பொள்ளாச்சி

காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்

1) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை  செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நேரடியாக அதிமுக நிர்வாகிகள் பங்கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், அதிமுக மாவட்ட பொறுப்பில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட  பைக் பாபு, கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இதையடுத்து மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து மூன்று பேரையும் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2) பறவை காய்ச்சல்; கேரள கோழிகளுக்கு தடை

பறவை காய்ச்சல் தீவிரமடையும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளில் இருந்து பரிசோதித்ததில் “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்குக் குளோரின் டை- ஆக்ஸைடு தெளிக்க வேண்டும். கோழிப்பண்ணைகள், பறவைகள் சரணாலயங்களில் கிருமிநாசினி தெளித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

3) இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு 

விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் அரசாணை வெளியிட்டுள்ளார்.

4) என்னுடைய கடைசி கோரிக்கையைக் கூட தமிழக அரசு நிராகரித்துவிட்டது – சகாயம் ஐ.ஏ.எஸ்

அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அதில் “நான் வருத்தத்தில் உள்ளேன். நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை. நான் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன். ஜனவரி 30-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையைக் கூட தமிழக அரசு நிராகரித்துள்ளது. அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

5) அடுத்த நான்கு நாள் மழை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், 9-ம் தேதி தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், 10-ம் தேதியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6) ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க எதிர்ப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது. மருத்துவா்களுக்கு மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே தமிழகத்தில் அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கை நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தொடா்ந்து போராடி வருகின்றனர் இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

7) எம்.எட் மாணவர் சேர்க்கை

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ம் கல்வியாண்டுக்கான முதுநிலை கல்வியில் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜன.7-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2, விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சோ்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவா்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044-22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம். இது தொடா்பாக மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணவா்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்

8) செம்பரம்பாக்கம் 2000 கன அடி நீர் திறப்பு

நேற்றிரவு பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது!

9) சென்னையில் விவசாயிகள் போராட்டம் 

விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. 

கடுமையான மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கெடுத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

10) தமிழ்நாட்டில்  கொரோனா

தமிழகத்தில் நேற்று 811 பேருக்கு கொரோனா தொற்று நேற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 943 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று காரணமாக நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *