நாடு முழுவதுமே கொரோனா அச்சத்தால் முடங்கிப் போயிருக்கும் சூழலில், புதிதாக இப்போது H5N8 வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் அதன் பரவலை உறுதி செய்து வருகிறது. இப்போதுவரை, நாட்டின் குறைந்தது ஆறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான காகங்கள், கோழிகள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கொண்டிருக்கின்றன.
பல மாநிலங்களில் தொடர்ந்து மடியும் பறவைகள்
ஹரியானாவில், பஞ்ச்குலாவில் உள்ள கோழி பண்ணைகளில் ஏராளமான கோழிகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உடல்நலம் நலிந்த 152 பறவைகளும் கொல்லப்பட்டன. அவற்றில் 12 பறவைகளுக்கு பறவை காய்ச்சலுக்கான வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்சாரில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் 250 பறவைகள் இறந்திருக்கின்றன. அவற்றில் நான்கு பறவைகள் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இமாச்சல பிரதேசத்தில் காங்க்ராவின் பாங் அணையில் 2,300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர்ந்த பறவைகள் இறந்துள்ளன. அங்கு வைரஸ் தொற்று காரணமாக வாத்து பண்ணையில் சுமார் 1,700 வாத்துகள் இறந்துள்ளன.
இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு பறவைகள் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொல்லப்பட்டிருக்கின்றன. இதில் கேரளாவின் குட்டநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லப்பட்ட 34,000 வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளும் அடக்கம்.
ராஜஸ்தானில் திங்களன்று (04/01/2021) 170 க்கும் மேற்பட்ட புதிய பறவை இறப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநில கால்நடை மற்றும் பராமரிப்புத் துறையின் அறிக்கையின்படி அந்த மாநிலத்தில் இதுவரை 425 க்கும் மேற்பட்ட காகங்கள், கொக்குகள் மற்றும் பிற பறவைகள் இறந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிகானேரில் 80, சவாய் மாதோபூரில் 42, கோட்டாவில் 12, பாரனில் 12, பாலி மற்றும் ஜெய்ப்பூரில் தலா 8, தசாவில் 6, ஜோத்பூரில் 5 மற்றும் ஜலவரில் 2 பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த இறப்புகள் ராஜஸ்தான் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. மேலும் சனிக்கிழமையன்றும் (02/01/2021) இதே போன்ற 252 பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பீகார் மாநிலத்திலும் சில பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
பறவைக் காய்ச்சல் என்றால் என்ன?
பறவை காய்ச்சல் (Avian influenza) வகை வைரஸ்கள் A வகை வைரஸ்கள் என்று பிரித்தறியப்பட்டுள்ளன. இது தொற்றுநோயால் ஏற்படும் ஒரு வைரஸ் காய்ச்சல் நோயாகும். நோய் பாதித்த ஒரு பறவையிலிருந்து மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தொற்றுநோயாகப் பரவுகிறது.
இந்த நோயால் பல பறவைகள் இறக்கின்றன. இந்த வைரஸ்கள் உலகளவில் காட்டு நீர்வாழ் பறவைகள் மத்தியில் இயற்கையாகவே நிகழ்கின்றன. மேலும் அவை உள்நாட்டு கோழி மற்றும் பிற பறவை மற்றும் விலங்கு இனங்களையும் தொற்று நோயாகப் பரவி பாதிக்கலாம்.
பறவை காய்ச்சல் வைரஸ்கள் பொதுவாக மனிதர்களை நேரடியாக பாதிக்காது. அதேசமயம் பறவைகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாழிடத் தொடர்பு கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தொற்ற வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதுவரை உலகளவில் பல்வேறு இடங்களில் பறவை காய்ச்சல் வைரஸ்கள் கொண்ட மனித நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
இறப்பு விகிதம் 60 சதவீதம்
உலகெங்கிலும், ஒரு வருடத்திற்குள் 18,64,000 பேர் கொரோனா வைரஸால் இறந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆகும். ஆனால் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் 60% ஆகும். இதன் பொருள் கொரோனா வைரஸை விட பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.
பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.
பறவை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, தொண்டையில் வீக்கம், தசை வலி, வயிற்று பிரச்சினைகள், சுவாசிப்பதில் சிரமம், கண்ணில் தொற்று ஆகியவை பறவை காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்.
இந்த வைரஸ்கள் பறவைகளைப் போல மனிதர்களையும் பாதிக்கக்கூடும் . மனிதர்களுக்கு தொற்றும்போது இந்த H5N8 வைரஸ் கண், மூக்கு மற்றும் வாயின் வழியாக உள்நுழைகிறது. எனவே, இந்த வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க நாம் பேணும் தனிநபர் சுகாதார முறைகளே போதுமானது.
முட்டை மற்றும் கோழி கறி சாப்பிடலாமா?
முட்டைகளை சாப்பிடலாம். ஆனால் அது வேகவைத்து அல்லது நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி 60 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு வேகவைத்து சாப்பிட்டால் இந்த பறவை காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்படாது.
நன்கு சமைத்த கோழி மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதால் கோழி சாப்பிடுவோர் கவனமாக இருக்க வேண்டும். நன்கு வேகவைக்காத சமைத்த கோழிகறியை சாப்பிடுவது ஆபத்தானதாக மாறக்கூடும். அதே நேரத்தில் வளர்ப்பு புறாக்களுக்கும், கடற்கரை போன்ற இடங்களில் அவற்றிக்கு உணவு கொடுக்ககூடிய மக்களும் கவனமாக இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவதும் , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவதும் மிக முக்கியமானது.