இக்கட்டுரையில் முதல் பாகத்தை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.
மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
1. அவதூறுகளை ஊடுருவி….
அ). பேரா.அ.ராமசாமி தரப்புகள்
“வட்டார உள்ளூர்ப்பண்பாட்டு ஆய்வின் தொடர்ச்சியாக ‘மண்ணிண் மைந்தர்கள்’கருத்தியலுக்கு ஆதரவாக இருந்தார். அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.”
“மண்ணின் மைந்தர் என்ற கருத்தியல் அந்தந்த வட்டார ஆதிக்கசாதி ஆதிக்கத்தன்மையுடையது.”
“இந்தக் கருத்தின் உருவாக்கமே திரு சீமானின் அரசியல் உருவாக்கத்தின் அடிப்படை.”
– அ.ராமசாமி.
மண்ணின் மைந்தர் எனும் ஆதிக்கசாதி அரசியலுக்கு தொப ஆதரவாக இருந்தார் என்பது ஆதாரமற்ற அவதூறே. மாறாக அதற்கு எதிரானதாகவே அவர் பதிவுகள் காணக்கிடக்கின்றன:
“தமிழ்ச்சமூகம் இன்றளவும் சாதிகளின் அடுக்காக மட்டுமே இருக்கின்றது. இதுவே நாம் எதிர்கொள்ளும் கசப்பான நடைமுறையாகும். தமிழர்கள் வாழ்கின்ற எல்லா நிலப்பகுதிகளிலும் இதுவே நிலை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு சாதி என்பது ஒரே நேரத்தில் வலிமையான அடையாளமாகவும்,வன்முறைக்கான கருவியாகவும் விளங்குகின்றது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த நோக்குநிலையோடு பழந்தமிழ் இலக்கியங்களை நாம் ஆய்வுசெய்யப் புகுந்தால் நிலைபெற்றுள்ள முடிவுகளுக்கு நேர் எதிர்மாறான முடிவுகளுக்கே நாம் வரவேண்டியது இருக்கும்”
– தொ.பரமசிவன் (‘வழித்தடங்கள்’)
“சாதி சார்ந்து, வட்டாரம் சார்ந்து ஒவ்வொரு சாதிக்கும் வட்டாரத்துக்குமான சில பண்பாட்டு அசைவுகள் உள்ளன. இந்த அசைவுகூட ஒரு சாதிக்கு எல்லா இடத்திலும் பொதுவாய் இராது. அவை வட்டாரம் சார்ந்து வேறுபடும். எனவே தலித் பண்பாடு, தமிழ்ப்பண்பாடு என இரண்டாக வேறுவேறாக என்னால் பார்க்க இயலவில்லை. இது களஆய்வு எனக்குக் கற்றுத்தந்த பாடம்”
– தொ.பரமசிவன் (‘செவ்வி’)
ஏலவே சுட்டிக்காட்டியவாறு அவர்தம் மாணவர்களிடம் களஆய்வை வலியுறுத்துமுகமாகவே மக்களிடம் போங்கள், மக்களிடம் உரையாடுங்கள் என வலியுறுத்துவதை அவருடைய மாணவர்களான முத்து காந்திமதி, தீபா ஜானகிராமன் பதிவுகளால் உணரலாம்.
“ஒரு புறமாக நமக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்திருக்கின்ற எழுத்து ஆவணங்களின் (இலக்கியங்களும், கல்வெட்டுகளும்) அருமை (rarity), மறுபுறமாக அவற்றின் போதாமை (inadequacy), இவற்றிற்கு எதிர்த்தலையாகத் தமிழர்களின் தொகுக்கப்படாத வழக்காறுகள் (Lores), இந்த இடைவெளி களஆய்வினால் மட்டுமே நிரப்பப்படக்கூடியதாக அமையும்”
– தொ.பரமசிவன் (‘வழித்தடங்கள்’)
ஆ). சீமான் விவகாரம்
சீமானின் அரசியல் உருவாக்கத்துக்கு தொபவிடம் அடிப்படையைக் காணும் அராவின் அபத்தத்தை என்னென்பது?
“தடம் புரண்டு போனார். முப்பாட்டன் முருகன் என்று சொன்னால்,மற்ற கடவுள்கள் என்ன உறவு என்று சொல்ல வேண்டுமே. யார் எல்லாம் நம் உறவுஇல்லை எனச் சொல்லிவிட்டுத்தானே, யார் நமது உறவு என்று சொல்ல வேண்டும்.அவர் ஏன் அதைச் சொல்வது இல்லை. அவருக்கு அவை எல்லாம் தெரியாது. தத்துவார்த்தப் புரிதலற்ற அரசியல் காரணங்கள் அவை”
– தொ.பரமசிவன் (‘விகடன் தடம்’)
மட்டுமல்லாமல் சீமான் அரசியல் திராவிடக் கருத்தியலை நிராகரிப்பது. மாறாக ‘திராவிடக்கருத்தியல் – ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை’ என்பதே தொப நிலைப்பாடாகும்:
“திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறையைத் தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளம் கொண்டது. அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனே தொடர்கிறது. நான்கு தென் மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமை நிலவுகிறது.” என்னும் தொப மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். தாய்மாமனுக்கான மரியாதை, தாய்த்தெய்வ வழிபாடு, இறந்த உடலுக்கான மரியாதை. (‘செவ்வி’)
பாமகவின் மாநாட்டுக் கருத்தரங்கப் பங்கேற்புக்காக எழுதப்பட்டதே குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’. குணா நேற்று திராவிடத்தை வந்தேறி வடுகச்சூழ்ச்சி என்றவர் இன்றோ தலித்தியத்தையும் அவ்வாறே குறிப்பிடலானார்.
சீமான், குணா இருவரின் இனக்குழுமவாத அணுகுமுறைகளுமே பார்ப்பனரை உள்ளடக்கி மொழிச்சிறுபான்மையரைப் புறக்கணிப்பனவே. இத்தகு அணுகுமுறைக்கு எதிரதானதே தொபவின் அணுகுமுறையாகும் பார்ப்பனப்பண்பாட்டின் ஒடுக்குமுறைகளைத் துல்லியமாகத் துலக்கிடவல்லதாகும்.
இ. கமலஹாசன் விவகாரம்:
கமலஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தொபவின் ‘அழகர்கோவில் ‘பற்றிச் சொன்னபிறகு அது அதிகமாக விற்றது என தொபவிடம் குறிப்பிட்டபோது அதை அவர் மறுதலித்தார்:
“அவர் பேசுனதால என்நூல் கவனம் பெற்றது என்றெல்லாம் சொல்ல வேண்டாம். எனக்கு அங்கீகாரம் கமலஹாசன் மூலமா வரவேண்டாம். கமலஹாசன் அவர் தொழிலுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றார்”
“அவரை மனிதனாக உயிர்ப்போடு அணுகுவதன் வழியாகத்தான் இன்னொரு தொ.பரமசிவன் உருவாகும் சூழலை உருவாக்கமுடியும்” எனும் கமலின் இரங்கலறிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றார் செல்வபுவியரசன்.
(‘இந்துத்தமிழ்த்திசை’- 27 -12 – 2020)
‘அழகர் கோயிலை’ப் பரிந்துரைக்கும் கமல்இந்துத்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் தோலுரிக்கும் தொபவின் பிறநூல்களையும் பரிந்துரைப்பாரா என்ன?
” ஓர் ஆய்வாளர் தான் சார்ந்திருக்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் தொபவின் பணிக்காலமே ஓர் உதாரணம். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் பதவியைத் துறந்து, விருப்ப ஓய்வு என்னும் முடிவை நோக்கி அவரைத்தள்ளிய அவரது சகாக்களும், அதற்குத் துணைநின்றவர்களும்கூட இன்று பெயர் பெற்ற ஆய்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.”
– செல்வபுவியரசன்.
2. ஒடுக்குமுறை உறவுக்குப்பெயர் பார்ப்பனியம்
அ). உணவு அரசியல்
பார்ப்பனர்கள் தவிர்க்கும் உணவுப் பொருள்களுக்கூடாக அவர்களது கருத்தியலின் குறியீடுகளை அகழ்ந்து விண்டுரைப்பார்:
“தரைக்குக் கீழாக விளையும் கிழங்கு வகைகள் வள்ளி,உள்ளி(வெங்காயம்), பூண்டு போன்றவற்றை ஆசாரப் பார்ப்பனர்கள் இன்றளவும் உண்பதில்லை. எனவே பெருந்தெயவக் கோயில்களில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. அவை ‘பிறப்பினால் கீழ்ப்பட்டவை’ என்ற பார்ப்பனக் கருத்தியலே அதன் குறியீடாகும்.”
– தொ.பரமசிவன் (‘விடுபூக்கள்’)
“பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவதில்லை. ஏனெனில் கீழ்ச்சாதியாகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால் அதை அவர்கள் விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ் கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும் பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள் அதனால் அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிட்டு விடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார்கள் கொண்டுவந்த பொருள்கள்.”
– தொபரமசிவன் (‘செவ்வி’)
“பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும் கோயில்களிலும் பாலிலிருந்து பெறப்பட்ட நெய்மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கூடப் பார்ப்பனர் வீடுகளில் மாதுளங்காயினை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்பட்டுள்ளது. பக்தி இயக்கக் காலத்தில் சாதியப் படிநிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது, செக்கினைத் தொழிற்கருவியாகக் கொண்டு எண்ணெய் எடுக்கும் சாதியார் கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டனர்.”
-தொ.பரமசிவன் (‘பண்பாட்டு அசைவுகள்’)
ஆ). நாட்டார் மரபும் பார்ப்பன மரபும்
நாட்டார் மரபும் பார்ப்பனமரபும் எதிரெதிரானவையே. இரண்டன் கூறுகளையும் விதந்தோதி உற்பத்திமுறைத் தொடர்புக்கு ஊடாக எடுத்துரைப்பார்:
“நாட்டார் மரபு என்பது, எப்பொழுதுமே வைதிகமரபிற்கு எதிரானது. பார்ப்பனியம் எப்பொழுதும் அதிகாரம் சார்ந்தது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளாதது நாட்டார் மரபு.”
“ஆன்மிக அதிகாரம் இல்லாமல் பார்ப்பனல்களால் உயிர்வாழ முடியாது. பார்ப்பனர்களுக்கு அதிகாரமே உணவு. குறிப்பாக, பிற சாதியினரை உட்காரு, எழுந்திரு என்று சொல்லும் அதிகாரம். மண் சார்ந்த காதல் நம்மைப்போல் பார்ப்பனர்களுக்கு இல்லை.”
” திராவிட நாகரிகம் கால, வெளி உறவுடன் பிணைக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனர்களோ தலைமுறையாகத் தொட்டுத்தடவி பூசை செய்த விக்கிரகங்ளையும் விட்டுவிட்டுப் போவது அவர்களுக்கு வெகு சாதாரணமாக வாய்த்திருக்கிறது.”
“நாட்டார் மரபில் தெய்வநம்பிக்கை என்பது உற்பத்திமுறையோடு சம்பந்தப்பட்டது.”
“அதிகார வேட்கையினால் உற்பத்தியிலிருந்து விடுபடும்போது இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகள் வந்துவிடுகின்றது.”
– தொ.பரமசிவன் (‘செவ்வி’)
இ). ஒடுக்குமுறை உறவுக்குப் பெயரே பார்ப்பனியம்
“முதலில் சாதியமறுப்பைக் கோயில் கருவறைகளிலிருந்து துவங்குங்கள். பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாகத் தக்கவைத்துக் கொள்கிறவரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மேல்,கீழ் என்கிற அடுக்குமுறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம்தான். அது ஒரு ஒடுக்குமுறை கருத்தியல். அது பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்படுத்தப்பட்ட ஒருவர் தாழ்த்தப்பட்டவரைச் சாதியின் பேரால் ஒடுக்குகிறாரோ, அந்த ஒடுக்குமுறை உறவுக்குப் பெயர் பிராமணியம் என்று நாம் சொல்கிறோம். ஏனென்றால் இதைக் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். முதலாளித்துவம் என்று இதை மார்க்சிஸ்டுகள் சொன்னார்கள். இதையே பிராமணியம் என்று சொன்னார் பெரியார். அதுதான் வித்தியாசம்.”
– தொ.பரசிவன்(மேலது)
ஈ). ஒடுக்குமுறை சொத்துடைமை சார்ந்த விடயம்
“பார்ப்பனியப் பண்பாடு இந்த சொத்துடைமை சார்ந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக அதைப் பண்பாட்டு ஒடுக்குமுறையாகக் கற்பித்து அதை நியாயப்படுத்தவும் செய்தது. சாதியை நியாயப்படுத்தும் எந்த நூலும் பண்டைய தமிழில் கிடையாது. தமிழிலே சாதி ஒடுக்குமுறைக்கான எல்லாச் சிந்தனைகளும் வாழ்க்கையும் பார்ப்பனிய மேலாண்மையையம் அதை நியாயப்படுத்தும் வடமொழிப் பனுவல்களையும் ஏற்றுக்கொண்ட பின்தான் தொடங்குகின்றது.” (ஷோபா சக்தி நேர்காணல் -‘காலம்: 18 – ‘செவ்வி’)
3. பெரியாரை மீட்டெடுத்தல்
அ).மதுரை ஆராய்ச்சிவட்ட ஆய்வரங்கு: ஒருங்கிணைப்பாளர் பார்வையில்.
எத்தகைய சூழ்நிலையில் அத்தகைய ஆய்வரங்கு நடாத்தப்பெற்றது? அது யார்யார் இருப்பால் சாத்தியப்படலாயிற்று? அதன் விளைபயன் எத்தகையது? எனக் காண்போம்.
“மதுரையில் , பெரியாரிய சிந்தனைகளை கல்விப்புல, அறிவுப்புலத் தளங்களில் உரத்துப் பேசும் குரலாக முதலில் நினைவில் வருபவர் தொ.ப மட்டுமே. அந்தவகையில் எனக்கான முதல் அடையாள சார்பு அவரோடு என்பது இயல்பானது. அவரோடானான பயணம் அறிதல் தளத்தில் செழிப்பானது. பெரியாரிய சிந்தனைத் தெறிப்புகளை வாழ்வுச் சூழலோடு தொடர்புறுத்தும் அவரது பாணி அலாதியானது.
எண்பதுகளின் இறுதியில் துவங்கிய மண்டல் எதிர்ப்பு அலை, 90-களில் இந்துத்துவ மறுமலர்ச்சியாக உருவெடுத்து பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் முடிந்த போது, பெரியாரின் தேவை இயல்பாக மேலெழுந்தது. மதுரையிலும் அதன் தேவை உணரப்பட்ட போது, அந்த இடத்தைச் சிறப்பாக நிறைவு செய்தார் தொ.ப.
இப்போது திரும்பிப் பார்த்தால் அவரது மதுரை இருப்பும், தோழர் மார்க்ஸ் அவர்களின் முன்னெடுப்பும் இல்லையெனில், மதுரையில் 1997 ஆம் ஆண்டில் நிகழ்ந்த, மதுரை ஆராய்ச்சி வட்டம் ஒருங்கிணைத்த ’திராவிடக் கருத்தியலும், அதன் பொருத்தப்பாடும்’ மூன்று நாள் ஆய்வரங்கு ஒருநாளும் சாத்தியமாகி இருக்காது என்பது உறுதி. அந்த முயற்சியில் என்னை ஊக்குவிக்க முதலில் 1000 ரூபாய் கொடுத்தார் தொ.ப. தொ. ப அவர்களின் பங்கேற்பு அந்த ஆய்வரங்கின் நோக்கினை சிறப்புற வடிவமைக்க உதவியது.
அந்த வகையில் மதுரையின் திராவிட விருப்பின்மையை மாற்றியமைக்கும் முயற்சியில் முன்னின்ற தளகர்த்தர்களிலொருவர் தொ.ப. அந்த ஆய்வரங்கு கல்விப்புலம் சார்ந்த பெரியாரிய சிந்தனைகள் மீதான கவனத்தை ஆய்வுகளை விரிவுபடுத்தியது என்பது மெய்.
– வீ.எம்.எஸ். சுபகுணராஜன்
தொப பார்வையில்
“97 -இல் மதுரையில் பெரியாரைப் பற்றி மூன்று நாட்கள் கருத்தரங்கு நடத்தினோம். பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்தார்கள். அதன் முடிவில் வலியுறுத்தப்பட்ட விஷயம், பெரியாரை மீட்டெடுக்க வேண்டும்”
– தொ.பரமசிவன் (மணா நேர்காணல் – ‘தீராநதி’ ஜூன் 2002 – ‘செவ்வி’)
ஆ). ‘அல்லாதார் அரசியலின்’ சமூகவிடுதலைக்கான சமரசங்கள்
பெரியாரிய மீட்டெடுப்பை அவர் எவ்வெவ்வாறெலாம் முன்னிலைப்படுத்தினார்? இன்றைய பொருத்தப்பாட்டில் அவர் எத்தகு கூறுகளை விதந்தோதி வலியுறுத்தினார் எனக்காண்போம்:
“பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோபஉணர்ச்சியைக் கைவிட்டு விடக்கூடாது. அதுபோல மான அவமானம் பார்க்கக்கூடாது. அப்படி எந்த எதிர்ப்பையும் மீறிச் செயல்பட்டவர் பெரியார். அவரிடம் இருந்த பொதுநலம் சார்ந்த கோபம்தான் இன்றையதேவை.”
“காலங்களுக்கு உரிய நியாயங்களுடன் பெரியாரைப் பொருத்திப்பார்க்க வேண்டும். அப்படியல்லாத விவாதங்கள் பெரியாருக்கு நியாயம் இழைக்காதவை.”
“யார் பெரியாரை எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்த்தோமென்றால் பெரியாரின் வெற்றி புலப்படும்.”
“அவர் பற்றற்றவர். அவர் புத்தகங்களிலிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவரல்லர். அவர் தனது கடைசிக்காலம் வரை தீராத வாசிப்புப் பழக்கம் உடையவராய் இருந்தபோதிலும் அவர் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவர். அவரே தேர்தலில் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார். அவர் அனுபவங்களின் மாணவர். தனது விடுதலை இலட்சியங்களை அடைவதற்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் பெரியார்.”
-தொ. பரமசிவன்(‘செவ்வி’)
“பெரியார் 1917 முதல் 1973 வரை தன்னுடைய எழுத்தாலும் பேச்சாலும் தன் சிந்தனையில’ சரி’ என்று தோன்றியவற்றை எப்பொழுதும் எளிய மக்களின் மத்தியில் நின்றுகொண்டு முரட்டுத்தனமான பேச்சாலும் எழுத்தாலும் முன்வைத்தவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக முளைத்தெழுந்த எளியமக்களின் கோபத்தின் வெளிப்பாடு அவர். அறிவாளிகள் கூட்டத்தினையும், புத்தகத்தினையும் பின்னணியாக வைத்துக்கொண்டவர் அல்லர் அவர். இதுவே அவரது மிகப்பெரும் வலிமையாகும். இலக்கு நோக்கிய தன் பயணத்தில் சிலகட்டங்களில் எதிரிகளையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டவர் அவர்.”
“அவரது பேச்சும்,செயல்பாடுகளும் ‘இந்து தேசியம்’, ‘இந்திய தேசியம்’ என்ற இரண்டு எல்லைகளையும் தாண்டி மனிதகுல விடுதலைக்கான பயணங்களாக விளங்கின அதிகாரக் குவிமையத்தைத் தகர்ப்பதற்காக அவர் நடத்திய மாநாடுகளில் பல ‘அல்லாதார்’ மாநாடுகளாகவே அமைந்தன. அல்லாதார் என்பது அவர் அகராதியில் ‘அடிமைப்பட்ட மக்களின் பெருந்திராளாகும்’. அவர்களை நோக்கிய அவரது கண்டிப்பில் நோதலும் இருந்தது. நோகாமையும் இருந்தது.”
“அல்லாதார்’ எனப்படும் எளியமக்களின் சமூக விடுதலைக்காக அவர்களோடும் அவர்களது சமூக அசைவுகளோடும் அவர் சமரசம் செய்து கொண்டார்.”
“பெரியார் உடனடித்தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்”
“நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைககளுக்கும் இடையே என்ன இருக்கின்றது? ஏதோ ஒரு வகையில் நுண்அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் இருக்கின்றன என்பதே நமது பதிலாகும். இந்தப்பதிலைக் கொண்டுதான் பெரியாரையும், மக்கள் திரளையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்”
– தொ.பரமசிவன் (‘தெய்வம் என்பதோர்…’)
இனவரைவியல், கலை, பண்பாட்டு அணுகுமுறைகளில் பெரியாரியரோடும்; திராவிடக் கருத்தியலில் தமிழ் இனவாதத் தமிழ்த்தேசியரோடும்; வெறுப்பரசியலில் ஒருசார் தலித்தியரோடும், இனவாதத் தமிழ்த்தேசியரோடும்; சூழியல் நோக்கில் மார்க்சியரோடும் முரண்பட்டு விமர்சிக்கக் கூடியவரே தொப. பெரியார் தம் நிறுவனத்தைச் சொத்துடைமை நிறுவனம் ஆக ஆக்கியதையும் விமர்சிக்கக் கூடியவரே. இவை யாவற்றிற்கும் அப்பாலாக இன்றைக்கு மிகக்கூர்மையான சிந்தனையுடன் எளிய மக்களிடமிருந்து தோன்றிய பெரியாரியல்வாதிகள் இருக்கிறார்கள் எனவும்; இன்னும் சில உலகமயமாக்கல் பொருளாதார கலாச்சார இழப்புகளை நாம் உணர்ந்த பிறகு பெரியாருக்குத் திரும்புவதைத் தவிர தமிழர்க்கு வேறு வழியில்லை எனவும் எடுத்துரைப்பார்.
தொடரும்..!
மூன்றாம் பாகத்தைப் படிக்க: பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
நான்காம் பாகத்தைப் படிக்க: பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
முகப்பு புகைப்படம்: நன்றி – தயாளன் சண்முகா (https://www.facebook.com/photo.php?fbid=3654718031238520)
காலத்தின் தேவையான ஒரு முயற்சி. சிறப்பு. வாழ்த்துக்கள். தொடரை எதிர்நோக்கிறோம்