காசி கியான்வாபி மசூதி

காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை

காசியில் உள்ள கியான்வாபி மசூதி, விஸ்வநாத் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக தொடர்ந்து வலதுசாரி குழுக்களால் சர்ச்சையாக்கப்பட்டு  வருகிறது. 1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். 

இந்திய தொல்லியல் துறைக்கு ஆய்வு நடத்த உத்தரவு

அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த  வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் மசூதியின் நிர்வாகக் குழு, அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் இந்த உத்தரவை எதிர்த்துள்ளது. 

சிவில் நீதிமன்ற நீதிபதி அசுதோஷ் திவாரி இந்திய தொல்லியல் துறையிடம் பின்வருமாறு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ”சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தற்போது நிற்கும் மத அமைப்பு ஏதோ ஒரு மதமைப்பின்மீது வலிந்து கட்டப்பட்டதா அல்லது ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டதா என்று கண்டுபிடிக்க வேண்டும்”. மேலும் இந்த இடத்தில் மசூதி கட்டப்படுவதற்கு முன்னர் இந்து சமூகத்தைச் சேர்ந்த ஏதேனும் கோயில் இருந்ததா என்பதை அடையாளம் காண ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

அயோத்தியில் பாபர் மசூதி வழக்கில் இந்துத்துவா கட்சிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 18 மாதங்களுக்குள், காசியில் இதுபோன்ற ஒரு உத்தரவு வந்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

ஒளரங்கசீப் காசி விஸ்வநாத் கோயிலை இடித்தாரா?

வாரணாசியில் கங்கைக் கரையின் வெகுஅருகில் இருக்கும் காசி விஸ்வநாத் கோயில், சிவபெருமானின் மிக முக்கியமான ஆலயமாகும். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ‘ஜோதிர்லிங்கங்களில் இது மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. வரலாற்யில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த கோயில்  பழுதடைந்தபோதெல்லாம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 

1669-ம் ஆண்டு ஒளரங்கசீப் காலக்கட்டத்தில் பழுதுகள் புதுப்பிக்கும் போது அக்கோவிலின் ஒரு பாகம் இடிக்கப்பட்ட, அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவா சக்திகள் சொல்லி வருகிறார்கள்.

இந்தூரின் ராணியால் புதுப்பிக்கப்பட்ட காசி கோவில்

கியான்வாபி மசூதி கட்டப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தூரின் ராணியான அகிலியாபாய் ஹோல்கர், கியான்வாபி மசூதிக்கு அருகில் புதிய மாற்றங்களுடன் காசி விஸ்வநாத் கோவிலைக் கட்டினார். அந்த கோவிலும் மசூதியும் ஒரே இடத்தில் ஒட்டி நெருக்கமாக உள்ளது. 

கியான்வாபி மசூதி

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991

ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்ததைப் போலவே எந்தவொரு வழிபாட்டுத் தலமும் பராமரிக்கப்பட வேண்டும். இந்த தேதிக்கு முன்னர் அத்தகைய இடங்களில் நடந்த ஆக்கிரமிப்பு குறித்தான வழக்குகளை நீதிமன்றம் ஏற்காது என்று வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 (Places of Worship (Special Provisions) Act, 1991.) கூறுகிறது. 1991-ம் ஆண்டு ராம ஜென்மபூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. 

இந்த சட்டம் வாரணாசியில் காசி விஸ்வநாத்-கியான்வாபி பிரச்சினைக்கு பொருந்தாது என்று வியாழக்கிழமை நீதிபதி திவாரி உத்தரவிட்டுள்ளார். இது இஸ்லாமியர்களின் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

காசி விஸ்வநாத் கோயில் பிரச்சினையின் பின்னணி

இந்த வழக்கு குறித்தான முதல் மனு 1991-ம் ஆண்டு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மூன்று நபர்களால் தாக்கல் செய்யப்பட்டது. பண்டிட் சோம்நாத் வியாஸ் இவர் காசி விஸ்வநாத் கோயிலின் குரு, சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் ராம்ராங் சர்மா மற்றும் ஹரிஹர் பாண்டே. 

காசி விஸ்வநாத் கோயில் சுமார் 2050 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது என்றும் 1664-ம் ஆண்டு ஒளரங்கசீப்பால் அந்த கோவில் அழிக்கப்பட்டது என்றும் அந்த மனுவில் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இடிக்கப்பட்ட கோயிலின் எச்சங்கள் அதே இடத்தில் கியான்வாபி மசூதியைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். “கோவில் நிலம்” இந்து சமூகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் வழிபாட்டுத் தளங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991 இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்றும் அந்த மனு  வலியுறுத்தியது. 

இது வழிபாட்டுத் தளங்கள் சட்டத்தால் தடை செய்யப்பட்டதால் இந்த வழக்கிற்கு தீர்ப்பளிக்க முடியாது என்று கூறி 1998-ம் ஆண்டு அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடி தனது எதிர்வாதத்தை முன்வைத்தனர். இந்த விவகாரம் 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

பின் 2019-ம் ஆண்டு இந்த பிரச்சினை பற்றி ஒரு முடிவெடுக்க  தொல்லியல் துறையை நாடவேண்டும் என்று வழக்கறிஞர் ரஸ்தோகி, மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். 

மனுதாரர்கள், கோயிலின் சிவலிங்கம் “சுயமாக (சுயம்பு) மற்றும் இயற்கையாகவே பூமியின் ஆழத்திலிருந்து எழுந்தது. எனவே, இடிக்கப்பட்ட பின்னரும் கூட, “விஸ்வேஷ்வரின் ஸ்வயம்பு சிவலிங் அதே இடத்தில் தொடர்கிறது” இதுகுறித்து ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை முன்வரவேண்டும் என்று குறிப்பிடுகிறது. 

வக்பு வாரியத்தின் எதிர்ப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரை ஆய்வு நடத்த உத்தரவிட்ட வாரணாசியின் சிவில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக வக்பு வாரியத்தின் தலைவர் ஜுஃபர் அஹ்மத் ஃபாரூகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காசி விஸ்வநாத் நடைபாதை திட்டம் 2019

கோவில் வளாகத்திலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதையை  உருவாக்கும் நோக்கத்தில் 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஒரு திட்டத்தை வெளியிட்டது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 2018-ம் ஆண்டு கியான்வாபி மசூதியின் ஒரு பாதையின் தளத்தை இடித்தார்கள். இதனால் அங்கு குடியிருந்த முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடி, காசி விஸ்வநாத் நடைபாதை திட்டத்தை 2019 மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் அயோத்தி பிரச்சனை போன்ற ஒரு முடிவில்லாத வன்முறையை கட்டவிழ்க்கும் ஒரு பெரிய திட்டம் துவங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *