தொ.பரமசிவன்

‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

1. ஒரு செரிமானக் கோளாற்று ஊமைக்குசும்பும், சில அவதூறுகளும்

எந்தவொரு பேராசிரியருக்கோ அல்லது ஆய்வறிஞர்க்கோ அவரது மறைவின் தருணத்தில்; எத்தனையோ துறைசார்ந்தோர்தம் வெவ்வேறு தரப்புகளில் இருந்து இத்தனை பதிவுகள் வெளியானதுண்டா? ஏன் பண்பாட்டு ஆய்வறிஞர் பேரா.தொ.பவிற்கு மட்டும் இப்படியாக வாய்த்தது?

இக்கேள்விக்கான விடையே அவரது ஒருதனி(Unique) வீற்றிருக்கையாம்.

“உரையாடற் கலையினை அறியா தொருவர்/ எங்கணம் அறிவார் வாசிப்புக்கலையை?” – இது தேவதேவன் கவிதை வினா? 

தமிழகத்தின் மகத்தான உரையாடற் கலைஞர்களென மூவரை நான் விதந்தோதுவேன்:

1. தஞ்சை ப்ரகாஷ்,

2. தொ.ப,

3. எஸ்.ஆல்பர்ட் (நாலாமத்தவன் பொதி)

மனிதர்களை வாசிக்க உதவும் ‘மனிதநூலகம்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து உலகின் முதல் மனிதநூலகம் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் 2000 -ஆமாவது ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்கின்றார் பிரபாலிக்கா எம்போரா. மனிதர்களே நூல்களாகச் செயலாற்றும் மனிதநூலகம் ஹைதராபாத்தில் நிறுவியிருக்கும் ஹர்ஷத்தின்கர்ஃபத் இன்னும் இந்தியாவில் பெங்களூரு, டெல்லி,  மும்பை, கொல்கத்தா, சென்னை, குஜராத் நகரங்களுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் இருக்கின்றாராம்.

இதற்கெல்லாம் முன்னரே இவ்வாறு எல்லாம் அறிவிக்கப்படா மனிதநூலகங்களாக இயல்பிலேயே இயங்கிவருவோரே தொபவும், ஆல்பர்ட்டும், தஞ்சைப்ரகாஸ்ஸூம் வகுப்பறைகளைத் தாண்டிய மாணவர்கள் இம்மூவர்க்கும் வாய்த்துள்ளனர். இத்தொடர்பில் காணப்புகுமுன் இடைப்பிறவரலாய் ஒரு பேராசிரியரின் தொப குறித்த ஒரு பதிவைக் காண்போம்:

அப்பதிவில் தொபவின் அழகர்கோயில் ஆய்வு, எழுத்துமரபு சாராப் பேச்சுமரபு விரிவுரை, வகுப்பெல்லை தாண்டிய ஈர்ப்பு பற்றி எல்லாம் சிறப்பாகவே எடுத்துரைத்துள்ளார். அவருடன் நான் முரண்படும் புள்ளிகளை மட்டும் இங்கே முன்வைக்கின்றேன்:

“ஒருவரது தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றும் இன்னொருவர் என்ற உறவுநிலைக்குள் நிலவும் உறவும் முரணுமான அன்றாட நடப்புகளோடு கூடிய நினைவுகளே பேரா. தொப குறித்த நினைவுகளாக வந்து போகின்றன”

இப்படித்தான் தொடங்குகின்றது பேரா.அ. ராமசாமியின் பதிவு. அப்பதிவை வாசித்து முடிக்கையில் அதுவே அவரின் ஒப்புதல் வாக்குமூலமெனப் பிடிபடலாகின்றது. பதிவின் இறுதிப்பத்தி இப்படி நிறைகின்றது:

“பாளையின் தெற்குக் கடைத்தெருவில் திண்ணைப்பேச்சுக்கச்சேரியில் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதையே அவர் அடையாளமாகப் பலரும் சொல்வதுண்டு. அந்த நண்பர்கள் அவரது இன்மையை ஆழமாக உணர்வார்கள்” இதில் பேரா.அ. ராமசாமியின் ஊமைக்குசும்பும் இன்மையும் வெளிப்படலாகின்றன.

“அவரின் உரையாடல் பெரும்பாலும் ஒருவழித்தன்மை கொண்டது. கேட்டுப் பெற்ற தகவல்களுக்குப் புதுவிளக்கங்களைச் சொல்வார். கல்லூரியில் நீண்ட ஆசிரியப்பணி காரணமாகக் கிடைக்கப்பெற்ற விரிவுரைப்பாணி உரை உரையாடல்.”

உரையாடல் பெரும்பாலும் ஒருவழித்தன்மை கொண்டதெனில் அது எப்படி உரையாடலாகும்? அது மெஸையாவின் மலைப்பொழிவே! ஜெயகாந்தனின் மடத்தில் அவர் நடாத்தும் ‘சபை’யும், இளவேனில் திருவல்லிக்கேணி இண்டியன் கஃபேயில் நிகழ்த்தும் மாலைக் கூடுகை உரையும் வேண்டுமானால் இத்தகு மெஸையா மலைப்பொழிவுகள் எனப்படலாம். ஆனால்  தொப, ஆல்பர்ட், தஞ்சைப்ரகாஷ் உடனான உரையாடல் அத்தகையன ஆகமாட்டா!

“தன்முன்னே நான்குபேர் அமர்ந்து, தான் பேசுவதைச் செவிமடுக்கும் போது அந்தமொழியில் தேவதூத போதகச்சாயல் படிந்துவிடும். இந்தச் சட்டாம்பிள்ளைத்தனம் என் நேர்காணலில் வந்துவிடக்கூடாது என்பதை மேலதிகப் பிரக்ஞையோடு தவிர்க்கிறேன். இது மொழிவழி நேரும் ஒருவகை மேலாதிக்க பலவீனம். இதை இயேசு கிறிஸ்து முதல் மரத்தடி கிளிசோதிடர் வரை காணலாம்”
– ரமேஷ்பிரேதன் (‘விகடன் தடம்’  செப்.2019)

ஜெயமோகனின் இத்தகைய கட்டண மெஸையாக் கூட்டத்திற்குப் பயணித்தே பங்கேற்குந் தருணத்தில் இது பேராசிரியருக்கு உறைக்காது போலும்!

2.தொபவின் ஊடுருவும் முறையியல்:

அ. ஒரு பேராசிரியர் பார்வையில்

“தமிழர்  பண்பாட்டைத்  தேடி  அறியப்  புறப்பட்ட   பல  ஆய்வாளர்கள் கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும்  தமிழரின் பண்பாட்டை   முக்கியமாக உயர்குடித்  தமிழர்களின்  பண்பாட்டை தேடியலைந்தபோது அப்பண்பாடு தமிழ் மக்கள்  வாழ்வில்  முக்கிய இடம் பெறும் புல்லுக்குள்ளும், நெல்லுக்குள்ளும், சாதாரண  மக்கள்  புழங்கும்  அன்றாடச்  சொல்லுக்குள்ளும் இருக்கிறது என்று கூறிப் பலர் பார்க்காத பக்கங்ளைத் தானும் பார்த்து பிறரையும் பார்க்க வைத்தவர் பேரா தொ.பரமசிவம்.

கோவில் சிற்பங்களை ஏனையோர் பார்த்த பார்வை வேறு இவர் பார்த்த  பார்வை வேறு, அன்றாட பேச்சு வழக்குச் சொற்களை பிறர் அணுகிய  முறை வேறு இவர் அணுகிய முறை வேறு.

எச்சங்களாயும் மிச்சங்களாயும் தமிழர் சமூகத்தில் மிஞ்சிக் கிடக்கின்ற, மற்ற  ஆய்வாளர்களின்  கண்களில் படாதவை  பல   இவர் கண்களில் பட்டு விடும். அவரது தனித்திறனே இவற்றைக் கண்டுவிடுவதுதான். அது அவருடைய  அறிவுப்பயிற்சி. இப்பார்வையே  மற்றைய ஆய்வாளர்களிலிருந்து  இவரை வேறு  படுத்துகிறது.

தமிழ்ப் பண்பாட்டின் மறுபக்கம் ஒன்றை நாட்டார் பண்பாட்டை நாட்டார் சாமிகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியோர்களுள் முறையே முக்கியமானவர்களான அயோத்திதாசர், வானமாமலை, லூர்து, பக்தவத்சல பாரதி முதலாம் சமூக சிந்தனை மிக்க பண்பாட்டு ஆய்வாளர்கள் வரிசையில் இவர் வித்தியாசமானவர். இவரது ஆய்வுகளைப் படிக்கையில் இவர் அயோத்திதாசரின் நவீன வார்ப்போ என்று எண்ணத் தோன்றும்.
– மௌனகுரு சின்னைய்யா

ஆ. ஒரு மாணவியின் பார்வையில்

“ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நுணுகிப் பார்க்கும் ஆய்வ “நீங்க எந்த ஊர் மா? உங்க ஊர்ல … (குறிப்பாக எதையாவது சொல்லி) இருக்குதே..? போய்ப் பாத்திருக்கீங்களா?” என்றுதான் பெரும்பாலும் தன் உரையாடலைத் தொடங்குவார்.

“வெறும் புத்தக அறிவு, அறிவாகுமா? போங்க.. களத்துக்கு போங்க.. மக்களோட பேசுங்க..அவங்கள illiterateன்னு சொல்றாங்க..ஒரு பூச்சி கடிச்சா..ஒரு முள்ளு குத்தினா.. என்ன செய்யணும்ன்ற அறிவு அவங்களுக்கு இருக்கு. நமக்கு தெரியிதா? எந்தக் காற்று, எங்கேயிருந்து காற்று வீசினால் மழை வரும்னு அவங்களுக்குத் தெரியிது. நமக்குத் தெரியிதா? உங்க மேதாவித்தனம் அவங்கிட்ட இல்ல. அவங்க கால் மண்ணில் இருக்கு. புழுதி படிஞ்சு நிக்கற அந்தக் கால்களுக்கு, கல் எது? கரம்பை எதுன்ற  அறிவு இருக்கு.

அப்பறம் எப்படி illiterate ன்னு சொல்வீங்க? வேணும்னா unletteredன்னு  சொல்லிக்கோங்க. உங்க கிட்ட இருக்கறது – அவங்க கிட்ட இல்லாத எழுத்தறிவு மட்டும் தானே ஒழிய, புதுசா அறிவெல்லாம் இல்ல” – ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் இப்படிப் பேசுவார் என்று நம்மால் கற்பனை கூட செய்ய இயலாதே? ஆனால், பேராசிரியர் அப்படித்தான் பேசுவார்.

 “Pure ன்னு இங்கு எதுவும் இல்லை” – என புனிதத்தன்மையை உடைத்தவர் அவர். அடிக்கடி வகுப்பில் சொல்லும் வாசகம் – “தட்டுங்கள் திறக்கப்படும்; திறக்காத கதவுகள் உடைக்கப்படும்” என்பது‌. கம்யூனிச இயக்கங்களுடன் நட்பும் முரணுமான உறவு பூண்டவர். “ஏங்க.. பொதுவுடைமை நாட்டு அணுஉலை வெடிக்காதா? அந்த அணுக்கதிர் வீச்சு தொழிலாளர்களைப் பாதிக்காதா?” பாடப்புத்தகம், பாடத்திட்டம் எல்லாவற்றையும் தாண்டி மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்தியவர்.”
– முத்து காந்திமதி

இதுவா பேரா.அ.ராமசாமி பல்லாண்டுக் கல்லுரிப்பணியால் தொபாவிற்கு வாய்த்த விரிவுரையாளர் உரையாடற்பாணி?

இ. தொபவின் தரப்புகள்

தொபவின் எழுத்துமரபின் போதாமை பற்றி அவரிடம் குறிப்ப்பிட்டபோது அவர் மறுக்கவில்லை, நகைத்துக் கொண்டார் என்கின்றார் பேரா.அ.ராமசாமி. அந்த நகைப்பின் பொருள் என்ன தெரியுமா?

“எழுத்துமரபு, நகர்ப்புறம், பிரம்மாண்டம் இவையெல்லாம் அதிகாரத்தின் பல்வேறு வடிவங்கள். இவற்றிற்கு எதிரான சிந்தனைகள் எல்லாம் அரசுக்கு எதிரானசிந்தனைகள்”

 வாசிப்பென்பது நூல்வாசிப்பு மட்டுமேயா? அறிவென்பது எழுத்தறிவு மட்டுமேயா? இந்தப் புள்ளிகளில் இருந்தே தொபவின் முறையியலும் மெய்காண்முறையும் வேறுபடலாகின்றன:

“என்னுடைய கருத்தியல்தளம்பெரும்பாலும் மனிதவாசிப்பு சார்ந்தது. மனிதவாசிப்பு என்பது உரையாடல் மரபு சார்ந்தது. தமிழர்களின் அறிவுத்தொகுதி பெரும்பாலும் உரையாடல் மரபிலேயே வெளிப்படுகிறது.”

“தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள் கதைகள், சடங்குகள் இவற்றின வழியாகவே மீட்டெடுக்க முடியும். அதையே நான் செய்திருக்கிறேன்.”

“அண்மையில் என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது ஐரோப்பிய முறையியலைத் தள்ளி வைத்துவிட்டு எழுதுகிறார் என்று எழுதியிருந்தார்கள். அதுதான் நான் எடுத்துக்கொண்டுள்ள முறையியல்; வேறு ஒன்றுமில்லை, கிராமத்தில, கம்மாக்கரையிலயோ, கோயில் வாசல்லயோ பெரிசுகள் உக்காந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கும் இல்லையா, அதுதான் என்னோட முறையியல். அதை All pervasive என்பார்கள். ஒரு மணி நேரம் அந்தப் பெரிசுகள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாக்க, ஒரு மரத்தப் பத்திப் பேசுவாங்க, வாழ்க்கையோட எத்திக்ஸ் பத்திப் பேசுவாங்க, வெள்ளைக்காரனப் பத்திப் பேசுவாங்க, நவாப் காலம் பத்திப் பேசுவாங்க.”

“Lore என்று சொல்லக்கூடிய வழக்காறுகள் இருக்கு பாருங்க. அவர்கள் வழக்காறுகளில் பல விஷயங்களையும் தழுவிப் பார்க்கிற போதுதான், எல்லாக் கோணங்களிலும் ஊன்றிப்பார்க்க முடிகிறது.”- தொ.பரமசிவன் (‘செவ்வி’)

“அறிவு என்பது எழுத்துமூலம் சார்ந்ததுதான் என்று கருதக்கூடாது. அப்படிக் கருதவைத்தது European Epistomology – ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான்’எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள்’ என்று சொன்னார்கள்.”

” அறிவு எழுத்துமரபு சார்ந்தது. எழுத்து வருபவனுக்குத்தான் அறிவுவரும் என்பது ஒரு பொய். எழுத்துப் பிறப்பதற்கு முன்னாலேயே அறிவு பிறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் ஒரு அழகான சிற்பத்தை ஆக்கமுடியும்.; ஒரு நாற்காலியைச் செய்யமுடியும், இது எழுத்து பிறப்பதற்கு முன்னாலேயே பிறந்த அறிவு. இதைத்தான் கார்ல்மார்க்ஸ் ‘தொகுக்கப்படாத அறிவு’ என்று சொல்வார்.”
– தொ.பரமசிவன் (‘சாளரம் ‘ இலக்கியமலர்  ஜன.2008)

தொடரும்..!

இக்கட்டுரையின் பாகம் 2-ஐப் படிக்க: பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 3-ஐப் படிக்க: பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

நான்காம் பாகத்தைப் படிக்க: பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

முகப்பு புகைப்படம்: நன்றி – தயாளன் சண்முகா (https://www.facebook.com/photo/?fbid=3654714897905500)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *