இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
3.குறளும், மனுதர்மமும்: பெரியார், ஆனைமுத்து இருவர் நோக்கிலும்…
அ. ஆதிக்கத்திற்கெதிரான கலகப்பிரதியாகத் திருக்குறள்
நம்மிலும் பெரும்பாலோர் பேராசிரியப் பெருந்தகைகள் உட்படக் குறளைப் பரிமேலழகர் கண்களால் தானே காண்கின்றோம். அவர் கொண்ட பாடம், அதிகார முறைப்பாடு, மெய்காண்முறை, உரைகோள்முறை இவற்றிற்கு ஊடாகத்தானே அணுகத் தலைப்படலாகின்றோம். மதிப்புக்குரிய பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், ராஜ் கௌதமன், தமிழவன், அறிவுமணி ஆகியோரும்; விமர்சகர் ந.முருகேசபாண்டியன்,கவிஞர் ராணிதிலக் ஆகியோரும் நவீன பரிமேலகழகர்களாய் ஆகிநிற்பதும் நவீன சிந்தனைப்பள்ளிகளின் வரலாற்றில் முரண்நகையே. இத்தொடர்பில் இதற்கும் அப்பாலாகப் பேசிட இங்கே இடமில்லை. மேலதிகப் புரிதல்களுக்கு என் ‘தமிழின் நிறமும் ஆரியவர்ணமும்’ நூலிற்காண்க.
இத்தொடர்பில் குறளின் ஆங்கில ஆக்கம் குறித்த இருவேறு தரப்புகளையும் இத்துடன் காண்போம்:
“ஆங்கில முதலிய அயல்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகள் எல்லாம் பரிமேலழகர் உரையைக் கொண்டு மொழிபெயர்த்தவையே ஆகும். ” – புலவர் குழந்தை (‘திருக்குறள் பன்முக வாசிப்பு’)
“கொல்கத்தாவில் கட்டமைக்கப்பட்ட ‘இந்துச்சட்டத்திற்கு முற்றிலும் மாறான மனுதர்ம நூலிலிருந்து வேறுபட்ட பிரதியாகத் திருக்குறளை (வீரமா முனிவர்) கண்டுபிடித்தார். எல்லிஸ் (1818), துறு(1840), கோவர் (1871),துறு & லாசரஸ் (1886), போப் (1886), எனப் பலரும் திருக்குறளை மொழிபெயர்த்தனர். இந்தியவியல் என்பதில் மாறுபட்டது திராவிடவியல் எனும் கருத்தாக்கத்தை – திருக்குறள் வழி கட்டமைத்தனர். அவைதிக மரபை எதிர்கொள்ளப் பரிமேலழகர் திருக்குறளைக் கட்டமைத்ததைப் போல், இந்து – சாதிய – வர்ணாசிரமத்தை எதிர்கொள்ளத் திருக்குறளைக் கட்டமைத்தனர். திருக்குறள் அடிப்பபடையில் அவைதிக மரபுகளைக் கொண்டிருப்பதால், அய்ரோப்பியர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு அது உதவியது.” – வீ.அரசு (மேலது)
தமிழற மரபின் சமயச் சார்பிலிக் கோட்பாடும், அய்ரோப்பிய அறிவொளி மரபின் மதநீக்கிய (secular) கோட்பாடும் சங்கமிக்கும் சங்குமுகமே ஈதெனலாம்.
“பெரியார் தமிழ் மறுமலச்சி இயக்கத்தின் தூணாக விளங்கிய திருக்குறளைப் போற்றினார். தன் கலகச் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு திருக்குறளையும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கலகப்பிரதியாகவே பெரியார் கண்டுபிடித்தபோது, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறளின் பங்களிப்பு பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது.” – க.பஞ்சாங்கம் (‘காக்கைச் சிறகினிலே’ – ஜூன், 2014)
இத்தொடர்பில் ‘திருக்குறளும் மனுதர்ம’மும் குறித்த பெரியாரின் வாசிப்புப்பிரதி முகாமையானதாகும் (இக்கட்டுரை ‘திருக்குறளும் பெரியாரும்’, ‘ திருக்குறள் பன்முக வாசிப்பு’ இரு நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
“பண்டிதர்கள் சிலர் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு திருக்குறளின் கருத்தையும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து இதைப்பற்றி மனுதர்மத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்ப்பார்களானால் இந்தக்குறள் மனுதர்மத்தின் இந்தச் சூத்திரத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது என்று புள்ளிபோட முடியும். 100க்கு 75 பாட்டுகள் இப்படியே அமைந்திருக்கும் என்று நான் துணிந்து கூறுவேன்.”
“திருக்குறளை எழுதியவர், இதை எழுதினால் எங்கு பார்ப்பனர்கள் எதிர்ப்பார்கள் என்றோ, எங்கு பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்றோ கவலைப்படாமல் எழுதியிருக்கிறார்.”
“திருக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் திருக்குறளில் அறம் என்று இருந்தால் அதற்கு ‘மனுதர்மம்’ என்றுதான் பொருட்படுத்தி உரை எழுதியிருக்கிறார்.”
– ஈ.வெ.ராமசாமி
இதுதான் நவீனபரிமேலழகர்களான நம் பேராசிரியப்பெருமக்கள் இத்தகு புள்ளிவைக்கத் தவறி அலங்கோலக் கோலங்கள் இட்ட புள்ளி.
‘எது நாகரிகம்’,’ பொதுத்தொண்டு’, ‘வள்ளுவரும் கடவுளும்’, எனும் உள் தலைப்பிட்டு முறையே ‘பெயக்கண்டும், ‘குடிசெய்வார்க்கு’, ”இரந்தும் உயிர்வாழ்தல்’ எனவரும் குறட்பாக்களை அவர் பொருட்படுத்தி ஏற்கும் பாங்கு அவர் தம் வாசிப்பின் அரசியலைக் கட்டமைக்கும் திறத்திற்கு எடுத்துக்காட்டெனலாம். அரசன்,அமைச்சர்,விவசாயி, துறவி, வியாபாரி, பொதுநலத்தொண்டர், காதலன், காதலி சகலருக்கும் மூடநம்பிக்கை புகுத்தப்படாமல் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் எடுத்துரைத்தார். நமக்கு வேண்டிய முழுஅறிவையும் கொடுக்கக்கூடிய ஒரேநூல் என்றவர் குறளையே தெரிந்துரைத்தார். ஒழுக்கக்கல்விக்கான மார்க்கமாக அவர் குறள்மதத்தையே பரிந்துரைத்தார்:
“யாரேனும் நீ என்ன மதம் என்றால் குறள்மதம் என்று சொல்லுங்கள். மனுதர்மத்திற்கு உண்மையான மறுப்புநூல் திருக்குறளேயாகும்.” – (‘பெரியார் சிந்தனைகள்’:3)
“திராவிடர் கழகம் திருக்குறளைப் பின்பற்றிச் செயல்படும் கழகம். இந்த நாட்டிலே மனுதர்மம் ஒழிந்து, மனிதத்தன்மை ஏற்படப் பாடுபட்டுவரும் கழகத்திற்குக் குறள்தான் வழிகாட்டி.” (‘பெரியார் சிந்தனைகள்’: 1)
“கீதையை எறிந்துவிட்டு உண்மைத் திராவிடரான திருவள்ளுவரின் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும். “- ‘குடி அரசு’ – 1/5/1948
பெரியாரின் குறள் குறித்த புரிதல்களில் குறைபாடுகளுக்கும் போதாமைகளுக்கும் அப்பால் அவரின் வாசிப்பின்பிரதி அதனைக் கலகச்செயற்பாடாக முன்னெடுத்ததே முகாமையானதேயாகும்
ஆ. ஆனைமுத்துவின் ‘குறள் மலரும்’, ‘குறள் முரசும்’
1950 – இல் திருக்குறளார் வீ.முனுசாமி ஆசிரியராகவும், வே.ஆனைமுத்து துணையாசிரியாகவும் பொறுப்பேற்ற – ‘குறள் மலரை’ வெளிக்கொணர்ந்தார். அதில் மனுதர்மங் குறித்து…
“மனுவிற்கும் குறளுக்கும் – மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடேனும் ஒப்புநிற்குமா?
