இக்கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க:
பாகம் 1: பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
2. ஆனைமுத்து இந்திய அளவில் கொண்டு செலுத்திய பெரியாரிய இயக்கத் தாக்கம்
இதழ், பதிப்புக் கொடைகளைத் தமிழில் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வாயிலாகவும் ஆனைமுத்து இந்திய அளவிலும் கொண்டு செலுத்தினார். இயக்கப்பணிகள் எனும் வகையிலும் சங்கமித்திராவோடு பயணித்து ஆனைமுத்து உரையை சங்கமித்திரா இந்தியில் தொடர வடமாநிலங்களிலும் பெரியாரிய இயக்க வீச்சைக் கொண்டு செலுத்தினார். வடபுலத் தலைவர்களுடன் ஊடாடி மண்டல் டங்கல் குறித்த அழுத்தத்தைத் அத்தலைவர்களுக்கூடாகவும்; விழிப்புணர்வெழுச்சியை மக்கள் மத்தியிலும் கொண்டு செலுத்தினார்.
இத்தொடர்பில் ஈர் இதழியலாளர், ஓர் இயக்கச் செயற்பாட்டாளர் பதிவுகளைக் காண்போம்:
“அவர் பிற்படுத்தப்பட்ட சமூதாயம் எழுச்சி பெற இந்தியா தழுவிய அளவில் இடையறாது இயங்கினார். பெரியார் சிந்தனைகளை வட இந்தியாவிலும் பரப்பினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அவர் தொடர்ந்து அரசியல் லாபி செய்தார்.
இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங், சஞ்சீவரெட்டி, வி.பி.சிங், கன்சிராம் ஆகியோரோடு தொடர்ந்து கடிதப் போக்குவரத்துக்கள், நேரடி சந்திப்புகள் என இயங்கினார். மண்டல் அறிக்கை வெளியாக பி.பி.மண்டலுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் அளித்த அளப்பறிய தகவல்கள்தான் மண்டல் அறிக்கை வெளிவர முக்கிய காரணமாக அமைந்தன!”
“சாதி அடையாளம் தவிர்த்து, இந்தியா முழுமையிலும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்டோருக்குமாக இயங்கிய ஒப்பற்ற சிந்தனையாளராகத் திகழ்ந்தார் என்பதே அவரது பெருமையாகும்!”
– சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ்
“சமூகநீதி வரலாற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் போர்க்குரல் எழுப்பினார். அவரது கோரிக்கைக்குப் பிறகு சமூகநீதியில் பல மாற்றங்கள் தேசிய அளவில் ஏற்பட்டன.”
“மத்திய அரசுப் பணிகளில், கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி 1978-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியிடம் வலியுறுத்தினார்.
கன்ஷிராம், முலாயம் சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மாயாவதி போன்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்களிடம் சமூகநீதி தொடர்பான உரையாடல்களை நடத்தினார்.”
“1979-ம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது இடஒதுக்கீடு பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை இந்தியில் மொழிபெயர்த்து நூலாக வெளிவரக் காரணமாக இருந்தார்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர எம்.ஜி.ஆரைச் சந்தித்து வலியுறுத்தினார். மண்டல்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதற்கும் ஆனைமுத்து வட இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கொடுத்த அழுத்தம் மிக முக்கியமான காரணம்”
“இந்தியா முழுவதும் மாநாடுகள் நடத்தியும், வெளிநாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் திருக்குறள் மாநாடுகள், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, பெரியாரிய சிந்தனை மாநாடுகள் எனப் பலவற்றை நடத்தியுள்ளார்.”
– சங்கத்தமிழ்
இது மணா பகிர்ந்த பதிவே
“மிகப் பெரிய இலக்குகள் மிகத் தொலைவில் இருக்கின்றன என்பதை நன்குணர்ந்த ஆனைமுத்து, நடைமுறையில் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கூட்டாட்சி, தன்னாட்சி போன்ற உடனடி இலக்குகளை மையப்படுத்தி களமாடினார்.
கனவுகளை மட்டும் களமாக எண்ணி ஏங்கியிருக்காமல், யதார்த்தத்தில் நின்று அனைவருக்கும் வழிகாட்டினார். அதனால்தான் அவர் உண்மையான வரலாற்றுப் பொருள்முதல்வாதியாக இருந்தார். மார்க்சியத்தைப் படிப்பதன் பயன் வேறு என்ன?
அவர் செய்த சிறுசிறு இடையீடுகள் கூட சமூகத்தில் பெரும் தாக்கங்களைச் செய்திருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது. எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை முன்வைத்து அடிவாங்கிய காலத்தில், அவருக்கு தன் நண்பர்கள் மூலம் சரியான வழியைக் காட்டி, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை முப்பதிலிருந்து ஐம்பது சதவீதமாக அதிகரிக்க வைத்தார் அவர். அந்த வகையில் இன்றைய 69 சதவீத இடஒதுக்கீடுக்கு அவரும் ஒரு மூல காரணமாக இருந்தார். அதுதான் பிறகு பிசி, எம்பிசி இடஒதுக்கீடாகப் பிரிந்தது. இப்படி எண்ணற்ற வகைகளில் அரசுகளிடமும் கட்சிகளிடமும் தலையீடு செய்து சமூக அதிகமாரமற்ற மக்களுக்கு அதிகாரத்தை உறுதிசெய்து தந்தவாறே இருந்தார் அவர்.”
“ஐயா ஆனைமுத்து தான் என் மானசீக குருவாக இருந்துவருகிறார் என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். இந்தியா முழுக்கச் சென்று அவர் செய்த சமூகநீதிப் பரப்புரையை அடியொற்றியே நானும் என் மொழியுரிமைப் பரப்புரைக்கான முறைமையை வகுத்தேன். அவர் அதில் மாபெரும் வெற்றி பெற்றார். அதுதான் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கப்பட்டதாகும். நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது.” – ஆழி செந்தில்நாதன் (ஏப்ரல் 6, 2021)
ஆங்கிலத்தில் அல்லாமல் அத்தகு இந்தி பிரசுரங்களை நாடாளுமன்ற ஈரவை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என அனைவரிடமும் சேர்ப்பிக்க ஆவன செய்தார். அது பயன்மிக்க செயற்பாடாய்ப் பரிணமித்தது.
ஆனைமுத்து வெளியிட்ட ‘பெரியார் சிந்தனைகளில்’ இருந்து கன்னடத்தில் பல்கலைப்பாடமாக வைக்கப்பட்டது. கன்னடத்தில் நூலுருப்பெற தமிழவன் முயற்சியால் சாத்தியமாயிற்று.
“திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் பெரியார் சிந்தனைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் 1985 இல் மலையாளத்தில் “” ஞானும் நிங்ஙளும் “” என்ற தலைப்பில் மலையாளத்தில் வெளியிடப்பட்டது. ஆனைமுத்து ஐயா அவர்களின் அணிந்துரை நூலில் இடம்பெற்றுள்ளது. இதனை மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் கே.எம்.பிரபாகர வாரியர். மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில், “பெரியார் என்பதற்கு மகாத்மா என்பது பொருள் ” என்கிறார். “விவாதப் பொருளாய் உள்ள ஒரு மாமனிதரின் பின்னால் உள்ள ஒரு பச்சை மனிதத்தை இந்நூலின் மூலம் நீங்கள் காணலாம்” என்கிறார் பிரபாகரவாரியர்.” – சா.குப்பன்
1994 அக்டோபர் முதலாகத் தொடர்ந்து 14 ஆண்டுகள் ‘Periyar Era’ ஆங்கில இதழையும் தம் ஆசிரியத்துவத்தில் வெளிக்கொணர்ந்தார்.
1978 – இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையை ஒருங்கிணைத்தார். ராம் அவதேஷ் சிங் அதன் தலைவராகவும் வேஆ அதன் துணைத்தலைவராகவும் செயல்பட்டனர். பின்னர் அப்பேரவை அனைத்திந்திய ஒடுக்கப்பட்டடோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்,ஆதி மலைவாணர் கூட்டமைப்பாக அகலித்தது.
“பெரியாரியல் நெறியில் தேசியஇன வழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடியரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தலே ” அதன் நோக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுகிறார் பொன்.குமார்.
வடபுலத் தலைவர்களால் அறியப்பட்ட பெரியாராக ஆனைமுத்து அவர்கள் இடையே புதிய வெளிச்சம் பாய்ச்சும் அனைத்திந்தியத் தலைவராக அவரே திகழ்ந்தார் எனிலது மிகையாகாது.
தொடரும்...
இக்கட்டுரையின் அடுத்த பாகங்களைப் படிக்க:
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க