இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
4. ஆனைமுத்து ஆவணப்பாடுகளும் அதிலென் ‘அணிலுதவி’யும்!
விரல்நுனியில் விவரமழை பொழியும் திராவிட இயக்க மின்னம்பலமே அவர். தேதிவாரியாக ஆற்றொழுக்காய்த் தெரிவிப்பார். அவருடைய மகத்தான ஆவணக்கொடையாக 1974 – இல் ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’, எனச் சற்றொப்பப் பத்தாயிரம் பக்கங்களில் முத்தொகுதிகளாக வெளிக்கொணர்ந்தார்.அதன் தாக்குரவு தம்முள் மீக்கூரப் பெற்றது குறித்து,
“கணிணி இல்லாத காலத்தில் அவர் வெளியிட்ட தொகுப்பிற்குப் பின் இருக்கும் அசுர உழைப்பினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மார்க்சிய சிந்தனைப் பாரம்பரியத்தில் வந்த எனக்கு பெரியார் குறித்த பார்வையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது அந்த தொகுதிகள்தாம்.”
“ஐயா அவர்கள் பின்னர் பெரியார் 20 பாகங்களாகக் கொண்டு வந்தார். அந்தத் தொகுப்பினை கலைஞர் கருணாநிதி வெளியிட்ட போது நான் அங்கிருந்தேன். முன் வெளியீட்டுத் திட்டத்தில் அத்தொகுப்புகளையும் வாங்கிவிட்டேன்.”
“நூரானியின் ஆர் எஸ் எஸ் மொழிபெயர்ப்பு முடிந்தவுடன் பெரியார் சிந்தனைத் தொகுப்பினை ஆங்கிலத்தில் கொண்டு வருவதுதான் என் பணியாக இருக்கும்.”
– விஜயசங்கர்
இத்தொடர்பில் இவ்வாறே இத்தொகுதிகள் மீதான வாசிப்பு தமக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததென ராஜன் குறையும் பதிந்துள்ளார்.

ஆனைமுத்துவின் ஆங்கில நூல்களான ‘Federalism in Peril, ‘Contribution of periyar EVR to the Progress of Eihism’ இரண்டையும் குறிப்பிடும் இதழியலாளர் மீனாட்சி சுந்தரம் ஆனைமுத்து நடத்திய ‘Periyar ERA’ இதழோடு தம் தந்தையாருக்குள்ள தொடர்பு குறித்தும் சுட்டிக்காட்டித் தொடர்வார்:
“ஆய்வுகளிலும், அவரது (ஆனைமுத்துடைய) ஆங்கில எழுத்து நடையிலும் உள்ளம் பறிகொடுத்திருந்தார்.”
“அய்ரோப்பிய நவீன கவிஞன் டி.எஸ்.எலியட் வெளியிட்ட தி வேஸ்ட் லேண்ட் கவிதை நூலின் பதிப்பைப் போல பெரியாரின் கையெழுத்தை ஒரு பக்கத்திலும் அதன் அச்செழுத்தை எதிர்ப்பக்கத்திலும் கொண்டு வெளியிடப் போவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்.”
– மீனாட்சி சுந்தரம்
“காந்தி, அம்பேத்கர் இருவருக்கு மட்டுமே வெளிவந்துள்ள காலவரிசைப் பயணக் கண்ணாடி நூல் தமிழ்நாட்டில் வெளிவந்திருப்பது பெரியாருக்கு மட்டுமே என்பது பலரை எட்டாத செய்தி. ‘பெரியார் ஈ.வெ.ரா. பயணக் காலக்கண்ணாடி'(Periyar E.V.R. A Detailed Chronology 1912 – 1973) என ஆனைமுத்து திரட்டி வெளியிட்ட 430 பக்கப் பெருநூல்.”
” பெரியார் சிந்தனைகளை நான் தொகுத்தது போல், என் கருத்துகளை நீங்கள்தான் தொகுக்கமுடியும்’ எனத் தம் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் ஆனைமுத்து. அவர் ஆர்வத்தை ஆணையாக ஏற்று குறள்மலர்(1950), குறன்முரசு (1957), ‘சிந்தனையாளன்’ (1947) இதழ்களில் வெளிவந்தவற்றையும் ‘ திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ எனப் பதினாறு நூல்களாகத் தொகுத்தனர் சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள். வெளியீட்டுவிழா 2012 – இல் கோவை சூலூரில் நடந்தது. ‘காலக்கண்ணாடி’ நூலும் அப்போது வெளியிடப்பட்டது தான்!”
– செந்தலை கௌதமன் (‘காக்கைச் சிறகினிலே’ – மே 2021)


அப்பதினாறு தொகுதிகளும் தொகுக்கப்பட்டபோது செந்தலை கௌதமன், அதன் மெய்ப்பாக்கப் பணியை என்னிடம் ஒப்படைத்தார். (75 விழுக்காடு என்னிடமும் 25 விழுக்காடு புதுவை தமிழ்மணியிடமும்)
இதழ் நகலச்சில் ஓரம் சிதைந்ததை ஊகித்து முறைப்படுத்தும் அறைகூவலான பணி. அண்ணாவின்’தம்பிக்குக் கடிதங்கள்’ தொடர்பான ஆய்வுப்பணியும் மேற்கொண்டிருந்த தருணமது. இரண்டையும் ஒத்துறழ்ந்து நோக்கவும் எனக்கது நல்வாய்ப்பாக அமைந்தது. கணிசமாகவே கரும்பு தின்னக் கூலியும் கௌதமனால் கிடைத்தது. அது தவிர அந்நூல்களின் வெளியீட்டு விழாவில் மேடை ஏற்றிச் சிறப்பித்து ஆனைமுத்தின் கையுறையாக ஒருதொகையும் எனக்கு வழங்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பணியின் ஆனைமுத்து அவர்களுக்கு என்னாலான அணிலுதவி தான் என் பங்களிப்பே.அத்தொகுப்புகள் ஊடான என்பயணத்தில் புதுப்புது திறப்புகளால் புதுவெளிச்சங்கள் வாய்க்கலாயின எனக்கு. அவற்றின் பேசுபொருள்கள் பன்முகமாகப் பரந்து பட்டவையாகும்.
‘காரல் மார்க்ஸின் மூலதனத்தை நான் முழுமையாக வாசித்திருக்கின்றேன் உங்களில் எத்தனை மார்க்சியத் தோழர்கள் வாசித்திருக்கிறீர்கள்’ என எழுப்பும் அவர் வினாவிற்கு எங்களிடம் விடைதான் ஏது?
பெரியாரியம், மார்க்சியம், வகுப்புவாரி உரிமைப் போராட்டம், ஈழச்சிக்கல், தேசியஇன விடுதலை,களப்பணி ஆய்வுகள், அரசியலமைப்புச் சட்டம் வெகுமக்களுக்கு விரோதம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பார்ப்பாரும் வேளாளரும், அறியப்படா நூல்கள், நூல் விமர்சனங்கள், கோயிற் சொத்துடைமை, தமிழறிஞர் அறிமுகம், கிபி 2025 இல் இந்தியா, தமிழகம், விடுதலைப்புலிகள் சட்ட யாப்பு, பெரியார் பயண விவரங்கள், இவற்றூடே முற்றுப்பெறா ஆனைமுத்தின் ஒரு தொடர்கதை இத்தியாதி இத்தியாதி அப்புறம் குறள்மலர், குறள்முரசு, சிந்தனையாளன் இதழ்கள் என வாசிக்கும் பேறுபெற்றேன்.என் ‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ நூலையும் அவரே வெளியிட; தோழர் கோவை இராமகிருட்டிணன் பெற்றுக் கொண்ட வெளியீட்டுவிழாவையும் ஆனைமுத்து பெயரிலான அரங்கில் செந்தலையாரே நடாத்தி வைத்தார்.

ஆனைமுத்துவின் குறிப்பிடத்தக்கச் சிறப்புப்பங்களிப்பாக அவருடைய இந்திய அரசியலமைப்புச்சட்டம் பற்றிய அரிய கட்டுரைகளை இனங் காணலாம்
“.ஆனைமுத்து தமது பொழுதுபோக்கே இந்திய அரசியல் சட்டவிளக்க நூல்களை மீண்டும் மீண்டும் படிப்பது தான் என்பார். உலக அரசியல் சட்ட நூல்களைச் சேகரிப்பதும் அவற்றின் நுட்பங்களைச் சிந்திப்பதுமே ஆனைமுத்து அவர்களுக்கு இன்பமான செயல்கள்.” என்னும் செந்தலையார் சட்டம் பயிலா ஆனைமுத்து தம்முன் சட்டமேதைகளின் இந்துச்சட்ட விளக்கங்கள், இந்துச்சட்ட விதிகள், அரசமைப்பு விதிகள் முதலான அனைத்தையும் தமிழாக்கம் செய்து குவித்துவைத்தது கண்டு அய்யா மலைத்துப் போனார் என்கின்றார். இத்தொடர்பில் அய்யாவால் அவர் பேரறிஞர் என மனமார விளிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

விடுதலைப்புலிகளின் சட்டயாப்பில், “தேசவழமைச்சட்டம் இன்றுவரை ஈழத்தில் நடப்பிலுள்ள இந்துச்சட்டக் கூறுகள் பலவற்றை ஒதுக்கிவிட்டது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது” என ஆனைமுத்து வியந்தே போற்றினார் அன்று. ஆனாலின்றோ ஈழ வரலாற்றின் முரண்நகையாய் காசி ஆனந்தனும்,காந்தளகம் சச்சியும், தீபச்செல்வனும், அகரமுதல்வனும் – மோடியைப்பாராட்டியும் இந்து முன்னணியோடும் ஜெயமோகனோடும் கைகோக்கும் விபரீத அவலங்கள் கண்கூடே!
ஆனைமுத்து அரசதிகாரத்தில் இருந்தோருடன் பாராட்டிநின்ற தொடர்பெல்லாம் விட்டு விடுதலை ஆகிநின்ற ஒட்டுறவே. அரசிடம் சலுகைகளை எதிர்நோக்காமலும், அரசு சார்பிலான பெரியார் விருதை மறுதலித்தும் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ எனச் செம்மாந்த வீறுடன் நின்றார். அவ்விருதை நாசூக்காக தம்மிலும் அதற்கான தகுதி படைத்தோரெனத் திருவாரூர் தங்கராசுக்கு மடைமாற்றி விட்டார்.

பிறிதொருகால் ஆனைமுத்து மகனுக்குச் சட்டமன்ற உறுப்பினராகக் கலைஞர் அறிவித்ததை அவர் தம்மிடம் தெரிவித்த போது அமைதியாக,” அப்படீங்களா! அப்டீன்னா சரி நாளைலேருந்து எங்க தங்கப் போறீங்க” என விடையிறுத்தார். மலைத்து நின்ற மகனிடம், “ஆமாய்யா என்னை வளைக்க முடியாதுன்னு ஒங்கள வளைக்கப் பாக்றாரு கலைஞர்! ஒங்களுக்கு அதாம் பெரிசுன்னா வெளியேறி ஆக வேண்டியதப் பாருங்கன்னு” கறாராகத் தொடர்ந்தார். அவரும் தம் அப்பாவிற்குப் பிடிக்காத எதையும் தாமும் செய்ய இயலாதென வாய்ப்புக்கு நன்றிகூறி அதனை ஏற்க மறுத்துக் கலைஞரிடம் தெரிவித்து விட்டார்.
ஆனைமுத்துவிடமிருந்தே நானுங் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் வைகுபுலர் விடியலின் அதிகாலை நான்கு மணிக்கே துயில்களைந்து வாசிப்பையும் எழுத்தையும் அத்தகு ‘பிரம்ம முகூர்த்த’த்திலேயே தொடங்கிவிடும் வழக்கத்தைத்தான்!

“பெரியார் கருத்துகளைக் கோட்பாடாக வளர்ப்பதையும் கருத்தெழுச்சிக் கூர்மையுடன் மேம்படுத்துவதையும் ஆனைமுத்து இலக்காக வைத்திருந்தார். அதில் பேரளவு வெற்றியும் விட்டார் என்பதை அவர் நூல்களோடு உறவாடினால் புரியும்.”
– செந்தலை கௌதமன்.
ஆம் காநதியக் கோட்பாட்டாக்கத்துக்கு ஒரு ஜே.சி.குமரப்பா எனில் பெரியாரியக் கோட்பாட்டாக்கத்துக்கு ஓர் ஆனைமுத்து. கோட்பாட்டக்கத்துக்கு மட்டுமல்ல இந்தியா எங்கணும் அகலிக்கும் அமலாக்கத்துக்குந்தான். பின்னைப்பெரியாரிய முன்னோடியர் தோழன்மார் ஏஜிகே, ஆனைமுத்து வழித்தடத்தில் நம்மாலான பங்களிப்பை நிறைசெலுத்துவோமாக!
பெரியார் சிந்தனைகள் ஆங்கில ஆக்கப்பணியைத் தோழர் விஜயசங்கர் முன்னெடுப்பாராக.
முற்றும்
ஒளிப்படங்கள் : நன்றி – செந்தலை கெளதமன்
– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க