“The learned are purified by a forgiving disposition, those who have commited for bidden actions liberality, secred sinners by muttering (sacred texts) and those who best no the Veda austerities.”
“படித்து உணர்ந்தவர்கள் பாவம் செய்யலாம் – பரந்த நோக்குடன் இரக்கம் காட்டினால் அப்பாவம் பறந்தோடும். ஒதுக்கப்பட்ட தீச்செயல்களைப் பின்பற்றி ஒழுகலாம். – பெருந்தன்மை அல்லது விரிந்த நோக்கம் என்ற அடிப்படையில் அப்பாவம் அடிபட்டோடும். தலைமறைவாக ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாம். புனித வேதங்களை (தூயமறைகளை) ஓதுவதனாலே அப்பாவங்கள் ஓடிவிடும்.வேதங்களின் உயர்வினை உணர்ந்தவர்கட்கும் பாவம் நீங்கித் தூய்மை உண்டாகப் பலவழிகளும் உண்டு.” – என்பதுதான் மேற்கண்ட மனுநீதியின் – வடநாட்டினரின் அறநெறியின் – விளக்கமான மொழிபெயர்ப்பு. “- வே.ஆனைமுத்து (‘ குறள் மலர்’ – 29/9/1950)
திராவிடரின் வழிகாட்டியான திருக்குறளைக் கற்க வழிசெய்யக் கூடியதாகக் ‘குறள்முரசு’ தொடங்குவதாக அறிவித்து, கருஞ்சட்டைத் தோழர் அனைவரும் திருக்குறள் உரை தொடங்கப்படும் முன்னரே ஆயிரக்கணக்கில் உறுப்பினராகச் சேர வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார்.
1957 – இல் ‘குறள் முரசை’ யும் வெளிக்கொணர்ந்தார். ஆனாலும் அறிவித்தபடி ஆனைமுத்தின் குறளுரை அப்புறம் வெளிவரவே இல்லை.
இ. அவரவர் இயக்க அரசியல் செயற்பாடாக….
“மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்
பரிமேல் அழகர் உரையோ, வள்ளுவர்திருவுள் ளத்தின் திரையே ஆனது.”
– பாரதிதாசன் கீதையைக் கண்ணன் நான்மறை அடிப்படையிலும், குறளை வள்ளுவர் ஆரூர் கபிலர் அருளிய எண்ணூல் [எண்(தருக்கம்) + நூல் = எண்ணூல், -கபில சாங்கியம்] அடிப்படையிலும்; குறளுரையைப் பரிமேலழகர் வடநூல் வழிநூல் என எண்ணுமாறுமே செய்துள்ளனர் எனப் பாரதிதாசன் ‘இசைபெறு திருக்குறள்’ கவிதை பாடிநிற்கும்.
பாரதிதாசனின் குறளுரை, ‘பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் – திருக்குறள் உரை’ எனும் பெயரில் 1994 – இல் நூலுருப் பெற்றது. (அது 83 குறள்களுக்கு மட்டுமே ஆனதாகும். அவருடைய ‘குயில்’ இதழில் அவை ஏலவே வெளியானவையே.) உரையாசியருக்குரிய சொன்மை, பொருண்மை அறிதலாம் பொருள்கோள் முறைமைத் திறமீதூர அமைந்தியலக் கூடிய சிறப்பிற்றே பாவேந்தர் உரையாகும்.
“மொத்தத்தில் பாரதிதாசனின் உரை, தமிழ்மறுமலர்ச்சி இயக்கத்திலும், திராவிட இயக்கத்திலும் வேர்கொண்ட ஒரு மனத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. தனது காலத்தேவைக்கு ஏற்ப பழைய பிரதியை அர்த்தம் காணும் வரலாற்றுப் பார்வை காரணமாக இடைக்காலத்தில் பரிமேலழகரால் திருக்குறளுக்குள் சேர்ந்த வடமொழிசார் கருத்துகளைக் களைந்து, தன் காலத் தேவைக்கு ஏற்ப -புதுப்பொருள் காணும் முயற்சியில் பாவேந்தரின் உரை பெரிதும் வெற்றி
கண்டுள்ளது என்றே கருதலாம். அந்த அளவிற்குத் திருக்குறளும் இடம் கொடுக்கிறது என்பது அப்பிரதியின் பெருமையாகும்.” – க. பஞ்சாங்கம் (”திருக்குறள் உரைவளம்’ – அச்சு வடிவம் பெறா பயிலரங்கக் கட்டுரை)
ஆகக் குறளுக்குத் திராவிட இயக்கச் செயற்பாடாக உரைகாணப் போவதாக ஆனைமுத்து அறிவித்தார், ஆனாலது ஈடேறவே இல்லை. பாரதிதாசன் தொடங்கினார் ஆனால் அம்முயற்சி முற்றுப்பெறவில்லை.ஆனாலிதை புலவர் குழந்தை சிறப்புற ஈடேற்றிவிட்டார்.
“திருக்குறளை அயோத்திதாசர் பௌத்ததரும நோக்கில் விரிவாகப் பொருள் கண்டிருப்பது அவர் காலத்திய தலித் அரசியல் செயல்பாடாகும்.” – ராஜ் கௌதமன் (‘தமிழினி’ – செப், 2010)
ஆம் பரிமேலழகர் குறளுக்கு வர்ணதரும அடிப்படையில் திட்பநுட்ப உரைகண்டதும் அவர் காலத்திய வைதிக அரசியல் செயற்பாடே!
(மெய்யான பொருண்மை அறிய நேர்ந்தால் பார்ப்பனர் குறளையே கிடைக்காவண்ணம் முற்றிலுமாக அழித்தே விடக்கூடுமென்றஞ்சி அதனைக் காக்குமுகமாகவே இத்தகு உரையைப் பரிமேழகர் வழங்கினார் என்பது பாவாணர் நிலைப்பாடே)
ஆரூர் கபிலர் எண்ணிய (கபில சாங்கிய) அடிப்படையில் குறள் ஆக்கப்பட்டதென்னும் பாரதிதாசன் குறளுரையும் ; பகுத்தறிவியக்க அடிப்படையில் உரைகண்ட புலவர் குழந்தை உரையும் அவர்கள் காலத்திய திராவிட இயக்க அரசியல் இயக்கச்செயல்பாடுகளே
இன்னுஞ் சமயக் கணக்கர் அவரவர் சமயச்சார்பாய் குறளைக் கதைப்பதும் இவையாவுங் காணக்காண’அய்யன் சிலையும் தன்னுள்ளே மெல்ல நகும்’
இத்தொடர்பில் வாசிக்கவேண்டிய முகாமையான நூல் அண்ணாமலைப் பல்கலை வெளியீடான ‘திருக்குறளில் மெய்ப்பொருட் சுவடுகள்’ ஆகும்.
“வள்ளுவர் கண்ட மெய்ப்பொருளியற் கூறுகள் வேற்றுச் சார்பால் விளைந்தனவாகாத தமிழ்மரபை ஒட்டிய பழம்பெருங்கொள்கைகளாம். ஆகவே காலத்தால் பின்தோன்றியனவும், கடவுட்கொள்கையை ஒத்துக்கொள்ளாதனவும், மூலநூல்களுக்கு உரைகாணும் வகையால் உண்டானவும் ஆகிய மெய்ப்பொருட்சுவடுகள் தமிழ்நாட்டில் பதிவதற்கு முன்பே இருந்த கடவுட்கொள்கையே வள்ளுவர் காட்டும் மெய்ப்பொருட்சுவடுகள் என்பதைத் துணியலாம். இதற்குப் பெயர் எதை வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளுங்கள். ” ச.தண்டபாணி தேசிகர்
இந்நூலில் தேசிகர் ஒவ்வொரு இயலிலும் வள்ளுவரை வெவ்வேறு சமயத்தவரே என விதவிதமாக எழுதிக் காட்டியவர். இறுதி இயலில் அவற்றை மறுத்தே இத்தகு முத்தாய்ப்பையே முன்வைத்துள்ளார்.
தொடரும்…
இக்கட்டுரையின் இறுதி பாகத்தினை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்:
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க