ஏ.ஜி.கே. ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

1. பின்னைப்பெரியாரிய முன்னெடுப்பில் ஆனைமுத்துவும் ஏஜிகேயும்

திராவிட இயக்கச் செல்நெறியை சமூகநீதிக்கும் அப்பாலாகச் சமதர்மத்திற்குமாக அகலித்த ஒரு பாய்ச்சலான சட்டகமாற்றம் என்னும் வகையில் இரு பின்னைப் பெரியாரிய முன்னோடிகளே வே.ஆனைமுத்துவும், ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனும் ஆவர். அத்துடன் இருவருமே தமிழ்த்தேசியத்தையும் வெவ்வேறு நெறியியலில் முன்னெடுத்தோரும் ஆவர்.

தோழர் ஏஜிகேயைப் பொறுத்தவரை….

“1963: திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்திலிருந்து பொதுவுடைமை (சிபிஎம்) விவசாயச் சங்கத்தில் சேர்தல். 

1969 – 1985: முக்கொலை வழக்கில் தூக்குத்தண்டனைக் கைதியாகச் சிறையிலிருந்த ஆண்டுகள். 

1987: சிபிஎம் கட்சியிலிருந்து தி.கவிற்கு சென்ற ஆண்டு

2000: திகவிலிருந்து வெளியேறிய ஆண்டு, தன்மானப் பேரவை தொடங்கிய ஆண்டு” 

– ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’

பெரியாரிஸ்ட் ஒரு மார்க்சிஸ்ட்டாக இருப்பான் எனத் தொடங்கிப் பெரியாரிஸ்ட்டுக்கான 25 வரையறைகளை ஏஜிகே வரையறுத்துள்ளார். வருணங்கள், சாதிகள் நடைமுறையில் ஒழிக்கப்படும் எனத் தொடங்கித் ‘தமிழினமானக் குடியரசின்’ கொள்கைப் பிரகடனச் சாரமாக 30 திட்டங்களை முன்வைத்துள்ளார்.

ஆனைமுத்துவைப் பொறுத்தவரை..

“1976 – இல் பெரியார் சமஉரிமைக் கழகத்தைத் தொடங்கிய ஆனைமுத்து,

1988 – இல் அதற்கு மார்க்ஸியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி என்று பெயர் மாற்றியதற்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. கருப்பையும் சிவப்பையும் இணைப்பதற்கான விதையும் அவர் மனத்தில் ஏற்கெனவே விழுந்ததுதான்.

1962 – இல் கரூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டுக்குக் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர்களையும் அழைக்க விரும்பினார் ஆனைமுத்து. அந்த விருப்பத்தையும் பெரியாரிடம் சொன்னார். சமதர்மத்தின் தீவிர ஆதரவாளரான பெரியாரும் அதற்குச் சம்மதித்தார். ஆனால் அந்த அழைப்பைக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அந்த விருப்பமும் நிறைவேறியது. காலையில் சாதிஒழிப்பு மாநாடும் மாலையில் சமதர்ம மாநாடுமாக திராவிடர் கழக மாநாடுகள் நடத்தப்பட்டன. அறுபதுகளின் இறுதிவரையிலும் இந்நிலை நீடித்தது.” 

– செல்வ புவியரசன் (‘இந்துத் தமிழ்த்திசை – 8/4/2021)

“1950 வரை தேசிய, பொதுவுடைமை இயக்கங்கள் தமிழக சமூக மாறுதல்களைச் சாதிய நோக்கில் கணக்கிட முற்படவில்லை. இத்தனைக்கும் தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமைக்கட்சி ‘பள்ளர் கட்சி’ என்றே அடையாளம் காட்டப்பட்டது. இருந்தாலும் சாதிசார் அடையாளத்தை மறைத்தாலே போதும் என்றுதான் பொதுவுடைமைக்கட்சிகள் செயலாற்றின. பெரியாரின் தலைமையிலான திராவிடர் இயக்கம் மட்டுமே சமூக எழுச்சி என்பது தமிழ்நாட்டில் சாதிச்சங்கங்களை அலகுககளாகக் கொண்டது என்ற கருத்தியலோடு இயங்கியது. ஆக இரண்டு மேல்சாதிகளைத் தவிர்த்த எல்லாச் சாதிச்சங்கங்களின் கூட்டங்களும் தீர்மானங்களும் பெரியாரின் ‘குடி அரசில்’ செய்தி ஆக்கப்பட்டன.” – தொ. பரமசிவன் (‘உரை மொழிவு’ –  ஒக்.நவ. 2000, கனடா)

“கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தச் சாதிக்கட்டுப்பாட்டைத் தகர்த்திட முடியாத – தகர்த்திட விரும்பாத நிலையில் அதனையே பயன்படுத்தி, தனது இயக்கத்தை வளர்த்துக்கொள்ள விரும்பியது. தனது இயக்கப் பிரச்சாரங்களைக் கிராமத்தில் செய்யவும் தனது இயக்கத்திற்கு ஆதரவாகச் சேரிமக்களைத் திரட்டவும் அந்தச் சாதிக்கட்டுப்பாட்டை அப்படியே பயன்படுத்திக் கொண்டது.”
– ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (‘ஏஜிகே எனும் போராளி’)

இத்தகு மடமைகளை நிலப்பிரபுத்துவ மிச்சங்களாகக் கருதிக் கொண்டிருந்தனரே தவிர இந்தியாவின் முக்கியத்துவம் பெற்ற பிரத்தியேக அம்சங்கள் இவை என்று கருதவில்லை. இது ஒட்டுமொத்த கட்சியின் குறைபாடாகவே இருந்தது. பெரியாரின் கொள்கைகளைப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏற்புடையனவே என்றபோதிலும் கட்சி நடைமுறைகளிலும் அதன் செயல் திட்டங்களிலும் அவற்றிற்குரிய முக்கியத்துவம் அளிக்க முன்வரவில்லை எனத் தொடர்வார் ஏஜிகே.

இன்றளவிலுங்கூடத்தான், பொழிலனும் திருமுருகன்காந்தியும் ஒருங்கிணைத்த ‘பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின்’ சார்பில் திருச்சியில் ‘கருஞ்சட்டைப்பேரணி’யும், கோவையில் ‘நீலச்சட்டைப்பேரணி’யும், நிகழ்த்தப்பட்ட போதிலும் மதுரையில் ‘செஞ்சட்டைப் பேரணி ‘ மட்டும் நடத்தப் பெறாமல் போனதேன்?

கருஞ்சட்டைப் பேரணி

தொடரும்…

இக்கட்டுரையின் அடுத்த பாகங்களைப் படிக்க:

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

– வே.மு.பொதியவெற்பன்

பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *