரிய கொடையளித்த கால சுப்ரமணியம் பங்களிப்பிற்கு இணைமற்றில்லை.

இக் ‘கொடுப்பினை’ பிரமிளைத் தவிர மற்றெவர்க்கும் வாய்த்ததுமில்லை. மறுபக்கமாக பிரமிளின் நூலகம், நூல்கள் காப்புரிமை; பிரமிளறிந்த காகாசியன் டீ (தேநீர் பீர்) உருவாக்கக் கம்மியம் வரைக்குமாக பிரமிளால் கால சுப்ரமணியம்மிற்கே கையளிக்கப்பட்டன என்பதும் அபூர்வ நிகழ்வுகளே. இவை தவிர கவிதை, கட்டுரை, மொழியாக்கம், பதிப்பாக்கம், தொகுப்பாக்கம், சந்தைப்படுத்தல் எனப் பல்கும் காசு பங்களிப்பே. எமைப் பற்றிய ஒரு பதிவு :

“பிரமிள் மதத்தை மறுத்தவர்; சாதியைப் புறக்கணித்தவர். நவீன தமிழ்ச்சமூக வரலாற்றில்,அரசியல் அகற்றலையும் சாதியத்தை உள்வயப்படுத்தலையும் தமது தந்திரமாகக் கொண்டு செயல்பட்ட/ செயல்படும் பார்ப்பனிய நஞ்சை அதன் வேரடி மண்ணோடு அம்பலப்படுத்தியவர். வெறும் தகவல் சார்ந்தும், சாதிய மத மறுப்பற்ற மனநிலை சார்ந்தும் செயல்பட்ட தமிழகப் பார்ப்பனிய ‘எழுத்தாளர்கள்’ முகங்களைக் கிழித்தெறிந்த அவரது எழுத்துவளத்தைத் தமிழ்ச்சமூகம் முற்றாய்ப் புரிந்து கொண்டதாகக் கூற முடியவில்லை. அவரது மொழியின் தர்க்கம் எதை நோக்கியது என்பதைப் புரிந்து கொண்டவர்கள் பொதியவெற்பனும், கால சுப்ரமணியமும் தாம் என்று சொல்லமுடியும்.

சமூகநிகழ்வுகள் குறித்த அவரது மதிப்பீடுகளை அவரது ஆக்கங்கள் வழியாகக் கண்டறிவதைவிட, அவர் தமிழ்ச்சூழலில், குறிப்பாகப் பார்ப்பனச் சாதி சார்ந்தவர்களோடு நிகழ்த்திய உரையாடல் மட்டுமே பலரின் நினைவுகளில் பதிந்திருப்பதாகக் கருதமுடிகிறது. இந்த உரையாடலை நிகழ்த்திய அவரது நோக்கம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வது அவசியம். பொதியவெற்பன் அவ்வகையான உரையாடல்கள் சார்ந்து, பிரமிளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்” – வீ.அரசு (‘தோழர் பொதியவெற்பனின் அரைநூற்றாண்டுப் பயணம்’ – NCBH சிறுநூல் வரிசை)

என்னுடைய நூல்களே புதுமைப்பித்தன், பிரமிள் ஆய்வில் முதல் நூல்களாகும். எம் ‘சிலிக்குயில்’ வழங்கிய ‘புதுமைப்பித்தன் சாதனை வீறே’ அவருக்கு வழங்கப்பட்ட முதல் விருதாகும்.இவை யாதொன்றையும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளுமுகமாக அல்லாமல் புரிந்துகொள்ளுமுகமாகவே நான் முன்வைக்க நேர்ந்தது. ‘வாராது வந்த

மாமணி’ போல் நமக்கு வாய்த்த ஒருதனிக் கலைஞனை இங்கான இலக்கிய நிறுவனங்கள் புறக்கணித்த வரலாற்றின் அவலத்தைச் சுட்டிக் காட்டுமுகமாகவே இதனை இங்கே முன்வைக்க நேர்ந்தது. 

ஒரு பக்கம் படைப்பாளியைப் பற்றியன்று படைப்பே பிரதானமெனும் தந்தகோபுரச் சௌந்தர்ய உபாசகர்களும்; மறுபக்கம் பிரமிள் இன்றிருந்தால் நான் எடுத்த இந்நிலைப்பாட்டையே முன்னெடுப்பார் எனக் குறுக்குச்சால் ஓட்டிவரும் சிலரும் அவர் காலத்திற்குப் பின்னாலும் கூட மேற்கொண்டு வரக்கூடிய இன்றைய சூழலின் அரசியலகற்றல் திரிபரசியல் என்னும் இருமுனைத் தவறுகளையுமே  பிரமிள் எள்ளி மெல்ல நகைப்பதை இங்கு சுட்டிக்காட்டியே தீர வேண்டியுள்ளது. இத்தகு வறண்ட அழகியல் கம்மியர் கைகளுக்கும்; திரிபரசியல் தித்திருக்கிற்கெல்லாமும் பித்தனோ, பிரமிளோ ஒருபோதும் அகப்படார். தொமுசி, பித்தன், பிரமிளின் பதாகையினை உயர்த்திப் பிடித்த வண்ணமே என் மதிப்பீட்டியக்கம் இம்மண்ணில் எரிகொளுவியே பராவும். 

பிரமிள்

2. பிரமிள் : இகலுருவும் சேயகமும் 

“இங்கு வந்த எனக்கு புலம்பெயர்ந்த புள்ளிவிவரம் பொருந்தாது ஊன்றிய காலை எடுத்து இன்னொரு இடத்தில் வைத்தால் முந்திய இடமும் பிந்திய இடமும் பூமிதான் எனக்கு எனவே எனக்கு நாடில்லை நாமம் இதுவென்று ஒன்றில்லை” – பிரமிள்.

பிறப்பால் பிரமிள் ஈழத்தவர், சிந்தனைப்பள்ளியால் சித்தமரபினர். பன்முகப் பரிமாண ஆளுமை வாய்க்கப் பெற்ற மேதை. கவிதை, அதிரடிக்கவிதை, கட்டுரை, வியாசம், கதை, நாடகம், ஓவியம், சிற்பம், விமர்சனம், செவ்வி, மொழியாக்கம், ஆங்கிலப் படைப்பு, இயற்கை உணவு, மெய்யியல், ஜோசியம், நியூமராலஜி, நேமாலஜி, நீர்நிலைக்குள் ஆழ்நிலைத் தியானம், டேரட் கார்டு எனவாங்கு பல்கும் அவரது பன்முகப்பரிமாணங்கள். இத்தகைய பன்முக ஆளுமையால் அவரை முழுமையாக ஏற்க இயலாமல் அவரவரும் அவரவர்க்கேற்ற வகையிலேயே அவரை ஏற்க இயன்றது மட்டுமல்லாமல் அவரின் இகலுருவை ஊடுருவி சேயகச் செவ்வி தலைப்பட அனைவர்க்கும் வாய்ப்பதில்லை.

பிரமிள் வரைந்த ஓவியம் 1
பிரமிள் வரைந்த ஓவியம் 2

“ஒவ்வொரு கணத்தையும் விழிப்புடன் வாழவும் அவதானிக்கவும் செய்தவர் அவர். இலக்கியம் சாராத நண்பர்களின் தொடர்புகள் அவருக்கு மிகுதியாக இருந்தன. இலக்கியவாதியான அவருடைய ஒரு புறத்தை விலக்கிவிட்டு ஆன்மிகவாதியான மறுபக்கத்தையே அவர்கள் கண்டனர். ஒரு ஞானியாக சித்தராக இவர்களுக்கவர் புலப்பட்டிருக்கிறார்.”

“இலக்கியப் போலிகள், அரைகுறைகளால், கௌரவவாதிகளால் நெருங்க முடியாத, உறவு கொள்ளமுடியாத சண்டைக்காரராக, சகிக்கமுடியாதவராகத் தெரிய வந்த பிரமிள்; இப்புறத்தில் ஒரு குழந்தையாக, எளிதில் பழகக் கூடியவராக, சகஜமானவராக, வழிகாட்டியாக, உதவுவராக இருந்திருக்கிறார்.”

“எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளில் இருந்தும் தனித்ததான, தேர்ந்ததான சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டிருந்தார். உலகளவிலான பெரும் சிந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணுக்கங்கள் அவர் பேச்சில் மின்தெறிப்பாகப் பிறந்து ஆச்சரியப்பட வைக்கும்.” – கால சுப்ரமணியம் (‘பாதையில்லாப் பயணம்’ – தொகுப்புரை)

கால சுப்ரமணியம்

பிரமிள் படைப்புகளைக் கால சுப்ரமணியம்,

1.கவிதைகள்,
2.கதைகள், 
3. + 4. விமர்சனங்கள்,
5.பேட்டிகளும் உரையாடல்களும்,
6.ஆன்மிகம், அறிவியல், மொழிபெயர்ப்பு 

என ஆறு தொகுதிகளாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆறு தொகுதிகள்

இத்தகைய ஒரு பன்முகக்கலைஞனை முதன்முதலாக வாசிக்க நேர்கின்ற ஒரு வாசககர்க்கு இவற்றில்  நான் இந்தத் தொகுதியினையே பரிந்துரைப்பேன். எங்கிருந்து தொடங்குவது என்பது மிக முகாமையானது. பிரமிளின் பன்முக ஆளுமை அவரது படைப்புகள், அல்புனைவுகளுக்கு ஊடாக வெளிப்பட்டதினும் பார்க்க மேலதிகமாக அவரது சம்வாதங்கள், அவருடனான காசுவின் செவ்விகள் வாயிலாயே எனக்கு வசப்படலாயின.

 “வாதப் பிரதிவாதங்களின் அறைகூவலை ஏற்று அதேவேளையில் அன்பும் உண்மையும் நிலவுகிற ஒரு பரிவர்த்தனையை ஒரு மகாபுருஷனால் சாதிக்கமுடியும். எனது கட்டுரைகளிலிருந்து தொடரக்கூடிய சிந்தனைகளை நானே ஊக்குவித்துக்கொள்ள வேண்டி இருப்பதுடன் இலக்கியச் சிற்றேட்டுலகின் குழப்பமான நிலைகளிலிருந்து ஒதுங்கிச் சம்பாஷணைகளிலேயே நான் என்னை வெளியிட்டுள்ளேன் .” – பிரமிள்.

பிரமிள் ஓவியம் – ஓவியர் மருது

இத்தகைய காத்திரமான அறிவுவிவாதமரபைத் தொடர்பவன் எனும் முறையில் பிரமிளுடனான காசுவின் காத்திரமான செவ்விகள் நூலுருப்பெற்றாக வேண்டிய இன்றியமையாமையை அன்றிலிருந்தே வலியுறுத்திடலானேன்.

3.செவ்வி எனுமோர் அரிய பண்பாட்டுக்கருவி

நாம் பேட்டி, நேர்காணல் என்பதனை ஈழத்தில் செவ்வியெனவே பாவிப்பர். தமிழின் முதல் செவ்வித்தொகுப்பு ஈழத்திலேயே வெளியாயிற்று. அதுவே ‘தேன் பொழுது’- பல்துறைக்கலைஞர் உடனான செவ்வித்தொகுப்பாகவே அந்நூல் வெளியானது.  செவ்வி ஒரு நயம்படு சொல்லாக்கமே. ‘சிலரதன் செவ்வி தலைப்படுவரர்’ என்பாரே நம் அய்யனுங் காமத்துப்பாலில். நடை என்பதற்கும் ‘கருதியதுரைக்கும் செவ்வி’  என்பாரே செல்வக்கேசவராயர் – எளிவந்த செவ்வி என்பதற்கு எளிதில் அணுகக் கூடிய என்றே பொருள். 

செவ்வி எனில் பதன் – பதம் -பதனழியாமல் பயன்படுத்த வல்ல பக்குவமே  ‘செவ்விதலைப்படுதலாம்’. தமிழ்ச்சூழலிலில் செவ்விநேரா நேர்காணல்களே அதிகம். செவ்வி தலைப்பட்ட செவ்விகளோ அபூர்வமே.

தமிழில் இந்த உரமான வெளியீட்டுருவம் கீழ்மைபெற்றுத் தொங்குகிறதென்ற பிரமிளே இது எத்தகைய அரிய கலாச்சாரக்கருவி என எடுத்துரைத்ததுடன்,  இதனைத் திறம்பட எவ்வாறு கையாள்வது என உணர்த்துமுகமாக,  அதற்கான முன்னுதாரணமாகத் தாமே தம்மை எதிர்கொள்ளும் பாங்கிலான – ‘பிரதிரூப சம்வாதம்’ எனுமோர் அபூர்வ செவ்வியினையுங் ‘கொல்லிப்பாவை’யில் நிகழ்த்தியே காட்டினார் :

“பேட்டி காண்பவன் பிரச்சினையாளனுடன் ஏதோ உடன்படிக்கை ஒன்றைத் தயார் செய்கிற போக்குத்தான் தமிழ் உலகில் இக்கருவியின் அடிப்படை உயோகம்.”

“உண்மையில் பேட்டியின்மூலம் கருத்துலகுடன் தொடர்பும் தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தைப் பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து அவன் சம்பந்தப்பட்ட பொதுவாழ்வின் தெரிவுகளின்மீது உபயோகிக்க வேண்டும்.”

“பிரச்சினையாளன் பேசவிரும்பாத விஷயங்களைக்கூட பேசவைக்கிற ஒரு பேட்டியாளரின் மூலம் இவ்வளவும் நிறைவேறி ஒரு கலாச்சாரநிலை உருப்பெறவும் வளரவும் முடியும்.” – பிரமிள்.

‘மீறலி’ன் பிரமிள் சிறப்பிதழுக்காக அவருடன் மேற்கொண்ட செவ்வியே இருநூறு பக்கங்களாக நீண்டதனால் காசு மேலும் தம் ‘லயம்’மில் தொடர்ந்து மூவிதழ்களில் அதனை வெளியிட்டார்.

“இவ்வளவு நீண்டபேட்டி ஒன்று ஓர் இலக்கிய எழுத்தாளரிடமிருந்து வெளிப்பட்டது அதுவே முதல் தடவை. அதில் ஆச்சர்யப்படும் வகையில் பல விஷயங்கள் வெளிவந்தன. அவரை எதிர்க்கவும் மறுக்கவும் ஒதுக்கவும் செய்த மார்க்சியவாதிகள், தமிழியவாதிகள், திராவிடவாதிகள், தலித்தியவாதிகள், பெண்ணியவாதிகள் போன்றோர் அவரை வியந்து நெருங்கவைத்த பேட்டி அது. அதில் அவருக்குச் சாதகமான விஷயங்கள் பல இருந்தன – பாதகமான விஷயங்களும் இருந்தன – ஏனெனில் பிரமிள் தன்னை எந்தவொரு வாதத்தோடும் குழுவோடும் இணைத்துக்கொண்டவரோ, இனங்கண்டவரோ, குறுக்கிக்கொண்டவரோ அல்லர்.” – கால சுப்ரமணியம்

” எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான், ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹா மனிதாயமாகும்.” – இந்தப்புள்ளியில்தான் நானும் பிரமிளால் தடுத்தாட்கொளப்பட்டேன். ஓர் எழுத்தானை அவனுடன் தன் புரிந்துணர்வின் அலைநீளம் ஒத்திசைய உள்வாங்கிக்கொண்ட ஒரு வாசகன் செவ்வி நேர்கையில் அது உரையாடலாகிய அடுத்த பரிமாணத்தைச் சென்றடைகின்றது என்பதற்கான ஆகச்சிறந்த சான்றாதாரங்களே பிரமிளுடனான காசுவின் செவ்வி உரையாடல்கள் ஆகும்.

4. ‘வையத்து அலகையா வைக்கப்பட்ட அத்துமீறுங் கலகக்கலைஞன்’

‘நான் தமிழர்களால் கொலையுண்டேன்’ என்றார் பிரமிள். ‘மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர்’ என ஓஷோவை அறிமுகப்படுத்தும் ஒருநூல். இதனை ஆங்கிலத்தில் ‘Maverick’ எனலாம். இவ்வாறே தந்திர மெய்யியலும் பிறழத் திரித்துரைக்கப்பட்டதே. இத்தொடர்பில் பெரியாரும் பிரமிளும் அடங்குவர். இதில் ஒரு பொதுவியல்பு யாதெனில் அதுதான் மதமறுப்பெனலாம்.பிரமிளைப் பொறுத்தவரையில் அவர் வாணாட் காலத்தில் மட்டும்அன்றி இன்றளவுங் கூட அவர் மீதான அவதூறுகள் தொடர்கதையே.

“பொய்மை வீண்வழக்குகள், சண்டை சச்சரவுகள் ஆகியவற்றினால் மட்டுமல்லாது பக்குவமின்மையால் அவரது வாழ்வும் இலக்கியமும் சிதைந்தன. நண்பர் பொதியவெற்பன் இதற்கொரு மறுப்புக்கட்டுரையைத் தரக்கூடும். ஆனால் அவர் நேசிக்கும் புதுமைப்பித்தனின் கதி என்னவென்று அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். தருமு சிவராமுவின் பிரம்மாண்டமான கவித்துவ ஆகிருதி அவரது மோசமாக்கப்பட்ட வாழ்க்கையால் அவரே வரித்துக் கொண்ட புன்மையால்  மேலும் வீணானது என்பதை யாரும் மறுக்க முடியாது, பொதியவெற்பன் உட்பட” எனத்தம் ‘திருமணமாகா எழுத்து’ எனும் கட்டுரையில்  குற்றஞ்சாட்டினார் தஞ்சைப்ரகாஷ் (‘சுகன்’ இதழில்)

“சிவராமு என்ற கலைஞனின் வியக்தி மிகச் சமீபகாலமாக உங்களாலேயே வீணாக்கப்படுகிறது. ஒரு நவகவிஞர் தன்சக்தியை விரயம் பண்ணலாகாது.” – என்றொரு மடல் 17 – 2 – 1986 – இல் ராஜபாளையத்திலிருந்து பிரமிளுக்கு வந்தது. அதற்கான அவர்பதில்  இதுதான் :

“தமிழ் அறிவுஜீவித்தளத்தில் இயங்குபவன் என்றமுறையில் என் கவனம் முழுவதும் என் சிருஷ்டி சக்திகளை அதன் புதுமை மாறாமல் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் சீரழிந்த சில அடிப்படைகளுக்கு இணங்கிப்போகும் தன்மையை சிருஷ்டித்துறை பெற்றுள்ளது. இந்திய மரபு ஜாதியத்தைப் பலப்படுத்தும் மதத்தைத் தமக்குள் பெற்றுள்ளது. அறிவுஜீவியான நான் எல்லாச் சமுதாய – இலக்கியப்  பிரச்சினைகளிலும் மதச்சார்பற்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிறேன்.”  என்றவர் பிரகடனப்படுத்தினார் (‘லயம்’ : 5, ஐன. 1986)

சிலோன்காரர் வேர்களை இழந்ததனாலோ என்னவோ ஒரு அளவுக்கு மூர்க்கத்தனமாகச் சண்டை போடும் சுபாவம் இருக்கிறது. விரோதங்களைப் பாராட்டி எழுதி அதில் புரளுகிற மனோபாவத்தில் அவரிடம் ஒரு மனோதத்துவச்சிக்கல் (complex) இருக்கிறது என்றார் கநாசு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் “அறிவார்த்தமாகச்  செயல்படுகிறவனுக்கு எதிராக அதே அறிவார்த்தத்துடன் பேச முடியாதவர்கள் செய்யும் வேலை இது. இதனைப் பொதுக்கிணற்றில் விஷம் போடுதல் என்று தர்க்கவியலில் கூறுவார்கள்” எனப் பிரமிள் கூறுவதே இதற்குப் போதுமான பதிலாகும்.

பிரமிளைப்பற்றிய ‘இமாலய அகந்தைக்காரரர்'(‘Super Ego) எனத் திகசி குறிப்பிட்டதைக் காசு வினாத் தொடுக்கையில், ” ‘Super Ego’ என்பது தத்துவத்துறையின் பதச்சேர்க்கை. இது வெளிமனத்தில் அமைந்து, கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கலை. இங்கே பிரேமிளுடையது சூப்பர் ஈகோ என்கிறபோது கிறுக்குப் பிடிக்கவே முடியாத வீர்யங் கொண்ட தர்மங்களை அவன் அனுசரிக்கிறான் என்றே பொருள்” எனப்பதிலறைவார்.

 “பிரமிள் மரணப்படுக்கையில் இருக்கிறார். தைரியம் உள்ளவர்கள் போய்ப்பாருங்கள்” என வன்மம் பாராட்டியது  ‘முன்றில்’.

“1995 – இல் பிரமிளைப் பார்த்துப் பேச ஆசைப்பட்டேன். மூத்த இலக்கிய நண்பரிடம் இந்த விருப்பத்தைச் சொன்னேன். பார்க்காமலே இருப்பது ஒன்றும் தவறில்லை என்றார். ஏன் என்றேன் இப்படிப் பார்க்கச் சென்ற பலரை அவமானப்படுத்தி இருக்கிறார். நீங்கள் அவமானப்படத் தயாரா என்றார். அப்படியும் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் கடைசிவரை சந்திக்கவில்லை.” – சு. வேணுகோபால் (‘ உயிர் எழுத்து’, ஆக. 2017)

பிரமிளைத் தொடக்கத்தில் சிலாகித்த சுந்தர ராமசாமியே அவர் தம்மை விமர்சிக்கத் தொடங்கியபின் பிரமிளை மனநலசிகிச்சைக்கு உரியவராகச் சித்திரித்தார். சக எழுத்தாளரைத் துன்புறுத்துங் கலையில் பிரமிளை விஞ்சியோர் யாருமில்லை எனப்புலம்பினார்.

பிரமிளின் படைப்பாக்கங்களை மட்டும் போற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது ‘தமிழின் நவீனத்துவத்து’க்குப் பிந்தியவற்றை வசவுக்கட்டுரைகள் என்றே நிராகரிக்கின்றார்:

“இருபதாண்டுகளுக்கு  முன்பிருந்த இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாகத்தான் இருந்தது”  இருவரையும் விதந்தோதி இனங் காண எஸ்ராவால் இயலவில்லை. வேதசகாய குமாரும், ஜெயமோகனும், நாஞ்சில்நாடனும் வெங்கட் சாமிநாதனை உயர்த்திப் பிடிக்கின்றனர். நானும் ராஜன் குறையும் வெசாவை விமர்சித்து முன்வைத்துள்ளோம். (‘சொல் புதிது’ : 10, ‘அகம் புறம்’ : 3 இதழ்களில்)

“எனது விமர்சன இயக்கத்தை வெசா விமர்சன இயக்கத்துடன் ஒப்பிட முடியாது. எனது இயக்கத்தல் உள்முரண்கள் இல்லை; ஆனால், வளர்ச்சியும் அவ்வக்காலத்துக்கேற்ற அழுத்தங்களும் மட்டுமே உண்டு. தமிழில் எழுதப்பட்ட என் கட்டுரைகள் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து பார்த்து வந்தால், இதன் உண்மையை ஒருவர் உணரலாம். ” – பிரமிள்.

இத்தொடர்பில் இருமுகநூற் பதிவுகளைக் காண்போம்:

“ஷிவ்ராம் ப்ரமுள் என்றும், தர்மூ அரூப் ஷிவ்ராம் ப்ரமுள் என்றும் பெயர்களை மாற்றிக் கவிதைகள் எழுதிப் பிரபல்யமான நியூமராலஜியில் நம்பிக்கை கொண்ட தெளிவற்ற சிந்தனை உடைய ஒரு அடிப்படைவாதியான ப்ருமுள் கருத்தையெல்லாம் ஒரு கருத்தென்று விவாதிக்க நேர்ந்ததுதான் பேரவலம்.” –  எம்.எஸ்.ராஜகோபால். (ஆசிரியர் ‘நான்காவாது கோணம்)

“தலித் அரசியலுக்கும் பெண்ணிய அரசியலுக்குமான தமது எதிர்ப்பை வெறுப்பை நேரடியாகக் காட்டஇயலாத – அறிவால் வாதத்தால் எதிர்கொள்ள முடியாத ஒரு சாமியார் கூட்டமும், அறிவுமறுப்பு அக்கப்போர் கும்பலும் தற்போது உள்ள இந்துத்துவ ஆண்மைய அரசியல் தந்த தெம்பில்; தம் ஜோதிஷ மகாத்மியத்தை மறுபதிப்பு செய்து உருவாகிவரும் தலைமுறையை நாசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மிகப்பெரிய அளவில் பஜ்ரங்தள – சுயம் சேவக –  சிவசேனைகள் செய்துவரும் அறிவழிப்பு, கருத்தியல் வன்முறைகளைச் சிறிய அளவில் வாசிப்பு, எழுத்து என்பதில் ஈடுபாடு கொண்டவர்களிடையே செய்வதுதான் இவர்களின் செயல்திட்டம். இவர்களின் இரு பிதாமகன்கள்தான் வெங்கட் சாமிநாதன், தருமு சிவராம் என்ற வெளியேறிய பண்பாட்டு உளவாளிகள். மாற்றங்களை இழித்துரைக்கும் அறிவுமறுப்பு ஜீவிகள். ஆம் இவர்களை வைத்துத்தான் இப்போது இயக்கம் கட்டப்படுகிறது. ஒன்றரை பக்கம் எழுதமுடியாத ஒப்புக்கு எழுதிகள் (அதாகப்பட்டவர் கால சுப்ரமணியம்) இவர்களுக்கு ஆசிரமம் கட்டி ஆன்மிக வைபோகம் செய்யக் கிளம்பிட்டாங்க.” – பிரேம். (முகநூற் பதிவு, 3 – 11 – 2015) (பிரேம்: ரமேஷ் இணையரில் ஒருவரே)

“என்னைத் தரமில்லாத எழுத்தாளன் என்று கருதுவோரின் பார்வையில், எனக்கு உத்வேகம் தரும் தூண்டுதல்களும், தரக்குறைவாகப்படலாம். வேறு வேறு வகைத்தூண்டுதல்களை அழுத்தமாகக் குறிப்பிடவே, நான்  ஜோதிடம் பற்றிப்பேசினேன்.” – பிரமிள்

“பிரமிளுக்கு  எண்கணிதவியல் மற்றும் மகான்கள் மீது உள்ள நம்பிக்கை மக்களை மீண்டும் பழமைவாதத்தில் மூழ்கடிப்பது ஆகாதா?”- பழமலய். “எனக்கு இவற்றின் மீது ‘நம்பிக்கை’ இல்லை. என் பல்வேறு ருசிகளுள் இவையும் அடங்கும் ; அவ்வளவே. அது சரி, யார் அந்த மக்கள்?” – பிரமிள்

“நீங்கள் ஒரு ‘anti – comunist’ – டா?” 
“கம்யூனிசத்தை சரிவரப் புரிந்துள்ளாதவர்களுக்குத்தான் நான் கம்யூனிச எதிர்ப்பாளன்; உண்மையில் நான் கம்யூனிச எதிர்ப்பாளன் அல்லன்.” – பிரமிள்.

பிரமிள் – மகுடம் சிறப்பிதழில் வந்த படம்

சனாதன, லௌகிக –  வைதிக மதிப்பீடுகளுடன் மோதுகிற நெறிநின்றே வெசா, சுரா முதலானோர் மதிப்பீடுகளுடன் தம் விமர்சன அளவைகளோடு அவர் பொருதார். ஆனால் நல்ல கட்டுரைகளுக்கு உதாரணமாக அவ்விருவர் கட்டுரைகளையும் குறிப்பிட்டார். சுராவின் சவால் கவிதையையும் பாராட்டினார். இது அவருடைய பகைமை பாராட்டாப் பண்புக்கு அடையாளமாகும்.

“எனது கருத்துக்களின் தீவிரத்தன்மையே எனக்குப் பகைமைகளைச் சம்பாதித்துத் தந்துள்ளது என்பதை என் எழுத்துக்களே காட்டும்.” என்பாரவர். ஆம் அவரைப் பொறுத்தவரையில் பகைமை என்பதவர்க்கு வருவாயே தவிர ஒருபோதும் தோற்றுவாயன்று.

கிழிசல்களும் தையல்களும்

வினா விடிவு

“கேள்வி கிழிசல் பதில் தையல்” – பிரமிள்

கட்டுரைகளாகவும் குறிப்புகளாகவும் பிரமிள் எழுதியவற்றைக் காட்டிலும் அவருடனான தம் உரையாடல்களால் தமக்குக் கிடைக்க வாய்த்த பன்முகமான விஷயங்களையும் வெளிக்கொணர விழைந்த காசுவின் விழைவும் ; தமது கட்டுரைகளில் இருந்து தொடரக்கூடிய சிந்தனைகளைத்தாமே ஊக்குவித்துக் கொள்ளுமுகமாக உரையாடல்கள் மூலமே தமை வெளிப்படுத்திவந்த பிரமிளின்  பாங்கும் ஒரு புள்ளியில் சங்கமித்ததன் விளைவே இந்நூல். இதனைக் காசு உருவாக்கி உள்ள முறையும் மனங்கொள்ளத் தக்கதாம்:

“முன்பு ‘லயத்’துக்கு அவர் தந்த கட்டுரைகள், குறிப்புகளில்  நான் எடிட் செய்து வைத்திருந்த இலக்கிய அரசியல்  விமர்சனங்களையும் நானே பேட்டி ரூபமாக்கி அவருக்குக் காட்டி இப்பேட்டித் தொடரில் இணைத்தேன்.”

ஏலவே புதுமைப்பித்தன் குறித்த பலரின் குறுக்கீடுகளையே வினாக்களாக மாற்றி அவற்றிற்கு நானேதும் விடையிறுக்காமல் அவரின் படைப்புகளில் இருந்தே உரிய பதில்களைத் தொகுத்தும் செவ்வி வடிவிலான ஒரு கட்டுரையை என் ‘புதுமைப்பித்தமும் பிரமிள் சித்தமும்’ நூலில் முன்வைத்துள்ளேன்.

அதன் மீதான வாசகனின் புரிதலில் அவரவரும் மாறுபடலாம், ஆனால் ஒரு விஷயம் மட்டும் எளிதில் பிடிபடக் கூடும் குறுக்கீட்டாளர்கள் பித்தனை வாசித்த லெட்சணமே அது.

பிரமிளை முதலில் வாசிக்கப் புகும் புதிய வாசகனுக்கு மட்டுமன்று மீள் வாசிப்பில் தலைப்படுவோர்க்குமான நுழைவாயில் ‘பேட்டிகளும் உரையாடல்’களும்மே! தொட்டடுத்துத் தொடரப்பட வேண்டியன அவருடைய  விமர்சனங்களான இரு பாகங்கள்.

அவருடைய தூண்டுதல்களோடும், ருசிகளோடும் நாம் மாறுபடக் கூடுந்தான். ஏனவர் கருதுகோள்கள், கணிப்புகள், நிலைப்பாடுகளோடுங் கூடத்தான் மாறுபடவும் நேருந்தான்.

“நீங்கள் என்னுடைய படைப்பை எவ்விதமாகப் பார்க்கவேண்டும் என்று சொன்னால், அதில் liberating facrors அல்லது liberated mind -டினுடைய குணாம்சங்கள் உள்ளனவா என்று பார்க்கவேண்டும். நீங்களே பார்த்து அதைக் கண்டுகொள்ளலாம்.” – பிரமிள்.

“பழந்தமிழ்  இலக்கியம், நவீன உலக இலக்கியம், இசை, ஓவியம்,நாடகம், திரைப்படம் முதலிய கலைகள், அரசியல், வரலாறு, கலாச்சாரம், சமூகவியல்,தத்துவம், ஆன்மிகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, யோகி ராம்சுரத் குமார் போன்ற ஆன்மஞானிகள், இந்துத்துவம், பிராமணியம், தமிழியம், மார்க்ஸீயம், பெரியாரியம், திராவிட இயக்கம், அம்பேத்கரியம் முதலிய அரசியல் சமூக இயக்கங்கள்; புதுமைப்பித்தன், மௌனி, கநாசு, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பல்வேறு விஷயங்களை ஆழ்ந்தகன்ற விமர்சனப் பார்வையுடன் இப்பேட்டிகளில் பிரமிள் பேசியுள்ளார். தனியாகக் கட்டுரைகளில் பேசி முடிக்க முடியாத, எங்கெங்கோ பரந்து விரிந்து செல்லும் விஷயங்களைப் பற்றியெல்லாம் இவற்றில் அவரால் கூற முடிந்திருக்கிறது.”

“அவரது பார்வையின் வீச்சும் ஆழமும் பிரமிக்கவைப்பவை என்பதை ஒருசேர இப்பேட்டிகளைப் படிக்கும் போது உணரமுடியும். தமிழிலும் சரி, உலக இலக்கியத்தளத்திலும் சரி இதுபோன்ற ஒரு படைப்புமேதையைக் காண்பது அபூர்வம் என்றே சொல்லத் தோன்றும்.” – கால சுப்ரமணியம்.

தமிழ்கூறு நல்லுலகம் கால சுப்ரமணியத்துக்குக் கடன்பட்டுள்ளது.

“உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும், பட்டினி போட்டுக் கொல்வதிலும், உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரைவேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தான்.” – யுதிஷ்ட்ரன் (காசு) (‘மீறல்’ மௌனி சிறப்பிதழ்)

நான்காவது நூல் அடுத்த பாகத்தில்

பரிந்துரைகள் நூல் 1 மற்றும் 2 – ஐ கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *