தொ.பரமசிவன் ஓவியம் கனலி

பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.

1. ‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

2. பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

3. பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

யானையைப் பார்த்த குருடர் கதை

அ. தலைவர் வழிபாடும் தத்துவ வழிபாடும்

திருவுருக்களாய்த் தலைவர்களை வழிபடுவது என்பதனைக் கடந்து கொள்ளத்தகுவனவற்றைக் கொண்டு தள்ளத்தகுவனவற்றை தள்ளுவதே சரியானதாகும். அவரவர் பங்களிப்பையும் இவ்வாறே அணுகத்தலைப்படுவதே காத்திரமானதாகும். அதுவும் அவரவர் காலச்சூழலில் வைத்தே காண முற்பட வேண்டும். 

பெரியாரின் கலை, பண்பாடு குறித்த நோக்குநிலைகளையும்,காரல் மார்க்ஸின் இந்தியா பற்றிய கணிப்புகளையும்; தலித்தியர், இனவாதத் தமிழ்த்தேசியர் இருவேறு தரப்பினரின் திராவிட,பெரியார் வெறுப்பரசியலையும் தொப நிராகரித்து விடுவது எவ்வளவு சரியான அணுகுமுறையோ, அவ்வாறே தொபவின் கமல் பற்றிய கணிப்புகளையும்; சாதிபற்றிய கருத்தியலையும் (சாதியை ஒழிக்க முடியாது, கரைத்து விடலாம், நகரத்தில் தொழிற்சங்கத்தைப்போல், கிராமத்தில் சாதி ஒரு பாதுகாப்பரண் ஆக விளங்கக்கூடியது) அவ்வாறு நிராகரித்திடவே செய்வேன் நான். 

ஒரு சாதி இந்துவிற்கு வேண்டுமானால் சாதி கவசமாகலாம், அதற்கும் அப்பால் கலாச்சார மூலதனமும் ஆகலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களுக்கு? 

-இதுதான் தலைவன் வழிபாட்டை, திருவுரு ஒளிவட்டத்தை ஊடுருவிக் காணமுற்படும் காத்திர அணுகுமுறை.

அடுத்து தத்துவ வழிபாடு குறித்துக் காண்போம்.

தன் ‘கைவண்டிச்சரக்கு’ கட்டுரையில் இதுபற்றிப் பேசுவார் புதுமைப்பித்தன். ஒரு கொள்கைகக்கு நாம் அடிமை ஆவதும் யாக குண்டத்தில் எழுப்பும் உருவுக்குத் தாமே அடிமை ஆதல் போலென்பாரவர். கொள்கைப்பற்றென்பது வெறியாக உருமாறிப் பாசிசமாகும் அபாயக்கூறு இதுவே என மனங்கொள்ளல் வேண்டும்.

இன்னொரு பக்கம் பன்முகப் பங்களிப்பாளர் ஒருவரின் பல்வேறு பக்கங்களையும் வாசிக்கவே எத்தனிக்காமல் ‘யானையைப் பார்த்த குருடர் கதை’யைப் போலவே தமக்குப் பிடிக்காத அம்சங்களையே தூக்கிப் பிடித்து அவர்மீது அதிர்ச்சி மதிப்புத் தீர்ப்பெழுதி பேனாமுனை முறித்தெறிதலும் அவலமுங் கண்கூடே!

ஏலவே இத்தொடர்பில் தொப மீதான அவதூறுகளை ஊடுருவி எதிர்கொண்டுள்ளோம். மீளவும் சிலவற்றை இனிக்காண்போம்:

ஆ. மதிமாறன் அவதூறுகள் பகுத்தறிவின் பயங்கரவாதமே!

பகுத்தறிவின் பயங்கரவாதம் என்பது ஒரு பின்னை நவீனத்துவச் சொல்லாடலே. வேறு வார்த்தையில் கூறுவதானால் பகுத்தறிவின் வன்முறையான பொருள்முதல்வாத இறுக்கம். அறிதல் என்பதன்று அறிவு. மாறாக அறிதலுக்கான அணுகுமுறையே அது. தன்னிலையின் அடையாள பிம்பம் பேணி மற்றைமையை அறவே புறக்கணிக்கக் கூடிய அணுகுமுறை. இதனையே ‘தத்துவ. வழிபாடு’ என்பார் புதுமைப்பித்தன்.

தொப மறைவிற்கு, ‘தொ.ப.பரமசிவன் யாதவ்’ என்று யாதவர் சங்கத்தின் பேரில் அஞ்சலிச்சுவரோட்டி ஒட்டப்பட்டதை முன்னிட்டு அவரைச் சாதியவாதியாக அவதூறு செய்யும் மதிமாறன் வேண்டுமானால் ‘பரமசிவக்கோனார்’ எனப் போட்டிருக்க வேண்டும் என நக்கலடிக்கின்றார். மக்கள் தலைவர் வஉசி பெயரைச் சாதி சங்கத்தார் பயன்படுத்துவதற்கு அவரா பொறுப்பு?

தொபவின் இறுதி ஊர்வலத்தில் பெரியாரியரும் , மார்க்சியரும், தமிழ்த்தேசியரும், சூழலியலாளரும் ஒருசேரப் பங்கேற்றதும் ,மத சாதி சார் சடங்குககள் தவிர்க்கப்பட்டதுமே தொப பேதம் நீங்கிய போதம் வாய்ந்த மானுடனாக  மரித்ததற்கான சான்றுகளாகும். 

அடுத்து அம்பேத்கரைப்பற்றி தொப பேசவே இல்லை என்ற அவதூறு. இதற்கான மறுப்பாகத் தொபவின் புனா ஒப்பந்தம் நூலே போதுமானது. அது குறித்த என் விரிவான ஆய்வை நான் தொப மணிவிழா மலருக்கு அனுப்பினேன். கட்டுரை அனுப்ப உரிய தேதிக்குள் அனுப்பியும் அது ஏற்கப்படவில்லை. உரிய தேதிக்கு முன்பே முதலில் அனுப்பியவர்கள் கட்டுரைகளிலேயே தெரிவை முடித்தாயிற்று என்றனர். 

“இது என்னய்யா ‘ரியல் எஸ்டேட் பிசினஸா? முதலில் வந்தோர்க்கே முன்னுரிமை அளிக்க?” என அக்குழுவினர்க்குக் கண்டனம் புரிந்தேன். அக்கட்டுரைதான் அந்த ஆண்டின் சிறந்த அரசியல் ஆய்வுக்கட்டுரை என ‘சின்னக்குத்தூசி அறக்கட்டளை’ விருதைப் பெற்றது.

பெரியாரியத்திற்கு எதிரான அணுகுமுறைகளே தொபவுடையவை என ஏதோ அதற்கான அதிகாரப்பூர்வமான ‘அத்தாரிட்டி’ எனுந் தோரணையில் வறட்டு நாத்திகராக ஆதாரமற்ற அவதூறுகளைப் பொழிகின்றார் மதிமாறன். மாறாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்போ திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நிகழ்வில் அவரை அழைத்துப் பங்கேற்க வைத்தது. அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திருமுருகன் காந்தி்  தொபவுக்கான இறுதிமரியாதை நிகழ்வுரையில் “எம் சிந்தனைப் புலங்களைச் செழுமைப்படுத்திய எங்கள் ஆசான்” என அஞ்சலிக்கின்றார்.

சிறுதெய்வ வழிபாடு குறித்த தொபவின் பார்வைகளை மூடநம்பிக்கையாகவே காண்பது மதிமாறன் நோக்கு. மாறாக நம்பிக்கை வேறு மூடநம்பிக்கை வேறென விதந்தோதிக் காண வல்லதே தொப நோக்காகும்:

“நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என் தெய்வம், வழிகாட்டுகிறது என்று நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு  எங்கே அதிகாரம் குறுக்கே வருகிறதோ அங்கே மூடநம்பிக்கை பிறக்கிறது. ‘உனக்காக நான் யாகம் பண்றேன் ஹோமம் பண்றேன்’ என்று சொல்வது மூடநம்பிக்கை.அதாவது அர்ச்சகர் என்ற அதிகாரம் இங்கே குறுக்கே வருகிறது. நம்பிக்கை  இயல்பானது.” 

“நம்பிக்கையில் அரசு அதிகாரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு ஆன்மிக அதிகாரம் குறுக்கே வந்தால்கூட அது மூடநம்பிக்கையாகிவிடும்” 

“நாட்டார் தெய்வத்திலே தெய்வத்திற்கும் மனிதனுக்கும் குறுக்கே நிற்கிற அதிகாரம் எவ்வளவு நேரம்? சாமி ஆடும் நேரம் மட்டும்தான்.”

“காட்டுச்சாமி மீதான நம்பிக்கை மூடநம்பிக்கை அல்ல. பார்ப்பனர்களுக்குப் பசுதானம் கொடுப்பதுதான் மூடத்தனம், மௌடீகம். நாட்டார் மரபில் தெய்வ நம்பிக்கை என்பது, உற்பத்தி முறையோடு சம்பந்தப்பட்டது.” (‘செவ்வி’)

இ. கிராமியனின் வைணவ மதவாதி எனுங்குற்றச்சாட்டு

கிராமியன் தொபவை வைணவ மதத்தவராகவே கருதி அந்நிலைப்பாட்டிலிருந்தே அவரை  விமர்சிக்கின்றார். க.நெடுஞ்செழியன் இறையியல் ஒப்பாய்வு நோக்கில் சம்பந்தர் காளாமுக வேதவழக்கினர், அப்பர் காபாலிக வேத எதிர்வழக்கினர் என விதந்தோதிக் கண்டாலும் அவர் கொண்டாடி நிற்பது ஆசிவகத்தையே. போலவே வடகலை  வைதிக வைணவத்தோடு ஒப்பிட்டால் தென்கலை வைணவம் தமிழை முன்னிறுத்தக் கூடியதே, வைதிக எதிர் வழக்கே. பெரியாருக்கு இராமானுஜர் மீது மரியாதை இருந்ததென்பார் தொப.

மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, திருவிக, பா.வே.மாணிக்கநாயகர், குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் பெரியார் பாராட்டிநின்ற நெருக்கத்தையும் இத்தொடர்பில் விளங்கிக்கொள்ளலாம். பாரதிதாசனின் குமரகுருபரர், இராமனுஜர் பற்றிய பார்வைகளும், கலைஞரின் இராமானுஜர் சின்னத்திரைத்தொடரும் இத்துடன் எண்ணத்தகும்.

மட்டுமல்லாமல் சைவத்தோடு இறையியல் நோக்கில் ஒப்பிட்டு தென்கலை வைணவத்தை மேலானதாக முன்னிறுத்தும் அணுகுமுறை  சத்தியமங்கலம் எஸ்.என்.நாகராசன் தோழரிடமும், தொபவிடமும் உண்டுதான். இவ்வாறு ஒப்பிட்டு நோக்காமல் தொபவை வைணவராக மட்டுமே காண்கின்றார் கிராமியன்.

அவர் காணத்தவறிய பக்கங்களை இனிக்காண்போம்:

“நாமெல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பபட்ட மக்களெல்லாம், சமணர்களாகத்தான் இருந்தோம். இன்றைக்கும் சமண மதத்தினுடைய தாக்கம் நம் வாழ்வில் உள்ளது. சமணமதம் நான்கே நான்கு விஷயங்களைத்தான் வலியுறுத்தும்.” அன்ன,ஞான,ஔஷத, அடைக்கல தானங்கள் என்னும் தொப இந்த நான்கையும் கழித்துவிட்டுப் பார்த்தால் ‘யுனெஸ்கோ’ என்ற அமைப்பே இல்லை எனத்தொடர்வார். கல்வியையும்,மருந்தையும் கொடையாகக் கொடுன்னு சொன்னது உலகிலேயே சமணம் ஒன்றேதான், அத வைதிகத்தை நிராகரித்த மதம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டுமென்பார்.

“இந்த மதத்தை வீழ்த்திவிட்டு வைதிகம் வந்தது. பாண்டிய அரசு, சோழ அரசு என்று இனக்குழுக்ககள் கரைக்கப்பட்டு, கரைக்கப்பட்டு அரசுகள் உருவாகும் போது மருத்துவம் தொழிலாக ஆகிறது.” (‘சாளரம்’ இலக்கியமலர் -ஜன. 2008) 

இவ்வாறு சமணத்தின் கொடைகளை எடுத்துரைப்பினும்; தென்கலை வைணவ ஆக்கக்கூறுகளைப் பேசிநிற்பினும் இவற்றின் சனநாயகத்துக்கு எதிரான மக்கள் விரோதப் போக்கையும் தொப குறிப்பிடத் தவறினாரில்லை! :

“ஆசிவகமோ,பௌத்தமோ, சமணமோ, சைவமோ, வைணவமோ இவை போன்ற நிறுவனச்சமயங்கள் அனைத்தும் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் தான். ஜனநாயக விரோதமானவை. ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையைக் கடுமையாக நெரித்தன.”

ஒரு ஜீயரை முன்வைத்து, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தொப குறிப்பனவும் இத்தொடர்பில் மனங்கொள்ளத் ததக்கனவாம்:

“என்னைத் தொடுவதில் அவருக்குக் கூச்சமில்லை. பக்கத்தில் உட்கார வைத்துப் புளியோதரை கொடுத்தார். ஆனால், நான் ஜீயராக முடியுமா? முடியாது தானே?”

“அண்ணாவி பூஜை வைப்பதற்குப் பதிலாகத் திருமண் இட்ட ஒரு நாயுடு, அல்லது ஒரு தலித், அல்லது ஒரு கோனார் பூஜை வைக்கலாமே”, என்றேன் அவர், ” அது பற்றிப் பேச மாட்டேன்” என்று கூறிவிட்டார். நான் என்ன சொல்கிறேன் என்றால், நிறுவன மதங்கள் எல்லாமே மக்களுக்கு எதிரானவை தான்.” (‘சமயங்களின் அரசியல்’)

இதேமூச்சில் இவ்வாறே எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் இங்கே பதிந்திட விழைகின்றேன். குன்றக்குடி அடிகளாரிடம் நானும் இவ்வாறே கேட்டேன், “உங்களால் அடுத்துவரும் உங்கள் மடாதிபதியாகப் பிள்ளைமார் அல்லா பிற சாதியார் எவர்க்கேனும் பட்டத் தம்பிரானாக அறிவிக்க இயலுமா?. அதற்கவர், “நியாயமான கேள்விதான், ஆனால் என் வாணாளில் நான் முயன்று பார்த்தே தோற்ற இடமது, என் காலத்துக்கும் அதற்கான சாத்தியக்கூறு யாதொன்றுமே எனக்குத் தென்படவும் இல்லை” என்றார்.

தொபவின் கட்டுரை யாவும் ரத்தினச் சுருக்கமானவை தாம். ஆனால் அவற்றிற்கான  புதுப்புது திறப்புகளை நம்மில் ஏற்பட்டுத்தக் கூடியனவே.அவருடைய பார்வை முழுமைசார் பன்முக நோக்கிலானவை. உணரவல்லார்க்கு அவருடைய நெறியியலைப் போலவே ஊடுருவிப் படர்ந்து பரவக்கூடிய பாங்கின.

முற்றும்!

வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

முகப்பு ஓவியம் : நன்றி – ஓவியர் கனலி (https://www.facebook.com/photo.php?fbid=3571326309600137&set=pb.100001684081577.-2207520000..&type=3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *