உனக்கு தகுதியில்லை என்று கர்ணனை தலைகுனிய வைத்த பிராமணர்கள்
ஒருமுறை அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் வில் எய்தும் போட்டி வருகிறது. அர்ஜுனனை விட மிகச் சிறப்பாக வில் எய்தி தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைக்கிறான் கர்ணன். அப்போது அங்கு இருந்த பிராமண குரு கிருபர் அவனது பிறப்பைப் பற்றி கேட்கிறார். கர்ணன் தான் ஒரு தேரோட்டியின் மகன், ஒரு உழைப்பாளியின் மகன், தான் ஒரு சூத்திரன் என்று வெளிப்படையாகக் கூறினார்.
”ஒரு ஷத்ரியனோடு மோத ஒரு ஷத்ரியனுக்கு மட்டும்தான் தகுதி உண்டு” என்று கிருபர் கூறியதைக் கேட்டபோது, ”மழை நீரில் நனைந்து தலைகுனிந்த தாமரை மலர் போன்று அவன் காணப்பட்டான்” என்று வர்ணிக்கிறது பாரதக் கதை.
குதிரையை செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொண்டு போ!
தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.

பாரதக் கதை நெடுகிலும் ஏற்றத்தாழ்வால் அவமானப்படுத்தப்பட்ட கர்ணன்
ஒருவன் தனது உழைப்பு, அறிவு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தியும் அவற்றை அங்கீகரிக்க முடியாமல் சனாதன மனம் பிறப்பு பற்றியும் அதனூடாக தகுதி பற்றியும் தொடர்ந்து வினவிக்கொண்டே இருக்கும். ஆனால் ஆளும் வர்க்கத்திற்குள் பகை எழும்போது பிறப்பைப் பொருட்படுத்தாமல் பலி கொடுக்க ஆள் சேர்க்கும். அந்த வகையில்தான் துரியோதனன் கர்ணனை அங்கத தேசத்திற்கு அதிபதியாக்கி அழித்தான்.

வருணாசிரம ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அவமானங்களையும் இடையூறுகளையும் மகாபாரதக் கதை நெடுகிலும் கர்ணன் சந்தித்க நேர்ந்தது. வில் வித்தையிலும், குதிரை ஏற்றத்திலும் சத்ரியர்களை விட மிக திறமைசாலியாக இருந்தும் அவன் குலத்தை மையமாக வைத்து பலமுறை அவமானப்படுத்தப் படுகிறான். போர்க்களத்தில் அர்ஜுனனின் அம்பால் கர்ணன் கொல்லப்படும் வரை ஏதோ ஒருவகையில் அவனுக்கு உரிய வீரமும் அறிவும் அங்கிகரிக்கப்படாமல் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது.
பரசுராமனின் சாபம்
சிறந்த வில்லாளி ஆகவேண்டும் என்பது கர்ணனின் மிகப்பெரிய விருப்பம். அதனால் துரோணரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளச் சென்றான். தேரோட்டியின் மகன் எனவே நீ பிறப்பால் தாழ்ந்தவன், உனக்கு நான் வில்வித்தை கற்றுத் தரமுடியாது என்று மறுத்துவிட்டார். மிகவும் மனம் நொடிந்துபோன கர்ணன் பிராமணர்களுக்கு மட்டும் வில்வித்தை கற்றுதரும் பரசுராமரிடம் சென்று தானும் ஒரு பிராமணர் என்று கூறி வில்வித்தை கற்றுக் கொள்கிறான்.
ஒருமுறை காட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, சோர்வுற்ற பரசுராமர் தூங்க இடம் தேடினார். அப்போது கர்ணன் தனது மடியில் அவரை தலைவைத்து தூங்கச் சொன்னான். அதை ஏற்றுக்கொண்டு கர்ணனின் மடியில் ஆழ்ந்து உறங்கலானார். அப்போது ரத்தம் உறிஞ்சும் வண்டு கர்ணனின் தொடையைக் கடித்து, அதனால் ரத்தம் கசியத் துவங்கியது. அந்த வேதனையிலும் தனது குருவின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்று அப்படியே அமர்ந்திருந்தான் கர்ணன். கசிந்து வழிந்த ரத்தம் பட்டு கன்விழித்த பரசுராமர், “இது யாருடைய ரத்தம்?” என்று கேட்டார் .”என்னுடையது” என்று சொன்னான் கர்ணன். இவ்வளவு ஆழமாக காயப்படுத்தியிருந்த போதும் அசைவின்றி அப்படியே அமர்ந்திருந்த கர்ணனை பார்த்து,
“இந்த வலியைத் தாங்கிக் கொண்டு சிறு அசைவும் இல்லாமல் இருக்கிறாய் என்றால் நீ நிச்சயமாக பிராமணனாக இருக்க முடியாது. நீ யார்?” என்று சினத்துடன் கேட்டார் பரசுராமர். ”ஆம் நான் பிராமணர் அல்ல” என்று கர்ணன் பதில் சொன்னான்.
”நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நான் கற்றுக்கொடுத்த வித்தைகளை தக்க சமயத்தில் குறிப்பாக உன்னைப் பாதுகாக்கத் தேவைப்படும்போது பயன்படுத்த முடியாமல் போகும். அதுவே உனக்கு சாவைத் தரும்” என்று பரசுராமர் சபித்தார்.

பசுவுக்காக கர்ணனுக்கு சாபம் விட்ட இன்னொரு பிராமணன்
மிகவும் மனம் நொந்துபோன கர்ணன் காட்டுக்குச் சென்று தவம் செய்தான். அப்போது பசி தாளாமல் புதருக்குள் இருந்த ஒரு விலங்கை அம்பெய்தி கொன்றான். அருகே சென்று பார்த்தபோது அது காட்டு விலங்கல்ல, அங்கு மேய வந்த ஒரு பிராமணனின் பசு என்று தெரிந்தது. இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைகிறான் கர்ணன். அங்கு வந்த பிராமணரிடம் மன்னிப்பு கேட்கிறான்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் “எனது பசுவை நீ கொன்று விட்டாயே, இதற்கான சாபம் உனக்கு ஏற்படட்டும். நீ ஒரு போர்வீரனைப் போல இருக்கிறாய், எனவே போர்க்களத்தில் உனக்கு அவசியம் ஏற்படும்போது, தக்க சமயத்தில் உனது ரதம் ஆழமாகப் புதையுண்டு போகும். ரதத்தை மீட்கவும் முடியாமல், போர்க்களத்தில் உதவியும் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். இந்த உதவியற்ற பசுவுக்கு ஏற்பட்ட அதே முடிவு உனக்கும் ஏற்படும்.” என்று சபித்தார். மகாபாரதக் கதையின்படி குருச்சேத்திரப் போரின் முக்கியமான கட்டத்தில் கர்ணன் ஆயுதமற்றவனாக உதவியற்றவனாக இறந்துபோக இந்த சாபங்கள் காரணம் என்று நம்பப்படுகிறது.

பிராமணர்களை பூஜிக்கச் சொல்லும் விஷ்ணு புராணம்
தேவதைகள், பசுக்கள், பிராமணர் போன்ற பெரியோர்களை பூஜிக்க வேண்டும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. அதேபோல் கண்ணன் தனது தாய் தந்தையரைப் பார்த்து, ”குருவுக்கம், தேவருக்கும், பிராமணருக்கும், தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்பவரின் காலம்தான் பயனுள்ளது” என்று கூறுகிறான். இவ்வாறு இதிகாசங்களும் புராணங்களும் பிராமணர்களை பூசிக்கம் அளவிற்கு நயவஞ்சகமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை நடைமுறைபடுத்திக் கொள்ள பிராமணர் சாபம் அப்படியே பலிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது இன்றளவும் பொதுபுத்தியில் அப்படியே உள்ளது.
சகர மன்னனின் மகன்களை சாம்பலாக சாபமிட்ட பிராமணன்
விஷ்ணு புராணத்தில் இதுபோன்று நிறைய செய்திகள் வருகிறது. சகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கினான். அதற்காக தனது பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் யாகக் குதிரையை சுற்றுக்கு விட்டான். அந்த குதிரையை யாரோ கொண்டுபோய் பாதாளத்தில் விட்டுவிட்டார்கள். அதைத் தேடிக்கொண்டு பிள்ளைகள் சென்றபோது வழியில், கபிலர் பகவான் என்கிற ஒரு பிராமண முனிவர் ஒளிப்பிழம்பாக ஜொலித்துக் கொண்டிருந்தார். இவர்தான் குதிரையைக் கொண்டு போனார் என்று தவறாக நினைத்து அவர் மீது பாய்ந்தார்கள். இதனால் கோபம் கொண்ட பிராமண முனி இவர்கள் சாம்பல் ஆகட்டும் என்று சாபம் கொடுத்தார். அந்த கணமே அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆனார்கள்.
இவர்களைத் தேடி சகர மன்னனின் பேரன் அம்சுமான் வந்தான். அவன் பிராமண முனிவரைப் பணிந்து வணங்கினான். இதனால் மகிழ்ந்துபோன முனிவர் பாதாளத்தில் திரிந்து கொண்டிருந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு போகுமாறு கூறினார். அப்பொழுது அவன் சுவாமி பிராமண சாபத்தால் அழிந்து போன எனது தந்தைமார்கள் சொர்க்க லோகத்தை அடையும்படியான ஒரு வரத்தை நீங்கள் தாருங்கள் என்று வேண்டினான். அதற்கு கபில முனிவர் கங்கை மகாநதியின் புனித நீரால் இறந்தவர்களின் எலும்பும் சாம்பலும் கரைக்கப்பட்ட உடனேயே அவர்கள் தேவலோகம் செல்வார்கள் என்று கூறினார். இங்கே பிராமணர்கள் சாபம் தருபவர்களாகவும், அதை நீக்குவதற்கான சக்தியும் பெற்றவர்களாகவும் புராணங்கள் கூறுகிறது. கிட்டத்தட்ட கடவுள் நிலையில் தங்களை வைத்துக்கொள்ளவே பிராமணர்களுக்கான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன.
பிராமணப் பெண்மணியின் சாபம்
பிராமண முனிவர்கள் மட்டுமல்ல, ஒரு பிராமணப் பெண்மணி சாபம் கொடுத்தாலும் அது பலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வசந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பிராமண முனிவர் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்து காமலீலைகளில் மூழ்கியிருந்தார். இதை சவுதாச மன்னன் பார்த்துவிட்டான். இவனைக் கண்டு அந்த இருவரும் பயந்து ஓடினார்கள். அந்த முனிவரைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான் மன்னன். இதனால் கோபம் கொண்ட அந்த பிராமணப் பெண்மணி ”அடப்பாவி நீ காமத்துக்காக முயற்சிக்கும்போது மரணம் அடைவாயாக” என்று சாபம் இட்டாள்.
இந்த சாபத்தை புறக்கணித்துவிட்டு சவுதாய மன்னன் தனது மனைவியான மதயந்தியிடம் ஆசையோடு நெருங்கும்போதெல்லாம் சாபத்தை நினைவூட்டி அவரோடு கூடுவதற்கு அவரது மனைவி மறுத்துவிட்டாள். எனவே மன்னன் புத்திர பாக்கியம் இல்லாமல் ஆனான். பின் தனது குருவாகிய வசிஸ்ட மகரிஷியிடம் புத்திர பாக்கியத்திற்காக வேண்டினான். அவரும் மன்னனின் பத்தினியாகிய மதயந்திக்கு புத்திரன் உண்டாகச் செய்தார்.
குலத்தின் காரணமாக பிராமணர்களின் சாபத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரன்

இப்படி பார்ப்பனர்களின் சாபங்கள் பல வீரர்களையும், மன்னாதி மன்னர்களின் ராஜ்ஜியத்தையும் வீழச் செய்த இந்து மத புராணங்களிலெங்கும் விரவிக் கிடக்கின்றன. பிறப்பு ஒன்றின் வாயிலாக அவர்கள் அழிக்கும் சக்தி பெற்றவர்களாகவும், அதேசமயம் கெஞ்சி கேட்கும்போது மனம் இறங்கிக் காக்கும் ஆபத்பாந்தவர்களாகவும் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளார்கள். அனைத்து திறன்களையும், உலகே வியக்கும் வீரத்தையும் கொண்டிருந்த போதும், கர்ணனின் குலம் ஒன்றே அவனை வீழ்த்துவதற்கான காரணமாக மாறிப் போகிறது. கர்ணனை நேர்மையில்லா முறையில் வீழ்த்துவதற்கான அத்தனை காரணங்களையும் பார்ப்பனர்களின் சாபம் உருவாக்கிக் கொடுக்கிறது. கர்ணன் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்ததற்காகவே பிராமணர்களின் சாபத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரனாக வரலாற்றில் நிலைகொள்கிறான்.